பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


வலிவுள்ள கரங்களால்தான் பிறரைக்காக்கவும் முடியும். எனவே நாம் முதலில் நமது கரங்களை வலிவுள்ள கரங்களாக ஆக்கிக் கொள்வோம். அப்போது பிறரை நாமும் காக்க முடியும்.

கரங்கள் எந்த அளவு வலிவுள்ளவையாக இருக்கின்றனவோ அந்த அளவு உள்ளம் மென்மையானதாக இருக்க வேண்டும்.

நானும் திரைப் படத்திலே, ஈஸ்வரன் இரும்புப் பெட்டிக்கும் இதயத்துக்கும் சம்பந்தம் வைப்பதில்லை என்று எழுதினேன்.

நம்முடைய நாட்டு ஈஸ்வரன் ஒருவேளை அப்படியிருக்கலாம். ஆனால் அமெரிக்க மக்களுடைய பணத்துக்கும் அவர்களது இதயங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதைப் பார்க்கிறோம்.

அமெரிக்க மக்களும் ஆரம்ப காலத்திலே நம்மைப் போலத் தான் இருந்தார்கள். இப்போது உள்ள வலிவு ஆப்ரகாம்லிங்கன் காலத்தில் இருந்ததில்லை. காடுகளாகவும், பள்ளத்தாக்குகளாகவும், சதுப்பு நிலமாகவும் தானிருந்தது, ஆதி நாள் அமெரிக்கா.

இன்று அந்நாடு பொன் கொழிக்கும் பூமியாக உள்ளது. தாங்கள் தேடிப்பெற்ற செல்வத்தைத் தேக்கி வைத்து உலகில் பரவிடச் செய்கிறார்கள்.

எவ்வளவு விரைவாக நாம் அந்த வலிவைப் பெறுகிறோமோ அந்த அளவு நமது தன்மானம் தரணியில் உயரும்.

அந்த வலிவினைத் தேடிக் கொண்டு நம் கரங்களைக் காக்குங் கரங்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.