பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232


[1][18. ★★]

19. மாறும் இடைக்காலத்திற்கான வகையங்கள் :

(1) இந்த அரசமைப்பின் தொடக்கநிலைக்குப் பின்பு, ஆளுநர், கூடிய விரைவில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தன்னாட்சி மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட மன்றத்தை இந்த இணைப்புப்பட்டியலின்படி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்; மேலும், ஒரு தன்னாட்சி மாவட்டத்திற்கு, மாவட்ட மன்றம் அமைக்கப்படுகிற வரையில், அத்தகைய மாவட்டத்தின் நிருவாகம் ஆளுநரிடம் உற்றமையும்; இந்த இணைப்புப்பட்டியலின் மேலே கண்ட வகையங்களுக்கு மாற்றாகப் பின்வரும் வகையங்கள் அத்தகைய மாவட்டத்தில் உள்ள வரையிடங்களின் நிருவாகத்திற்குப் பொருந்துறும்:-

(அ)ஆளுநர், பொது அறிவிக்கை வாயிலாகப் பணித்தாலன்றி, நாடாளுமன்றச் சட்டம் அல்லது மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதுவும், அத்தகைய வரையிடம் எதற்கும் பொருந்துறுதல் ஆகாது; ஆளுநர், சட்டம் எதனையும் பொறுத்து அவ்வாறு பணிப்புரை இடும்போது, அத்தகைய வரையிடத்திற்கு அல்லது குறித்த பகுதி எதற்கும் அந்தச் சட்டத்தைப் பொருந்துறச் செய்கையில், அவர் தாம் கருதுகிற விதிவிலக்குகளுக்கு அல்லது மாற்றமைவுகளுக்கு உட்பட்டு, அது செல்திறம் பெறும் எனப் பணிக்கலாம்;
(ஆ)அத்தகைய வரையிடம் எதன் அமைதிக்காகவும் நல்லாட்சிக்காகவும் ஆளுநர் ஒழுங்குறுத்தும்விதிகளைச் செய்யலாம்; மேலும், அவ்வாறு வகுக்கப்பட்ட ஒழுங்குறுத்தும்விதிகள் எவையும், அத்தகைய வரையிடத்திற்கு அப்போதைக்குப் பொருந்துறுவதான நாடாளுமன்றச் சட்டம் அல்லது மாநிலச் சட்டமன்றச் சட்டம் எதனையும் அல்லது நிலவுறும் சட்டம் எதனையும் நீக்கறவு செய்யலாம் அல்லது திருத்தம் செய்யலாம்.

(2) இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின் (அ) கூறின்படி ஆளுநரால் இடப்படுகிற பணிப்புரை எதுவும், முன்மேவு செல்திறம் பெறுமாறு இடப்படலாம்.

(3) இந்தப் பத்தியின் (1) ஆம் உள்பத்தியின் (ஆ) கூறின்படி வகுக்கப்பட்ட ஒழுங்குறுத்தும் விதிகள் அனைத்தும் உடனடியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்பிவைக்கப்படுதல் வேண்டும்; மேலும், அவரால் ஏற்பிசைவளிக்கப்படும் வரையில், அவை செல்திறம் பெறுவதில்லை.

[2][(4) இந்தச் சட்டத்தின் தொடக்கநிலைக்குப் பிறகு கூடியவிரைவில், அசாமில் உள்ள போடோலாந்து ஆட்சிநிலவரை வரையிடங்கள் மாவட்டத்திற்கான இடைக்கால நிர்வாக மன்றம், உடன்பாட்டு விதிக்குறிப்பில் கையொப்பமிடப்பட்டவர்கள் உள்ளடங்கலாக, போடோ இயக்கத் தலைவர்களிடையேயிருந்து ஆளுநரால் அமைக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அந்த வரையிடத்திலுள்ள பழங்குடியினத்தவர்கள் அல்லாதவர்களுக்கு போதிய சார்பாற்றத்திற்கு வகை செய்தல் வேண்டும் :

வரம்புரையாக: இடைக்கால மன்றமானது, ஆறு மாத காலஅளவிற்கானதாக இருக்கும், அக்காலஅளவின்போது மன்றத்திற்கு தேர்தல் நடத்த முனைந்து முயற்சிகள் செய்யப்படுதல் வேண்டும்.

விளக்கம்: இந்த உள்பத்தியின் நோக்கங்களுக்காக உடன்பாட்டு விதிக்குறிப்பு என்பது,- இந்திய அரசு, அசாம் அரசு, மற்றும் போடோ விடுதலைப்புலிகள் ஆகியவர்களுக்கிடையே 2003, பிப்ரவரி 10 ஆம் நாளன்று கையொப்பமிடப்பட்ட விதிக்குறிப்பு என்று பொருள்படும்.]


  1. 1971 ஆம் ஆண்டு வடகிழக்கு வரையிடங்கள் (மறு அமைப்பு) சட்டத்தின் 71(1) பிரிவினாலும் எட்டாம் இணைப்புப் பட்டியலினாலும் (21-1-1972 முதல் செல்திறம் பெறுமாறு) விட்டுவிடப்பட்டது:
  2. 2003 ஆம் ஆண்டு அரசமைப்பின் ஆறாம் இணைப்புப்பட்டியலுக்கான (திருத்தம்) சட்டத்தினால் (44/2003) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/258&oldid=1466517" இலிருந்து மீள்விக்கப்பட்டது