பாரதியாரின் சிறுகதைகள்/கலியுக கடோற்கசன்

விக்கிமூலம் இலிருந்து

வேதபுரத்தில் கலியுக கடோற்கசன் என்பதாக ஒருவன் கிளம்பி யிருக்கிறான். பழைய துவாபர யுகத்துக் கடோற்கசனுடைய சரித்திரம் எல்லாருக்கும் தெரியும். அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர் தப்பி ஓடும்போது இடும்ப வனத்தில் தங்கினார்கள். அங்கிருந்த இடும்பாசுரன் என்ற ராட்சசன் அவர்களைப் பிடித்துத் தின்ன வந்தான். அந்த இடும்பனை வீமன் கொன்று விட்டான். பிறகு அவன் தங்கையாகிய இடும்பி என்ற ராட்சசி வீமன் மேல் காதல் கொண்டு தன்னை மணந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தினாள். யமற்ற சகோதரர் நால்வரும் பிரமசாரிகளாய் இருக்கையில் தான் முதலாவது ஒரு ராட்சசியைப் போய்க் கலியாணம் பண்ணிக் கொள்வதில் வீமனுக்குச் சம்மதமில்லை. இடுப்பி குந்தியிடம் போய் முறையிட்டழுதாள்.

குந்தி வீமனை நோக்கி: "மகனே, ஒரு பெண் வந்து காதல் கூறுமிடத்து அவளை மறுப்பது க்ஷத்திரிய தர்மமில்லை. ஆண் மக்கள் அங்ஙனம் செய்யலாகாது. ஆதலால், நீ இந்த ராட்சசியைக் கல்யாணம் பண்ணிக் கொள்க" என்று கட்டளையிட்டான். தாய் சொல்லுக்கிணங்கி வீமன் இடும்பியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான். இவ்விருவருக்கும் பிறந்த பிள்ளையே துவாபரயுக கடோற்கசன். இவன் வீமனுக்குச் சமமான பலமும் பராக்கிரமும் உடையவனென்னு வேதவியாசர் தெரிவிக்கிறார்.

இது நிற்க.

நமது கலியுக கடோற்கசனைக் கவனிப்போம். இவன் வேதபுரத்தில் ஒரு சரொயக் கடையிலே பணவசூல் குமஸ்தாவாக இருக்கும் ராமசாமி நாயக்கர் என்பவருடைய மகன். இவனுக்கு இப்போது வயது சுமார் இருபது இருக்கலாம். சாராயக் கடையில் பிராந்தி, விஸ்கி, ஜின் முதலிய ஐரோப்பியச் சாராயங்கள் விற்கிறார்கள். வேதபுரத்தில் குடி மும்முரம். ஆனபடியால் மேற்படி கடைக்குப் பற்று வரவு ஜாஸ்தி. அங்குப் பண வசூல்காரனாகிய ராமசாமி நாயக்கருக்கு மாதம் எட்டு ரூபாய் சம்பளம். தெலுங்கு பேசும் நாயக்கர். நல்ல க்ஷத்திரிய வம்சம். தெலுங்கு ராஜ்யம் போன பிறகு கெட்டுப் போய்த் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கும் நாயுடு கூட்டத்தைச் சேர்ந்தவர்.

மேற்படி ராமசாமி நாயக்கர் மகனுக்குத் தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன்.

அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வயிரமான உடம்பு. இவன் மேலே மோட்டார் வண்டி ஒட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்றூறு ராத்தல் கல் தொங்க விடலாம். இவன் தலையிலே நாற்பது பேரடங்கிய பெரிய தொட்டிலை நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண டு மகா பாரதப் புஸ்தகத்தைக் கிழித்துப் போடுவான்; இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.

வயது இருபதுக்குமேல் ஆகவுமில்லை. நேற்றுக் காலையில் இந்தப் பையன் என்னைப் பார்க்கும் பொருட்டாக வந்திருந்தான். முதலாவது, தன்னுடைய தொழில்களை எல்லாம் என் வீட்டில் செய்து காட்டினான். நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

பிறகு இவனுடைய புத்தி எந்த நிலைமையில் இருக்கிறதென்பதைப் பரிசோதனை செய்யும் பொருட்டாக அவனுடன் சிறிது நேரம் சம்பாஷணை செய்து பார்த்தேன். அவன் கையில் ஒரு குறிப்புப் புஸ்தகம் (பாக்கெட் நோட்புக்) வைத்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தால் சின்ன பைபிளோ அல்லது டைரி (தினசரி)யோ என்று ஐயப்படும்படியாக இருந்தது. "கையில் என்ன; டைரி புஸ்தகமா?" என்று கேட்டேன். அந்தப் பையன் ஹி என்று பல்லைக் காட்டிக் கொண்டு, "இல்லெங்க; மந்திரவாதப் புஸ்தகம்" என்றான்.

"நான் வாசிக்கலாமா?" என்று கேட்டேன். "வாசிக்கலாம்" என்று சொல்லி அந்தப் புஸ்தகத்தை என் கையில் கொடுத்தான். அது அச்சிட்ட புஸ்தகமன்று, அவன் கையால் எழுதியது.

"பல ஊர்களில் சஞ்சாரம் பண்ணினேன். பல சாதுக்களிடம் கேட்ட மந்திரங்களையெல்லாம் இதில் எழுதி வைத்திருக்கிறேன். நான் அவர்களுக்கு (அந்த சாதுக்களுக்குப்) பத்திரம் தயார் பண்ணிக் கொடுப்பேன்" என்று கலியுக கடோற்கசன் சொன்னான். "பத்திரமா? அதென்ன?" என்று கேட்டேன்.

அவன் சொல்லுகிறான்: "அதைப் பாமர ஜனங்கள் கஞ்சா இலை என்றும் சொல்லுவார்கள்; சாதுக்களுக்கு மனதை ஒரு நிலையில் நிறுத்திப் பிரமத்திலே கொண்டு சேர்க்க அது உபயோகமுங்க. மைசூரில் நான் போன மாசம் போயிருந்தேனுங்க. அங்கே பெரிய சாமியாருங்க, அவர் தான் எனக்கு ஆஞ்சநேயர் மந்திரம் கற்றுக் கொடுத்தாருங்க. அவர் ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் கஞ்சா வாங்கிப் புகை குடிப்பாருங்க. அவர் மனதை உள்ளே கொண்டு நிறுத்தினால் பிறகு அதை வெளியே இழுப்பது கஷ்டங்க" என்றான்:

இவன் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்கு அந்தப் புஸ்தகத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவா அதிகப்பட்டது. புஸ்தகத்தைக் கையிலெடுத்துத் திறந்தபோது அதிலிருந்து பொலபொலவென்று இருபது முப்பது துண்டுக் காயிதங்கள் உதிர்ந்தன். எனக்கு ஆராய்ச்சியிலே பிரியம் அதிகமானபடியால் முதலாவது அந்தத் துண்டுக் காயிதங்களைப் ரிசோதனை செய்து பார்த்துவிட்டுப் பிறகு புஸ்தகத்துக்குள்ளே நுழைவோம் என்று யோசித்து அந்தக் காயிதங்களைப் பார்த்தேன். அவற்றின் விவரம் பின்வருமாறு:

முதலாவது: 'ஹோம்ரூல் ஸ்டாம்ப்' மூன்று இருந்தது.

அதில் ஒவ்வொரு ஸ்டாம்புக்கு நடுவிலும் அனிபெஸன்ட் அம்மாள் தலை போட்டிருக்கிறது. சுற்றி "தெய்வத்துக்காவும் தேசத்துக்காகவும், ராஜாவுக்காகவும், சிறைபட்டவர்" என்றெழுதியிருந்தது. அதைச் சூழ நான்கு புறத்திலும் இங்கிலீஷ், தெலுங்கு, உருது, நாகரி, கன்னட லிபிகளில் "ஹோம் ரூல்" என்றெழுதியிருந்தது.

இரண்டாவது: ஒரு சின்ன டிக்கட் அதில் இங்கிலீஷ் பாஷையில் "மிஸ்.தாரா; இந்தியன் லேடி ஸாண்டோ" என்று ஒரு புறத்திலும், வெளிச்சீட்டு (ஔட் பாட்ஸ) என்று மற்றொரு புறத்திலும், போட்டிருந்தது.

மூன்றாவது: ஒரு லேசான காயிதத்தைப் போன்ற செப்புத் தகடு. அதில் ஏதோ சக்கரம் செதுக்கும் பொருட்டு வைத்துக் கொண்டிருப்பதாகக் கடோற்கசன் சொன்னான்.

நாலாவது: ராமமூர்த்தி சர்க்கஸ் ஆட்ட ஜாப்தா.

ஐந்தாவது: ஒரு கிறிஸ்தவப் பையனுடைய நேர்த்தியான புகைப்படம். அவன் யாரென்று கேட்டதற்குத் தன்னுடைய சிநேகிதனென்னும் இரும்பாலையில் வேலை பார்க்கிறானென்னும் தன்னைப் போலவே குஸ்தி வகையறாத் தொழில்களில் பழக்கமடையவனென்னும், அவனுக்குக் கலியுக கும்பகர்ணன் என்று பெயர் வைக்கலாமென்றும் கடோற்கசன் சொன்னான்.

ஆறாவது: மறுபடியும் ஒரு டிக்கட், அதில் இங்கிலீஷில்"எடிஸன் கினேமாடோக்ராப் கம்பெனி, ஒரு ஆளை உள்ளே விடு" என்றெழுதியிருந்தது.

ஏழாவது: ஸிகரட் பெட்டியிலிருந்தெடுத்த துர்க்கை படம். அதில் தேவி மகிஷாசுரனைக் கொல்லுகிறாள். பக்கத்தில் விநாயகருடைய தலை மாத்திரம் தெரிகிறது. உடம்பெல்லாம் மறைந்திருக்கிறது. சின்ன சுப்ரமணியன் ஒன்றிருக்கிறது. அம்மனுக்குப் பதினாறு கைகள் போடுவதற்குப் பதிலாக எட்டு கை போட்டிருந்தது.

எட்டாவது: இரண்டு சிங்களுடன் ஒரு மனிதன் சண்டை போடுவது போல ஒரு படம். பத்திரிகையிலிருந்து கத்தரித்தது.

ஒன்பதாவது: யேசுகிறிஸ்து, மாட்டுக் கொட்டகையில் பிறந்து வைக்கோல் மேலே போட்டுக் கிடப்பதாகக் குழந்தையுருவங் காட்டிய படம்.

பத்தாவது: சாதாரண வருஷத்து மார்கழி மாதம் 18-ஆம் தேதி முதல் விரோதி கிருது வருஷத்து சித்திரை மாதம் 16-ம் தேதி வரையில், ஏகாதசி, ஷஷ்டி, பிரதோஷம், கரிநாள், யமகண்டம், ராகுகாலம், குளிகை காலம், வாரசூலை இவற்றின் அட்டவணை.

பதினோராவது: இனி மேன்மேலும் அடுக்கிக்கொண்டு போனால் படிப்பவர்களுக்குப் பொறுமையில்லாது போய் விடும் என்ற அச்சத்தால் இங்கு மேற்படி கீழே யுதிர்ந்த துண்டுக் காயிதங்களைப் பற்றிய முழு விவரங்களும் தெரிவிக்காமல் விடுகிறேன். அதில் அநேகம் கடோற்கசனுடைய சிநேகிதர்களுடைய மேல் விலாசம். ஒரு துண்டுக் காயிதத்தில் குங்குமம் சுற்றியிருந்தது. அது கோயிலில் கொடுத்ததென்றும், அம்மன் பிரசாத மென்றும் கடோத்கசன் விளக்கினான்.

இனி அவன் மந்திரவாதப் புஸ்தகத்துள் எழுதியிருந்த விநோதங்களில் சிலவற்றை இங்கு காட்டுகிறேன்.

கணபதி மந்திரம்

ஓம் கணபதி; ஐயும் கணபதி; கிளியும் கணபதி; சவ்வும் கணபதி; வா வா; சகல ஜனங்களும்; போகங்களும்: சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாகவும். சுவா ஹா.

பஞ்சாட்சரம்

ஹரி ஓம் சிவாய நம;

அனுமார் மந்திரம்

ஓம் அனுமந்தா, ஆஞ்சனேயா, நமோ நாராயணா, சிரஞ்சிவியாகக் காத்து ரஷித்து வா. கிலியும் ஸவ்வும், என் எதிரிகளை வென்று என்னைக் கா, கா, கா, ஸ்வாஹா!

புருஷ வசியத்துக்கு மந்திரம்

நிலத்திலே முளைத்தவளே, நீலப்பூ பூத்தவளே, மனத்துக்கு கவலை தீர்த்தவளே, மன்னன் சிறை மீட்டவளே, குடத்துத் தண்ணீர்ப் பாலாக வேண்டும். கோவிந்தராஜு என்னைக் கண்டா கும்பிட வேண்டும். தான் ஒரு புலியாக வேணும். அவன் ஒரு பசுவாகவேணும். புலியைக் கண்ட பசு நடுங்கினாற்போல் நடுங்கி ஒடுங்கி வணங்கி நிற்க ஸ்வாஹா! இந்த மந்திரத்தை ஆயிரம் உரு ஏற்றவேண்டும். வேளை செடியின் வடக்கே போகிற வேரில், ஞாயிற்றுக்கிழமை சூரியன் கிளம்புகிற சமயத்தில், மஞ்சள் துண்டைக் கட்டிப் பதினாறு விசை மந்திரத்தை ஜபித்து பிறகு, வேர் அறாமல் பிடுங்கி வெள்ளித் தாயித்தில் மஞ்சளை நீக்கி வேரைச் செலுத்திக் கட்டிக் கொள்ள வேண்டும்.

சகல வியாதிகளுக்கும் மந்திரம்

ஓம், ரீங், அங், இந்தப்படிக்கு விபூதியில் எழுதி ஆயிரத்தெட்டு உரு ஜபித்து சூடன் கட்டியை அதன் மேலே வைத்துக் கொடுக்க வியாதி தீரும். இது கை கண்டது.

சிரங்கு கண்டவுடன் செய்கிற மந்திரம்

மசிமா மசி: நசி மா நசி:

சிரங்கு நைய மந்திரம்

கசி: நசி!

பழுத்தபின் உடைக்கும் மந்திரம்

நஞ்சு, பிஞ்சு , நாகமதாகிப் பிஞ்சு நஞ்சு போக ஸ்வாஹா!

இராஜாவை வசியம் பண்ண மந்திரம்

வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட பங்களா, தக்ஷணாமூர்த்தி, துர்க்கா தேவதாயை நம: இதற்கு ஆயிரத்தெட்டு செய்யவும்.

மற்றுமொரு இராஜ வசிய மந்திரம்

அய்யும், கிலியும் சவ்வும், சவ்வும் கிலியும், ஐயும், நவகோடி சித்தர் சாயம் நசி, நசி: ஸர்வ மூலிகையும் இன்ன ராஜாவும் வசி, வசி.

இந்த மந்திரங்களைத் தவிர, மேற்படி கலியுக கடோற்கசனுடைய நோட்புக்கில் இன்னும் இதுபோலவே முப்பது நாற்பது மந்திரங்களும், பலவிதமான சக்கரங்களும் இருந்தன. அந்த மந்திரங்களையும் சக்கரங்களையும் இப்போது புஸ்தகத்தில் முழுதும் விஸ்தாரமாகச் சொல்லப் போனால் நெடுந்தூரம் இந்த வியாசம் அளவுக்கு மிஞ்சி நீண்டுவிடும். எனினும் நமது ஹிந்து தர்மத்தையும், மந்திர மகிமையையும், இடைக்காலத்து மூட ராஜாக்களும், அயோக்கியப் பூஜாரி, பண்டார, மந்திரவாதிகளும் எவ்வளவு கேலிக் கிடமாகச் செய்துவிட்டார்களென்பதை விளக்க, மேற்கூறிய திருஷ்டாந்தங்களே போதுமென்று நினைக்கிறேன். இன்னும் அவனுடைய குறிப்புப் புஸ்தகத்தில் போகப் போகப் பெரும் கேலியாக இருந்தது. எனக்கு அவற்றை யெல்லாம் பார்க்கும்போது சிரிப்பொரு பக்கம் வந்தது. தலை யொரு பக்கம் கிறுக்கிற்று.

ஹிந்துக்களுடைய மூல பலமாகிய மந்திர சாஸ்திரத்தை இடைக்காலத்து மூடர் இவ்வளவு சீர்கெடுத்து வைத்திருப்பதையும், அதைத் தற்காலத்து மூடர்களிலே பலர் நம்புவதையும் நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமுண்டாயிற்று.

அதை நான் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் குள்ளச் சாமி என்ற வேதபுரத்து ஞானி வந்தார். அவரிடம் அதைக் கொடுத்தேன். அவர் அந்தப் புஸ்தகத்தை வெளிமுற்றத்துக்குக் கொண்டு போனார். அங்கிருந்து நெடுநேரமாகத் திரும்பி வரவில்லை. என்ன செய்கிறார், பார்ப்போமென்று சொல்லி, நான் எழுந்து வெளி முற்றத்துக்கு வந்தேன். என்னுடன் கலியுக கடோற்கசனும் வந்தான். அங்கு போய்ப் பார்த்தால், குள்ளச்சாமி அந்தப் புஸ்தகத்தில் மண் எண்ணெயை விட்டுத் தீயைக் கொளுத்தி எரிய விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். குழ நதைகள் பக்கத்தில் நின்றுவேடிக்கை பார்த்தனர். எனக்குச் சிரிப்பு வந்தது. கடோற்கசன் கோவென்றழுதான். குள்ளச்சாமி பெரிய ஞானியென்றும், பரமபுருஷரென்றும், அவர் செய்தது பற்றி வருத்தப்படக்கூடாதென்றும் சொல்லி நான் கடோற்கசனைத் தேறுதல் சொல்லி அனுப்பினேன். போகும்போது அவன் பைக்குள் குள்ளச்சாமியார் ஒரு பொற்காசு போட்டார். நான் ஒரு துண்டுக் காயிதத்தில் "ஓம் சக்தி" என்ற மந்திரத்தை எழுதி அவன் பைக்குள் போட்டேன்.

பொற் காசைக் கண்டவுடன் கடோற்கசன் கொஞ்சம் சந்தோஷமடைந்து புன்சிரிப்பு கொண்டான். அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்.

"எல்லாம் தெய்வம்"-"தர்மமே மகா மந்திரம்" "உண்மைக்கு ஜயமுண்டு" "எல்லாரையும் வசப்படுத்த வேண்டுமானார்ல, எல்லாரையும் தெய்வமாக நினைத்து மனத்தால் வணங்க வேண்டும். இந்த விஷயங்களையெல்லாம் இந்த தேசத்தில் பரவும்படி செய்" என்றார்.