உள்ளடக்கத்துக்குச் செல்

முருக பக்தி நூல்கள் அருணகிரி நாதர் அருளிய திருப்புகழ்

விக்கிமூலம் இலிருந்து
                       முருக பக்தி நூல்கள்
                         அருணகிரி நாதர்
                            அருளிய
                           திருப்புகழ்

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம்

(இப் பாயிரம் பூர்வத்துள்ள அபியுக்தர்களால் செய்யப்பட்டுப் புராதன பிரதிகளில் எழுதி வழங்கி வருவது.)

1. நூற் சிறப்பு

எல்லாரும் ஞானத் தெளிஞரே? கேளீர்சொல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாமோ? - பொல்லாக் கருப்புகழைக் கேட்குமோ கானமயில் வீரன் திருப்புகழைக் கேட்குஞ் செவி? 1

மாணிக்கம் பூண்பார்க்கு மற்றொருகல் வேண்டுமோ? ஆணிப்பொன் கையுறுவார்க் கையுறவேன்? - பேணிப்பின் செவ்வேல் விநோதன் திருப்புகழ்சிந் தித்திருப்பார்க் கெவ்வேலை வேண்டும் இனி? 2

சீராந் திருப்புகழைச் செவ்வேள்மேல் அன்பாக ஆராய்ந் துரைத்தான் அருணகிரி; - நேராக அந்தப் புகழை அநுதினமும் ஓதாமல் எந்தப் புகழோது வீர்? 3

அருணகிரி நாதன் அகிலதலத் துன்னைக் கருணையினாற் பாடுங் கவிபோற் - பிரியமுற வேறுமோர் புன்கவிகள், வேலோனே! நின் செவியில் ஏறுமோ? என்னே இனி? 4

ஆனைமுக வற்கிளைய ஐயா! அருணகிரி தேனனைய சொல்லான் திருப்புகழை - யானினைந்து போற்றிடவும் நின்னைப் புகழ்ந்திடவும் பொற்கமலஞ் சாத்திடவும் ஓதிடவும் தா. 5

2. திருப்புகழ்ச் சிரவணத்தால் வேதார்த்தாதி அனைத்து அறியலாம்; ஆதலால் அதனையே கேட்க என்றது

வேதம்வேண் டாம் சகல வித்தைவேண் டாம்கீத நாதம்வேண் டாம்ஞான நூல்வேண்டாம், - ஆதி குருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந் திருப்புகழைக் கேளீர் தினம். 6

3. நூற் பயன்

ஞானம் பெறலாம் நலம் பெறலாம் எந் நாளும் வானம் அரசாள் வரம் பெறலாம் - மோனாவீ டேறலாம், யானைக் கிளையான் திருப்புகழைக் கூறினார்க் காமேஇக் கூறு. 7

ஆறுமுகந் தோன்றும் அழகியவேல் தோன் றுமவன் ஏறுமயில் தோன்றும் எழில்தோன்றும் - சீறிவரு சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப் பாரில் வழுத்தினோர் பால். 8

4. அன்பர் வினவ ஆண்டவன் விடையருளியதாக மேலையதை வற்புறுத்தியது

பொருப்பது பொடிப்பட விடுத்திடுகை வேலா இருப்பிடம் உனக்கெது எனக்கரு ளியம்பாய்; உருக்க நல் விழுக்குலம் ஒழுக்கமில ரேனும் திருப்புகழ் படிப்பவர் மனத்தினில் இருப்பாம். 9

5. அங்ஙனம் அருளக் கேட்ட அன்பர் ஆண்டவனை நோக்கிக் கூறியதாகத் திருப்புகழ் படிப்போர் தீரங் கூறியது

திருப்புகழ் படிக்குமவர் சிந்தைவலு வாலே ஒருத்தரை மதிப்பதிலை உன்றனரு ளாலே பொருப்புக மிகப்பொருது வென்றுமயில் மீதே தரித்தொரு திருத்தணியில் நின்றபெரு மாளே. 10

6. நூலாசிரியர் பெயரோடு நூற்பண்பும் பெயரும் உணர்த்தி அதனைத் துதிப்போர் பேறுங் கூறியது

ஓராறு மாமுகனாம் உச்சிதமெய்ஞ் ஞானகுகன் பேரால் அருணகிரி பேருலகில் - சீராருந் தோத்திரம தாகத் துதிக்குந் திருப்புகழை ஏத்தினவர் ஈடேறு வார். 11

வள்ளிமண வாளன் மயிலேறும் வள்ளல்தனைத் தெள் ளுதமி ழாற்புனைந்து சீர்பெறவே - உள்ளபடி வைப்பாம் அருணகிரி வாழ்த்துந் திருப்புகழைக் கற்பார் கரையேறு வார். 12

7. திருப்புகழ் இன்ன இன்னதற்கு இன்ன இன்னதாம் எனல்

அருணகிரி நாதர்பதி னாயிறா யிரமென் றுரைசெய் திருப்புகழை யோதீர், - பரகதிக்கஃ தேணி; அருட்கடலுக் கேற்றம்; மனத்தளர்ச்சிக் காணி; பிறவிக் கரம். 13

8. திருப்புகழ் வழிபாட்டாற் கூற்றையும் வெல்லலாம் எனக் கெடி பெற உரைத்தது

திருப்புகழைக் கற்கத் திருப்புகழைக் கேட்கத் திருப்புகழை நித்தஞ் செபிக்கத் - திருப்புகழை அர்ச்சிக்க முத்தியெளி தாகுமே, கூற்றைவென்று கெர்ச்சிக்க லாமே கெடீ. 14

9. திருப்புகழின் பிரபாவம்

மடங்கல் நடுங்கும் தனைச்சுடும் ஈதென்று; மாதிரத்தோர் அடங்கி நடுங்குவர் சூலா யுதமென், றசுரர் கடல் ஒடுங்கி நடுங்குவர் வேலா யுதமென், றுரகனுங்கீழ்க் கிடங்கில் நடுங்கும், மயிலோன் திருப்புகழ் கேட்டளவே. 15

10. திருப்புகழடியார் பெருமை

திருப்புகழ் வல்ல சூரர்மகன் நாயகன், சங்கரற்குக் குருப்புகழ் வல்ல குமரேசன், சண்முகன், குன்றெறிந்தோன் மருப்புகழ் வல்ல அருண கிரிப்பெயர் வள்ளல் சொன்ன திருப்புகழ் வல்லவர் சீர்பாதத் தூளிஎன் சென்னியதே. 16

திருப்புகழ்ச் சிறப்புப் பாயிரம் முற்றிற்று.

முருகன் துதி

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே

    ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே

கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே

    குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

    வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே

ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்

    ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

விநாயகர் துதி

கைத்தல நிறைகனி அப்ப மொடவல் பொரி

    கப் பியகரிமுகன் - அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ!

    கற்பகம் எனவினை - கடிதேகும்;

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்

    மற்பொருதிரள் புய - மதயானை

மத்தள வயிறனை உத்தமிபுதல் வனை

    மட்டவிழ் மலர்கொடு - பணிவேனே;

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

    முற்பட எழுதிய - முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்

    அச்சது பொடிசெய்த - அதிதீரா;

அத்துய ரதுகொடு சுப்பிரமணி படும்

    அப்புன மதனிடை - இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

    அக்கண மணமருள் - பெருமாளே! 1

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி

    ஒண்கடலிற் றேன முதத் துணர்வூறி;

இன்பரசத் தேபருகிப் பலகாலும்

    என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே;

தம்பிதனக் காசுவனத் தணைவோனே;

    தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே

    ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே. 2

பக்கரைவி சித்ரமணி பொற் கலணை யிட்ட நடை

    பட்சிபெனு முக்ரதுர கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய

    பட்டுருவ விட்டருள் கை வடிவேலும்;

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு

    சிற்றடியு முற்றியப னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு

    செப்பென எனக்கருள்கை மறவேனே;

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புனெய்

    எட்பொரிய வற்றுவரை இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள

    ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம்;

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெனக்கொளொரு

    விக்கநச மர்த்தனெனும் அருளாழி!

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

    வித்தகம ருப்புடைய பெருமாளே! 3

விடமடைசு வேலை அமரர்படை சூலம்

    விசையன் விடு பாண மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்

    வினையின்விளை வேதும் அறியாதே;

கடியுலவு பாயல் பகலிரவெ னாது

    கலவிதனில் மூழ்கி வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு

    கழலிணைகள் சேர அருள்வாயே;

இடையர்சிறு பாலை திருடிகொடி போக

    இறைவன் மகள் வாய்மை அறியாதே

இதயமிக வாடியுடையபிளை நாத

    கணபதியெ னாம முறைகூற;

அடையலவர் ஆவி வெருவ அடி கூர

    அசலுமறி யாமல் அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட

    அறிவருளும் ஆனை முகவோனே! 4

நினது திருவடி சத்திம யிற்கொடி

    நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
    நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன்.

நெடிய விளைமுறி இக்கொடு லட்டுகம்

    நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
    நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் இளநீரும்;

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு

    மகர சலநிதி வைத்தது திக்கர
    வளரு கரிமுக ஒற்றமை ருப்பனை வலமாக.

மருவு மலர்பனை தொத்திர சொற்கொடு

    வளர்கை குழைபிடி தொப்பண் குட்டொடு
    வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே;

தென்ன தெனதென தெத்தென னப்பல

    சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
    திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் செறிமூளை.

செரும உதரநிரப்பசெ ருக்குடல்

    நிரைய அரவநி றைந்தக ளத்திடை
    திமித திமிதிமி மத்தளி டக்கைகள் செகசேசே.

எனவெ துகுதுகு துத்தென வொத்துகள்

    துடிக ளிடிமிக வொத்துமு ழக்கிட
    டிமுடி டிமுடிமு டிட்டிமெ னத்தவில் எழுமோசை.

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட

    இரண பயிரவி சுற்றுந டித்திட
    எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் பெருமானே. 5

முத்தைத்தருரு பத்தித் திருநகை

         அத்திக்கிறை சத்திச் சரவண!
         முத்திக்கொரு வித்துக் குருபர! எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
         முற்பட்டது கற்பித் திருவரும்
         முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணை தொடு

         ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
         பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய           பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்!
         பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே?

தித்தித்தெய ஒத்தப் பரிபுர

         நிர்த்தப்பதம் வைத்துப் பயரவி
         திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத்
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
         தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
         சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக்

கொத்துப் பறை கொட்டக் களமிசை

         குக்குக்குகு குக்குக் குகுகுகு
         குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
         வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
         குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே. 1

திருப்பரங்குன்றம்

(முதலாவது படை வீடு)

கனகந்திரள் கின்றபெ ருங்கரி

         தனில்வந்துத கன்தகன் என்றிடு
         கதிர்மிஞ்சிய செண்டைஎ றிந்திடு கதியோனே!
    கடமிஞ்சி அநந்தவி தம்புணர்
         கவளந்தனை உண்டுவ ளர்ந்திடு
         கரியின் றுணை என்று பிறந்திடு முருகோனே!

பனகந்துயில் கின்ற திறம்புனை

         கடல்முன்புக டைந்தப ரம்பரர்
         படரும்புயல் என்றவர் அன்புகொள் மருகோனே!
    பல துன்பம்உ ழன்றுக லங்கிய
         சிறியன்புலை யன்கொலை யன்புரி
         பவமின்று கழிந்திட வந்தருள் புரிவாயே;

அனகன்பெயர் நின்றரு ளுந்திரி

         புரமுந்திரி வென்றிட இன்புடன்
         அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே!
    அடல்வந்துமு ழங்கியி டும்பறை
         டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
         அதிர்கின்றிட அண்ட நெரிந்திட வருசூரர்

மன முந்தழல் சென்றிட அன்றவர்

         உடலுங்குட லுங்கிழி கொண்டிட
         மயில்வென்றனில் வந்தரு ளுங்கள் பெரியோனே!
    மதியுங்கதி ருந்தட வும்படி
         உயர்கின்றவ னங்கள் பொருந்திய
         வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே! 2

சருவும்படி வந்தனன் இங்கித

         மதனின்றிட அம்புலி யுஞ்சுடு
         தழல்கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகி
    சயிலங்கொளு மன்றல் பொருந்திய
         பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
         தடவஞ் சுனை துன்றியெ ழுந்திட திறமாவே

இரவும் பகல் அந்தியு நின்றிடு

         குயில்வந்திசை தெந்தன என்றிட
         இருகண்கள் துயின்றிட லின்றியும் அயர்வாகி
    இவணெஞ்சுப தன்பதன் என்றிட
         மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன்
         இனியுன்றன் மலரந்தில கும்பதம் அடைவேனோ;

திருவொன்றிவி ளங்கிய அண்டர்கள்

         மனையின்தயிர் உண்டவன் எண்டிசை
         திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் பயில்வோர்பின்
    திரிகின்றவன் மஞ்சுநிறம்புனை
         பவன்மிஞ்சுதி றங்கொள வென்றடல்
         செயதுங்கமு குந்தன் மகிழ்ந்தருள் மருகோனே;

மருவுங்கடல் துந்துமி யுங்குட

         முழவங்கள்கு மின்குமின் என்றிட
         வளமொன்றிய செந்திலில் வந்தருள் முருகோனே!
    மதியுங்கதி ரும்பிய லுந்தின
         மறுகும்படி அண்டம் இலங்கிட
         வளர்கின்றப ரங்கிரி வந்தருள் பெருமாளே. 3

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ

         கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
         அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் இருதோளுற்
    றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
         உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
         அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென மிகவாய்விட்

டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய

         சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
         உறக்கை யின் கனி நிகரென இலகிய முலைமேல்வீழ்ந்
    துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
         பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
         உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது தவிர்வேனோ

இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற

         உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
         இதத்த இங்கிதம் இலகிய அறுமுக எழில்வேளென்
    றிலக்க ணங்கங்களும் இயலிசை களுமிக
         விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
         இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை புனைவோனே!

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற

         நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
         திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய குருநாதர்
    திருக்கு ழந்தையு மென அவர் வழிபடு
         குருக்களின்திற மெனவரு பெரியவ
         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே. 4

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை

         உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
         உறப்ப ணிந்தலன் ஒருதவ மிலனுன தருள்மாறா
    உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
         விருப்பொடுன்சிக ரமும் வலம் வருகிலன்
         உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் மலைபோலே

கனைத் தெழும்பக டதுபிடர் மிசைவரு

         கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
         கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே
    கலக்கு றுஞ்செயல் ஒழிவுற அறிவுறு
         கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
         கணத்தில் என்பய மறமயில் முதுகினில் வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள

         விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
         விரித்த குஞ்சியர் எனுமவு ணரை அமர் புரிவேலா!
    மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
         கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
         விரைத்த சந்தன ம்ருகமத புயவரை உடையோனே!

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு

    புனற்சொரிந்தலர் பொதிய விணவரொடு
         சினத்தை நிந்தனை செயுமுநிவரர் தொழ மகிழ்வோனே!
    தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
         தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே! 5

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு

         நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
         கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு நகையாலே
    களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
         மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
         கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற

         அணைத்த கந்தனில் இணைமுல யெதிர் பொர
         நகத்த ழுந்திட அமுதிதழ் பருகியு மிடறூடே
    நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
         இசைத்து நன்கொடு மனமது மறுகிட
         நழுப்ப நஞ்சன சிறுமிகள் துயரற அருள்வாயே;

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென

         உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
    நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென வரைபோலும்
    நிலத்த திண்கழல் நிசிசர ருரமொடு
         சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
         நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர அடுதீரா!

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு

         புழைக்கை தண்கட கயமுக மிகவுள
         சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் இளையோனே!
    சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
         பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
         திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே! 6

வடத்தை மிஞ்சிய புளகிய வனமுலை

         தனைத்தி றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
         மயக்கி ஐங்கணை மதனனை ஒரு அரு மையினாலே
    வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
         நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
         வழுத்தி அங்கவ ரொடுசரு வியுமுடல் தொடுபோதே

விடத்தை வென்றிடு படைவிழி கொடுமுள

         மருட்டி வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
         விருப்பெ னும்படி மடிமிசை யினில்விழு தொழில்தானே?
    விளைத்தி டும்பல கணிகையர் தமதுபொய்
         மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
         விரைப்ப தந்தனில் அரும்பெற நினைகுவ துளதோதான்!

குடத்தை வென்றிரு கிரியென எழில்தள

         தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
         குறக்க ரும்பின் மெய்துவள் புயன் என வரு வடிவேலா!
    குரைக்க ருங்கடல் திருவணை எனமுனம்
         அடைத்தி லங்கையின் அதிபதி நிசிசரர்
         குலத்தொ டும்பட ஒருகணை விடுமரி மருகோனே!

திடத்தெ திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட

         அயிர்கொ டும்படை விடுசர வணபவ
         திறற்கு கன்குரு பரனென வருமொரு முருகோனே!
    செழித்த தண்டலை தொறுமில கியகுட
         வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர்
         திருப்ப ரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே. 7

கருவடைந்து பத்துற்ற திங்கள்

         வயிறிருந்து முற்றிப்ப யின்று
         கடையில் வந்து தித்துக் குழந்தை வடிவாகிக்
    கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
         முலையருந்து விக்கக் கிடந்து
         கதறியங்கை கொட்டித்த வழ்ந்து நடமாடி

அரைவடங்கள் கட்டிச் சதங்கை

         இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
         அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து வயதேறி
    அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து
         பிணியுழன்று சுற்றித்திரிந்த
         தமையுமுன்கரு பைச்சித்தம் என்று பெறுவேனோ?

இரவி இந்த்ரன் வெற்றிக்கு ரங்கி

         னரச ரென்றும் ஒப்பற்ற உந்தி
         யிறைவன் எண்கி னக்கர்த்த னென்றும் நெடுநீலன்
    எரிய தென்றும் ருத்ரற்சி றந்த
         அநும னென்றும் ஒப்பற்ற அண்டர்
         எவரும் இந்த வர்க்கத்தில் வந்த புனமேவ

அரிய தன்ப டைக்கர்த்த ரென்று

         அசுரர் தங்கி ளைக்கட்டை வென்ற
         அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே!
    அயனை யும்பு டைத்துச்சி னந்து
         உலக மும்படைத்துப் பரிந்து
         அருள் பரங்கிரிக் குட்சி றந்த பெருமாளே. 8


காதட ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி

         வாளிம யங்கம னம்பயந் தந்திருள்
         கால்தர விந்துவி சும்பிலங் கும்பொழு தொருகோடி
    காய்கதி ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
         யாழியுடன் கட கந்துலங் கும்படி
         காமனெடுஞ்சிலை கொண்டடர்ந்தும் பொருமயலாலே

வாது புரிந்தவர் செங்கை தந்திங்கித

         மாகநடந்தவர் பின் திரிந் துந்தன
         மார்பில ழுந்தஅ ணைந்திடுந் துன்பம துழலாதே;
    வாசமி குந்தக டம்பமென் கிண்கிணி
         மாலை கரங்கொளும் அன்பர்வந்தன்பொடு
         வாழநி தம்புனை யும் பதந்தந்துன தருள்தாராய்;

போதிலு றைந்தருள் கின்றவன் செஞ்சிர

         மீதுத டிந்துவி லங்கிடும் புங்கவ!
         போதவளஞ் சிவசங்கரன் கொண்டிட மொழிவோனே!
    பூகமுடன் திகழ் சங்கினங் கொண்டகி
         ரீவம டந்தைபு ரந்தரன் தந்தருள்
         பூவைக ருங்குற மின்கலந் தங்குப னிருதோளா;

தீதக மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி

         டாதவர் சங்கரர் தந்ததென் பும்பல
         சேர்நிரு தன்குலம் அஞ்சமுன் சென்றடு திறலோனே!
    சீதள முந்தும ணந்தயங் கும்பொழில்
         சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
         தேவர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை பெருமாளே! 9

சந்ததம் பந்தத் தொடராலே

    சஞ்சலந் துஞ்சித் திரியாதே

கந்தனென் றென்றுற் றுனை நாளும்

    கண்டுகொண்டன்புற் றிடுவேனோ?

தந்தியின் கொம்பைப் புணர்வோனே

    சங்கரன் பங்கிற் சிவைபாலா!

செந்திலங் கண்டிக் கதிர்வேலா!

    தென்பரங் குன்றிற் பெருமாளே! 10

தடக்கைப் பங்களங் கொடைக்குக் கொண்டல்தண்

         டழிக்குத் தஞ்சமென் றுலகோரைத்
    தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
         தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்

கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்

         கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக்
    கணத்திற் சென்றிடந் திருந்தித் தண்டையங்
         கழற்குத் தொண்டு கொண்டருள்வாயே;

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்

         புரக்கக் கஞ்சைமன் பணியாகப்
    பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
         பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா!

குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்

         குலத்திற் கங்கைதன் சிறியோனே
    குறப்பொற் கொம்பைமுன் புனத்திற செங்கரங்
         குவித்துக் கும்பிடும் பெருமாளே! 11

பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்

         பருத்துயர்ந் தண்டத் திற்றலை முட்டும்
         பருப்பதந் தந்தச் செப்பவை ஒக்குந் தனபாரம்
    படப்புயங் கம்பற் கக்குக டுப்பண்
         செருக்குவண் டம்பப் பிற்கயல் ஒக்கும்
         பருத்தகண் கொண்டைக் கொக்கு மிருட்டென் றிளையோர்கள்

துதித்துமுன் கும்பிட் டுற்றது ரைத்தன்

         புவக்கநெஞ் சஞ்சச் சிற்றிடை சுற்றந்
         துதிற்களைந் தின்பத் துர்க்கம் அளிக்கும் கொடியார்பால்
    துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்
         புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்
         துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் றருள்வாயே;

குதித்துவெண் சங்கத் தைச்சுற வெற்றுங்

         கடற்கரந் தஞ்சிப் புக்கஅ ரக்கன்
         குடற்சரிந் தெஞ்சக் குத்திவி திர்க்குங் கதிர்வேலா!
    குலக்கரும் பின்சொற் றத்தையி பப்பெண்
         தனக்குவஞ் சஞ்சொற் பொச்சையி டைக்குங்
         குகுக்குகுங் குங்குக் குக்குகு குக்குங் குகுகூகூ

திதித்திதிந் தித்தித் தித்தியெ னக்கொம்

         பதிர்த்துவெண் சண்டக் கட்கம்வி திர்த்துந்
         திரட்குவிந் தங்கட் பொட்டெழ வெட்டுங் கொலைவேடர்
    தினைப் புனஞ் சென்றிச் சித்தபெ ணைக்கண்
         டுருக்கரந் தங்குக் கிட்டிய ணைத்தொண்
         திருப்பரங் குன்றிற் புக்குளி ருக்கும் பெருமாளே. 12

பொருப்புறுங் கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய

         பிணக்கிடுஞ் சண்டிகள் வஞ்சமாதர்
    புயற்குழன் றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
         முருக்குவண் செந்துவர் தந்துபோகம்

அருத்திடுஞ் சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்

         அறச் சிவந் தங்கையில் அன்புமேவும்
    அவர்க்குழன் றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
         அருட்பதம் பங்கயம் அன்புறாதோ?

மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்

         விதித்தெணுங் கும்பிடு கந்தவேளே!
    மிகுத்திடும் வன்சம ணரைப் பெருந் திண்கழு
         மிசைக்கிடுஞ் செந்தமிழ் அங்கவாயா!

பெருக்குதண் சண்பக வனத்திடங் கொங்கொடு

         திறற்செழுஞ் சந்தகில் துன்றிநீடு
    தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
         திருப்பரங் குன்றுறை தம்பிரானே! 13

மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென

         வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர்
    மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண்டன்புமிக
         வம்பிடுங் கும்பகன தனமார்பில்

ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய

         உந்தியென் கின்றமடு விழுவேனை
    உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
         ஒண்கடம் பும்புனையும் அடிசேராய்;

பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்

         பண்டையென் பங்கமணி பவர்சேயே!
    பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
         பண்டிதன் தம்பியெனும் வயலூரா!

சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்

         செண்பகம் பைம்பொன்மலர் செறிசோலை
    திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
         தென்பரங் குன்றிலுறை பெருமாளே! 14

வரைத்தடங் கொங்கை யாலும்

         வளைப்படுஞ் செங்கை யாலும்
         மதர்த்திடுங் கெண்டை யாலும் அனைவோரும்
    வடுப் படுந் தொண்டை யாலும்
         விரைத்திடுங் கொண்டையாலும்
         மருட்டிடுஞ் சிந்தை மாதர் வசமாகி

எரிப்படும் பஞ்சு போல

         மிகக்கெடுந் தொண்ட னேனும்
         இனற்படுந் தொந்தவாரி கரையேற
    இசைத்திடுஞ் சந்தபேதம்
         ஒலித்திடுந் தண்டை சூழும்
         இணைப்பதம் புண்ட ரீகம் அருள்வாயே;

சுரர்க்குவஞ் சஞ்செய் சூரன்

         இளக்ரவுங் சந்தனோடு
         துளக்கெழுந் தண்ட கோளம் அளவாகத்
    துரத்தியன் றிந்த்ர லோகம்
         அழித்தவன் பொன்று மாறு
         சுடப்பருஞ் சண்டவேலை விடுவோனே!

செருக்கெழுந் தும்பர் சேனை

         துளக்கவென் றண்ட மூடு
         தெழித்திடுஞ் சங்க பாணி மருகோனே!
    தினைப்புனஞ் சென்று லாவு
         குறத்தியின் பம்ப ராவு
         திருப்பரங் குன்ற மேவு பெருமாளே! 15

திருச்சீரலைவாய் என்கிற திருச்செந்தூர்

(இரண்டாவது படைவீடு)

தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்

         தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே நின்
    தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
         சந்தொடம ணைந்து நின் றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்

         கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும்
    கண்களுமு கங்களுஞ் சந்திர நிறங்களுங்
         கண்குளிர என்றன்முன் சந்தியாவோ?

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்

         பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
    பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும் வளர்ந்துமுன்
         புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக்

கொண்டநடனம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்

         கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே
    கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
         கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே! 16

அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்

         பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
         தலையுமுடை யனவரவ தண்டச் சண்டச் சமனோலை
    அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
         பறைதிமிலை திமிர்தமிகு தம்பட்டம்பற்
         கரையவுற வினரலற உந்திச் சந்தித் தெருவூடே

எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்

         பிளவளவு தினையளவு பங்கிட் டுண்ணைக்
         கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் கெனநாடா
    திடுக்கடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
         டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
         டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் பகிராதோ?

குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்

         சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
         குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் கொடியாடக்
    குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
         கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
         தொகுகுகுகு தொகுகுகுகு தொங்தத் தொங்கத் தொகுதீதோ

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்

         தமருகம ததிர் சதியொ டன்பர்க் கின்பத்
         திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் குருநாதா!
    திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
         புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
         திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் பெருமாளே! 17

கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்கஅங்

         குமுதஅமு திகழ்பருகி யன்புறுஞ் சங்கையன்
         குலவியணை முகிலளக முஞ்சரிந் தன்பினின் பண்புலாவக்
    கொடியவிரல் நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
         குனகியவ ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்
         குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் தொன்றுபாய்மேல்

விடமனைய விழிமகளிர் கொங்கையின் பன்புறும்

         வினையனியல் பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்
         மிதமொழிய அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் செஞ்செநீடும்
    வெகுகனக வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
         றவிழவுள முருகிவரும் அன்பிலன் தந்திலன்
         விரவுமிரு சிறுகமல பங்கயங் தந்துகந் தன்புறாதோ?

படமிலகும் அரவினுடல் அங்கமும் பங்கிடந்

         துதறுமொரு கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
         பகையசுர ரனைவருடல் சந்துசந் துங்கதஞ்சிந்தும்வேலா!
    படியவரும் இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
         பழையஇறை யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்
         பருவரல்செய் புரமெரிய விண்டிடுஞ் செங்கணன் கங்கைமான்வாழ்

சடிலமிசை அழகு புனை கொன்றையும் பண்புறுந்

         தருணமதி யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
         சகலபுவ னமுமொழிக தங்குறங் கங்கியும் பொங்கிநீடும்
    சடமருவு விடையரவர் துங்க அம் பங்கினின்
         றுலகுதரு கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்
         தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே! 18

அம்பொத் தவிழித் தந்தக் கலகத்

         தஞ்சிக் கமலக் கணையாலே
    அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
         தந்திப் பொழுதிற் பிறையாலே

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்

         றின்பக் கலவித் துயரானாள்
    என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
         கின்பப் புலியுற் றிடலாமோ?

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்

         கொங்கைக் குறவிக் கினியோனே!
    கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
         கொஞ்சித் தமிழைப் பகர்வோனே!

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்

         சிந்தக் கறுவிப் பொரும்வேலா
    செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
         செந்திற் குமரப் பெருமாளே! 19

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்

         கொண்டற் குழலிற் கொடிதான
    கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
         கொஞ்சுக் கிளியுற் றுறவான

சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்

         சந்திப் பவரைச் சருவாதே
    சந்தப் படியுற் றென்றற் றலையிற்
         சந்தப் பதம்வைத் தருள்வாயே

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்

         கந்திக் கடலிற் கடிதோடா
    அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
         றஞ்சப் பொருதுற் றொழியாதே

செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்

         சென்றுற் றவர்தற் பொருளானாய்
    சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
         செந்திற் குமரப் பெருமாளே! 20

புகரப் புங்கப் பகரக் குன்றிற்

         புயலிற் றங்கிப் பொலிவோனும்
    பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
         பொருளைப் பண்பிற் புகழ்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்

         திகிரிச் செங்கைத் திருமாலும்
    திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
         டெளிதற் கொன்றைத் தரவேணும்;

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்

         தடநற் கஞ்சத் துறைவோனே!
    தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
         தையளித் தன்புற் றருள்வோனே!

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்

         படியிற் சிந்தத் தொடும்வேலா!
    பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
         பதியிற் கந்தப் பெருமாளே! 21

அளக பாரம லைந்துகு லைந்திட

         வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
         அவச மோகம் விளைந்துத ளைந்திட அணைமீதே
    அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
         அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
         அதர பானம் ருந்திம ருங்கிற் முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுப டும்படி ஒன்றிடு

         மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
         ஒழிய மாறு தெளிந்துளம் அன்பொடு சிவயோகத்
    துருகு ஞானப ரம்பர தந்திர
         அறிவி னோர்கரு தங்கொள் சிலம்பணி
         உபய சீதள பங்கய மென்கழல் தருவாயே;

இளகி டாவளர் சந்தன குங்கும

         களப பூரண கொங்கை நலம்புனை
         இரதி வேள்பணி தந்தையும் அந்தண மறையோனும்
    இனிது றாதெதிர் இந்திரன் அண்டரும்
         ஹர ஹராசிவ சங்கர சங்கர
         எனமி காவரு நஞ்சினை யுண்டவர் அருள்பாலா!

வளர்நி சாசரர் தங்கள்சி ரம்பொடி

         படவி ரோதமி டுங்குல சம்ப்ரமன்
         மகர வாரிக டைந்தநெ டும்புயல் மருகோனே!
    வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
         இடைவிடாது நெருங்கிய மங்கல
         மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமாளே! 22

கொங்கைப் பணையிற் செம்பொற் செறிவிற்

         கொண்டற் குழலிற் கொடிதான
    கொன்றைக் கணையொப் பந்தக் கயலிற்
         கொஞ்சுக் கிளியுற் றுறவான

சங்கத் தொனியிற் சென்றிற் கடையிற்

         சந்திப் பவரைச் சருவாதே
    சந்தப் படியுற் றென்றற் றலையிற்
         சந்தப் பதம்வைத் தருள்வாயே

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்

         கந்திக் கடலிற் கடிதோடா
    அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
         றஞ்சப் பொருதுற் றொழியாதே

செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்

         சென்றுற் றவர்தற் பொருளானாய்
    சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
         செந்திற் குமரப் பெருமாளே! 20

புகரப் புங்கப் பகரக் குன்றிற்

         புயலிற் றங்கிப் பொலிவோனும்
    பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
         பொருளைப் பண்பிற் புகழ்வோனும்

திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்

         திகிரிச் செங்கைத் திருமாலும்
    திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
         டெளிதற் கொன்றைத் தரவேணும்;

தகரத் தந்தச் சிகரத் தொன்றித்

         தடநற் கஞ்சத் துறைவோனே!
    தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
         தையளித் தன்புற் றருள்வோனே!

பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்

         படியிற் சிந்தத் தொடும்வேலா!
    பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
         பதியிற் கந்தப் பெருமாளே! 21

அளக பாரம லைந்துகு லைந்திட

         வதனம் வேர்வுது லங்கிந லங்கிட
         அவச மோகம் விளைந்துத ளைந்திட அணைமீதே
    அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
         அடர்ந காநுதி பங்கவி தஞ்செய்து
         அதர பானம் ருந்திம ருங்கிற் முலைமேல்வீழ்ந்

துளமும் வேறுப டும்படி ஒன்றிடு

         மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
         ஒழிய மாறு தெளிந்துளம் அன்பொடு சிவயோகத்
    துருகு ஞானப ரம்பர தந்திர
         அறிவி னோர்கரு தங்கொள் சிலம்பணி
         உபய சீதள பங்கய மென்கழல் தருவாயே;

கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி

         சொலவொ ணாதம டந்தையர் சந்தன
         களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய்
    களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
         விழியின் மோகித கந்தசு கந்தரு
         கரிய ஓதியில் இந்துமு கந்தனில் மருளாதே

அமல மாகிய சிந்தைய டைந்தகல்

         தொலைவி லாதஅறம்பொருள் இன்பமும்
         அடைய ஓதியு ணர்ந்து தணந்தபின் அருள்தானே
    அறியு மாறுபெ றும்படி அன்பினின்
         இனிய நாதசி லம்புபு லம்பிடும்
         அருண ஆடக் கிண்கிணி தங்கிய அடிதாராய்!

குமரி காளிப யங்கரி சங்கரி

         கவுரி நீலிப ரம்பரை அம்பிகை
         குடிலை யோகினி சண்டினி குண்டலி எமதாயி
    குறைவி லாள் உமை மந்திரி அந்திரி
         வெகுவி தாகம சுந்தரி தந்தருள்
         குமர மூஷிக முந்திய ஐங்கர கணராயன்

மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி

         அணிக ஜானன விம்பனொர் அம்புலி
         மவுலி யானுறு சிந்தையு கந்தருள் இளையோனே
    வளரும் வாழையு மஞ்சளும் இஞ்சியும்
         இடைவிடாது நெருங்கிய மங்கல
         மகிமை மாநகர் செந்திலில் வந்துறை பெருமானே! 23

அவனிபெ றுந்தோட் டம்பொற்

         குழையட ரம்பாற் புண்பட்
         டரிவையர் தம்பாற் கொங்கைக் கிடையேசென்
    றணைதரு பண்டாட் டங்கற்
         றுருகிய கொண்டாட் டம்பெற்
         றழிதரு திண்டாட் டஞ்சற் றொழியாதே

பவமற நெஞ்சாற் சிந்தித்

         திலகுக டம்பார்த் தண்டைப்
         பதயுக ளம்போற் றுங்கொற் றமுநாளும்
    பதறிய அங்காப் பும்பத்
         தியுமறி வும்போய்ச் சங்கைப்
         படுதுயர் கண்பார்த் தன்புற் றருளாயோ!

தவநெறி குன்றாப் பண்பிற்

         றுறவின ருந்தோற் றஞ்சத்
         தனிமல ரஞ்சார்ப் புங்கத் தமராடி
    தமிழினி தென்காற் கன்றிற்
         றிரிதரு கஞ்சாக் கன்றைத்
         தழலெழ வென்றார்க் கன்றற் புதமாகச்

சிவவடி வங்காட் டுஞ்சற்

         குருபர! தென் பாற் சங்கத்
         திரள்மணி சிந்தாச் சிந்துக் கரைமோதும்
    தினகர திண்டேர்ச் சண்டப்
         பரியிட றுங்கோட் டிஞ்சித்
         திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே. 24

தொடரிய மன்போற் றுங்கப்

         படையைவ ளைந்தோட் டுந்துட்
         டரையிள குந்தோட் கொங்கைக் கிடுமாயத்
    துகில்விழ வுஞ்சேர்த் தங்கத்
         துளைவிர குஞ்சூழ்த் தண்டித்
         துயர்விளை யுஞ்சூட் டின்பத் தொடுபாயற்

கிடைகொடு சென்றீட் டும்பொற்

         பணியரை மென்றோற் றங்கற்
         றனையென இன்றோட் டென்றற் கிடுமாதர்க்
    கினிமையி லொன்றாய்ச் சென்றுட்
         படுமன முன்றாட் கன்புற்
         றியலிசை கொண்டேத் தென்றுட் டருவாயே;

நெடிதுத வங்கூர்க் குஞ்சற்

         புருடரும் நைந்தேக் கம்பெற்
         றயர்வுற நின்றார்த் தங்கட் கணையேவும்
    நிகரில்ம தன்தேர்க் குன்றற்
         றெரியில்வி ழுந்தேர்ப் பொன்றச்
         சிறிதுநினைந்தாட் டங்கற் றிடுவார்முன்;

திடமுறு அன்பாற் சிந்தைக்

         கறிவிட முஞ்சேர்த் தும்பர்க்
         கிடர்களை யும்போர்ச் செங்கைத் திறல்வேலா
    தினவரி வண்டார்த் தின்புற்
         றிசைகொடு வந்தேத் திஞ்சித்
         திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே. 25

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு

         துவட்பஞ் சானத டாகம்வி டாமட
         அனத்தின் தூவிகு லாவிய சீறடி மடமானார்
    அருக்கன் போலொளி வீசிய மாமர
         கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
         அழுத்தும் பாவியை யாவி யிடேறிட நெறிபாரா

வினைச் சண்டாளனை வீணனை நீணிதி

         தனைக்கண் டாணவ மானநிர் மூடனை
         விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி பகராதே
    விகற்பங் கூறிடு மோகவி காரனை
         அறத்தின் பாலொழு காதமு தேவியை
         விளித்துன் பாதுகை நீதர நானருள் பெறுவேனோ

முனைச் சங்கோலிடு நீலம கோததி

         அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
         முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் மருகோனே!
    முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
         திரைக்கங் காநதி தாதகி கூவிள
         முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு முருகோனே!

தினைச்செங் கானக வேடுவ ரானவர்

         திகைத்தந் தோவென வேகணி யாகிய
         திறற்கந் தாவளி நாயகி காமுறும் எழில்வேலா!
    சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
         நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
         திருச்செந்தூர்வரு சேவக னேசுரர் பெருமாளே. 26

உருக்கம் பேசிய நீலியர் காசுகள்

         பறிக்குந் தோஷிகள் மோகவி காரிகள்
         உருட்டும் பார்வையர் மாபழி காரிகள் மதியாதே
    உரைக்கும் வீரிகள் கோளர வாமென
         வுடற்றுந் தாதியர் காசள வேமனம்
         உறைக்குந் தூரிகள் மீதினி லாசைகள் புரிவேனோ

அருக்கன் போலொளி வீசிய மாமுடி

         யனைத்துந் தானழ காய்நல மேதர
         அருட்கண் பார்வையி னாலடி யார்தமை மகிழ்வோடே
    அழைத்துஞ் சேதிகள் பேசிய காரண
         வடிப்பந் தானென வேயெனே நாடொறும்
         அதிக்கஞ் சேர்தர வேயரு ளாலுட னினிதாள்வாய்;

இருக்குங் காரண மீறிய வேதமும்

         இசைக்குஞ் சாரமு மேதொழு தேவர்கள்
         இடுக்கண் தீர்கன னேயடி யார்தவ முடன்மேவி
    இலக்கந் தானென வேதொழ மேமகிழ்
         விருப்பங் கூர்தரு மாதியு மாயுல
         கிறுக்குந் தாதகி சூடிய வேணிய னருள்பாலா;

திருக்குந் தாபதர் வேதிய ராதியர்

         துதிக்குந் தாளுடை நாயக னாகிய
         செகச்செஞ் சோதியு மாகிய மாதவன் மருகோனே
    செழிக்குஞ் சாலியு மேகம ளாவிய
         கருப்பஞ் சோலையும் வாழையு மேதிகழ்
         திருச்செந் தூர்தனில் மேவிய தேவர்கள் பெருமாளே. 27

நிறுக்குஞ் சூதன மெய்த்தன முண்டைகள்

         கருப்பஞ் சாறொட ரைத்துள வுண்டைகள்
         நிழற்கண் காணவு ணக்கிம ணம்பல தடவாமேல்
    நெருக்கும் பாயலில் வெற்றிலை யின்புறம்
         ஒளித்தன் பாகஅளித்தபினிங்கெனை
         நினைக்கின் றீரிலை மெச்சிலி தஞ்சொலி யெனவோதி

உறக்கண் டாசைவ லைக்குள ழுந்திட

         விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
         யுருக்குந் தூவைகள் செட்டை குணந்தனி லுழலாமே
    உலப்பின் றாறெனு மக்கர முங்கமழ்
         கடப்பந் தாருமு கப்ரபை யுந்தினம்
         உளத்தின் பார்வை யிடத்தினி னைந்திட அருள்வாயே;

கறுக்குந் தூயமிடற்றன ருஞ்சிலை

         யெடுக்குந் தோளனி றத்தம ரெண்கரி
         கடக்குந் தானவ னைக்கொல ரும்புயன் மருகோனே
    கனத்தஞ் சாபுரி சிக்கல்வ லஞ்சுழி
         திருச்செங்கோடு இடைக்கழி தண்டலை
         களர்ச்செங்காடு குறுக்கை புறம்பயம் அமர்வோனே!

சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவ

         நடக்குந் தேரனி கப்படை கொண்டமர்
         செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை யுருவானோன்
    செருக்குஞ் சூரக லத்தை யிடந்துயிர்
         குடிக்குங் கூரிய சத்திய மர்ந்தருள்
         திருச்செந்தூர்நகரிக்குள் விளங்கிய பெருமாளே! 28

கரிக்கொம்பந் தனித்தங்கங்

         குடத்தின் பந்தனத்தின் கண்
         கறுப்புந்தன் சிவப்புஞ்செம் பொறிதோள்சேர்
    கணைக்கும்பண் டுழைக்கும்பங்
         களிக்கும்பண் பொழிக்குங்கண்
         கழுத்துஞ்சங் கொளிக்கும்பொன் குழையாடச்

சரக்குஞ்சம் புடைக்கும்பொன்

         றுகிற்றந்தந் தரிக்குந்தன்
         சடத்தும்பண் பிலுக்குஞ்சம் பளமாதர்
    சலித்தும்பின் சிரித்துங்கொண்
         டழைத்துஞ்சண் பசப்பும்பொன்
         தனத்துன்பந் தவிப்புண்டிங் குழல்வேனோ;

சுரர்ச் சங்கந் துதித்தந்தஞ்

         செழுத்தின்பங் களித் துண்பண்
         சுகத்துய்ந்தின் பலர்ச்சிந்தங் கசுராரைத்
    துவைத் தும்பந் தடித்துஞ்சங்
         கொலித்துங்குன் றிடித்தும்பண்
         சுகித்துங்கண் களிப்புங்கொண் டிடும்வேலா;

சிரப்பண்புங் கரப்பண்புங்

         கடப்பந்தொங் கலிற்பண்புஞ்
         சிவப்பண்புந் தவப்பண்புந் தருவோனே!
    தினைத்தொந்தங் குறப்பெண்பண்
         சசிப்பெண்கொங் கையிற்றுஞ்சுஞ்
         செழிக்குஞ்செந் திலிற்றங்கும் பெருமாளே! 29

கருப்பந்தங் கிரத்தம்பொங்

         கரைப்புண்கொண்டுருக்கும்பெண்
         களைக்கண்டங் கவர்ப்பின்சென்றவரோடே
    கலப்புண்டுஞ் சிலுப்புண்டுந்
         துவக்குண்டும் பிணக்குண்டுங்
         கலிப்புண்டுஞ் சலிப்புண்டுந் தடுமாறிச்

செருத்தண்டந் தரித்தண்டம்

         புகத்தண்டந் தகற்கென்றுந்
         திகைத்தந்திண் செகத்தஞ்சுங் கொடுமாயும்
    தியக்கங்கண் டுயக்கொண்டென்
         பிறப்பங்கஞ்சிறைப்பங்கஞ்
         சிதைத்துன்றன் பதத்தின்பந்

அருக்கன்சஞ் சரிக்குந்தெண்

         டிரைக்கண்சென் றரக்கன்பண்
         பனைத்தும்பொன் றிடக்கன்றுங் கதிர்வேலா!
    அணிச்சங்கங் கொழிக்குந்தண்
         டலைப்பண்பெண்டிசைக்குங்கொந்
         தளிக்குஞ்செந் திலிற்றங்குங் குமரேசா

புரக்குங்சங் கரிக்குஞ்சங்

         கரர்க்குஞ்சங் கரர்க்கின்பம்
         புதுக்குங்கங் கையட்குந்தஞ் சுதனானாய்!
    புனக்குன்றந் திளைக்குஞ்செந்
         தினைப்பைம்பொன் குறக்கொம்பின்
         புறத்தண்கொங் கையிற்றுஞ்சும் பெருமாளே! 30

குழைக்குஞ்சந் தனச்செங்குங்

         குமத்தின்சந் தநற்குன்றங்
         குலுக்கும்பைங் கொடிக்கென்றிங் கியலாலே
    குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்
         றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்
         டழைக்கும்பண் தழைக்குஞ்சிங் கியராலே!

உழைக்குஞ்சங் கடத்துன்பன்

         சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்
         டுடற்பிண்டம் பருத்தின்றிங் குழலாதே
    உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்
         ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்
         டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ் சடிசேராய்;

தழைக்குங்கொன் றையைச்செம்பொன்

         சடைக்கண்டங் கியைத் தங்குந்
         தரத்தஞ்செம் புயத்தொன்றும் பெருமானார்
    தனிப்பங்கின் புறத்தின்செம்
         பரத்தின்பங் கயத்தின்சஞ்
         சரிக்குஞ்சங் கரிக்கென்றும் பெருவாழ்வே!

கழைக்குங்குஞ் சரக்கொம்புங்

         கலைக்கொம்புங் கதித்தென்றுங்
         கயற்கண்பண் பளிக்குந்திண் புயவேளே!
    கறுக்குங்கொண்டலிற்பொங்குங்
         கடற்சங்கங் கொழிக்குஞ்செந்
         திலிற்கொண்டன் பினிற்றங்கும் பெருமாளே! 31

மனத்தின்பங் கெனத்தங்கைம்

         புலத்தென் றன் குணத்தஞ்சிந்
         த்ரியத்தம்பந் தனைச்சிந்தும் படிகாலன்
    மலர்ச்செங்கண் கனற்பொங்குந்
         திறத்தின்தண் டெடுத்தண்டங்
         கிழித்தின்றிங் குறத் தங்கும் பலவோரும்

எனக்கென்றிங் குனக்கென்றங்

         கினத்தின்கண் கணக்கென்றென்
         றிளைத்தன்புங் கெடுத்தங்கங் கழிவாமுன்
    இசைக்குஞ்செந் தமிழ்க்கொண்டங்
         கிரக்கும்புன் றொழிற்பங்கங்
         கெடத்துன்பங் கழித்தின்பந் தருவாயே;

கனைக்குந்தண் கடற்சங்கங்

         கரத்தின்கண் தரித்தெங்குங்
         கலக்கஞ்சிந் திடக்கண்டுஞ் சிடுமாலும்
    கதித்தொண்பங் கயத்தன்பண்
         பனைத்துங்குன் றிடச்சந்தங்
         களிக்குங்சம் புவுக்குங்செம்பொருளீவாய்!

தினைக்குன்றந் தனிற்றங்குஞ்

         சிறுப்பெண்குங் குமக்கும்பந்
         திருச்செம்பொன் புயத்தென்றும் புனைவோனே!
    செழிக்குங்குண் டகழ்ச்சங்கங்
         கொழிக்குஞ்சந் தனத்தின்பைம்
         பொழிற்றண்செந் திலிற்றங்கும் பெருமாளே. 32

பருத்தந்தத் தினைத்தந்திட்

         டிருக்குங்கச் சடர்த்துந்திப்
         பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் தனமானார்
    பரிக்குந்துற் சரக்கொன்றைத்
         திளைத்தங்குற் பலப்பண்பைப்
         பரக்குஞ்சக் கரத்தின்சத்தியைநேரும்

துரைச்செங்கட் கடைக்கொன்றிப்

         பெருந்துன்புற் றிளைத்தங்குத்
         துணிக்கும்புத்தியைச் சங்கித் தறியேனைத்
    துணைச்செம்பொற் பதத்தின்புற்
         றெனக்கென்றப் பொருட்டங்கத்
         தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் படியாள்வாய்

தருத்தங்கப் பொலத்தண்டத்

         தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத்
         தடத்துன்பத் தினைத்தந்திட் டெதிர்சூரன்
    சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்
         கதிர்த்துங்கத் தயிற்கொண்டத்
         தலத்தும்பர்ப் பதிக்கன் புற் றருள்வோனே!

திருக்கஞ்சத் தனைக்கண்டித்

         துறக் கங்குட் டிவிட்டுஞ்சற்
         சிவற்கன்றப் பொருட்கொஞ்சிப் பகர்வோனே
    செயத்துங்கக் கொடைத்துங்கத்
         திருத்தங்கித் தரிக்கும்பொற்
         றிருச்செந்திற் பதிக்கந்தப் பெருமாளே. 33

பெருக்கச்சஞ் சலித்துக்கந்

         தலுற்றுப்புந் தியற்றுப்பின்
         பிழைப்பற்றுங் குறைப்புற்றும் பொதுமாதர்
    ப்ரியப் பட்டங் கழைத்துத்தங்
         கலைக்குட்டங் கிடப்பட்சம்
         பிணித்துத்தந் தனத்தைத்தந் தணையாதே

புரக்கைக்குன் பதத்தைத்தந்

         தெனக்குத்தொண் டுறப்பற்றும்
         புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ்பாடும்
    புலப்பட்டங் கொடுத்தற்கும்
         கருத்திற்கண் படக்கிட்டும்
         புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் புரிவாயே;

தருக்கிக்கண் களிக்கத்தெண்

         டனிட்டுத்தண் புனத்திற்செங்
         குறத்திக்கன் புறச்சித்தந் தளர்வோனே

சலிப்புற்றங் குரத்திற்சம்

         ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்
         சமர்த்திற்சங் கரிக்கத்தண் டியசூரன்

சிரத்தைச்சென் றறுத்துப்பந்

         தடித்துத்திண் குவட்டைக்கண்
         டிடித்துச்செந் திலிற்புக்கங் குறைவோனே!
    சிறக்கற்கஞ் செழுத்தத்தந்
         திருச்சிற்றம் பலத்தத்தன்
         செவிக்குப்பண் புறச்செப்பும் பெருமாளே. 34

காலனார் வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்

         காலினார் தந்துடன் கொடுபோகக்
    காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
         கானமே பின்தொடர்ந் தலறாமுன்

சூலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்

         சூடுதோ ளுந்தடந் திருமார்பும்
    தூயதாள் தண்டையுங் காண ஆர் வஞ்செயுந்
         தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்

ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்

         தேவர்வா ழன்றுகந் தமுதீயும்
    ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
         தாதிமா யன்றனன் மருகோனே!

சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்

         சாரலார் செந்திலம் பதிவாழ்வே!
    தாவுஞ் ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
         தாரைவே லுந்திடும் பெருமாளே! 35

சங்கைதா னொன்று தா னின்றியே நெஞ்சிலே

         சஞ்சலா ரம்பமாயன்
    சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
         சம்ப்ரமா நந்தமாயன்

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்

         வம்பிலே துன்புறாமே
    வண்குகா நின்சொரூ பம்ப்ரமா சங்கொடே
         வந்துநீ யன்பிலாள்வாய்;

கங்கைசூடும்பிரான் மைந்தனே அந்தனே

         கந்தனே விஞ்சையூரா!
    கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
         கண்டலே சன்சொல்வீரா!

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே

         சென்றுமோ தும்ப்ரதாபா!
    செங்கண்மால் பங்கஐ஡ னன்தொழா நந்தவேள்
         செந்தில்வாழ் தம்பிரானே! 36

சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற்

         சந்தமோ கின்பமுத் தெனவானிற்
    றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
         பொன்று தாழ் வொன்றறுத் துலகோரைத்

துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்

         கொண்டுதாய் நின்றுரைத் துழலாதே
    துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்று னைத்
         தொண்டினா லொன்றுரைக் கருள்வாயே;

வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத்

         துண்டுமே லண்டருக் கமுதாக
    விண்டநாதன் திருக் கொண்டல்பா கன்செருக்
         குண்டுபே ரம்பலத் தினிலாடி

செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத்

         தின்கணா டுந்திறற் கதிராழித்
    திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
         செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே! 37

பங்கமே வும்பிறப் பந்தகா ரந்தனிற்

         பந்தபா சந்தனிற் றடுமாறிப்
    பஞ்சபா ணம்படப் புண்படா வஞ்சகப்
         பண்பிலா டம்பரப் பொதுமாதர்;

தங்களா லிங்கனக் கொங்கையா கம்படச்

         சங்கைமால் கொண்டிளைத் தயராதே
    தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீ கந்தனைத்
         தந்து நீ யன்புவைத் தருள்வாயே;

அங்கைவேல் கொண்டரக் கன்ப்ரதா பங்கெடுத்

         தண்டவே தண்டமுட் படவேதான்
    அஞ்சவே திண்டிறற் கொண்டலா கண்டலற்
         கண்டலோ கங்கொடுத் தருள்வோனே!

திங்களார் கொன்றைமத் தந்துழாய் துன்றுபொற்

         செஞ்சடா பஞ்சரத் துறுதோகை
    சிந்தையே தென்றிசைத் தென்றல்வீ சும்பொழிற்
         செந்தில்வாழ் செந்தமிழ்ப் பெருமாளே! 38