பக்கம்:வேரில் பழுத்த பலா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 71

ஏதாவது நடக்கும் முன்னால ஓடிடு. இந்தாப்பா அடைக்கலம். இவரை அடுத்த தடவை பார்த்தால்."

"அடுத்த தடவை என்ன ஸார்? இப்பவே. கொடுத்த பணத்தை வாங்காமல். அடுத்துக் கெடுத்த பயல்."

சரவணனின் கையாட்டலுக்கு, அடைக்கலமும் உட்பட்டார். செளமிநாராயணன், பல்லைக் கடித்துக்கொண்டு வேக வேகமாய் வெளியேறினார். வாசலில் சிறிது நின்று, "என்னை நீங்க துரத்துனதாய் நினைக்காதீங்க... இன்னைக்கோ, நாளைக்கோ. நீங்களே என்னை வரவேற்கதுக்கு வாசலில் நிற்கப் போlங்க.." என்றார்.

"அப்படி ஒரு நிலைமை வந்தால். ஒண்ணு, நீ உலகத்துல இருக்க முடியாது. அல்லது. நான் இந்த ஆபீஸ்ல இருக்கமாட்டேன். போங்க மிஸ்டர். டில்லியில் எங்க ஆபீஸ்லயே ஒன் கோ-பிரதர் டெப்டி டைரக்டராய் இருக்கலாம். ஆனால் கொலை சமயத்துல எவனும் உதவ மாட்டான்."

செளமி நாராயணன் ஓடிவிட்டார்.

சரவணன், நிர்வாக அதிகாரியைப் பார்த்தான். அவர் நிலை குலைந்தார். பத்மா, பதுங்கிக் கொண்டாள். உமாவைக் காணவில்லை. இரணியனைக் கொன்ற பிறகும், ஆவேசம் அடங்காத நரசிம்மமூர்த்தி போல், சரவணன் அலுவலகம் முழுவதையும் சுற்றினான். இதற்குள் தத்தம் இருக்கைகளில் உற்சாகமாக உட்கார்ந்த ஊழியர்கள், அவனுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

"குட்மார்னிங் ஸார்."

"வணக்கம் ஸ்ார்."

"ஸார் குட்மார்னிங்," "ஸார் வணக்கம்."

சரவணன் அவர்கள் வணக்கத்தை முகத்தை ஆட்டி வரவேற்றான். 'இதுதான் சரி. அடிதடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்." என்று தங்கமுத்து, தன்பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தான். அத்தனை ஊழியர்களும் சரவணனை, விழியுயர்த்திப் பார்த்தார்கள். "இப்படியெல்லாம் இவருக்குப் பேச வருமா?" என்று ஒருத்தி, தன் சந்தேகத்தை அன்னத்திடம் மெல்லக் கேட்டாள். அவளோ, எல்லோருக்கும் கேட்கும்படி, கத்தலுக்கும். உரையாடலுக்கும் இடையேயான குரலில், பகிரங்கமாய் திருப்பிக் கேட்டாள்.

"ஏன் வராது? சாதுக்குக் கோபம் வந்தால் காடே தாங்காது. ஆபீஸ் எப்படித் தாங்கும்?"