விநோதரசமஞ்சரி/9.கம்பர் சரித்திரத்தின் ஒருபகுதி

விக்கிமூலம் இலிருந்து

விநோத ரச மஞ்சரி[தொகு]

வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள்[தொகு]

9. கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி[தொகு]

ஒருநாள் சூரியாஸ்தமன காலத்திற்கு முன்பு புஷ்பக்கொத்துகளில் பஞ்சவர்ணக் கிளிகள் கொஞ்ச, பூங்கொடிகள் பொற்றொடி மாதர் போல அசைய, கிளை விளக்கேற்றினாற் போலச் சண்பகங்கள் பொன்னிறமாகிய அரும்பெடுக்க, குடமல்லிகைகள் வெள்ளிக் காளாஞ்சி ஏந்துவது போலத் தளை அவிழ்ந்து மலர, அம்மலர்களிலிருந்து மடை திறந்தாற் போலக் குபுகுபுவென்று குமிழியிட்டுப் பாயும் இனிய தேனையுண்டு கீதம் பாடுவது போல வண்டுகள் ஒலி செய்ய, மத்தளம் முழங்குவது போல அங்குள்ள தடாகத்தின் அலைகள் குமுறிச் சப்திக்க, சுதி கூட்டுவது போல மாங்குயில்கள் தீங்குரலாய்க் கூவ, கூத்தியர் போல அழகிய கலாபத்தை விரித்து மடமயில்கள் ஆட குளிர்ச்சி பொருந்திய மந்தமாருதமானது கமகமவென்று பரிமளிக்கின்ற மிருதுவான மகரந்தப் பொடிகளை வாரிக்கொண்டு வந்து கதம்பமிறைப்பது போல வீசுகின்ற திவ்வியமான கற்பகச் சோலைபோலும் அதிரம்மியத்தைத் தருகின்ற விசித்திரமாகிய ஓரிளம்பூங்காவில் விசாலமாகிய வெண்மணற் சாலையிற் குலோத்துங்க சோழராஜனும், வித்வஜன சிரோமணியாகிய கம்பரும் உல்லாசமாய் உலாவிக் கொண்டிருக்கையில், சோழனானவன் கலகலவென்று உடல் குலுங்க நகைத்தான். கம்பர் அவனை நோக்கி, 'மருமானீர்! ஏன் சிரிக்கிறீர்?' என்ன, சோழன் கம்பரைப் பார்த்து, 'அம்மானீர்! எனக்கு நகைப்பு வந்ததை என்னவென்று சொல்வேன்?' என்றான். இவர் 'அதை நாமறியக் கூடாதோ?' என்ன, அவன், நீரறியாததும் உண்டோ? கேளும், இந்த இராச்சியமும் இதிலுள்ள சகல பிரஜைகளும் நமக்கு ஐக்கியமல்லவாவென்று எனக்குச் சிரிப்பு வந்தது' என்றான். கம்பர், 'எல்லாம் உமக்கு ஐக்கியமென்பதற்கும், நீர் நமக்கு ஐக்கியமென்பதற்கும் யாதொரு சந்தேகமுமில்லை,' என்று கூடச் சிரித்தார்.

சோழனுக்கு அந்தச்சொல் செவிபொறாமல் முகம் வாடிப்போக, 'இவரென்ன, நம்மைப்போல மண்டலாதிபதியா! நமக்குக் கீழ்ப்பட்டிருந்து நாம் கொடுக்க வாங்கி ஜீவனம் பண்ணுகிற வித்துவான்தானே! இவர் நம்மைக் கொஞ்சமாவது மதியாமல், தமக்கு ஐக்கியமென்றாரே! இது தகுமா? இந்தச் சொல் மற்றவர்கள் சொன்னால், அவர்கள் அக்கணமே சிரச்சேதம் பண்ணப்படுவார்களல்லவா!' என்று நினைத்துக் கம்பருடனே பேசாமல், கோபத்தோடே திட்டி வாயிலால் நுழைந்து, அரண்மனைக்குட் போய்ச் சப்பிர மஞ்சத்திற் படுத்துக் கொண்டிருந்தான்.

அந்நேரத்தில் வழக்கப்படி அரசன்மனைவி சிற்றுண்டி கொண்டுவந்து வைத்துப் புசிக்கும்படி உபசரித்தாள். அரசன் வெறுப்பினால் அதைப் புசியாமல், அவளுடனும் பேசாமலிருக்க, அது கண்ட ராஜபத்தினி அரசன் வைப்பாட்டியாகிய பொன்னி என்னும் பெயருடைய தாசியை அழைப்பித்து, 'ராஜாவைப் பலகாரம் பண்ணும்படி செய்யவேண்டும்' என்றாள். அவள், 'அம்மா, இதோ பாரும்! ஒருநொடிக்குள்ளே உங்கள் அபீஷ்டப்படி நடக்கிறேன்,' என்று, அவன்கிட்டப்போய்த் தட்டியெழுப்பினாள். அரசன் எழுந்திராதது கண்டு, மறுபடி அவள் அவனுக்கு இதமாகிய லாலனைகளைச் செய்து, அதிசுதந்தரம் பாராட்டித் தூக்கி உட்கார வைத்து, 'சர்வோத்தமியாகிய உமது பத்தினியின்மேல் உமக்குச் சலிப்பேன்? ஆயினும், எனக்கும் இணங்காமற் பிணங்குகிறது என்ன காரணம்?' என்றாள். அவன் தனக்கும் கம்பருக்கும் நடந்த சம்பாஷணையை வெளியிட்டான். வாழ்வு தாழ்வு இரண்டுக்கும் தன்னோடொத்த அருமை மனைவிக்குச் சொல்லாமல் மனத்தில் வைத்து மறுகின செய்தியைத் தாசிக்குச் சொன்னவுடனே தாசி, 'இதற்குத்தானா இவ்வளவு யோசனை! உம்மைத் தமக்கு ஐக்கியமென்று சும்மா வாயினாற் சொன்ன கம்பரை நான் மெய்யாக எனக்கு அடிமையாக்கிக் கொள்ளுகிறேன். என் சாமர்த்தியத்தைப் பாரும்! நீரெழுந்து பலகாரம் பண்ணும்,' என்று சொல்லிவிட்டு, அந்த க்ஷணமே தன் வீட்டுக்குப்போய்த் தாதியை அழைத்து, 'கம்பர் தெருவிலே வரக்கண்டால், நானழைக்கிறேனென்று உள்ளே அழைத்துவா,' என்று வாயிற்படியில் அவளை நிறுத்தி வைத்துத் தான்போய்க் கட்டிலிலே படுத்துக் கொண்டாள்.

அப்படியிருக்க, பூங்காவிலிருந்த கம்பர், தீபம் வைக்கிற வரையிலும் அரசன் வருகையை எதிர்பாத்திருந்து, அவன் வாராமையால், 'நாம் சொன்னசொல் அவன் மனத்தில் உறைத்திருக்க வேண்டும். அதனாற் சீற்றங்கொண்டு போய்விட்டான். எல்லாம் நாளைக்குத் தெரிய வருகிறது,' என்று தாம் பல்லக்கிலேறி வீட்டுக்குப் போம்பொழுது, தாதி கண்டு கும்பிட்டு, 'அம்மா அழைக்கிறார்கள்,' என்றாள். கம்பர் உள்ளே சென்றார். திகம்பரியாய்க் கட்டிலின்மேற் புரண்டு கொண்டிருந்த வேசையானவள், இவரைக் கண்டவுடனே எழுந்து ஓடி வந்து கட்டிக்கொண்டு, 'நான் மோகங்கொண்டேன்; என் மோகத்தைத் தீர்க்க வேண்டும்,' என்றாள். கம்பர், 'அம்மா, நீ அரசன் மனைவியாயிருப்பதனால், எனக்கு மகளாக வேண்டும். இது தோஷத்திற்கு இடமாயிருக்கிறது. இதைவிட்டுப் பின் எதைச்சொன்னாலும் தட்டாமற் செய்வேன்,' என்ன, தாசி, 'அப்படியே பிரமாணிக்கஞ் செய்யும்,' என்ன, இவர் செய்தமாத்திரத்தில் அவள், 'நீர் எனக்கு அடிமை யென்பதாகச் சாசனம் எழுதிக்கொடும்,' என்றாள். இவர், 'நல்லது! அதற்குத் தடையில்லை!' என்பதாக உடனே ஏடும் எழுத்தாணியுங் கொண்டுவரச் சொல்லித் 'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை' என்று வருஷம், மாசம், தேதியிட்டெழுதிச் சாக்ஷி குறித்துக் கையெழுத்திட்டுக் கொடுத்துவிட்டுச் செலவு பெற்றுக்கொண்டு போய்விட்டார்.

பின்பு அவள் அந்தச் சாசனத்தைக் கொண்டுபோய் அரசன் கையிற் கொடுத்தாள். அவன் பார்த்துச் சந்தோஷித்துச் சூரியோதயமானவுடனே அனைவருக்கும் முன்பாகத் தான் அரசாட்சி மண்டபத்திற்கு வந்து, சகலமானவர்களையும் அழைத்து வரச்சொல்லி, கம்பர் வந்தவுடனே மந்திரியை அனுப்பி அப்பத்திரத்தை எடுத்து வரச்செய்து, அவருக்குக் காட்டி, 'இதில் வைத்திருக்கும் கையெழுத்து உம்முடையதுதானா? பாரும்' என்றான். கம்பர் பார்த்து, 'ஆம்' என்றார். அப்புறம் அதை வாசிப்போன் கையிற் கொடுத்து, யாவரும் கேட்க வாசிக்கச்சொல்ல வாசித்தபோது அதைக் கேட்ட சபையோரெல்லாம், 'இஃதென்ன அநியாயம்!' என்று மனங்கலங்கிச் சரீரம் பதைபதைத்தார்கள். அரசன் கம்பரை நோக்கி, 'தாசி பொன்னிக்கு நீர் அடிமைதானா?' என்றான். கம்பர், 'அதற்கு ஐயமென்ன?' என்றார். அரன் தன் சரீரங் குலுங்கப் பெருநகை செய்து, 'மகா வித்துவானாகிய நீர் தாசி பொன்னிக்கு அடிமை என்பது உமக்கு வெட்கமல்லவா?' என்றான். இவர், 'நாமேதாவது திருடினோமா? செய்யாத காரியஞ் செய்தோமா? ஒன்றுமில்லையே! அதன் தாற்பரியத்தை உள்ளபடி அறிந்தவர்க்கு வெட்கமேது!' என்றார்.

அரசன், 'அஃதென்னை? சொல்லும்,' என்றான். இவர், 'தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை' என்பது ஆறு பதங்களால் முடிந்த ஒரு வாக்கியம். இவ்வாக்கியத்தில் முதற்பதம் தா ; இதில் இறுதி யகரவொற்றுத் தொகுத்தல் விகாரம். இரண்டாவது சி; இது குறுக்கல் விகாரம். மூன்றாவது, பொன்னி; இது விகுதி பெற்றது. நான்காவது கு; ஐந்தாவது, கம்பன். ஆறாவது, அடிமை. இவை சொற்பிரிப்பு. தாய்-அன்னை; சீ-மங்களகரம்; பொன்னி-லக்ஷ்மி; கு- நான்காம் வேற்றுமை உருபிடைச்சொல்; பொருள்= 'உலகமாதாவாகிய ஸ்ரீ மகாலக்ஷ்மிக்குக் கம்பன் அடிமை' என்பது தாற்பரியம். இங்ஙனம் புருஷகாரியாகிய ஸ்ரீ மகாலக்ஷ்மிக்கு நாம் அடிமை என்றுதானே எழுதிக்கொடுத்தோம்? இதனால் நமக்கு இழிவு வருமா? நீரேன் வியர்த்தமாய்ப் பரிகாசம் செய்கிறீர்?' என்று சொன்னார்.

அதுகேட்டுச் சோழன் தனது இறுமாப்பும், தலைதெரியாத சந்தோஷமும் தடுமாறிக் கம்பரை 'அணிலேற விட்ட நாய் போல' ஏற இறங்கப் பார்த்து, அதிக உக்கிரங்கொண்டு நகைத்து, 'இந்த வித்துவான்களை நம்பலாகாது! பொருள் கொடுத்தவரை இந்திரன் சந்திரனென்று ஸ்துதி செய்தாலும் செய்வார்கள்; அது கொடாவிட்டால், எப்படிப்பட்டவர்களானாலும், அவர்களைப் பிரத்தியக்ஷத்திலேயே புத்தியில்லாதவன் என்றும், திரியாவரக்காரன் என்றும், இன்னும் அனேகவிதமாகவும் தூஷித்தாலும் தூஷிப்பார்கள். இவர்கள் தூஷிப்பதைக் காதினாற் கேட்டவர்கள், 'ஏன்காணும் தூஷிக்கிறாய்?' என்றால், 'நான் தூஷித்தேனா? 'புத்தியில்லாதவன்' என்றது, 'அறிவிற்குச் சூரியனுக்குச் சமானமானவன்' என்றும், 'திரியாவரக்காரன்' என்றது, 'மாறுபடாத நல்வரம் பெற்றவன்' என்றும் சொன்னவைகளே யல்லாமல், வேறென்ன? என்று தாம் சொன்ன சொற்களை மாற்றினாலும் மாற்றுவார்கள், பொல்லாதவர்கள்! அம்மம்ம! யமனைப் பார்க்கிலும் இவர்கள் கொடியவர்கள்!' என்று கூறி, இக்கருத்துக்கிசைய,

'போற்றினும் போற்றுவர், பொருள்கொ டாவிடின்
தூற்றினுந் தூற்றுவர், சொன்ன சொற்களை
மாற்றினு மாற்றுவர், வன்க ணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடிய ராவரே!'
என்ற ஒரு பாடலைச் சொல்லி, சோழராஜன் கம்பரை, 'இன்று முதல் நீர் எம் தேசத்திலிருக்க வேண்டா. நாம் உமக்குக் கொடுத்திருக்கிற விருதுகள் முதலானவைகளையும் வாங்கி வைத்துவிட்டு எங்கேயாவது போய்விடும்!' என்றான்.

கம்பரும் அப்படியே சகல விருதுகளையும் ஆடையாபரணங்களுடனே வாங்கி வைத்துவிட்டு, அவனுக்கெதிரே நின்றுகொண்டு, 'அரசரே, என்னை உம் தேசத்தைவிட்டுப் போய்விடச் சொன்னீரல்லவா? நல்லது! உம்முடைய தேசம் எவ்வளவு? இருபத்து நாலு காத தூரந்தானே? அதற்கப்பால் உமக்கென்ன சுவாதீனமிருக்கின்றது? இந்த இருபத்துநாலு காதமொழிய, மற்ற தெற்கிலுள்ள ஐம்பத்தாறு காத தூரமாகிய பாண்டித்தேசமும், மேற்கிலுள்ள எண்பதின்காத தூரமாகிய சேரதேசமும், வடக்கிலுள்ள அனேக தேசங்களும் எங்கே போய்விட்டன? சமுத்திரங் கொண்டுபோய் விட்டதா? நீர் கோபித்தால் எமக்கு வேறு புகலிடமில்லையோ?' என்பதற்கேற்க,

'காதம் இருபத்து நான்கொழியக் காசினியை
ஓதக் கடல்கொண் டொளித்ததோ? - மேதினியில்
கொல்லிமலை நாடாளுங் கொற்றவா! நீமுனிந்தால்
இல்லையோ எங்கட் கிடம்?'

என்ற பாடலையும், 'அன்றியும் பூர்வமிருந்ததிலும் இப்பொழுது உம்முடைய தேசம் அதிக விசாலமாய்விட்டதோ? அல்லவென்று தேசத்திலுள்ள மலைகளையெல்லாம் நீர் பறித்தெடுத்துக் கடலிலெறிந்துவிட்டுக் காடு கரம்புகளெல்லாம் திருத்தி விசாலமாக்கிக் கொண்டீரோ? அஃது ஒன்றுமில்லையே!' என்பதற்கிணங்க,

அன்றையிலு ஞால மகன்றதோ! அல்லவென்று
குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டனையோ?-'

என்ற பாடலையும், 'உலகத்திலுள்ள அரசர்களுள் எல்லாம் நீர்தாமா சிறந்தவர்? உம்மினும் சிறந்தவர்களாகிய பாண்டியன், சேரன் முதலானவர்களில்லையா? உம்முடைய நாடுதானா வளமுடைய நாடு? உம் நாட்டினும் பாண்டிநாடு, சேரநாடு முதலானவைகள் அதிக வளமுடையவைகள் அல்லவா? நாம் உம்மைக் கண்டுதானா தமிழ்ப்பாடலைப் பாடினோம்?' வேளாளனைப் பாடின வாயினால் வேந்தனைப் பாடுவதில்லை' என்பது, எமது சங்கேதமென்பது உமக்குத் தெரியாதா? மரக்கிளைக்குள் குரங்கைத் தாங்காத கொம்புமுண்டா? அது போல நாம் தேடிப்போனால் எம்மைக் கண்டவுடனே அங்கீகரித்துச் சம்ரக்ஷணை செய்யாத அரசர்களுமுண்டோ?' என்னும் கருத்தை உள்ளடக்கி,

மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?
உன்னையறிந் தோதமிழை யோதினேன்? - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?'

- என்ற பாடலையுஞ் சொல்லி, 'இனி உம்மிடத்திலிரோம்! இக்கணமே செல்கின்றோம்! இதோ பாரும்! உம்மைவிட்டு நாம் போம்பொழுது கட்டிய கோவணத்தோடே போகின்றோம்; திரும்பிவரும்பொழுதோ, உம்மிடத்தில் கப்பம் வாங்கி வருகின்ற உமக்கு மேலாகிய அரசர் நமக்கு அடைப்பக்காரனாகித் தாம்பூலம் மடித்துக் கொடுக்கத் தக்க ஸ்திதியுடனே வருவோம்!' என்று பிரதிக்கினை செய்து சோழராசனை விட்டு நீங்கிப்போனார்.

அவர் சோழனைத் துறந்து போகும்பொழுது தமது வீட்டாருடனுஞ் சொல்லாமல், வஸ்திரமும், வழிச்செலவுக்கு வேண்டும் பணம் காசுகளும், உணவுக்கு வேண்டும் சாமக்கிரியைகளும் கொண்டுபோகாமல், வெறுங்கையுடனே போய், ஓர் ஊரில் பெண்ணரசாயிருக்கும் வேலி என்பவள் வீட்டைச் சார்ந்தார். அவள், ஒரு மண்சுவர் கட்டுவிக்க யத்தனித்து, 'இந்தச் சுவரைக் கட்டி முடித்தவர்க்குக் குறுணி நெல் கொடுப்பேன்,' என்று பிரசித்தம் பண்ணியிருந்தாள். அதைத் தினமொருவராக வெகுபெயர் வந்து கட்டித் திரும்புகையில், அங்குள்ள ஒரு பிரம ராக்ஷசால் தள்ளப்பட்டு அது விழுந்து போகிறது; அப்புறமவர்கள் கூலி வாங்காமற் போய்விடுகிறது. இப்படி அனேக நாளாய் நடந்து கொண்டிருக்கையிற் கம்பர் அந்த மோசத்தை அறியாமல், அவளிடம் போய்ப்பேசி, மண் வெட்டி மேற்படி சுவரைக் கட்டிமுடித்து, வேலியைக் கூலி கேட்க வந்தார். அவள், 'சுவர் வைத்தாயிற்றா?' என்றாள். இவர், 'ஆயிற்று,' என்று சொல்ல, 'அப்படியா! அதைப் பார்ப்போம்! வா' என்று சீக்கிரமாய் வந்து பார்வையிடும்பொழுது அது விழுந்து கிடக்க, 'சுவர் விழுந்து போனதனாற் கூலி கொடுக்க மாட்டேன்; நாளைவந்து சுவரைக் கட்டி வேலையை எனக்கு ஒப்புக் கொடுத்தால்தான் கொடுப்பேன்', என்றாள்.

கம்பன் அன்றிரவு பட்டினியாயிருந்து, மற்றைநாள் சாயங்காலம் வரையில் இடுப்பொடியக் கஷ்டப்பட்டுக் கட்டிக் கூலி வாங்கி வருகிறதற்காக ஓரடியெடுத்து வைக்கையில் சுவர் விழுகின்ற குறிப்பறிந்து,

மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்
சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே
விற்கொண்ட பிறைநுதலாள் வேலிதரும் கூலி
நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!'

என்று ஒரு கொச்சகக் கலிப்பா பாடினார். அதைக் கேட்ட மாத்திரத்தில் அந்தப் பிரமராக்ஷசு, இவர் மகா பண்டிதராயிருக்கிறார்!' என்று பயந்து, விலகிப் போய்விட்டது. சுவர் விழாமல் நின்றது. கம்பர் அந்தச் செய்தியை வேலிக்குத் தெரிவிக்க, அவள் பார்த்து அதிசயப்பட்டு, 'நீரார்?' என்று கேட்க, 'நான் கூலியாள்தான்' எனக்குச் சொன்னபடி நெல் கொடு,' என்ன அவளதைக் கொடுத்து, 'இவ்விடத்திலேதானே இரும்,' என்று உபசரித்தாள். கம்பர் அதை மறுத்துவிட்டு, அத்தேசத்தைக் கடந்து சென்றார்.

★கம்பர் அப்பால்...[தொகு]

கம்பர் அப்பால் வெகுதூரம் போகையில் அதிக பசியாயிருந்ததனால், ஒரு கோமுட்டி கடையிற்போய், 'ஐயா, செட்டியாரே, பசியாயிருக்கிறது! எனக்குக் கொஞ்சம் அவல் கொடும்,' என்றார். அவள் கோமுட்டியாகையால், 'பொதிக்கு அளக்கிறதற்குள்ளே சத்தத்திற்கு அளக்கச்சொல்லுகிறது போல, கடை போணியாகாததற்கு முன்னே உனக்குக் கொடுக்கச் சொல்லுகிறையோ? நல்லதாயிற்று! அட, இல்லை போ!' என்றான்.

இவர் அப்புறஞ் சிறிதுதூரம் போய்ச் செக்கான் எள்ளாடுவது கண்டு, 'அப்பா, பசிக்குக் கொஞ்சம் பிண்ணாக்குக் கொடு,' என்றார். அவனும் கொடுக்கவில்லை. அதற்கப்பால் ஒரு பிராமணன் வீட்டைக் கண்டு, 'பிராணன் போகிறது! தாகத்திற்குத் தண்ணீர் தரவேண்டும்,' என்றார். அவன், 'சூத்திரனுக்கு வார்த்த தீர்த்த சேஷம் பிராமணருக்கு அருகமாமோ? போ போ!' என்று துரத்தினான். இவரென்ன செய்வார்! பசியும் தாகமும் சகிக்கக்கூடாமையால், மிகவும் இளைப்புடனே வெயிலில் அலுத்துப்போய் ஒரு மரநிழலிற் சோர்ந்து படுத்திருந்தார். அங்கே ஏருழுகிற வேளாளனொருவனுக்குப் பழையது வந்தது. அவன் சாப்பிடப்போகிற சமயத்தில் இவர் போய்க் கையேந்தினார். அவன் அந்தப் பழஞ்சோற்றை இவர் கையிலே போட்டு உண்ணச்சொல்லி உபசரித்தான். இவருண்டு பசி தீர்ந்த பிறகு,

செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே, செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டிபுகும்
பார்ப்பா ரகத்தையெட்டிப் பாரோமே, எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்.'

- என்று ஒரு பாடல் பாடினார். பின்பு வேளாளன் இவருண்டு மீந்த உணவைத் தானுண்டு கையலம்பிக்கொண்டு, மேழிபிடித்து முன்போல உழுகையில், அந்தக் கொல்லைக்குள் கலப்பைக்கொழு செல்லும் படைச்சாலிற் கணீர் கணீரென்று ஓர் ஓசை உண்டாயிற்று. அவன், 'இது என்ன!' என்று சந்தேகித்து, மண்வெட்டி கொண்டு, நிலத்தை வெட்டிச் சோதிக்குமளவில், பூமிக்குள் ஒரு பெரிய தவலை இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபொழுது, அதுநிறையத் திரவியமிருக்கக் கண்டு வேளாளன் பேரானந்தமடைந்து, 'இவர் நான் பகிர்ந்திட்ட பழையதை யுண்டு ஒரு கவி பாடினார். அந்த வாக்கு விசேஷத்தினாலே தலைமுறை தலைமுறையாய்த் தரித்திரப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு இந்தப் புதை பொருள் கிடைத்தது. இவராரோ, மகாத்துமாவாயிருக்கிறார்!' என்று இவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், ஷட்ரச பதார்த்தத்துடனே பஞ்சபட்சிய பரமான்னமிட்டுப் போஜனஞ் செய்யச்சொல்லி உபசரித்து, இரண்டுமூன்று நாள் வைத்திருந்தான்.

பிறகு கம்பர், 'நான் போகவேண்டும்! எனக்குச் செலவு கொடு' என்றார். வேளாளன், 'ஐயா, உம்முடைய அதிர்ஷ்டத்தால்தானே எனக்குத் தனம் அகப்பட்டது? ஆகையால் நீரெங்கும் போகாமல் இவ்விடத்திலேயே இருக்கலாம்.' என்ன கம்பர் அதை மறுக்க, அவன் 'இந்தத் திரவியத்திலாவது பாதியைக் கொண்டு போகலாம்' என்ன இவர், 'எனக்குத் திரவியமும் வேண்டுவதில்லை; நந்நான்கு முழத்தில் இரண்டு வெள்ளைமுண்டு மாத்திரம் வேண்டும்,' என்று கொடுக்கச் சொல்லி வாங்கி, அரையிலொன்றும் தலையிலொன்றுமாகக் கட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சேர தேசத்திற்குப் போய், ஒரு சீமானை அடுத்து, 'ஐயா நான் கம்பரிடத்தில் அடைப்பக்காரனாயிருந்தவன்; அவருக்கும் சோழராஜனுக்கும் மனஸ்தாபம் உண்டானமையால், அவர் ஊரைவிட்டு எவ்விடத்திற்கோ போய்விட்டார்; அதனால் நான் பரதேசம் போய்ப் பிழைக்கலாமென்று இப்படி வந்து விட்டேன். நீங்கள் தயைசெய்து எங்கேயாவது எளியவனாகிய எனக்குக் கை காட்டினால் உங்கள் பெயரைச் சொல்லி ஜீவிப்பேன்,' என்ன, அந்தப் பிரபு, ' கம்பரிடத்திருந்தவன்' என்றதைப் பற்றி அபிமானித்து, அவரைச் சேரமகா ராஜனிடத்தில் அழைத்துப் போய், அடைப்பைத் தொழிலில் வைத்தார். அன்று முதற் கம்பர் சேரனிடத்தில் அத்தொழில் செய்துவருகையில், சேரன் ஒருநாள் தனக்கு அவகாசமான வேளையில் தன் சமஸ்தான வித்துவான்களைக் கம்பராமாயணப் பிரசங்கஞ் செய்யச் சொன்னான்.

அவர்கள் பாலகாண்டத்தில் வேள்விப் படலத்தில்,

எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்றுநாள்
விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள்
கண்ணினைக் காக்கின்ற விமையிற் காத்தனர்'

என்ற பாடலைச் சொல்லி, அதற்குக் கௌசிகமுனிவன் தேவர்கள் பொருட்டு ஐந்துநாள் அல்லது ஆறுநாள் வரையில் எண்ணுதற்கும் செய்தற்கும் அருமையாகத் தொடங்கிய யாகத்தை, உலகத்தைப் பரிபாலனம் பண்ணுகின்ற தசரத மகாராஜனுடைய புத்திரர்களாகிய இராமனும் இலக்குவனும் கண்ணைப் பாதுகாக்கின்ற இமைகளைப் போலச் சம்ரக்ஷணை செய்தார்கள்,' எனவும், மிதிலைக் காட்சிப் படலத்தில்,

உமையா ளொக்கும் மங்கைய ருச்சிக் கரம்வைக்கும்
கமையாண் மேனி கண்டவர் காட்சிக் கரைகாணார்
இமையா நாட்டம் பெற்றில மென்றா ரிருகண்ணால்
அமையா தென்றார் அந்தர வானத் தவரெல்லாம்.'

என்ற பாடலுக்கு, 'உமாதேவியை ஒத்த கலைமகள் முதலிய தெய்வப்பெண்கள் சிரமேற் கரம் வைத்து அஞ்சலி செய்யாநின்ற பரமசாந்தத்தையுடைய நிலமகளாகிய சீதாபிராட்டியினது, திருமேனி அழகைக்கண்ட தேவர் மானிடர் யாவரும், தாம் தாம் கண்ட காட்சிச் சிறப்பிற்கு எல்லை காணாதவரானமையால், அவர்களிற் பூமியிலுள்ள மானிடர், 'நமது கண் அடிக்கடி இமைப்பதனால், எம்பிராட்டி திருவழகை எப்படிக் கண்டு களிப்பது? நாம் தேவர்களைப் போல இமையா நாட்டம் பெற்றோமில்லையே!' என்றார்கள். அந்தரத்திலுள்ள தேவர்கள் எல்லாம், 'அத்திருவழகு இரு கண்ணாற் காண அமையாது!' என்றார்கள், எனவும் மற்றும் சில பாடல்களுக்குத் தங்களுக்குத் தோன்றின பிரகாரமும் பொருள் கூறிப் பிரசங்கித்தார்கள். அப்பொழுது அரசன், 'இப்பிரசங்கத்தை இந்தச் சபையிலுள்ளவர்கள் கருத்துடன் கேட்கிறார்களா!' என்று அவரவர் முகத்தைக் குறிப்பாய்ப் பார்க்குமிடத்திற் கொஞ்சம் ஏறக்குறைய யாவரும் கருத்தோடே கேட்கிறதாகத் தெரிய வந்தது. பின்பு, தன் பக்கத்திலிருக்கிற அடைப்பைக் காரன் முகத்தைப் பார்க்க, அவன் வியக்க வேண்டிய சமயத்தில் துக்கிக்கிறதும், துக்கிக்க வேண்டிய தருணத்திற் சந்தோஷிக்கிறதுங்கண்டு, அரசன் அவனை, 'என்ன?' என்று கேட்க, அடைப்பைக்காரன், 'மகா ராஜாவே, இந்தப் பிரசங்கம் கிரந்த கர்த்தாவாகிய கம்பர் கருத்துக்கு இசைந்திருக்கவில்லை, என்ன சேரன், 'கம்பர் கருத்து உனக்கெப்படித் தெரியும்?' என்ன, கம்பரிடத்தில் நான் அடைப்பக்காரனாயிருக்கையில் அருகில் நின்று அவர் பிரசங்கிக்கக் கேட்டிருக்கிறேன்,' என்ன, 'அப்படியானால் நீயும் பிரசிங்கிக்க மாட்டுவையோ? என்ன, 'கூடின மாத்திரம் பிரசிங்கிப்பேன்,' என்ன, அரசன், 'சற்றே பிரசங்கஞ் செய் பார்ப்போம்!' என்ன, அடைப்பைக்காரன் பிரசிங்கத்தொடங்கினான்.

'எண்ணுதற்காக்கரிது' என்ற பாட்டின் முதல் மூன்றடிக்கும் இவர்கள் சொன்ன பொருள் கொஞ்சங் குறையச் சரிப்பட்டிருக்கின்றது. முதலடியில் எண்ணுதற்கு, ஆக்குதற்கு அரிய வேள்வி என்றதனோடு, 'சொல்லுதற்கும் அரியதென' வருவித்துத் திரிகரணச் செயல்களையும் சுட்டிச் சொல்லவேண்டும். 'கண்ணினைக் காக்கின்ற இமையிற் காத்தனர்' என்னும் நான்காமடியிற் பொருள் சிறக்கவில்லை. அதைச் சிறக்கச் சொல்லுங்கால், 'மேலிமை, கீழிமை' என்னும் இரண்டில், மேலிமை பெரியது; கீழிமை சிறியது; அன்றியும், மேலிமை அசைந்து கொண்டிருப்பது; கீழிமை அசையாது நிற்பது; மேலிமை போலப் பெரியவனாகிய இராமன் நிலைபெயர்ந்து கௌசிகமுனி ஆச்சிரமத்தின் நாற்றிசையிலும் இராக்கதர்கள் வந்து உபத்திரவஞ் செய்யாமலிருக்கும் பொருட்டுச் சக்கரம் சுற்றுவது போலத் திரிந்து காவல்செய்தான். கீழிமைபோல இளையவனாகிய இலக்குவன், உள்ளே ஒருவரும் பிரவேசியாதிருக்கும் பொருட்டு ஆச்சிரமத்தின் வாயிலில் அசையாது நின்றபடி காவல் செய்தான். இவ்விதமாகக் காவல் செய்யும் அவ்விருவரில் இராமன் ஆச்சிரமத்தின் புறத்திற் சுற்றிவரும் போதெல்லாம், மேலிமை கீழிமையை இமைத்திமைத்துத் தீண்டுவது போல,வாயிலிலிருக்கிற இலக்குவனைக் கையினால் அடிக்கடி தட்டித்தட்டி, 'லக்ஷ்மணா, ஜாக்கிரதை!' என்று எச்சரித்துக் கொண்டே வந்தான்' என்றும், 'உமையாள்' என்ற பாடலுக்கு, இவர்கள் உரைத்தபொருள் பெரும்பாலும் சரிதான்; ஆயினும், இதனுள் அனைத்தும் சுருங்கச் சொல்லலாக உபசரிக்கப்பட்டமையால், முதலில் 'உமையாளொக்கும் மங்கையர்' என்பதை உம்மைத்தொகையாகக் கொண்டு, உமையாளும் அவளை ஒத்த மங்கையரும் என உரைப்பினும் அமையும். இறுதியில் 'இருகண்ணால் அமையா தென்றார் அந்தர வானத்தவரெல்லாம்' என்றதற்குத் தேவர்களில் அனேகர் 'நமது விழி இமைக்கவில்லையே! இது நமக்கொரு விசேஷந்தான்! என்றாலும், மனிதர் விழிபோல இரண்டேயல்லாமல் அதிகமில்லாமையால் ஜானகி வடிவழகு நாம்காண்பதற்குச் சாத்தியப்பட்டது; பிரமன் முருகக்கடவுள் முதலானவர்கள் எண்கண், பன்னிருகண் உள்ளவர்களாகையால், அவர்களே காணுதற்குரியவர்கள்,' என்றும், அப்பிரமன் முதலியோர், 'மற்றவர்களைப் போலன்றி நமக்குக் கொஞ்சம் ஏற்றமாயிருந்தும், அவை சீதை திருவழகைக் காணப் போதுமானவை அல்ல, இந்திரன் ஆயிரங்கண் படைத்தவனாதலால் அவன்தான் காணத்தக்க பாக்கியமுடையவன்!' என்றும், அவ்விந்திரனோ, 'கள்ளிச்செடிக்கு 'மகாவிருக்ஷம் என்று பெயர் வந்திருப்பது போல, எனக்குப் பிரதிஷ்டைக்கு ஆயிரங் கண்ணனென்று பெயர் வந்திருக்கிறதே ஒழிய, வேறொன்றுமில்லை. அவைகளைக் கொண்டு பார்க்க முடியுமா? முடியாமையால், வைதேகி திருவுருவைக் காண்பதற்கு நான் அருகனல்லேன்; ஆதிசேஷன் ஆயிரந்தலை இரண்டாயிரங் கண்ணுடையவனாகையால், அந்த மகானுபாவனே காணத் தவஞ்செய்தவன்!' என்றும், அவ்வாதிசேஷனோ, 'கடலிற் கரைத்த பெருங்காயம் மணக்குமா? அதுபோல, அந்த மகோத்தமியின் திவ்விய சுந்தரத்தை எனது இரண்டாயிரம் கண்களைக் கொண்டு நான் காணக்கூடுமா? 'ஸஹஸிர சீர்ஷா புருஷ: ஸஹஸிராக்ஷஸ ஹஸிரபாத்' என்ற புருஷசூக்தத்தின்படி அனேக சிரசு அனேக நேத்திரமுள்ள பரந்தாமனே காணப் பாத்திரமானவன்! என்றும், ('ஸஹஸிரம்' இவ்விடத்தில் ஆயிரமன்று; அனேகம் என்பதாம்) சொன்னதாகப் பிள்ளைக்கும் பேதைக்கும் விளங்கும்படி பொருள் விரித்துரைப்பது சிறப்பு,' என்றும், அப்புலவர்கள் பிரசங்கித்த மற்றும் சில பாடல்களுக்கு அதனதன் விசேஷார்த்தங்கள் இன்னதின்னதென்றும் எடுத்துரைக்க வேண்டுமென்று சொல்லக்கேட்டு, அரசன், 'இந்தப் பிரசங்கம் நவரசாலங்காரத்துடனே அற்புதமாயிருக்கிறதே! இதற்கு ஒப்பாக ஆருடைய பிரசங்கத்தைச் சொல்லலாம்! இதைவிடச் சாக்ஷாத்து அந்தக் கம்பருடைய பிரசங்கம் எத்தன்மையாயிருக்குமோ!' என்று அதிசயப்பட்டு, அதிக சந்தோஷமாகி, அன்று முதல் அடைப்பக்காரன் உயிரும் தானுடலுமாக அந்நியோந்நியமாய்ச் சினேகித்து அவனைவிட்டுப் பிரியாமல், அவன்தன்னுடனேகூடச் சமபந்தியாயிருந்து போஜனம் பண்ணும்படி மற்ற வித்துவ ஜனங்களினும் அவனைப் பதின்மடங்கு அதிக மேன்மையாய் வைத்திருந்தான்.

★★அதுகண்டு அவ்வித்துவஜனர்கள்....[தொகு]

அதுகண்டு அவ்வித்துவஜனர்கள் கம்பர் விஷயத்திற் பொறாமை கொண்டு நிர்நிமித்தமாகப் பகைத்தார்கள். 'கோழிக்காய்ச்சல், வேசைக் காய்ச்சல் போல வித்துவக்காய்ச்சலினால் மூண்ட பகை 'தென்றல் முற்றிப் பெருங்காற்றானது' போல, நாளுக்குநாள் அதிகரித்ததனால், அவர்கள், 'நாம் அடைப்பைக்காரன் இழிகுலத்தானென்று ஓர் அபவாதத்தை உண்டாக்கி, அவன்மேல் அரசனுக்கு விரோத மூளும்படி செய்யலாம்,' என்று எத்தனித்து, ராஜாவுக்கு க்ஷவரம்பண்ணும் அம்பட்டனை இரகசியமாக அழைத்து, 'நீ அடைப்பைக்காரனை உங்கள் இனத்தானென்று எவ்விதத்திலாவது அரசனுக்கு உறுதியாகத் தோன்றும்படி செய்வாயானால், உனக்கு இரண்டாயிரம் வராகன் கொடுக்கிறோம்; அதனால், உனக்கு வரும் தண்டனையையும் வரவொட்டாமல் தடுக்கிறோம்; மேலும், எவ்வளவு பணச்செலவு நேரிட்டாலும் தருகிறோம்,' என்று அவனுக்கு நம்பிக்கை உண்டாகச் சொல்லிச் சம்மதிக்கும்படி உடன்படிக்கை எழுதிப் பணமுங்கையிற் கொடுத்தார்கள். கைம்மேல் ரொக்கத்தைக் கண்ட மாத்திரத்திற் ‘பணமென்றாற் பிணமும் வாயைத் திறக்கும்,' என்பதற்குச் சரியாக அவனுக்கு ஆசை மேலிட்டதனால், உடன்பட்டு, அடைப்பைக்காரனை மாத்திரமா, அரசன் குடியையும் கெடுக்கத்துணிந்து, ஏற்ற சமயம் பார்த்திருந்தான். ஒருநாள் சேரனுடைய சிங்காதனத்தின் பக்கத்திற் சமானஸ்கந்தமாய் வீற்றிருந்த கம்பர், ஏதோ ஒரு நிமித்தத்தால் அதை விட்டிறங்கி, ஆசார வாசலின் அருகே வரும்பொழுது, அங்கே காத்திருந்த அம்பட்டன், அனைவருக்கும் முன்பாக அவரைக் கட்டிக்கொண்டு, 'அண்ணா, இத்தனை காலமாய் உன் முகத்தை நான்பாராமலிருந்தேன்! நீ எங்கே போயிருந்தாய்?' என்பதாகக் கோவென்று அலறியழுதான். கம்பர் அந்தக் கற்பனையை அறிந்து, 'வைக்கோற் கட்டுக்காரனை ஒக்கக்கட்டி அழுவதுபோல' அவனைத் தாமும் கூடக்கட்டிக்கொண்டு ஓயாமல் அழுதார். அம்பட்டன் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, கம்பர் கண்ணீரைத் தன் அழுக்குத்துணியால் துடைத்து, 'அழாதே!' என்ன, அவர் நடித்துக் காட்டிய பொய்த்துக்கம் மாறி அம்பட்டனை, 'அடா தம்பி, நீ குடியிருக்கும் இடமெங்கே? உனக்குக் கலியாணமாயிருக்குமே! பிள்ளைகளெத்தனை? பார்ப்போம், வா,' என்று அழைத்துக் கொண்டு, சபையை விட்டுத் திரும்பினார்.

அடைப்பக்காரனாயிருந்த கம்பர் திரும்பும் பொழுதே, 'அப்பா' குழந்தைகளிருக்குமிடத்தில் நான் சும்மா வரமாட்டேன். பெரியோர்கள் கோயிலுக்கும், ஆசாரிய சந்நிதானத்திற்கும், அரசர் சமூகத்திற்கும், குழந்தைகளிடத்துக்கும் வெறுங்கையுடனே போகலாகாதென்கிறார்களே! ஆகையால், கடைக்குப்போய்ப் பிள்ளைச்சாதிகளுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கிக்கொண்டு போவோம்,' என்று ஒரு பணத்துக்குக் கடலை பட்டாணி வாங்கிக் கட்டிக்கொண்டு, அம்பட்டன் வீட்டின் அருகிற் சென்றவுடனே, அவன் தன் குடிசைக்குள் முன்னே போய் நுழைந்து, 'அடி அம்மைச்சி, இங்கே வாடி,' என்று பெயரைச்சொல்லித் தன் பெண்டாட்டியைக் கூப்பிட்டு, 'உங்கள் மூத்தார் வந்தார், அவருக்கு மணை கொடு,' என்றான். அவள் ஒரு கட்டை மணையை எடுத்துப் போட்டு, அவர் உட்கார்ந்த பின் காலிலே விழுந்து சேவித்தாள். அவளைக் கம்பர், 'தீர்க்கசுமங்கலியாயிரு!' என்று வாழ்த்தி, 'குழந்தைகளெங்கே?' என்ன, அம்பட்டன் தன்மூன்று பிள்ளைகளையும், 'உங்கள் பெரியப்பனாரழைக்கிறார், வாருங்கள் என்று அழைத்து வந்து எதிரே விட, அந்தப் பிள்ளைகளைக் கம்பர் வாரியெடுத்து மார்போடணைத்து, முகத்துடனே முகம் வைத்துக் கண்ணுடனே கண்ணொற்றி, 'என் அருமை மக்களே, நானுங்கள் மழலை வார்த்தையைக் கேட்கவும், நீங்கள் தத்தடியிட்டு நடக்கும் மடநடையைக் காணவும், உங்களைச் சீராட்டிப் பாராட்டி உங்களுடனே கொஞ்சவும், இதுவரையிற் பாக்கியஞ் செய்யாமற்போனேன்!' என்று கண்ணீர்விட்டு ஆசையுடனே அடிக்கடி முத்தமிட்டுக் குலாவி, பிறகு நாவிதனைப் பார்த்து, 'எனக்குப் பசியாயிருக்கிறது!' என்றார். அவன் பெண்சாதியைச் சீக்கிரம் சமையல் பண்ணச்சொல்லிக் கம்பரை, 'அண்ணா, சாப்பிட எழுந்திரு,' என்றான்.

இவர் ஒரு செப்புப் பாத்திரத்தை வாங்கிக் கிணற்றிலே தண்ணீர் மொண்டு ஸ்நானம் செய்துவந்து சாப்பாடு கொண்டுவரச் சொல்ல அம்பட்டத்தி இலைபோட்டுச் சாதம் வட்டிக்க வர, கம்பர், 'நானென்ன அன்னியனா? நீங்கள் சாப்பிடுகிற கிண்ணி எங்கே?' என்ன அம்பட்டனும் அவன் மனைவியும் கொஞ்சமாவது, 'இது பாவம்!' என்று அஞ்சாமல், எச்சிற்கலத்தைக் கொண்டுவந்து வைத்து, அன்னம் பரிமாறி உண்ணும்படி உபசரிக்க, கம்பர் அவனைப்பார்த்து, 'தம்பீ, உன்னுடனே ஒரு செய்தி பேச வேண்டியிருக்கிறது,' என்ன, அவன், 'சாப்பிட்டுப் பேசலாம்' என்ன, இவர் 'அப்படிச் செய்தால் உன் சோற்றையுண்டு உனக்குத் துரோகம் செய்ததாய் முடியுமாதலால், இரண்டொரு பேச்சு முன்னதாகவே பேசிவிட்டுப் போஜனம் பண்ணுவது யுத்தம்,' என்றார். அவன், 'அஃதென்னை?' என, இவர், 'அடா தம்பி, நம்முடைய முன்னோர்களுக்குத் தாயபாகம் பிரியவில்லை யென்பது உனக்குப் பரிஷ்காரமாய்த் தெரியுமல்லவா?' என்ன, அவன், 'ஆம்' என்ன, இவர் 'நாம் கலகத்தில் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து திக்குக்கெட்டுத் தடுமாறிப் போன பின்பு தெய்வ கடாக்ஷத்தால் நீ தப்பிப்பிழைத்து இந்த ராஜாவை அடுத்து சுகப்பட்டிருகிறாய் 'எட்டி மரமானாலும் பச்சென்றிருந்தாற் கண்ணுக்கழகுதான். நான் கொழுகொம்பில்லாத கொடிபோல அலைந்து திரிந்தேன். போகட்டும்! அதுமுதல் இதுவரையும் நீ சம்பாதித்ததென்ன? தெய்வசாக்ஷியாய் உண்மையைச் சொல்,' என்றார். அவன், 'சத்தியமாய் நாலாயிரம் வராகனிருக்கும்,' என்றான். இவர், 'நல்லது! அதிலெனக்குப் பாதி சேரவேண்டியிருக்கிறதே! அதைக் கொண்டுவந்து வை,' என்றார். அவன் வித்துவான்கள் கொடுத்த இரண்டாயிரம் வராகனையும் எடுத்து வைத்தான். இவர், 'இருபது வருஷகாலமாய் உன் முறையாக நீ ராஜாவுக்கு ஊழியஞ் செய்து வந்தது போல,நானிருபது வருஷகாலம் அந்தத் தொழில் செய்ய வேண்டுமே! அதற்கென்ன சொல்லுகிறாய்?' என்றார். அவன் தடையென்ன? உன் இஷ்டப்பிராகாரம் ஆகட்டும்,' என்றான். இவர், 'அந்தப்படி நட்டுக்கணக்கனைக் கொண்டு பாரிக்கத்தும் உடன்படிக்கையும் எழுதிவிடு' என்றார். எழுதுவித்த மாத்திரத்தில், கம்பர், 'தம்பீ, நீ சம்மதித்தாய். என்னிடத்தில் க்ஷௌரம் செய்து கொள்வதற்கு ராஜா சம்மதிப்பாரோ மாட்டாரோ! இவ்வளவு தூரம் பகீரதப் பிரயத்தனஞ் செய்தும், வீணாய்ப்போனால் என்னவாகும்? அரசரைக் கேட்டறியலாம், வா!' என்று அவனை அழைத்துக் கொண்டு கம்பர் ராஜ சமூகத்திற்கு வந்தார்.

அம்பட்டன் முன்பு சபையிற் கம்பரை அண்ணாவென்று கட்டிக்கொண்டழுத பொழுது, அங்கிருந்தவர்களெல்லாம், 'அடைப்பக்காரனை ராஜா பெரியவித்துவானாக மதித்துச் சன்மானித்து, அவனுக்குச் சபையில் ஆசனங்கொடுத்ததுமல்லாமல், அவனுடனே சம்போஜனமும் பண்ணி வருகிறாரே! அவனோ, ஜாதியில் அம்பட்டனாயிருக்கிறானே! இஃதென்னை கோரம்! அவனால் நம்மரசருடைய குலத்துக்கும், அவர்பெற்ற பெருமைக்கும், அளவிறந்த கீர்த்திக்கும் பங்கம் வந்ததே! ராஜா, இனி இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்து கொள்வாரோ! அல்லது ' 'அவமானத்திற்கு இடமாயிற்றே!' என்று ஒருவேளை பிராணத்தியாகமே பண்ணிக்கொள்ளுவாரோ! இஃது எப்படி முடியுமோ!' என்று பரிதபித்தார்கள். அரசனும் அப்படியே எண்ணாதது மெண்ணி நெஞ்சம் புண்ணாயினான். ஆயினும், நுண்ணறிவுடையவன் ஆதலால், 'இவன் அம்பட்டனாகிற் கம்பர் இவனைத் தம்மிடத்தில் அடைப்பைத் தொழிலில் வைத்துக் கொள்வாரா? அவசரப்படாமல் ஆய்ந்தோய்ந்து பார்க்க வேண்டும்,' என்று வேவுகாரரைவிட்டுச் செய்தி தெரிந்துவரச் சொன்னான்.

அவர்கள், வேடமாறி உருத்தெரியாதபடி அம்பட்டனும் அடைப்பக்காரனும் சபையை விட்டுத் திரும்பும் பொழுதே பின்தொடர்ந்து போய், ஆதியோடந்தமாக நடந்த அதிசயங்களையெல்லாம் அடிக்கடி அறிந்துவந்து அரசனுக்கு அறிவித்துக் கொண்டேயிருந்து, கடையில் 'காதிலே நாராசம் செருகினது' போல, 'அடைப்பைக்காரன் உங்களுக்கு க்ஷௌரம் பண்ண வருகிறான்' என்றுஞ் சொன்னார்கள். அச்செய்தியை அரசன் கேட்டு, அடைப்பைக்காரன் மெய்யாய் அம்பட்டன்தானென்று நிச்சயித்து, 'இந்த மானக்கேட்டுக்கு என்ன செய்யலாம்? அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரங் கொடுத்தாலும் வாராதே! என்று ஏக்கங்கொண்டிருந்தான்.

இப்படியிருக்கையில், 'உகிர்ச்சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற்போல, பின்னும் அதிக கலக்கமுண்டாக அடைப்பைக்காரனும் அம்பட்டனும் அங்கே வந்து வணங்கி நின்றார்கள். அவர்களைப் பார்த்தபொழுது அரசன் மிகவும் நடுங்கித் தைரியம் விடாமல், 'ஆனதாகிறது! இன்னமும் அறிவோம்,'என்றும் கம்பரை நோக்கி, 'என்ன சமாசாரம்?' என்றான். கம்பர் தமக்கும் அம்பட்டனுக்கும் பாகம் பிரிந்த சமாசாரத்தைச் சொல்லி, அந்தப் பாரிக்கத்தையும் சேரன் முன்பாக வைத்து, 'ஐயன்மீர், என் தம்பி இருபது வருஷகாலம் என் முறையாக உங்களுக்கு ஊழியஞ் செய்யும்படி உத்தரவு பெற வந்தேன்' என்றார். அதற்கு ராஜா நாவிதன் கருத்தை அறிந்து கொண்டு கம்பரை நோக்கி, 'நல்லது! உன்னிஷ்டப்படியாகட்டும்,' என்றான். அதுவரையில் வித்துவான்களும் அம்பட்டனுக்கு, 'நீ எடுத்த காரியத்தில் என்ன நஷ்டம் வந்தாலும் வரட்டும், பயப்படாதே! சலியா முயற்சி கொண்டு சாதிக்கவேண்டும் என்று இரகசியத்தில் உறுதிப்பாடு சொல்லிக்கொண்டே வந்தார்கள். அவனும், 'உங்கள் அபீஷ்டப்படி அடைப்பைக்காரனும் அரனும் செய்த அதர்மத்தினாலும், உங்கள் தர்மத்தினாலும், என் அதிர்ஷ்டத்தினாலும் காரியம் கைகூடி வந்திருக்கிறது!' என்று பிரதி சாமாசாரஞ் சொல்லியனுப்பிக்கொண்டே யிருந்தான். இது நிற்க.

அதன் பிறகு கம்பர் சரஸ்வதியை மனத்திலே தியானித்து, 'என்தாயே, கலைவாணி! இந்த ஆபத்துக் காலத்தில் அடியேனைக் கைவிடாது ரக்ஷிக்கும் பொருட்டுத்திருவுளமிரங்கி, உனது இடது பாதச் சிலம்பை அருளிச்செய்ய வேண்டும்,' என்று பிரார்த்தித்தபடி நாமகள் அனுக்கிரகத்தினால் அவளுடைய வச்சிரச் சிலம்பொன்று கம்பர் அக்குட் சந்தில் வந்திருக்க, அதை எடுத்துச் சேரனுக்குக் காண்பித்தார்; அது தகதகவென்று கண்கூசும்படி ஜொலிப்பது கண்டு, அரசன், 'இதேது?' என்ன கம்பர், 'மகாபிரபு ஒரு விண்ணப்பம்: இந்த நாவிதனும் நானும் தூரமல்ல; சிற்றப்பன் பெரியப்பன் பிள்ளைகள்; இவன் தகப்பனும் என் தகப்பனும் ஒரு தாய் வயிற்றிற் பிறந்த சகோதரர்கள்; இவர்களும் நாங்களும் பூர்வம் ஏககுடும்பஸ்தராயிருந்தோம். அப்பொழுது எங்களுக்குள் பாகம் தீரவில்லை. சில காலத்திற்கு முன்பு அகஸ்மாத்தாய்ச் சம்பவித்த கலகத்தால் இவர்களும் நாங்களும் பிரிந்துபோக வேண்டி வந்ததனால், வீட்டுத் தட்டு முட்டு முதலானவைகளைப் போட்டது போட்டபடி கைவிட்டுப் போகிற அவசரத்தில் எங்கள் பெரியவர்கள் அந்நாளில் உங்களைப் போன்ற பிரபுகளுக்கு ஊழியஞ் செய்து சம்பாதித்த இந்த விலையுயர்ந்த சிலம்புகள் மாத்திரம் கைக்குச் சுளுவாயிருந்ததனால், இவர்களொன்றும் நாங்களொன்றுமாகக் கையோடே காவலாய்க் கொண்டுபோய் விட்டோம்; இழிகுலஸ்தரும் எளியவர்களுமாகிய எங்களுக்கு இப்படிப்பட்ட சிலம்பேன்? இது சக்கிராதிபதியாயிருக்கின்ற உங்களுக்கே தக்கது. இதை நீங்கள் கிருபை செய்து கைப்பற்றிக் கொண்டு என்தம்பி வசத்திலிந்த இதன் ஜதையான மற்ற சிலம்பையும் வாங்கி இரண்டையும் ராஜமகிஷியாகிய அம்மாளுடைய அழகிய காலிலிட்டால், நாங்கள் கண்குளிரத் தரிசிப்போம்!' என்றார்.

ராஜா அந்த ஒற்றைச் சிலம்பைக் கையிலே வாங்கிப் பார்த்து அதிசயப்பட்டு, 'அடா,உன்னிடத்திலிருக்கிற சிலம்பையும் கொண்டுவா, பார்ப்போம்!' என்று அம்பட்டனுக்குக் கட்டளையிட்டான். அவன், 'இதேது! கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற்போல வந்து விடிந்ததே!' என்று திகில் கொண்டு, கால்கைகள் உதறலெடுக்க, வாய் குழற, 'இல்லை சுவாமி!' என்றான். கம்பர், 'அடா, தம்பீ, அது நமக்கேன்? அம்மாளுக்கும், சும்மா கொடுத்துவிடு' என்றார். அவன், 'இல்லை அண்ணா!' என்றான். அத்தருணத்தில் அரசன் பக்கத்திலிருந்து இராணி, அதைத் தனக்கு வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று தன் நாயகனுக்குச் சமிக்கை காட்டினாள். சேரன் அதுபற்றி மறுபடி நாலைந்து ஆவர்த்தி, 'சிலம்பைக்கொண்டுவா' என்று வற்புறுத்திச் சொல்லியும், அவன் முன்சொன்னபடியே 'இல்லை' என்ன, கம்பர், 'அடா தம்பீ, கள்ளிக்கு முள்வேலியும், கழுதைக்குக் கடிவாளமும் ஏதுக்கு? அதுபோல, மயிர்வினைஞராகிய நமக்கு வச்சிரச் சிலம்பேன்? 'குடிக்கிறது கூழ், கொப்பளிக்கிறது பன்னீரா?' எடுக்கிறது சந்தைக் கோபளம், ஏறுகிறது தந்தப்பல்லக்கா?' வேண்டா! எடுத்துக் கொடுத்துவிடு,' என்ன, அவன், 'சத்தியமாயில்லை!' என்றனன். ராஜா, 'இவன் பரிச்சேதம் இல்லையென்று ஆணையிடுகிறானே!' என்னக் கம்பர், 'சுவாமி, இவன் மிகவும் நெஞ்சழுத்தக்காரன். இளமையிலேயே இவன் சுவாபம், அஞ்சாமற் பொய்யாணை இடுகிறதுதான்' பொய்ச்சத்தியம் இவனுக்குத் தயிருஞ்சோறும்; இப்படிச் சாந்தமாய்க் கேட்டாற் கொடுப்பானா? மிதித்துப் பிடுங்கினாலல்லாமல் 'மயிலே, மயிலே, ஓர் இறகு கொடு' என்றாற் கொடுக்குமா? அதுபோல, இவனைக் கேட்கிறபடி கேட்க வேண்டும்,' என்றார். தக்ஷணமே அரசனாணையால் ஏழெட்டுப் புளிய மிளார்க்கட்டுகள் வந்து விழுந்தன. அவனைப்பிடித்துக் கம்பத்தில் இறுகக்கட்டி அப்புளிய மிளாரைக் கொண்டு உடம்பெல்லாம் உதிரமொழுகும்படி பொத்தினார்கள். அம்பட்டன் அடி பொறுக்கமாட்டாமல், 'கட்டவிழ்த்து விட்டால் உள்ளதைச் சொல்லுகிறேன்!' என்றான்.

என்ற மாத்திரத்தில், அவனை அடியாமற் கட்டவிழ்த்து விட்டுக் கேட்க அவன், 'அம்பலத்திற் பொதியவிழ்த்தது போல, யதார்த்தத்தைச் சொல்லிவிட்டான். எப்படியெனில், 'இவரெங்கள் தமயனுமல்லர்; நானிவர் தம்பியுமல்லன். இவருடைய பூர்வோத்தரமே எனக்குத் தெரியாது. குரங்குக் குட்டி கையைத் தேய்க்கிறது' போல, இந்த சமஸ்தானத்து வித்துவான்கள் இவர்மேற்பொறாமையால், என்னைக் கொண்டு இப்படியெல்லாஞ் செய்வித்தார்கள்; எனக்கு அவர்கள் எழுதிக்கொடுத்த உடன்படிக்கை இருக்கிறது, பாருங்கள்' என்று அதை அரசன் சமுகத்திற் கொண்டுவந்து வைத்து, மற்றுமவர்கள் செய்யத்துணிந்த துராக்கிருதங்களை எல்லாம் பட்டோலை படிப்பது போலப் பகிரங்கமாகச் சொன்னான். சேரன், 'இது இவனால் விளைந்ததன்று; வித்துவக்காய்ச்சலாற் சம்பவித்தது. 'எய்கிறவனெய்தால், அம்பென்ன செய்யும்?' என்று அம்பட்டன்மேல் மூண்ட கோபத்தை ஒருபடியாகத் தணித்துக்கொண்டு அந்த வித்துவான்களுடைய துரோக சிந்தையைக்குறித்து நெஞ்சு புழுங்கி, 'நம்மாலே பரிபாலிக்கப்பட்ட இவர்கள் நமக்கே தீங்கு செய்தார்களல்லவா!' என்று அவர்களை எல்லாம் கழுவேற்ற நிர்ணயித்தான்.

அதையறிந்து அந்த வித்துவான்கள், 'இந்தப் பேரிடிக்கு எவ்விதத்தால் தப்புவது!

'அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி யுய்த்து விடும்.'

என்றபடியல்லவோ சம்பவித்தது!' என்று பயந்து யாவரும் கூடி ஆலோசித்தும் தப்புவதற்கு வேறோர் உபாயமும் காணாமையால், தங்கள் தங்கள் மனைவிமார்களை அடைப்பைக்காரன் காலிலே போய் விழுந்து வேண்டிக்கொள்ளும்படி அனுப்பினார்கள். அந்த ஸ்திரீகள் தலைவிரி கோலமாய் வந்து புலம்பி, முன்றானையை விரித்து, 'மாங்கல்ய பிக்ஷை தரவேண்டும்!' என்று கேட்க, கம்பர் அவர்களுடைய துக்கமுகத்தைக் கண்டு, நெஞ்சுருகி, அழுகுரலைக் கேட்டுச் சகிக்காமல் இரக்கங் கூர்ந்து, 'பாக்கியவதிகளே! அழவேண்டா; உங்கள் நாயகன்மார்களுடைய பிராணனை நான் அவசியம் காப்பாற்றுவேன்! நீங்கள் அஞ்சாதிருங்கள்,' என்று அபயப்பிரதானம் பண்ணி, அவர்களை அனுப்பிவிட்டு மகராஜனைப் பார்த்து, 'ராஜசேகரரே, உலகத்தில் மாதா, பிதா, குரு, புரோகிதர், புராணிகர், வேதப்பிராமணர், தபசிகள், வித்துவஜனர், விகடகவிகள், சுத்தவீரர், தனாபதிகள், தூதர்கள், சுற்றத்தார், பிணியாளர், வறியவர், பாலர், அடைக்கலம் புகுந்தோர், போகமாதர் என்னும் இந்தப் பதினெட்டுப் பெயர்களும் செய்த குற்றத்தைப் பாராட்டி அதற்காக அவர்களைத் தண்டிப்பது அரசர்களுக்கு மனுநீதியன்று. ஆதலாலும், மேலும் அவர்களும் நானும் வித்துவான்களாயிருப்பதனாலும், அவர்களுக்கு வந்த அவமானம் எனக்கு வந்ததாம். ஆகையால், நீங்கள் கிருபை செய்து அவர்கள், தெரியாமற் செய்த குற்றத்தை மன்னிப்பதே உங்கள் கௌரவத்திற்கும், தயைக்கும் தகுதி,' என்று கோபம் தணியும்படி நயவசனமாகச் சொல்ல, அரசன் சீற்றமாறி, விதித்த தண்டனையை மன்னித்துவிட்டுக் கம்பரை நோக்கி, 'இந்த வச்சிரச்சிலம்பு உமக்கெப்படிக் கிடைத்தது?' என்றான்.

கம்பரானவர், 'கேளீர், சக்கிரேஸ்வரரே! இச்சிலம்பைத் தரிக்கின்ற உத்தமியை நீங்கள் தரிசிக்க வேண்டுமென்னும் விருப்பம் உங்களுக்குண்டாயிருந்தால், அழைப்பிக்கிறேன்,' என்று சொல்லி, விசாலமாகிய ஒரு மண்டபத்தில் முத்துப் பந்தல் சிறப்பித்து, சந்தனத்தைப் பனிநீரிற் குழைத்து மெழுகி, நவரத்தினப் பொடிகளாற் கோலமிட்டு, வாழை கமுகுகள் நாட்டி, மலர் மாலை தூக்கி, நெய் விளக்கேற்றி, முற்பக்கத்தில் முகமல் திரைபோட்டு அப்பந்தலுக்குள் மரகத விமானம் ஒன்றை அலங்கரித்து வைத்து, அதில் மாணிக்க பீடம் அமைத்து அவன்மேல் தங்கக் கலசஸ்தாபனஞ் செய்து அக்கலசத்தில் ஜகன்மாதாவாகிய சாரதையை ஆவாகனம்பண்ணி, சங்கமுதலிய வாத்தியங்கள் கோஷிக்க கந்த புஷ்ப தூப தீப நைவேத்தியங்களைக் கொண்டு ஆகமவிதிப்படி பத்தி விசுவாசத்துடனே அர்ச்சித்துப் பூசித்து அஞ்சலித்து, கலைமகள் மூலமந்திரத்தைப் பிரணவ நமக சகிதமாகப் பற்பல உருச்செபித்து திரைப்புறத்திலிருந்து நூதனமாகச் சரஸ்வதிமேல் ஓர் அந்தாதி பாடி, வசனரூபமாகவும், 'தவளஸ்வரூபி' தவளபத்மாசனி, தவள பூஷணி, புவன காரணி, புஸ்தாக பரணி,' என்று ஸ்தோத்திரித்த மாத்திரத்தில் அப்பந்தலின் திரைக்குள் அந்த ஞானசிரோமணியாகிய பரதேவதை சர்வாபரண பூஷதையாய், எத்திசையிலும் மனோக்கியமான மந்தார பாரிஜாத திவ்விய பரிமள வாடை வீசும்படி எழுந்தருளித் தாம் தாமென்று மத்தளம் முழங்க, வலக்கை மகர வீணை வாசிக்க, இடக்கை அபிநயிக்க ஒற்றைக்காற் சிலம்பு கலீர் கலீரென்று சப்திக்க, அடிபெயர்த்து அற்புத நடனஞ் செய்யத் தலைப்பட்டாள். அதை அரசன் முதலானவர்கள் அறிந்து சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து, பிரமானந்தத்தில் மூழ்கிப் பரவசமானார்கள்.

அப்பொழுது நாமகள், 'எங்கடா கம்பா சிலம்பு?' என்றாள். என்றவுடனே கம்பர், அரசன் கையிலிருந்த சிலம்பை வாங்கிச் சாரதையின் இடப்பாதத்திற்கு நேரே நீட்டினார். அஃது அந்தத் திருவடியிற் போயேறின மாத்திரத்திற் கலைவாணி அந்தர்த்தானமாய்ப் போய்விட்டாள். பிறகு சேரன் கம்பரைப் பற்றிச் சமுசயித்து, 'நீரார்?' உம்முடைய பூர்வோத்தரமென்ன? உண்மையைச் சொல்லவேண்டும்,' என்று வேண்ட, கம்பர் தாம் இன்னாரென்பதும், தமக்கும் சோழனுக்கும் விரோதமுண்டானதும், அவனுடைய தேசத்தைவிட்டுத் தாம் வந்ததும், மார்க்கத்தில் நடந்த செய்தியும் சாங்கோபாங்கமாகச் சொல்லக்கேட்டு அரசன் அதிக சந்தோஷமாய் ஆச்சரியப்பட்டு, மகா வித்துவானாகிய அவர் தனக்கு அடைப்பைத் தொழில் செய்ததனிமித்தம் விசனமுற்று, அன்றுதொட்டு அவரை முன்னிலும் மிக்க செல்வமும் சிறப்புமாக வைத்திருந்தான்.

★★★அவ்வண்ணம் கம்பர்....[தொகு]

அவ்வண்ணம் கம்பர் சேரனிடத்திலிருக்க, சோழன் நெடுநாளாகக் கம்பர் முகத்தைக் காணாமையால், தாய் முகத்தைக் காணாத சிசுப்போலவும்,மழை முகத்தைக் காணாத பயிர்போலவும், கணவர் முகத்தைக் காணாத கற்புடை மடவார்போலவும், போர் முகத்தைக் காணாத சுத்தவீரர் போலவும், கொடுப்போர் முகத்தைக் காணாத இரப்போர் போலவும் ஏக்கமுற்று, 'ஐயோ! நான் தீர்க்காலோசனை பண்ணாமலும், கொஞ்சமாவது தாட்சணியமில்லாமலும் கண்டித்துப் பேசி, என் தேசத்தைவிட்டுப் போய்விடும்!' என்றதனாலல்லவோ, வித்துவ ரத்தினமாகிய கம்பர் என் சமுகத்தை விட்டு விலகிப் போனார்? இனி என்றைக்கு அவர் முகத்தைக் காண்பேன்! அவரில்லாத சபை, தாமரையில்லாத தடாகமும், சந்திரனில்லாத வானமும், நதியில்லாத நாடும், துதியில்லாத நாவும், ஞானமில்லாத கல்வியும், கற்பில்லாத பெண்டிரும், தெய்வத்தியானமில்லாத நெஞ்சும், புத்திரபாக்கியமில்லாத இல்வாழ்க்கையும், செங்கோலரசனில்லாத நகரமும்போலச் சிறப்பிழந்திருக்கின்றதே! அவரெங்கே போனாரோ! எவ்விடத்திலிருக்கிறாரோ! இன்னதேசத்திலிருக்கிறார் என்று எந்த மகானுபாவனாவது வந்து சொல்லக் கேட்பேனோ!' என்று தன் சபையாருடனே சொல்லித் துக்கப்பட்டு அஷ்டதிக்கிலுமுள்ள அந்தந்தத் தேசங்களுக்குத் தூதர்களை அனுப்பிப் பலநாள் தேடியும் செய்தி தெரியாமல் தடுமாறிப் பின்பு தெய்வகதியாய்ச் சேர மகா ராஜனுடைய சம்ஸ்தானத்திலிருக்கிறாரென்று சிலர் வந்து சொல்லக் கேள்விப்பட்டு, அதை உள்ளபடி தெரிந்து கொண்டு, 'இந்த நிரூபங் கண்ட நாழிகைக்குத் தயைசெய்து வரவேண்டும்' என்று கம்பருக்கு ஒரு நிரூபமும் 'தாமதமில்லாமல் எப்படியாவது நீர் கிருபை கூர்ந்து கம்பர் கவிச் சக்கரவர்த்தியாரை அனுப்புவிக்க வேண்டும்,' என்று சேரனுக்கு ஒரு விண்ணப்பமுமெழுதி ஓராள் வசம் அனுப்பினான்.

கம்பர், சோழன் தமக்கு எழுதிய நிரூபத்தைச் சேரனுக்குக் காட்டி, 'சோழராஜனிடத்திற்குப் போகும்படி நமக்கு உத்தரவு கொடுத்து அனுப்பவேண்டும்' என்ன, சேரனும் தனக்குச் சோழன் அனுப்பிய கடிதத்தைக் கம்பருக்குக் காண்பித்து, 'நீரிங்குச் சிலகாலம் வந்து வசிக்கும்படி நேரிட்டது ஆர்செய்த புண்ணியமோ!' என்றும், 'இப்பொழுது நீர் திடீரென்று பிரிந்து போக வேண்டி வந்தது எனது நிர்ப்பாக்கியந் தானோ!' என்றும், 'சேர்ந்திருந்தமையால் என் சபை இந்திரசபை போலச் சிறப்புற்றிருந்ததே!' என்றும், 'நீர் நீங்கிவிட்டால் இனி அது மனையாளில்லாத இல்லம்போல அழகிழந்திருக்குமே!'என்றும், 'உம்மைப்போல எனக்குச் சாதுரியமாகவும், செவிக்கின்பமாகவும் ராமாயணம் பிரசங்கம் செய்பவர்கள் வேறே யார் இருக்கின்றார்கள்?' என்றும், 'எனக்கு இத்தனை கோரமான துக்கம் சம்பவித்ததே!' என்றும் விசனப்பட்டான். கம்பர் அரசனைப் பார்த்து, 'நிஷ்பிரயோசனனாகிய என்னைக் குறித்து நீங்கள் இவ்வளவு கவலைப்பட்டால், 'மன்னுயிருந் தன்னுயிராகப் பாவித்து உலகபாரத்தையெல்லாம் தாங்குவதன்றித் தேசத்திலிருந்து நிராதரவாய் வந்தடுத்த எளியேனையும் அன்ன வஸ்திராதிகள் தந்து, பெற்ற தாய் பிள்ளையைப் பரிபாலிப்பது போல ஆதரித்துவந்த பரோபகாரியாகிய உங்களைப் பிரிவது பற்றி நானெவ்வளவு விசனப்பட வேண்டும்?' என்றும், 'அல்லாமலும், உலகத்தில் விசனமில்லாதிருப்பவர் ஒருவருமில்லை' என்றும், விஷயம் சிறிதாயினும், பெரிதாயினும் அதனால் விளையும் காரியமாகிய துக்கமோ, அவரவர் ஸ்திதியை நோக்குமிடத்தில் ஒரு தன்மையேயாம்,' என்றும் சொல்லி, அஃது அனைவர்க்கும் ஒரு தன்மையாமென்பதற்குத் திருஷ்டாந்தமாக,

பாலுக்குச் சர்க்கரை யில்லையென் பார்க்கும் பருக்கையற்ற
கூழுக்குப் போடவுப் பில்லையென் பாருக்குங் குற்றிதைத்த
காலுக்குத் தோற்செருப் பில்லையென் பார்க்குங் கனகதண்டி
மேலுக்குப் பஞ்சணை யில்லையென் பார்க்கும் விசனமொன்றே.'

- என்ற பாடலையும் கூறி, அவன் துக்கத்தை ஆற்றினார். அப்புறம் சேரன் கம்பரைப் பலவிதத்திலும் கொண்டாடி,அரசர்களுக்குச் செய்வது போல அவருக்குச் சகல வரிசைகளுஞ் செய்து, தன் மந்திரி பிரதானிமார்கள் சமரம் போட்டுக்கொண்டு சம்பிரமத்துடனே அவரை அழைத்துப் போய்ச் சோழநாட்டில் விட்டுவரும்படி கட்டளையிட்டான்.

கம்பர், சேரன் கொடுத்த சித்திரப் பொற்பட்டாடையை உடுத்து, நவரத்தினபூஷணங்களைத் தரித்து, ரத கஜ துரக பதாதிகள் புடைசூழ, யானைமேல் ஆரோகணித்து, தவளக் குடை கவிக்க, ஆலவட்டம் அசைக்க அஷ்டாதச வாத்தியங்களும் முழங்க, விருதுகள் பிடிக்க, எச்சரிக்கை படிக்க, மந்திரி சாமந்தர்கள் சாமரை போட, அரசர்கள் அஞ்சலிக்க, மோகனமாதர் பரதநாட்டியமாட பாணர்கள் சங்கீதம் பாட, அனேகவித ஆடம்பரத்துடனே பிரயாணப்பட்டபொழுது, சேரமகாராஜன் சிறிதுதூரம் கூடவந்து உபசரித்து வழிவிட்டுத் திரும்புகையில், கம்பரை நோக்கி, 'நீர் சோழனை விட்டுப் பிரியும்பொழுது செய்துவந்த பிரதிக்கினையை மறந்துவிட்டீர் போலக்காண்கிறதே!' என்று எச்சரிக்க, அவர், 'மறக்கவில்லை. அங்கே நான் போய்ச்சேர்ந்த பிறகு சமயமறிந்து உங்களுக்குக் கடிதமெழுதுகிறேன்; அப்பொழுது நீங்கள் தயை செய்யலாமே யொழிய இப்பொழுது ஆவசியகமில்லை,' என்ன, அதற்கவன், 'அந்தப்படிச் செய்வீராகில் முன்பு நீர் நமக்குச் செய்தது போலவே நாமும் உமக்கு அடைப்பைக்காரனாய் வந்து அந்தக் கடனைச் செலுத்துவோம்,' என்ன, கம்பர், 'நல்லது!' என்று அரசனுடைய அனுமதி பெற்று அத்தேசத்தை விட்டுப் புறப்பட்டுச் சோழனாட்டுக்குச் சமீபமாய் வருமளவிற் செய்தி தெரிந்து பொன்னித்துறைவனாகிய சோழராஜன் எதிர்கொண்டு உபசரித்து, அழைத்து வந்து சித்திரமயமாகிய ஒரு சிங்காதனத்தில் இருக்கச் செய்து கம்பர் முகத்தை நோக்கிக் கண் களிக்க மனங்களித்து, தன்னைவிட்டுப்பிரிந்த பின்பு நடந்தவைகளையெல்லாஞ் சொல்லக்கேட்டு, துக்கித்தும் சந்தோஷித்தும் அதிசயித்தும் இரண்டொருநாள் சென்றபின்பு நீர் இங்கிருந்து போம் பொழுது செய்த பிரதிக்கினை நிறைவேறமல் போயிற்றே!' என்று பரிகாசமாய்க் கேட்கக் கம்பர், 'அஃது இன்றெட்டாம்நாள் நிறைவேறும்,' என்று சொல்லிச் சேரனுக்குக் கடிதமெழுதினார்.

அது கண்டு அவன் அடைப்பைக்காரனாக வேடம் பூண்டு, தன் பட்டத்துப்புரவி மேலறி,அதிசீக்கிரமாக அந்த எட்டாம்நாள் வந்து, சோழன் சபையில் கம்பர் பக்கத்திற் சேர்ந்து நின்று அவர்க்குத் தாம்பூலம் மடித்துக் கொண்டிருந்தான். அவன் முகக்குறியைச் சோழன்மகள் உற்றுப்பார்த்து, இன்னானென்று தெரிந்துகொண்டு, தன் பிதாவுக்குக் குறிப்பாகத் தெரிவித்தாள். அதையறிந்து கம்பர் சேரனுக்குக் குறிப்பிக்க, அவன் அந்த க்ஷணம் அவ்விடத்தை விட்டு நீங்கிக் குதிரையேறித் தன்தேசம் போய்ச் சேர்ந்தான். பிறகு சோழன், 'உம்முடைய பக்கத்திலிருந்தவன் ஆர்?' என்ன, கம்பர், 'அவன்தான் சேர மகா ராஜன்,' என்ன, 'ஏன் அவனை அனுப்பிவிட்டீர்?' என்ன, 'உமக்கு மேலாயிருந்து உம்மிடத்தில் கப்பம் வாங்குகிற மன்னர் மன்னன் உமதருகில் தன் பரிவாரங்களை விட்டுத் தனியே வந்திருக்கையில் அவனை நீர் பிடித்துச் சிறைப்படுத்தி அவனுடைய ராச்சியத்தைக் கைப்பற்றிக் கொள்வது எளிதென்றல்லவோ அனுப்பிவிட்டேன்!' என்ன, சோழன், 'அப்படியா! நல்லது! அவன் உமக்கு மடித்துக்கொடுத்த வெற்றிலைச் சுருளை ஒவ்வொன்றாக வாங்கி விரற் சந்தில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தீரே யல்லாமல், நீர் தரித்துக் கொள்ளவில்லையே! அஃதென்னை?' என, கம்பர், அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடை பிடிப்பர். நானப்படி நடக்கமாட்டேன்; சக்கிரேசுரனாகிய அவன் என்னைக் கௌரவப்படுத்தும்பொருட்டு அபிமானித்து அவ்விதமாகச் செய்ய, நான் அது தெரியாமல் தலைவிரித்துக் கொண்டாடலாமா? வாங்கித் தரித்துக்கொள்வது மரியாதையா?' என்ன, சோழன் கம்பருடைய வித்தியா சாமர்த்தியத்தைப் பார்க்கிலும், ஒழுக்கத்தையும், பாரமார்த்திகத்தையும், லௌகிக யுத்தியையுங்கண்டு மிகவும் மெச்சிக்கொண்டான்.


ஒன்பதாவது, 'கம்பர் சரித்திரத்தின் ஒரு பகுதி' முற்றியது[தொகு]

'

பார்க்க:[தொகு]

விநோதரசமஞ்சரி

8.நன்றி மறவாமை

10.கம்பர் இராமாயணம் பாடி அரங்கேற்றியது