உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்/இந்து மதத்தினின்று தமிழர்கள்

விக்கிமூலம் இலிருந்து

‘இந்து’ மதத்தினின்று தமிழர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டும்!

க்களை அடையாளம் காட்டுவதற்குரிய குறிப்புப் பெயர்களுள் மதமும் சாதியும், நாட்டுக்கு அடுத்தபடி மிகவும் முகாமை பெற்றனவாகக் கருதப் பெறுகின்றன. விரும்பியோ விரும்பாமலோ, ஒருவர் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவராகவே இருத்தல் வேண்டும் என்பது அண்மைக் காலம் வரை கடைப்பிடிக்கப் பெற்று வந்த அல்லது வரும் ஒரு நடைமுறை. இம் முறை, மக்கள் மதங்களுக்குத் தங்களை அடிமையாக்கிக் கொண்ட காலந்தொட்டு இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒருவனை அவன் பிறந்த நாடு, பெற்றோர்கள், வைத்துக்கொண்ட பெயர், உயரம், எடை, உறுப்பு அமைவுகள் முதலியவற்றால் மட்டுமே சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடிவதாக இருந்தாலும், அவன் கடைப்பிடித்தொழுகுகின்ற மதத்தையும், அவன் பிறந்துள்ள குலம் அல்லது சாதியையும் அடையாளம் கூறியாக வேண்டும் என்பது, மத ஆளுமைக்காரர்கள் அல்லது மதத் தலைவர்கள் ஏற்படுத்திவைத்த ஒரு தேவையற்ற மூடக் கொள்கையாகும். குழு இன ஆட்சிக்காலத்தில், தங்கள் இனத்தவர்களே வலுப்பெற வேண்டும், பிற இனத்தவர்கள் நம்மிடையில் ஊடுருவிவிடக் கூடாது என்ற நினைவுடன், குல, இன, அடையாளங்களும், மத ஆட்சிக்காலத்தில் தங்கள்

மதத்தவர்களே பெருகி வளரவேண்டும். பிற மதத்தவர்கள் வலிவு பெற்று விடக் கூடாது என்ற எண்ணத்துடன் மத அடையாளங்களும் கடைப்பிடிக்கப் பெற்றிருக்க வேண்டும். எப்படியும் இவ் வழக்கம் ஒரு காட்டு விலங்காண்டிக்(Barbarian) கால வழக்கமே!

இக்காலம் அறிவியல் வளர்ந்து செழித்துவரும் காலம் மக்கள் மூடக்கொள்கைகள் தவிர்த்துப் பகுத்தறிவைக் கடைப்பிடித்துவரும் காலம்; குடியரசு மலர்ந்து வளர்ச்சிபெற்று வரும் காலம். ஆயினும், இக்காலத்திலும் ஒருவனை அடையாளம் காட்டுவதற்குப் பழைய முறைப்படியே சாதியும் மதமும் தேவைப்படுவனவாக இருப்பது, மத வெறியர்கள் இன்னும் ஆண்டு கொண்டிருப்பதாலும், ஆட்சி வலுப்பெற்றிருப்பதாலுமே ஆகும். இந்தியாவைப் பொறுத்த மட்டில், இங்குள்ளவர்கள் எத்தனை அறிவியலுணர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், இவர்களுக்கு இயல்பாகவே உள்ள மதவெறி காரணமாக, இத்தகைய மூடநம்பிக்கைகள் எளிதில் கைவிடப்பட்டுவிடும் என்று சொல்வதற்கில்லை. மதவுணர்ச்சியும் சாதியுணர்ச்சியும் இந்திய மத வெறியர்களின் அரத்த நாளங்களிலிருந்து அவ்வளவு எளிதில் சுண்டிப் போய்விடும் என்று எதிர்பாக்க முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இந்திய அரசியல் தலைவர்கள் மதவெறியர்களாகத்தான் இருப்பார்கள்; அல்லது மதவெறி பிடித்த மதக்குருமார்களின் ஆட்டுவிப்புக்கு ஆடுகின்ற அறிவியல் தெளிவற்ற மரப்பாவைகளாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு இங்குள்ள ‘இந்துமதம்’ அவர்கள் மூளைத்திரளைகளை அடக்கி ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றது. இந்து மதமும், அதற்கடிப்படையான வேதங்கள், மிருதிகளும் (மனுநூல் போன்றவை) என்ன சொல்கின்றனவோ அவை தாம், ‘தர்மம்’ (நெறி, கடைப்பிடி) (மனு 12-196 என்றும், வேதமறிந்த ‘பிராமணன்’ சொல்லுவதைத் தவிர, வேதமறியாத பத்தாயிரம் பேர் கூடிச் சொன்னாலும் அது ‘தர்மம்’ ஆகாது (மனு 12-13) என்றும், வழிவழியாகவே, அவர்களுக்கு மதவெறிசான்ற மூடநம்பிக்கை கற்பிக்கப்பட்டு வந்திருக்கின்றது. எனவே, இந்தியாவைப் பொறுத்த மட்டில் அரசியல், அறவியல், பொருளியல், குமுகாயவியல், கல்வி, பண்பாடு, ஒழுக்கம், பொழுதுபோக்கு முதலிய அனைத்துத் துறைகளிலும் ‘மதம்’ குறிப்பாக ‘இந்துமதம்’ தன் வலிந்த, கொடிய, நச்சுத்தன்மை கொண்ட சிறகுகளைப் போர்த்திக் கொண்டிருப்பதை எவ்வளவு பெரிய அறிவாளியாலும் மறுத்துவிட முடியாது.

இனி, ‘இந்துமதம்’ என்பது என்ன? அது முழுக்க முழுக்க ஆரியப் பார்ப்பனரின் நன்மைக்காகவே, ஆரியப் பார்ப்பனரால் ஏற்படுத்தப்பட்டு, இன்றுவரை அவர்களின் வாழ்க்கைக்காக, அவர்களின் நலன்களுக்காக, மற்ற, பிற இன மக்களைக் கொஞ்சமும் இரக்கமின்றி ஆட்டிப் படைத்துக் கொண்டும், கசக்கிப் பிழிந்து வேலைவாங்கிக் கொண்டும் வரும், கொடிய மூடநம்பிக்கை கொண்ட ஒர் அமைப்பாகும். இந்த அமைப்பு ஏற்கெனவே இங்கிருந்த மக்களமைப்புகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் அழித்து உருமாற்றித் தன் அகன்ற நச்சுவாய்க்குள் இட்டு விழுங்கிச் செரித்து, அவற்றின் குருதியாலும் சாரங்களாலும் தன் உருவத்தைப் புதிய புதிய கவர்ச்சியாலும், காரணங்களாலும், மெருகேற்றி மிகமிக வலிவும் பொலிவும் பெற்று விளங்குகிறது. இந்துமதத்தின் கால்கள் வேதங்களில் ஊன்றியிருக்கின்றன. இதன் கைகள் மனு முதலிய பல மிருதிகளாக நெறி நூல்களாக விரிந்திருக்கின்றன. இதன் உடல் பல நூறு புராணங்களாகவும், இதிகாசங்களாகவும் பூதம் போல் பெருத்து வளர்ந்திருக்கின்றன. இதன் நச்சுப் பற்கள் இந்தியச் சட்டங்களாகவும், மதவியல் கோட்பாடுகளாகவும் உருப் பெற்றிருக்கின்றன. இதன் ஆர்ப்பாட்ட ஒலங்கள் நூற்றுக் கணக்கான விழா வேடிக்கைகளாக மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டுள்ளன. இதன் நச்சுத் தன்மை பொருந்திய கவர்ச்சியான பார்வையால் மக்கள் தம் மூளைத் திரட்சிகள் உருகி நீற்றுப் போயிருக்கின்றன. எனவே, அவர்கள் இந்த இந்து சமயப் பிடியிலிருந்து தங்களை அவ்வளவு எளிதில் விடுவித்துக் கொள்ளுவதென்பது இயலாததொன்றாகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. இப்பிடிக்குள் அடங்காத அரசர்கள் இல்லை; இதன் கொடுமைக்கு உட்படாத மக்கள் இல்லை; இதன் கவர்ச்சி அழகில் மயங்காத மக்களினத் தலைவர்கள் இல்லை; அறிவாளிகள், வழிகாட்டிகள், பாடலாசிரியர்கள் ஒருவரும் இல்லை. இதன் பிடியிலிருந்து வெளியேறிய அத்தனைப் பேரும் அவர்கள் எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும், மக்களினத் தலைவர்களாக இருந்தாலும், வீரர்களாக இருந்தாலும், அவர்கள் ‘நாத்திகர்கள்’, ‘அரக்கர்கள்’, ‘கொடியவர்கள்’, மக்கட்பகைவர்கள் என்றுதாம் கூறப்பெற்று, அக்கால் உள்ள மதத்தலைவர்களால் அங்கேயே அழிக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படிப்பட்ட இந்துமதத்தை ஒழுக்கங்கெட்ட, குடிவெறி நிறைந்த மூடர்களைத் தவிர வேறு எவரும் ‘அர்த்த’முள்ளது என்று சொல்ல மாட்டார்கள். அப்படி அவர்கள் சொல்வார்களானால் அதற்கு

ஏதோ ‘அர்த்தம்’ இருக்க வேண்டும்! எனவே அந்த மதத்தைப் போற்றுபவர்களைப் பற்றியோ அதுதான் உயர்ந்தது, சிறந்தது, மெய்யானது, உயிரானது, அழிவற்றது(அநாதி), தோற்றமும் முடிவுமற்றது(ஆதியந்தம் இல்லாதது) என்று சொல்பவர்களைப் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அப்படிப்பட்டவர்கள், ஒன்றால், அந்த மதத்தால் தொடர்ந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டு வரும் பார்ப்பனர்களாக இருத்தல் வேண்டும்; அன்றால், அத்தகைய பார்ப்பனர்களால் தாங்களும் ஏதோ சில நன்மைகளைப் பெற்றுவரும் ‘வீடண’, ‘சுக்கரீவ', ‘பிரகலாத’, ‘பக்தவத்சல', ‘சுப்பிரமண்ய', ‘சிவஞான கண்ணதாச', ‘அடியார்’களாக இருத்தல் வேண்டும். இந்த இருவகையான ஏமாற்றுக் கூட்டத்தினரைத் தவிர, இந்துமதம் புனிதமானது, உயர்ந்தது, சிறந்தது, ’அர்த்த’முள்ளது என்று அறிவுள்ள, தன்மானமுள்ள வேறு எவருமே சொல்ல மாட்டார்கள்.

மேலும் இவ் விருபதாம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சிக் காலத்தில், எந்த ஒரு தனிப்பட்ட மாந்தனுக்கும் மதம் என்னும் ஓர் இனவுறுப்பு தேவையே இல்லை. அதுவும் மிகமிக அருவருப்பானதும், உலகிலுள்ள மதங்கள் அனைத்தையும்விட மிகவும் இழிவானதுமான ‘இந்து’ மதமும் அது பெற்ற சாதியமைப்பு என்னும் கேடான ஒரு தீய அமைப்பும், இங்குள்ள எவர்க்கும் தேவையற்றவையே! இவை இல்லாமற் போனால் வாழ்க்கையில் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும் என்று அறிவியலடிப்படையில் எவரேனும் கூறி, மெய்ப்பித்துக் காட்ட முடியுமா? மதம் என்னும் அமைப்பு இல்லாவிட்டால் மக்களுக்கு எதில் இழப்பு ஏற்பட்டு விடும்? எந்த உறுப்பு ஓட்டையாகி விடும்? அப்படியே, எவருக்காகிலும் எந்த உறுப்பாவது ஓட்டையாகும் என்றால், அந்த ஓட்டையை அடைத்துக்கொள்ள வேண்டிய அவர்கள் வேண்டுமானால் அதைத் தனிப்பட்ட முறையில் அவர்கள் வீட்டிலோ, அல்லது பெட்டியிலோ, அல்லது சட்டைப் பையிலோ வைத்துக் கொண்டு பாராட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதானே! அவர்களின் ஓட்டைக்காக, அதை ஏன் மற்றவர்கள் தலையிலும் சுமத்த வேண்டும்? பேய்க் கனவு கண்டு அலறுகிறவன், எதற்கு ஊரிலுள்ள அத்தனைப் பேரையும் தன் வீட்டில் வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்று கூறவேண்டும்? இனி, அலறுகிறவன் ஆட்சியில் உள்ளவனாக இருந்தால் அதற்குச் சட்டமல்லவா போடுவான்? அஃது எப்படி அறிவுடைமையும், தனிமாந்தவுரிமைக்கு ஊறு விளைவிக்காதது ஆகும்.

இனி, மாந்த இனத்தின் மேம்பாடான மீமிசை வளர்ச்சிக்கும்,

இறைமையுணர்ச்சிக்கும் மதம் இன்றியமையாதது என்பதாக மதத் தொடர்பான அறிஞர்கள் சிலர் கருதுகிறார்கள். மீமிசை மாந்த வளர்ச்சி யென்பது இறைமை யுணர்வு ஒன்றுதான் என்று நினைத்துவிடக் கூடாது. பொது மாந்தவுணர்வு இறைமை யுணர்வின் பால்பட்டது. இறைவன் என்பவன் இப்புடவியில் எங்கேயோ ஓரிடத்தில் இருந்துகொண்டு, மாந்தவுயிர்கள் உட்பட எல்லா உயிரினங்கள், உயிரல்லினங்கள் அனைத்தையும் ஆட்டுவிக்கின்றான் என்பது அறிவியலுக்கோ மெய்யறிவியலுக்கோசுடப் பொருந்துவதன்று. இவ்வுலகும், இவ்வுலகஞ்சார்ந்த புடவியின் அனைத்துப் பொருள்களும் வலிந்த ஒரு பேராற்றலால் இயக்கப்பெறுகின்றது என்பது ஓர் உண்மையே! ஆனால் அப் பேராற்றல் மாந்த வடிவமோ வேறெந்த வடிவமோ கொண்டதாக இருத்தல் முடியாது. அதன் வேறுபல கூறுகளும் தன்மைகளும் அனைவர்க்குமே பொதுவான ஆற்றலுணர்வுகளை அடிப்படையாகக் கொண்டனவாகவே இருத்தல் வேண்டும். அப்பேராற்றல் இங்குள்ள மதம் என்னும் ஒரு மாந்த அமைப்புக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்குகின்றது என்பது மெய்யான கோட்பாடு அன்று. மதம் என்பது முற்றிலும் மாந்த அமைப்பே. மாந்தன் என்பவன் உலகியலுணர்வு சான்றவனே. எனவே, அவன் வகுக்கும் எத்தகைய நெறிமுறைகளானாலும் அவை அனைத்து மக்களுக்குமே பொதுவானவையாக அமைந்துவிட முடியாது. மதமும் இத்தகைய ஒர் அமைப்பே ஆதலின் அஃது எல்லாருக்கும் பொதுவான நயன்மை(நீதி) வழங்கிவிடும் என்று கூறிவிட முடியாது. ஒரு மதம் இன்னொரு மத்திற்கு முரண்பாடுள்ளதாகவும், அதனால் உலகில் பல மதங்கள் இருப்பதுமே நம் கொள்கையை வலுப்படுத்துவதற்குரிய போதுமான சான்றாகும். இவற்றில், ‘எங்கள் மதந்தான் உயர்ந்தது; சிறந்தது; கடவுளால் உண்டாக்கப்பட்டது; ‘அநாதி’ அதில்தான் நெய் வடிகிறது என்பதெல்லாம் மூட நம்பிக்கையான ஓர் ஏமாற்றுக் கொள்கையே ஆகும். எனவே, இந்துமதம் என்பதும் ஒரு பெரிய ஏமாற்று அமைப்பே இதனால் ஒரு குறிப்பிட்ட இனத்தவர்க்கே பெரிதும் நன்மை உண்டாகி வருகிறது. மற்றவர்க்கெல்லாம் தீமையே உண்டாகி வருகிறது. இது முற்றிலும் மெய். இதைப் பொய் யென்று எவரும் மெய்ப்பிக்க முடியாது.

இந்து மதம் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களிலும் மிகக் கேடான மதம், இழிவான மதம். இதில்தான் பலகோடிக் கடவுள்கள் கற்பிக்கப் பெற்றிருக்கின்றன. அவையும் பல குடும்பம் குடும்பமாக வளர்ந்து, ஒரு பெரும் கடவுள் குமுகாயமாகவே ஆட்சி செய்து

வருகின்றன. இந்துமதத்தில் எந்த வகையான மாந்த உயர்ச்சிக்கும் ஒர் எள்ளின் மூக்களவும் வழியில்லை. இது மக்கள் பொதுவான அமைப்பும் இல்லை. மக்களைப் பல நூறு சாதிகளாக வேறு பிரித்து, அவர்களுக்குள் இழிவு தாழ்வு கற்பிக்கின்ற ‘வருணாசிரம’க் கொள்கையே இந்துமதத்திற்கு அடிப்படையானது. இதன் வலிந்த ஆட்சியாலேயே இங்குள்ள மக்கள் தாழ்த்தப்பட்டும், வீழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டும், நலிக்கப்பட்டும், மெலிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், பழிக்கப்பட்டும், இழிக்கப்பட்டும் எவ்வகை மன, அறிவு, வாழ்வு, உரிமை முன்னேற்றமுமின்றிக் கிடக்கின்றனர். இத்தனைக்கும் இக்கொடுமைகளை இவர்கள் உணர்ந்திருந்தும், இதனின்று வெளியேறி விடுபட முடியாமல் இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை, இம் மதக் கட்டுக்குள் அடங்கிக் கிடக்க வேண்டியுள்ளது; மூச்சு முட்டிச் சாக வேண்டியுள்ளது. இந்துமதக் கோட்பாடுகளை நம்பியே முன்னேற்றம் ஏதுமின்றி அழிந்துபோன குடும்பங்கள் பல. அழிந்து கொண்டிருக்கின்ற குடும்பங்களும் பற்பல.

இன்னும் தெளிவாகச் சொன்னால், உலகில் மிகவும் மூத்ததும், முதலானதும், நாகரிகம், பண்பாடு, மொழி ஆகியவற்றால் சிறந்திருந்ததுமான தமிழினம், இந்துமதத்தாலேயே நலிவுற்றது; மெலிவுற்றது; அடிமையுற்றது; மிடிமையுற்றது. பல ஆயிரக் கணக்கான பிரிவுகளாகப் பிரிந்து வலிவு இன்றிப் போனது. இறுதியில் தன் அனைத்து நலன்களையும் இழந்து இன்று அழியும் நிலையில் உள்ளது. இந்த நிலைகளை, இங்கிருந்த பெரியாரைப் போலும் இனத் தலைவர்களால் இன்று ஒருவாறு உணர்ந்துகொண்டு, மீண்டும் தன் இழிவு அழிவுகளைத் தடுத்து நிறுத்திக்கொள்ளும் போக்குடன் ஒருவாறு விழிப்புற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழர்கள் மேலும் இந்துக்களாய் இருக்கத் தேவையில்லை. தங்களைத் தாழ்த்தி வீழ்த்தும் அக் காட்டுவிலங்காண்டிக் கொள்கைகளையே தன் சிறப்பு நிலைகளாகக் கொண்ட அந்த இந்து மதத்தினின்று வெளியேறி உரிமைக் காற்றை நுகர்தல் வேண்டும். முன்னேற்றப் பெருவெளியில் வீறுநடை யிடுதல் வேண்டும்.

மதம் மக்களுக்கு நஞ்சு! அஃது ஒரு பேரிருள்; மடமைகளின் கலவைச்சேறு! அது மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையற்ற ஒன்று. அன்பு, அறிவு, பண்பு, ஒழுக்கம், ஒப்புரவு, பொதுமை, அறவுணர்வு போன்ற எந்த ஒரு நல்லியல்புக்கும் ஓர் இம்மியளவுகூட அஃது உத்வுவதில்லை. அதிலும் இந்துமதம் மிகக் கொடிய ஒரு நச்சுப்பாம்பு!

மடமை நிரம்பிய புதைசேற்றுக் குழி! இதனால் கடிக்கப்படாமல், புதையுண்டு போகாமல் தப்பித்துக்கொள்ளத் தமிழர்கள் உடனடியாக, ஒட்டு மொத்தமாக, இதனைவிட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவரை தமிழர்கட்கிடையில் உள்ள மூட நம்பிக்கைகளும், இழிவுகளும் சாதிக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. இந்து மதப் பூசல்களும் சாதிக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாத வரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சத்திலிருந்தும், மேலாளுமையிலிருந்தும் தமிழர்கள் மீளவே முடியாது. அவ்வாறு மீளாதவரை தமிழினமும் தமிழ்மொழியும் தலைதுாக்க முடியாது. தமிழ்நாடும் தன்னிறைவு பெறமுடியாது.

எனவே, தமிழர்கள் தம் முன்னேற்றத்தின் முதல் முயற்சியாக இந்துமதப் பிடியை உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். இந்து மதத்திலிருந்து வெளியேறினால் எந்த மத்தில் சேருவது என்ற கேள்வியே இப்பொழுது வேண்டா! எந்த மதமும் மூடநம்பிக்கையின் அடிப்படையிலேயே கட்டப்படுவது. அங்கு உரிமையுணர்வுக்கு வழியில்லை. அறிவு வளர்ச்சிக்கு விடிவில்லை. மதம் ஒர் ஒருமையுணர்வு வளர்ச்சிக்குத் தேவையென்று சிலர் கருதினால், இந்துமதத்தினின்று வெளியேறிய தமிழர்கள், தங்களைத் ‘தமிழமதம்’ ‘திருவள்ளுவ மதம்’ என்று கட்டுக்குள் வேண்டுமானால் அடைவித்துக் கொள்ளலாம். ஆனால் அவையுங்கூட ஒரு காலத்தில் இந்துமதம் போல் வளர்ந்துவிடா என்பதற்கு உறுதி எதுவும் இல்லை. எனவே, இப்பொழுதைக்குத் தமிழர்கள் தங்கள் இன அழிவினின்று விடுபட வேண்டியிருப்பதால் எந்த மதமும் நமக்குத் தேவையில்லை என்பதுவே நம் கொள்கையாகும். எதுவும் நமக்காகத்தானே யொழிய, எதற்காகவும் நாம் என்று இருப்பது ஒர் அடிமை மனப்பான்மையே! எனவே, ‘இந்துமதம்’ ஒழிக. நாம் ‘இந்து’ என்னும் அடிமைப்பெயர் ஒழிக!

- தென்மொழி, சுவடி : 17, ஒலை: 10, 1981