அண்ணா சில நினைவுகள்/பதினொரு மாதம் சுமந்தவர்

விக்கிமூலம் இலிருந்து
பதினொரு மாதம் சுமந்தவர்

சிய ஜோதி அணைந்து விட்டது! காந்தியடிகளின் செல்லப்பிள்ளை, ரோஜாவின் ராஜா, இந்தியாவின் முதல் பிரதமர், பண்டித ஜவாகர்லால் நேரு, 27.5.1964 பிற்பகல் 2.30 மணியளவில் திடுமென மறைந்த செய்தி-ஜன நாயகத்தை நேசிப்பவர் நெஞ்சில் வேல் பாய்ச்சியது! நாடே கதறி அழுதது! இம்மாதிரி நேரங்களில் விரைந்து முன் வந்து, தமது இரங்கலைத் தெரிவிக்கத் தயங்காத அண்ணா-அன்று அவ்வாறு உடனே கருத்தை வெளியிட வில்லை! ஏன்?

இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு நகலைக் கொளுத்திக் கட்டாய இந்திக்கு நம் எதிர்ப்பைத் தெரிவிப் போமென அண்ணா அறிவித்தார். அவருடன் டி. எம். பார்த்தசாரதி, டி. கே. பொன்னுவேலு, தையற்கலை கே. பி. சுந்தரம், வி. வெங்கா ஆகிய நால்வரும் ஒரு குழுவாக இணைந்து, சென்னைக் கடற்கரையில் எரிப்புப் போராட்டம் தொடங்குவதற்கெனக் காஞ்சியினின்று காரில் வரும்போதே, வழிமறித்துக் கைது செய்யப் பட்டனர். 1963 டிசம்பர் 10 ஆம் நாள் இக்குழுவினர்க்கு ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, ஐவரும் சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டிருந்தனர்.

நேருபிரான் இறந்ததால், இவர்களை விடுதலை செய்துவிடக் கூடிய பெருந்தன்மை காங்கிரஸ் அரசுக்கு வருமா? அவ்வளவு ஏன்? காந்தியார் மறைந்தபோது 1948-ல் பெரியாரையும் அண்ணாவையும் அழைத்து வானொலியில் இரங்கலுரை ஆற்றச் சொன்னவ்ர்கள், நேருவின் மறைவுக்கு 1964-ல் அவ்வாறு அழைக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி அமைத்திருந்த ராஜாஜியை மட்டும் வானொலி அழைத்தது! (வாழட்டும் அந்த வர்ணாசிரம வானொலி!)

பண்டித நேரு இறந்தார் என்றவுடன் கலைஞருக்கு முதன் முதலில் ஏற்பட்ட எண்ணமே, உடனே மத்திய சிறைக்குச் சென்று, அண்ணாவுக்குச் செய்தியைத் தெரி வித்து, அவரது மேலான இரங்கற் செய்தியினை நாட்டு மக்கள் அறியச் செய்யவேண்டும் என்பதுதான்! வாங்க சார், சென்ட்ரல் ஜெயிலுக்குப் போகலாம். நீங்க வந்ததில்லையே?” என்று கலைஞர் என்னையும் அழைத்தார். நான் போனதில்லைதான்! பிற்பாடு 1976-ல் எதிர்பார்த்தேன். வாய்ப்புத் தரப்படவில்லை?

அதே போல், மாலை 4 மணிக்கெல்லாம் சென்றோம். ஐந்து மாதங்கள் சிறைக்குள் வாழ்ந்த அண்ணாவைப்பேட்டி கண்டேன். நான் 1960-ல் இரண்டு நாள்தான் ரிமாண்டி லிருந்தேன். அதற்குள் சாப்பாட்டுக்கும் புகைபிடிக்கவும் எவ்வளவு சிரமப்பட்டேன் என்பது நினைவுக்கு வந்தது. அண்ணா இப்போது மட்டுமல்ல. இதற்கு முந்திய ஆண்டும் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டு, வேலூர் சிறையில் வதிந்தார் பத்து வாரங்கள்!

சிறையின் சட்டதிட்டங்களின்படி, அண்ணா எழுதிய அறிக்கையை அப்படியே வாங்கி வந்து வெளியிடக் கூடாதாம்! அதனால், கலைஞர் அதைப் படித்து, மனத்தில் வாங்கி வந்தார். நாளேடுகளில் வெளியிட்டார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரான நேரு எவ்வளவு காலம் சிறைக் கோட்டத்தில் கழித்துள்ளார்! அவர் மறைந்த நாளன்று, நமது இனத் தலைவர் அண்ணா சின்றக் கோட்டத்தில் இருந்தது எவ்வளவு பொருத்தம்!

மத்திய சிறையிலிருந்து கலைஞருடன் காரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, போன ஆண்டு நடை பெற்ற ஒரு சிறு நிகழ்ச்சி என் மனத்தில் நிழலாடி, அதன் தொடர்பாய் ஒரளவு மகிழ்ச்சியும், உடனே தொடர்ந்து மனத்துள் நெகிழ்ச்சியும் ஏற்பட்டன.

1962-ல் தஞ்சைத் தொகுதி சட்டமன்ற உறுப்பின ரான கலைஞர், விலைவாசி மறியல் போராட்டத்தில் தஞ்சாவூரில் கலந்து கொண்டார். அதனால் மூன்று மாதக்கடுங்காவல் தண்டனை பெற்றார். ஏற்கனவே கல்லக்குடிப் போராட்டத்தில் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை பெற்று அடைக்கப்பட்டிருந்த அதே திருச்சி சிறைச்சாலைதான் இப்போதும். ஒரு சிறு மாறுதல் என்ன வென்றால், அப்போது, கலைஞர் சட்ட மன்ற உறுப்பினர் ஆகவில்லை. அதனால் நான் ஒரு முறைதான் சென்று பார்க்க இயன்றது. எனக்கு நல்ல வாய்ப்பு இப்போது. திருச்சி சிறையிலிருந்த கலைஞரைப் பல தடவை பேட்டி காணமுடிந்தது!

கலைஞர் விடுதலையானவுடன் நேரே தஞ்சை சென்று, மக்கள் அளித்த வரவேற்பினை ஏற்று, மீண்டும் திருச்சி, அடுத்த நாள் திருவாரூரில் பொதுக் கூட்டம் என்று ஊர் ஊராகப் போகவே நேரம் சரியாக இருந்தது. அக். 24 விடுதலையான அண்ணா, காஞ்சிபுரத்தில் அப்போது தங்கியிருந்தார்கள். அதனால் அண்ணாவைக் காணத் திருவாரூரிலிருந்து மறுநாள் காஞ்சி புறப் பட்டோம் fiat காரில், ஒட்டுநராகத் திருவரம்பூர் காமாட்சி. காரில் கலைஞருடன் மதுரைமுத்து, முரசொலி செல்வம், நான். திண்டிவனம் அருகில் வரும்போது, பிரேக் பிடிக்காமல், கார் முன்னும் பின்னும் ஒடுகிறது சுற்றிச் சுழல்கிறது.-Control இல்லாமல்! ‘பயப்படாதீங்க’ என்கிறார் காமாட்சி! கடைசியில், ஒரு மைல்கல் மீது மோதித் தானாகவே நின்று விட்டது! ஒருவாறு சரி செய்து கொண்டு, காஞ்சி சென்று அண்ணாவைக் கண்டோம்! சாப்பிடுங்கள்! நானும் சென்னைவருகிறேன். இன்று நமக்கு வரவேற்புப் பொதுக் கூட்டம் இருக்கிறதே! ஊர்வலமும் உண்டே சேர்ந்து புறப்படுவோம்!” என்றார் அண்ணா,

கலைஞர் விடுதலையாகி மூன்று நாட்களாகிவிட்டன. கோபாலபுரத்தில் அன்னை அஞ்சுகம் அம்மையார், தன் அருமந்த செல்வனிடம் அளப்பரிய அன்பினைச் சுமந்து கொண்டு, அவர் வந்து சேராத ஏக்கத்தைச் சிந்தையில் தேக்கிக்கொண்டு, உண்ணாமல் உறங்காமல், உள்ளும் புறமும் அலைந்து திரிகிறார்.

அண்ணாவுடன் சேர்ந்து நள்ளிரவில் நாங்களனை வரும் போய்க் கலைஞர் இல்லத்தில் இறங்குகிறோம். பொக்கைவாய்ப் புன்சிரிப்புதவழ, அம்மா அண்ணாவைப் பார்த்துக் கேட்கிறார்கள் “அண்ணா தம்பி! ஒங்க அம்மா ஒங்களெப் பெறுவதுக்கு ஒரு நாள்தான் பிரசவ வேதனைப் பட்டிருப்பாங்கபோல இருக்கு. அதனாலெ நீங்க வேலூர் ஜெயிலிலேயிருந்து விடுதலை ஆனதும், நேர ஒங்க அம்மாவைப் பார்க்க ஒடனே காஞ்சிபுரம் போனிங்க. அப்புறம் போயி வேலூர் கூட்டத்திலே கலந்து கிட்டீங்க. ஆனா, என் பிள்ளையை நான் 27 நாள் பிரசவ வேதனை அனுபவித்த பின் பெற்றேன். அதனால்தான், அது என்னைப்பாக்க இவ்வளவு மெதுவா வருது. திருச்சியிலே விடுதலையாகி மூணு நாளாச்சே மெட்ராஸ் வர்றதுக்கு. நீங்க கேக்கக் கூடாதா?” என்ற தும் அண்ணாவுக்கு ஒரளவு வெட்கமும் வருத்தமும் ஏற்பட்டன, அந்தத் தாயுள்ளத்தின் தவிப்பினை உணர்ந்து. “இல்லேம்மா. என்னாலதான் கருணாநிதி வர்றது லேட்டாச்சு. நானும் சேந்து வந்து, ஒங்களெப் பாக்க விரும்பினேன்!” என்று பேசிச் சமாளித்தார் அண்ணா!

1964 மே 27-சென்னை மத்திய சிறையிலிருந்து திரும்புங்கால் 27 நாள் பிரசவவேதனைச் சம்பவம் நினைவுக்கு வந்தது. அதே நேரம் அத்தகைய அன்பின் திருவுருவாம் அஞ்சுகம் அன்னையார் 1964 சனவரியில் இதே 27 ஆம் நாள் தன் செல்வங்களை ஏங்கவிட்டு மறைந்தாரே, அதுவும் என் சிந்தையைக் கலக்கிற்று, அப்போது அண்ணா வரைந்த கண்ணிர்க்காவியத்திலிருந்து சில பகுதிகளை நினைவு கூரலாமே:

“குறுநகை காட்டும் கண்கள்! பொக்கை வாயிலே ஒர் புன்னகை மூதாட்டி அஞ்சுகம் அவர்கள், சருகு, தளிர் ஆவது போலாகி விடுவார்கள்-தமது மக்களின் மகிழ்ச்சி கண்டு அல்ல, மாடு மனை கண்டு அல்ல. இயக்கச் செய்திகளை, வெற்றிகளைக் கேட்டதும்......

கண்டவுடன்; “மேயர் நம்ம கட்சிதானே வரும்? அதை விடக்கூடாது! புதுசா சட்டம் வருதாமே, என்ன செய்யப் போரீங்க? விலைவாசி குறைக்க எப்ப நடக்கப் போவுது கிளர்ச்சி? பேப்பர்லே இண்ணக்கி நம்ம கட்சி விஷயம் என்னென்ன வந்திருக்குது? நம்ம கட்சியைக் கேலி பண்ணிப் படம் போட்டாங்களாமே பேப்பர்லே. பார்த்தீங்களா, என்ன செய்யப் போறீங்க?” என்ற இது போன்ற கேள்விகளைக் கேட்டு, ஆர்வத்தைப் பொழிந்த ஒரு அன்னையை நான் கண்டதில்லை. தம்பி கருணாநிதிக்கு, இப்படிப்பட்ட தாய்ச் செல்வம் பெற்றிருந்த காரணத்தால்தான்-“நிதி” என்ற பெயரிட் டார்கள் போலும்.

வயது 72 தோற்றம், அப்பழுக்கற்ற கிராமிய முறை! அணிகலன் கிடையாது! அந்த வீட்டிலே மூதாட்டி அஞ்சுகம் அம்மையார், கழக மாநாட்டுக்காக வெளியூரிலிருந்து வரும் தாய்மார்களில் ஒருவர் போல, இயக்கப் பேச்சு ஒன்றிலேயே தமக்குச் சுவை தேடிக் கொண்டு உலவிவந்தார்கள்.

நடமாடிக் கொண்டிருந்த அம்மை இப்போது படமாகிப் போய் விட்டார்கள்...

குயில் பறந்து விட்டது. நாதம் நிலைத்திருக்கிறது
மலர் உதிர்ந்து விட்டது, மணம் கிரம்பி இருக்கிறது.
அஞ்சுகம் மறைந்து விட்டார்கள்
அவர்கள் பற்றிய கினைவு கிலைத்திருக்கிறது."

இதே சந்தர்ப்பத்தில் தான் “முரசொலி”யில் எழுதிய கையறு நிலைக் கட்டுரையின் வரிகளிற் சில இங்கு பொருந்தக் கூடுமே.

“பெற்ற தாயிடத்தில் மட்டுமே பெறத்தக்க பரிவு, பாசம், அன்பு, அரவணைப்பு-ஆகியவற்றை மற்றொரு தாயிடத்திலும் பெற இயலும் என்பதற்கோர் இலக்கண மாய் வாழ்ந்துகாட்டிய அன்னையார், தன் குலக் கொழுந்துகள் குமுறியழுவதும் கேளாமல், ஒருமுறை பார்த்தோரும் உருகிக் குமையும் காட்சியைக் காணாமல் கண்மூடி விட்டார்கள்.

பொக்கைவாய் முழுதும் புன்சிரிப்பு நிறைய ‘வாங்க தம்பி!’ என்று வயதில் தன் பேரப் பிள்ளைகளை ஒத்தோரையும் மரியாதைப் பன்மையிலே விளித்து மனங்குளிர அழைத்து, வீட்டிலே குழந்தை குட்டிகள் சவுக்கியமா?’ எனவும் மறவாமல் வினவி, அதற்கும் அடுத்தபடியாகத் தாம் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்புவதற்குத்தான் என்ற கருத்தில் சாப்பிட வாருங்கள்’ என்ற உபசரிப்பை இனி என்றென் றும் காண ஒண்ணாத அவல நிலைக்கு ஆளானோம். சாப்பிட அமர்ந்ததும் தம் கையால் ஏதாவது பறிமாறினால்தான் திருப்தி ஏற்படும் அளவுக்கு நீர் நிறைந்த ஊருணிபோல் வற்றாத வாத்சல்யம் சுரக்கின்ற அந்த இனிய முகத்தை எப்படி மறக்க இயலுமோ?...

இயக்கத்துக்கு முதல்வராம் அண்ணாவோ பிற முன்னணித் தலைவர்களோ வருகை தந்தால் அவர்களை மரியாதையும் ஆசையும் மிளிர வரவேற்று, அரசியல் பேசத் தொடங்கும் அவர்களின் நுண்ணறிவைப் பாராட்டாதார் யார்?......

என்ன துயர் பட்டேனும் அன்னை உயிர் மீட்கலாம் என்ற ஆசை அலைமோதிய நெஞ்சங்கள் அனல் கக்கும் எரிமலைகளாய் உருமாறி, அம்மா என்றும் ஆத்தா என்றும் அத்தை என்றும் அழைத்துக் களித்த அன்புருவங்கள் என்புதோல் போர்த்த கூடுகளாய் ஏங்கிப் பின்னின்று தவிக்கின்ற அவலநிலை, கால ஒட்டத்தில் தெளிவு பெற’ அம்மா! உங்கள் சிந்தனை எங்கள் உளத்திற்கு உரம் ஊட்டுவதாக!”

நேரு மறைவிற்கு அண்ணா சிறையிலிருந்து வழங்கிய இரங்கலுரை இது :-

“உலகப் பெருந்தலைவர்கள் வரிசையில் சிறப்புமிக்க இடம்பெற்று இந்தியத் துணைக் கண்டத்துக்குத் தனிப் புகழிடம் தேடிக் கொடுத்துப் பூசல்கள் பிளவுகளால் நாடு கேடடையாமல் பாதுகாத்துப் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படாமல் தடுத்து வந்த மாபெரும் காவலர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள்.

நேரு பெருமகனாருக்கு நாம் காட்ட வேண்டிய மரியாதை உணர்வைச் சொல்லாலும் செயலாலும் நேர்மையாலும் நன்னெறியாலும் அனைவரும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்."