பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

78. உயர் நீதிமன்றங்களின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த ஏற்பாடுகள் நீங்கலாக (பருவ விடுமுறைகள் உள்ளடங்கலாக) உயர் நீதிமன்றங்களின் அமைப்பும் செயலமைப்பும்; உயர் நீதிமன்றங்களின் முன்பு வழக்குரைஞராகத் தொழிலாற்றுவதற்கு
உரிமைகொண்டவர்கள்.
79. ஒன்றியத்து ஆட்சிநிலவரை எதற்கும் ஓர் உயர் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை அளாவச் செய்வதும் அந்நிலவரையிலிருந்து ஓர் உயர் நீதிமன்றத்தின் அதிகாரவரம்பை விலக்குவதும்.
80. மாநிலம் எதனையும் சேர்ந்த காவற்படை உறுப்பினர்களின் அதிகாரங்களையும் அதிகாரவரம்பையும், அந்த மாநிலத்திற்கு வெளியேயுள்ள வரையிடம் எதற்கும் அளாவச்செய்தல்; ஆனால், அவ்வாறு அளாவச்செய்வது, ஒரு மாநிலத்தின் காவல் துறையினர், அந்த மாநிலத்திற்கு வெளியேயுள்ள வரையிடத்தில் தம் அதிகாரத்தையும் அதிகாரவரம்பையும் அந்த வரையிடம் அமைந்துள்ள மாநில அரசாங்கத்தின் இசைவின்றிச் செலுத்துவதற்கு இயல்விப்பதாகாது; மற்றும், மாநிலம் எதனையும் சேர்ந்த காவற்படை உறுப்பினர்களின் அதிகாரங்களையும் அதிகாரவரம்பையும், அந்த மாநிலத்திற்கு வெளியேயுள்ள இருப்பூர்திய வரையிடங்களுக்கு அளாவச் செய்தல்.
81. மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்தல்; மாநிலங்களிடையே தொற்றுநோய்த்தடை ஒதுக்கம்.
82. வேளாண் வருமானம் அல்லாத பிற வருமானத்தின் மீதான வரிகள்.
83. ஏற்றுமதித் தீர்வைகள் உள்ளடங்கலான சுங்கத் தீர்வைகள்.
84. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது உண்டாக்கப்பட்ட புகையிலை மீதும் பிற சரக்குகளின் மீதுமான ஆயத்தீர்வைகள்-

(அ)மனிதர் உட்கொள்வதற்கான வெறியம் கலந்த மதுக்குடி வகைகள்.

(ஆ)அபின், இந்தியக் கஞ்சா மற்றும் பிற மயக்க மருந்துப் பொருள்களும் மயக்கப் பொருள்களும் நீங்கலாக;

ஆனால், வெறியம் அல்லது இந்தப் பதிவின் (ஆ) உள்பத்தியில் சேர்க்கப்பட்டுள்ள பொருள் எதுவும் அடங்கிய மருந்துக்கும் ஒப்பனைக்குமான தயாரிப்புகள் உள்ளடங்கலாக.
85. கூட்டுரும வரி.
86. வேளாண் நிலம் நீங்கலாக, தனிப்பட்டவர்களின் மற்றும் நிறுமங்களின் சொத்திருப்புகளின் மூலதன மதிப்பு மீதான வரிகள்; நிறுமங்களின் மூலதனம் மீதான வரிகள்;
87. வேளாண் நிலம் அல்லாத பிற சொத்தினைப் பொறுத்த இறங்கு சொத்துத் தீர்வை.
88. வேளாண் நிலம் அல்லாத பிற சொத்திற்கு வாரிசுரிமை பொறுத்த தீர்வைகள்.
89. இருப்பூர்தியம், கடல் அல்லது வான் வழியாக ஏற்றிச் செல்லப்படும் சரக்குகள் அல்லது பயணிகள் மீதான சேர்முனைவரிகள்; இருப்பூர்தியப் பயணக்கட்டணங்கள், சரக்குக் கட்டணங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள்.
90. பங்குமாற்றங்களிலும் எதிர்கோள் வாணிபங்களிலும் நடைபெறும் செயல்மானங்கள் மீது விதிக்கப்படும் முத்திரைத் தீர்வைகள் அல்லாத பிற வரிகள்.
91. மாற்றுச்சீட்டுகள், காசோலைகள், கடனுறுதிச் சீட்டுகள், கப்பல் சரக்குப் பட்டியல்கள், நாணய உறுதிக் கடிதங்கள், காப்பீட்டு ஆவணங்கள், பங்குகள் உரிமைமாற்றம், கடனீட்டு ஆவணங்கள், மாற்றாள் அமர்த்து ஆவணங்கள், வரவுச்சீட்டுகள் ஆகியவை பொறுத்த முத்திரைத் தீர்வை வீதங்கள்.
92. செய்தித்தாள்களின் விற்பனை அல்லது கொள்வினை மீதும், அவற்றில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மீதுமான வரிகள்.
92அ. செய்திதாள்கள் அல்லாத பிற சரக்குகளின் விற்பனையோ கொள்வினையோ மாநிலங்களுக்கிடையேயுள்ள வணிகத்தின் அல்லது வாணிபத்தின் போது நிகழுமிடத்து, அந்த விற்பனையின் அல்லது கொள்வினையின் மீதான வரிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/268&oldid=1466540" இலிருந்து மீள்விக்கப்பட்டது