பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 103

"இந்த ஜனங்களப் பார்க்காம. என்னை மட்டும் பார்த்து நீரு புலம்பினால் இன்னும் மோசமான கதி வரும். சரி எந்திரியும்."

இருவரும் எழுந்து தெருவோரத்தில், பூமியை வீடாகவும், ஆகாயத்தை கூரையாகவும் கொண்டு, சந்திர சூரியர் சாட்சியாக, சமைத்துக் கொண்டிருந்த, வேகாமல் வேகும், மனித ஜீவிகள் பக்கமாக நகர்ந்தார்கள். சாலையோர வேலிக்காத்தான்போல், ஒரு கோணியே வீடாகவும், வாசலாகவும் விளங்க, அதுவே காற்றிலாடும் திரைச் சீலையாகத் தெரிய, மனிதத்துவத்தின் எச்சங்களாய், எச்சில் படர்ந்த பகுதிகளில் சமையலுக்காக, சமைக்கப்படும் பொருள்போல் இயங்கிக் கொண்டு இருந்தார்கள்.

அன்னவடிவு, மூன்று கற்களை எடுத்து முக்கோணம் போல் வைத்தாள். கோணிப்பையைத் திறந்து, ஈயப் பாத்திரத்தை எடுத்தாள். வேலு, அதை வாங்கிக் கொண்டு, தொலைவில் இருந்த கழிப்பறை பக்கம்போய், அரைமணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடித்து வந்தான். பிறகுதான், சமையலுக்கு நெருப்பும், நெருப்பிற்கு விறகும் தேவை என்பது தெரிந்தது. யாரோ காட்டிய வழிப்படி நடந்து, சுள்ளி விறகுகளை வாங்கி வந்தான். நெருப்புப் பற்றியது. நீர் கொதித்தது. காற்று அணைத்து கல்லடுப்பு சாயப்போனது. அன்னவடிவு சுட்டகல்லைப் பிடித்து சுட்ட விரல்களை குழாய் மாதிரி அடைத்துக் கொண்டு "பச்சை மிளகாயும் உப்பும் வாங்கிட்டு வாரும்" என்று சொன்னபோது, அருகே அடுப்புப் போட்டிருந்த ஒரு "வாணுமுன்னா, இந்த அம்மில துவையல் அரைச்சுக்கோ. எந்த ஊரும்மா?" என்றாள்.

இதற்குள் ஒரு பையன் வந்து "துரைப்பாண்டி முதலாளி ஒங்களை, சீ. ஒன்னை கூட்டிட்டு வரச்சொன்னார்" என்று சொல்லிவிட்டு, தன்னை பெரிய மனிதன்போல் பாவித்துக் கொண்டு வயிற்றையும் துருத்தி, வேலுவை சின்ன மனிதன்போல் பார்த்தான். அது ஊராக இருந்திருந்தால் "யாருல. நீ. ஒப்பனை உதைக்கிற பயலேன்னு வேலு கேட்டிருப்பான். இது ஊரல்ல. பணக்காரர்கள் வாழும் இருபதாம் நூற்றாண்டிலும் ஏழைகள் கல் அடுப்பில் சமைக்கும் கற்காலம். மாபெரும் சென்னை நகரம். அதோடு நரகம், டா போடாமல் கூப்பிட்டானே, அதுவே பெரிய சலுகை

அடுப்பு ஊதுவதை முடிக்காத மனைவியிடம் சொல்லிவிட்டுப் போவதற்காக வேலு நின்றான். "ஒன்னதாம்பா. எத்தனை வாட்டி சொல்றது" என்றான் அந்தப் பையன். அன்னவடிவு, ஊதி முடிப்பதுபோல் தெரியவில்லை. காற்றின் மூச்சு அவள் மூச்சை களைக்க வைத்தது. களைத்தாலும், இது பிழைப்பல்லவா. எண்சாண் உடம்பின் மூலமல்லவா அவள் காற்றோடு போட்டிபோட்டு, காத்தாடிபோல் ஆடி, கூத்தாடிபோல்