உத்தரகாண்டம்/5

விக்கிமூலம் இலிருந்து

“இல்ல, சின்னக்கா. இது... இவதா மூணாவது, மேகலா...”

“அடே... மேகலாவா? என்ன இப்படி வத்தக் குச்சியா, கறுத்து... வா... வாங்க..”

கிணற்றுக் கரையில் வாளியில் இருந்து, தண்ணீரை எடுத்துத் தேய்த்துக் கொள்கிறாள். “என்னமோ பூச்சி விழுந்தாப்பல கடிச்சிச்சி, எரிச்சலா எரியிது... நேத்தே ரங்கசாமி சொன்னா, மாமரத்துல பூச்சி புடிச்சிருக்குன்னு. பிஞ்செல்லாம் உதிருது; எலெயெல்லாம் சருகாக் காயுது. இத்தன நாள்ள, இப்படி ஒரு பூச்சி வந்ததில்ல...”

“பெரிம்மா... இதபாருங்க, உங்க வெள்ளச்சீலை... பச்சையா புழு போல...” என்று மேகலா, அவள் மேல் மாராப்பில் ஒட்டி இருக்கும் சிறு புழுக்ளை எடுத்துப் போட்டுக் காலால் தேய்க்கிறாள்.

கழுத்தண்ட... சுரீல்னு... “அய்யோ, இந்தப் புழுவா இப்பிடிக் கொட்டுது?...” என்று அவளே எடுத்துப் போடுகிறாள். மாராப்பை உதறுகிறாள்.

“இந்த வருசம் எங்குமே மா சரியில்ல. தை அறுப்பும் போது மழ கொட்டிச்சி. மாம்பூவெல்லாம் நாசமாச்சி. காஞ்சு காஞ்சு, குறுவைய நாஸ்தியாக்கிச்சி. ஆத்துல தண்ணியே இல்ல. கிராமத்துல, மனிசங்க இருக்கவே தோதில்லாம ஆகுது சின்னக்கா. பஞ்சாயத்துத் தேர்தல் வருமின்னயே சாதிச்சண்ட. காலனிப் பொண்ணு ஒண்ணுகூட, தெக்குத் தெரு மேச்சாதிப் பையன் ஓடிட்டான். கேபிள் டி.வி. வச்சிருந்தவ. காதல்... ஓடிடிச்சின்னு சொல்லிக்கிட்டாங்க. அது ஓடல. அப்படியே தோப்புல வெட்டிப் போட்டிருந்தாங்க...”

அவள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“முருகா...!”

“எப்டீப்படியோ ஆயிட்டது சின்னக்கா. சாமியில்லன்னு சொன்னதும் சாதியில்லேன்னு சொன்னதும் புள்ளார ஒடச்சதும், பூணுால அறுத்ததும் ஒரு காலம். இப்ப சாதி மட்டு மில்ல. சாமி மட்டுமில்ல. எத்தினியோ கட்சிங்களும் சனங்களக் கூறுபோட்டுக் கிட்டிருக்கு சின்னக்கா...”

கீழ்த்தஞ்சையின் ஆற்றுப்பாசனத்தில் வேலி வேலியாக நிலம். அந்தப் பெரிய வீட்டில் ராசம்மா கல்யாணம் கட்டி வந்தது அவளுக்குத் தெரியும். இந்த அய்யாவும், ராசம்மா மாமனாரும் சம வயதுக்காரர்கள். அவருடைய அண்ணன் மூத்தார் ஒருத்தரைப் பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அன்னிபெசன்ட் அம்மை அவர்கள் ஊரில் வந்து தங்க, அவர் கிராமத்தில் அழகாக ஒரு கட்டிடம் கட்டினாராம். தாயம்மாளும் அதைப் பார்த்திருக்கிறாள்...

ராசம்மாவின் புருசன் அந்தக் கலத்தில் காசியில் படிக்கப் போனான். நெடுநெடு என்று உயரம். நல்ல சிவப்பு. சுருட்டை சுருட்டையான முடி. படிப்பை முடிக்கு முன்பே இவர்களின் அஹிம்சைக்கு மாற்றான புரட்சி ஆயுதம் என்ற கிளைக்குத் தாவினான். துப்பாக்கியை எடுத்துக் கொண்டு புலியூர் மிராசைச் சுட்டான். மூட்டை மூட்டையாக நொய் - அரிசி எல்லாம் குடிபடைகளுக்கு அளந்துவிட்டான். போலீசின் கண்களுக்குப் படாமல் ஓடி ஒளிந்து, கடைசியில் பிடிபட்டான். அரசுத் துரோகக் குற்றம் சாட்டி, அவனுக்குத் தண்டனை விதிக்குமுன், அவனுக்குத் தூக்குத் தண்டனை வந்து விடுமோ என்று அஞ்சி, பெற்றவர்கள், அவனுக்கு மூளை சரியில்லை என்று பொய்யாக ஒரு ‘டாக்டர் சர்ட்டிபிகேட்’ காட்டி, அவனுக்கு ஆயுள் தண்டனைக்கு மாற்றாக, பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லச் செய்தார்கள்...

ராசம்மா... பட்டணத்துக்கு, மாமன் மாமியுடன் வரும் போதெல்லாம் அவர்கள் வீட்டில்தான் தங்குவார்கள். ராதாம்மாவுக்கு ஏழெட்டு வயசிருக்கும். கீழ்ப்பாக்கத்து ஆஸ்பத்திரியில் இருந்து, ஓரிரவு அழைத்து வந்து, ஊருக்குக் கூட்டிச் சென்றார்கள்...

அதற்குப் பிறகு இவள் ஐந்து பேறு பெற்றிருக்கிறாள். ஆனால், பையன் குடிகாரனானதும், தாயாதி பங்காளிச் சண்டைகளில் குடும்பம் சிதறிச் சின்னாபின்னமானதும் காணப் பொறுக்காமலே மனமுடைந்து பெரியவரும், மனைவியும் போய்விட்டார்கள்...

வேர்க்க விருவிருக்க வெயிலில் வந்திருக்கிறாள். எங்கிருந்து நடந்து வந்தாள்?

இடையில் ஒரு எண்பது ரூபாய் நைலக்ஸ் சீலை. தாலிச் சரடு மட்டுமே உடம்பில் இருக்கும் நகை. நெற்றி, கன்னமெல்லாம் சுருக்கங்கள். இவள் கண்கள் துளும்ப உற்றுப் பார்க்கையில், அவள் “சின்னக்கா..!” என்று தழுவிக் கொள்கிறாள். விடுவித்துக் கொண்டு பானையில் இருந்து செம்பில் நீர் மொண்டு கொண்டு வருகிறாள்.

“உக்காரு, தாயி... கண்ணு உக்காரு...” ராசம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறாள், சீலை முன்றானையால் துடைத்தவாறு.

“இது சனிய, துடைச்சிக்கக்கூட உதவாது...” என்று சொல்லிக் கொண்டு செம்பு நீரைப் பருகி ஆசுவாச மடைகிறாள். “கண்ணு, பானையிலேந்து, இன்னுங் கொஞ்சம் தண்ணி கொண்டுவா...” என்று செம்பை மகளிடம் கொடுத்து விட்டு, சின்னக்கா, நீங்க உக்காருங்க!” என்று அந்த பெஞ்சில் உட்கார்த்துகிறாள்.

“காலம, எட்டு மணிக்கு நானும் இவளும் குடப்பேரி தாசில்தாராபீசுக்கு வந்தம்...” என்று சொல்லிவிட்டு அந்தச் செம்பு நீரில் பாதியைக் குடிக்கிறாள்- மீதியை, “நீ குடிச்சிக்கம்மா?” என்று சொல்லும்போது கண்களில் கரகர வென்று கண்ணீர் சுரந்து கன்னத்தில் வடிகிறது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“குடப்பேரி தாசில்தாராபீசா?... இங்கியா? மெயின் ரோடுக்கப்பால... பஸ்ஸ்டாண்டு தாண்டி...? அங்கதானே அந்த ஆபீசெல்லாம் இருக்குன்னு ரங்கசாமி சொன்னா?”

“ஆமா, சின்னக்கா. இவளுக்கு ஒரு சர்ட்டிபிகேட்டுக்காக வந்தே..."

“என்ன சர்ட்டிபிகேட்?”

“வேலைக்குத்தா. அது சம்பந்தமாத்தா, உங்களையும் பாக்க வந்தோம், சின்னக்கா?... உங்க குருகுல வித்யாலயாவில ஒரு டீச்சர் வேலைக்குன்னு நப்பாசையோட வந்தம். நம்ம புதுக்குடி கருமுத்து தெரியுமில்ல? அவப்பாருகூட, சுதந்தரப் போராட்டத்துல அடிபட்டு, செயில்லியே செத்துப் போனாரு...”

இவளுக்கு வெறுப்பாக வருகிறது.

“ராசம்மா, சொதந்தரப் போராட்டம்னு சொல்லாத, சொதந்தரம் வந்து என்ன வாழுது? அந்தப் போலீசு தேவல. இப்ப லாக்கப்புல அடிபட்டு சாவுறது மட்டுமா? போலிசுடே சன்க, பொம்புள மானம் குலைக்கிற எடங்களாகவே ஆயிட்டுது. புருசனக் கொண்டிட்டுப் போறது, அவன அடிச்சிக் குத்துசிராக்குது. பெறகு, பொண்சாதியக் கூட்டிட்டு விசாரணைங்கற பேரில அவன் முன்னாடியே இந்தத் தடியங்க அதைக் கதறக்கதறக் குலைக்கிறது. பெறகு அத்தளிெயே விடுறது. அது வூட்டுக்கு வந்து, காகிதம் எழுதி வச்சிட்டுத் தூக்கு மாட்டிக்கிச்சி. இப்படிக் கொஞ்ச நாமின்ன ஒரு பாதகத்தை எதித்து, பொம்புளங்க போராட்டம் வச்சாங்க. ‘மனிச உரிமை’ன்னு பேசுனாங்க. மின்ன மாதிரியா ராசம்மா? இப்ப எத்தினி வக்கீலு, டாக்டரு, பெரிய பெரிய ஆபீசரு பொம்புளங்க இல்ல? போலீசிலயே பொம்புளங்க இருக்காங்க. நம்ம கிஷ்னாம்மா இல்ல?... பழைய சர்வோதயக்காரங்க? அவங்க கூட வந்தாங்க. உண்ணாவிரதம்னு போனே. நானும், அய்யா போன பிறகு இந்த மாதிரி போராட்டம்னா, வந்து கூப்பிடுவாங்க. போயிட்டிருந்தே... இப்ப அந்தக் கதையெல்லாம் எதுக்கு? நீ தாசில்தார் ஆபிசுக்கு என்ன சர்ட்டிபிகேட் வாங்க வந்த? அத்தச் சொல்லு?”

“எத்தச் சொல்ல? இதுன் எதிர்காலம் என்ன, எப்பிடின்னு ஒண்ணும் புரியல. அண்ணன் புள்ளன்னு கலியாணம் கட்டி வச்சேன். அந்தப்பாவி இத்த நிர்க்கதியா நிறுத்திப்பிட்டு, இன்னொருத்திகூட இருக்கிறான்...”

“நிசந்தானா ராசம்மா, நான் கேள்விப்பட்டது?”

“நெசந்தா. பம்பாயில, நல்லா சம்பாதிக்கிறான்; ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு கட்டி வச்சேன். அண்ணி உக்கி உடஞ்சி போயிட்டா. கோர்ட்டுல போட்டு ஜீவனாம்சம் வாங்கலாம்னா, அவன் என்ன வேல செய்யிறான், எங்கே இருக்கிறான்னு ஒரு வெவரமும் தெரியல. நாலு நா முன்ன மதுரையிலிருந்து சிங்காரம் வந்திருந்தான். அண்ணியோட தங்க புருசன். அவன் சொல்லுறான், அந்தப் பொண்ணயும் வச்சிக்கல, அவன் துபாய்கோ எங்கோ போயிட்டாப் புலன்னு சொல்லுறான். அது நர்சாயிருக்காம். ரெண்டு புள்ளீங்க. ‘வாஷில’ இவன் பார்த்தானாம். எங்க போயி இந்தப் பாவத்தக் கொட்டிக்க, சின்னக்கா?”

“தீர விசாரியாம கலியாணம் கட்டிருக்கக் கூடாது. ஒறவாவது ஒட்டாவது? பத்து மாசம் வயித்தில வச்சி நோவும் நொம்பரமும் அநுபவிச்சி, ஒழுக்கமும், சீலமுமா இருக்கிற ஒரு எடத்துல வளத்த பயிரே நச்சுப்பயிரா, மண்டியிருக்கு...”

“ஒண்ணுமே தோணல சின்னக்கா. அவ லீவுல வந்ததும், இது அப்படியே அவன் வாங்கிட்டு வந்த சீலை, பவுடர் அது இதுன்னு குடுத்து உறவாடியதிலை இவந்தா புருசன்னு மயங்கியதும் அண்ணி முன்னால நின்னு எதோ போட்டதப் போடுன்னு கட்டி வைச்சதும்... பம்பாயில வூடு கிடைக்கலன்னு, ஆறு மாசம் குடும்பமில்லாம வூட்டோடயே கழிஞ்சி போச்சி. பெறகுதா விசயம் புரிஞ்சிச்சி. இந்த... தியாகி அய்யாவோட பங்காளி வூட்டு மணிசர், சரவணன், வூடுதேடிவந்து குட்டை உடைச்சாரு. அவுரு எங்க மூத்தாரு வகையில ஏதோ ஒறவு. “அம்மா, அவன் ஏற்கெனவே ஒரு நர்சுகூடத் தொடர்பு வச்சிட்டு ஒரு குழந்தையும் இருக்கும்மா. ரெண்டு பேரும் ஒரே பிளாட்டிலதா இருக்காங்க. நான் கண்டு திட்டினேன். பாவி, இப்படி அநியாயமா ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்திட்டியேன்னு... மாமா, மாமா, வூட்டுக்குச் சொல்லாதீங்க, இவள நான் கட்டிக்கல. அந்தப் புள்ளங்க- அவ முதப் புருசனுக்குப் பிறந்ததுங்க. அவன் ஆக்ஸிடன்ட்ல செத்திட்டான். எரக்கப்பட்டு ஆதரவு குடுத்தேன், அவ்வளவுதான். மணிய கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வந்து குடும்பம் வைக்கிறேன்”னானாம்! அன்னைக்கே கூரை இடிஞ்சி விழுந்திடிச்சி, சின்னக்கா!” என்று அழுகிறாள்.

அந்தப் பெண் மரமாக நிற்கிறாள்.

இவளுக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

“வெறும் எஸ்.எஸ்.எல்.ஸிதான் படிச்சிருந்தா. பிறகு மேலே சேர்த்து படிக்க வச்சாச்சி. அண்ணாமலையில ஒரு பி.எட்டும் முடிச்சிருக்கா. ஆனா ஒழுங்கா ஒரு வேலை கிடைக்கல. சன்னாநல்லூர்ல ஒரு அஞ்சுமாசம், தீபங்குடில ஒரு எட்டுமாசம்னு காலேல வீட்டவிட்டு ஏழு மணிக்குக் கிளம்பி, ஒரு பஸ் ரெண்டு பஸ் புடிச்சிப் போயிட்டு வந்தா. எல்லா வியாபாரம் பண்ணுற ஸ்கூல். ஆயிரம் ரூபாய்க்கு கையெழுத்து வாங்கிட்டு, கையில எழுநூறுதான் கொடுத்தான். ஸ்கூல் நடத்துறவங்க எல்லாருமே பெருச்சாளிங்கதா. ஒரு நல்ல சீல நாலு வாங்கிக் குடுக்கக் கூட முடியல. சாந்தா வீட்டிலேந்துதா படிச்சா, பி.ஏ. அவ புருசன் சரியில்ல. அக்கா தங்கைக்குள்ள பிரச்னை வரக்கூடாது, நான் போக மாட்டேன்னிட்டா. புதுக்குடியில ஒரு ஸ்கூல்ல சேந்தா. ஆறுநூறு தான் குடுத்தான் கையில. பெரீ...ய தர்மஸ்தாபனம் நடத்துற ஸ்கூல். ஒருநா, அட்டென்டரா வேலை பார்த்த பொண்ணேட மாராப்புச் சீலயப்புடிச்சு இழுத்திட்டு லாப் கதவைச் சாத்திட்டானாம் அந்தச் சண்டாளன். புதுக்குடியே அல்லோல கல்லோலப் பட்டிச்சி. நானே நீ இனிமே அந்த ஸ்கூல்ல வேல பாக்கப் போவாணாம்னிட்டேன், சின்னக்கா...”

“உம் புருசன் எப்படி இருக்கிறான்?”

“இருக்கிறா. எனக்குத் தாலிக்கயிறும் பொட்டும் இருக்கு. இந்த ஆளு இருக்கிறது தா இப்ப பாரம். அண்ணன்னைக்கு மாட்டுவாகடக்காரன் வரலேன்னா, போடுற கூச்சல் சொல்லி முடியாது. முதுகில பொளவ வந்தது. என் உயிரை வாங்கினாரு. சின்னக்கா, நா ஒருத்தி எதுக்குப் பொண்ணாப் பெறந்தேன்? இப்பல்லாம் பொண்ணு பெறந்ததுமே எருக்கம் பால ஊத்திக் கொல்லுறாங்களாம். அது ரொம்ப சரின்னு தோணுது...”

இவள் மனம் தாளாமல் அவள் தோள்களைப் பற்றி ஆதரவாகக் கண்களைத் துடைக்கிறாள்.

“அழாத ராசம்மா, நீயே இப்படி அழுதா, இந்தச் சிறிசுக்கு என்ன கதி? கண்ணைத் துடை. காலம் சாப்பிட்டீங்களா, இல்லையா?”

அவள் கண்களை மேலும் மேலும் துடைத்துக் கொள்கிறாள். கண்கள் சிவந்து மூக்கு நுனி சிவந்து...

செவிகளிலும் இரண்டு மூக்கிலும் வயிரங்கள் பூரிக்க, இளமையின் பால் கொஞ்சும் முகம், இன்று எப்படியாகி விட்டது? உள்ளும் வெளியுமாகச் சூறாவளியில் சிக்குண்டு அலைபடும் ஒரு குடும்பப் பெண்...

“ஏம்மா, மணிமேகல, காலம எதாச்சும் சாப்புட்டீங்களா இல்லியா?”

“உம். சாப்பிட்டம்...”

“எங்க வந்து தங்கியிருக்கிறீங்க?...”

“சம்பக அண்ணியோட தங்கச்சி வீட்டில... மாம்பலத்தில. அங்கதா தங்கிட்டு நேத்து குருகுல வித்யாலயா போனம்...”

அவள் துணுக்குற்றுப் பார்க்கிறார். “குருகுலத்துக்கா போனிங்க?”

“ஆமா சின்னக்கா. சம்பகம்தா சொன்னா. குருகுல வித்யாலயா, மூணு இடத்துல பிரான்ச் வச்சிருக்காங்க. உங்களுக்கு, ரொம்ப வேண்டப்பட்டவங்கன்னு சொல்வீங் களே? போயி ஒரு வேலை கேளுங்க. இந்தக் காலத்துல உக்காந்திருந்தா, வேல தானா மடில வந்து வுழாது... ன்னா... கண்ணன் சவுதிலேந்து அங்கதா பணம் குடுக்கிறான். நாகபட்டணம் போயி படிகுடுன்னு அவகிட்ட கேட்டுப் போறதுக்கே குன்னிப் போறோம். சின்னவன் ராசு, அந்தக் கட்சி இந்தக்கட்சின்னு ஒரு பத்து பைசாக்குப் புண்ணியமில்லாம திரியிறான். பத்தாவதே தேறல. அப்பனிடம் வந்து சவடால் பேசுறான்...”

எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்ற தொடர்பு தெரியாமல் நிலை குலைந்திருக்கிறாள்.

“ரெண்டுபுள்ள இருந்தும், வழிவழியாக வந்த சொத்தொண்ணும் மிஞ்சல. ஏசண்டு சோத்துக்கு நாலுமூட்டை அரிசி குடுக்கவே ஆயிரம் கணக்குச் சொல்லுறான். வூடு பூச்செல்லாம் வுழுந்து படைபடையா சுவர் பொள்ளை, தரை பொள்ளைன்னு சிலோன்னு இருக்கு. மாடி மிச்சூடும் வெளவால் தொங்கிட்டுக் கெடக்கு... இங்க வந்தா, எல்லாம் சரியாயிரும்னு கோட்டை கட்டிட்டு வந்தோம். அந்தத் தலைவரைப் பார்க்கவே முடியல...” விரக்தியில் வேதனை கூடுகிறது.

“யாரு பராங்குசத்தையா சொல்ற? குருகுலம் நல்லாத் தானே நடக்குது?”

“அவரு அங்க வாரதே இல்லியாமே? பெரிய கட்டிடம், மூணுமாடி. காம்பெளண்ட் சுவரே மதில் போல இருக்கு. வெளியே கூர்க்கா யாரு என்னன்னு ஆயிரம் கேள்வி கேக்குறான். அந்தக் காலத்துல எப்பவோ நாங்க போன எடம் இல்ல அது. போன உடனே ஒரு ஆலமரம் இருக்குமே? எனக்கு அதுதான் ஞாபகம். அதெல்லாம் வெட்டிட்டாங்க. நீளக்கூரை போட்ட எடங்கள் எதுமே இல்ல. மின்னாடிதான் ஆபீஸ்னு இருந்திச்சி. எல்லாம் அந்தப் பொம்புள கையில தான் இருக்கு அவுரு அங்க வாரதே இல்லையாம். சோத்துப்பரக்கத்துக் கந்தாண்ட யாரோ சாமியாமே? அங்கதான் இருப்பாராம். இன்ஜினிரிங் காலேஜ், சயன்ஸ் காலேஜ், பாலி டெக்னிக்னு ஏகப்பட்ட காலேஜ் வச்சிட்டாங்க. இதுக்குள்ளயே ஸ்கூல், அதா குருகுல வித்யாலயா, டெக்னிகல் இன் ஸ்டிட்யூட், கம்ப்யூட்டர் மையம், எல்லாம் கட்டியாச்சி. நீங்க இருந்த வூடு, குளம், மரங்கள், கிரவுண்டு, எதும் இல்ல. மாடி மாடியா கட்டிடம். அடையாளமே தெரியல... இவளுக்குப் பேச்சே எழும்பவில்லை.

“அந்தப் பொம்புளன்னா யாரு? செங்கமலமா? அவளுக்கு அம்புட்டுப் படிப்பு ஒண்ணும் கிடையாதே? பாகீரதியம்மா வீட்டுல கூடமாட சமையல் செய்திட்டிருந்திச்சி. அப்படியே அய்யா முதமுதல்ல குருகுலத்துக்குக் கூட்டி வந்தாங்க, படிக்க. பாக்க நல்லாயிருப்பா. பராங்குசத்துக்குக் கட்டி வச்சாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு பொம்புளப் புள்ளயும் ஆம்புளப்புள்ளயும் பொறந்திச்சி. சாதுவான குணம்...”

“அதென்னமோ, இப்ப இந்தப் பொம்புளயத்தா சொல்றாங்க...” என்று குரலை இறக்குகிறாள் ராசம்மா.

“டாக்டர் எமிலின்னு பேரு. கிறிஸ்தவங்க. இவங்கதா எல்லா நிர்வாகமும். வெளிரூம்ல காத்துக் காத்து உள்ள போனம். அங்க சுவரில அய்யா, அம்மா, காந்தி படம் மாட்டிருக்காங்க. ஒரு சின்னப்பலகையிலே ஊது வத்தி, பூ எல்லாம் வச்சிருந்தாங்க. மத்தப்படி வெளி ரூம்ல, சுவருபூர, அந்த வித்யாலயத்துக்கு வந்த பெரிய... மனிசங்க, ஸ்டாருங்க, அரசியல் வாதிகள், மந்திரிகள்... உங்க மகன் கூட மாலை போட்டுக்கிட்டு வருகை தந்தது பட்டமளிப்பு விழா நடத்தியது... எல்லாத்திலும் இந்த அம்மாதான் முதலா இருக்காங்க. அவரும் இருக்காரு. அவுரு சேர்மன்... இவங்கதான் எல்லாம். எத்தனையோ வெளிநாட்டுக்காரங்க... சேவாதிலகம்னு சாமி பட்டம் குடுத்திருக்காரு...”

கேட்கக் கேட்கத் தலை சுற்றுவது போல் இருக்கிறது.

“அப்ப, பராங்குசத்தை நீ பாக்கவே இல்லையா?”

“அதா சொன்னனே? அவுரு மடம், சாமின்னு என்னமோ ஆராய்ச்சி அது இதுன்னு பேசுறாங்க. மாசத்துல ஒருக்க வருவாராம். தாடி, முடி, காவி சட்டை, உருத்திராட்சம் போட்டுட்டு சேவாதிலகம் பட்டம் வாங்குறபடம் இருந்திருச்சி. இந்த எமிலி அம்மாதா பக்கத்துல...”

“பட்டம் குடுத்தது ஆரு?”

“அது எனக்குத் தெரியல. ஒரு தாடிவச்ச வெள்ளக்காரர்...”

“இந்தக் கத கெடக்கட்டும், நீ வந்த காரியம் என்ன ஆச்சி?”

“முதல்லயே சம்பகத்தின் தங்கச்சி, அப்ளிகேசன் ஃபார்ம் வாங்கி அனுப்பிச்சிருந்தா. அதை எழுதி, ஒரு ஏழெட்டு சர்ட்டிபிகேட்டோட இணைச்சி, சாதிச்சான்று, அப்பா, தாத்தா தெரிஞ்சவங்ககிட்ட வாங்கினது, நன்னடத்தைக்கு வேலை செஞ்ச இடங்களில் வாங்கினது எல்லாம் அனுப்பி ரிஜிஸ்தர்ல அனுப்பியது உள்பட முந்நூறு ரூபா ஆச்சி. ஒண்ணும் வரலேன்னு தான் நேர கூட்டிட்டு வந்தேன்... அங்க ஹிஸ்டரி டீச்சருக்கு இடம் இல்லையாம். பாடனி எம்.எஸ்.ஸின்னாத்தான் பார்க்கலாமாம். சின்னக்கா, இஸ்டரின்னா, சாபக்கேடா? ஊரில, இப்ப ஸ்கூல் இல்லாம இல்லை. நாலு கிண்டர் கார்டன் இருக்கு. எங்க ஏசண்டு, ஆறுமுகம், ஒண்ணுமில்லாம, மாமா முன்னாடி வந்து நின்னு, “தேங்கா எறக்களாங்களா? காயப்போட்டுடலாம், நூறுநூறா திருட்டுப் போகுது"ன்னு கேப்பான். ஆறு புள்ளங்க. வருசா வருசம் பெத்துப் போடுவா. எல்லாம் இங்கேந்து வளந்தது தா. இன்னைக்கு, அவவ, கழுத்து கொள்ளாம நகை என்ன, வயிரம், பட்டுன்னு, கிராமத்திலேந்து டாக்சில போறாங்க, வராங்க. டிராக்டர் நிக்கிது. ஒரு பயல் விவசாயம் படிச்சி ஆடுதுறையில் ஆபீசரா இருக்கிறான்... எங்கனாலும் கல்யாணம் காட்சின்னா, ஏங்கிட்டேந்து சங்கிலி, வளைன்னு வாங்கிட்டுப் போவா... இப்ப அத்தனியும் தோத்துட்டு நா, தலைகுனிஞ்சி அவங்ககிட்டப் போயி, நூறுக்கும் இருநூறுக்கும் கையேந்துறேன்... சத்தியமா இந்த இவ இல்லன்னா, நா உசுர விட்டிருப்பேன்... வூட்டுல ஒரு ரேடியோ இருந்திச்சி. அத்தக்கூட அந்த மாட்டுவாகடம் எடுத்துப் போயிட்டா, பாவி. அன்னாடம் இவருக்குக் குடி சப்ளை பண்ணுறான்ல? சிலப்பா, ராவுல, கழுத்த நெறிச்சுக் கொன்னிட்டு, போலிசில போய் விழுந்திருவமான்னு தோணும்... ஆனா, இந்தப் புள்ளய ஓரிடத்துல சேக்கணும்... இதை நினைச்சிப் பொறுக்கிறேன்...”

“ஏம்மா, படிச்ச பொண்ணுதானே? இப்பல்லாம் டூசன் எடுக்கலாமே? இப்பதா- ரங்கசாமி கூடச் சொல்லுறான்- ஏழை பாழை, வயித்துக்கில்லாததுங்க கூட, ஸ்கூல் படிப்புக்கே ஒண்ணொன்னும் டூசன் இல்லாம சரிப்படலியே? இதா ரோட்டுப் பக்கம் ஒவ்வொரு தெருவிலும், கம்ப்யூட்டர், டூசன்னு புள்ளங்க போகுதுங்க. ரங்கசாமி அவம்புள்ளங்களுக்கு, அஞ்சாம்கிளாஸ், ஆறாங்கிளாசுக்கு மாசம் தலா நூறு ரூவா குடுத்து டூசன்னு சொல்றா. படிப்பு என்னமோ இலவசங்கறாங்க. ஆரம்பத்துல எழுநூறு எண்ணுறு கட்டனும். பின்னால மரத்திலேந்து மாங்காயும், தென்னமரத்துத் தேங்காயும் கொண்டு வித்தெடுத்துக்கிறான். போகட்டும்னு நானும் எதும் கேட்டுக்கிறதில்ல... டூசன் எடுக்கலாமேம்மா?”

இது புதிய வயிற்றெரிச்சலைக் கிளப்பி விடுகிறது.

“அதையேன் கேக்குறீங்க சின்னக்கா? இவ படிப்பு, பத்தாதாம். ‘மாத்ஸ்’ அதா கணக்கு பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி படிச்சிருக்கணுமா. இவ, அப்ப அதுதா கெடச்சது. படிச்சா. பர்ஸ்ட் கிளாஸ்தா, பி.ஏ. அதுக்கு ஒரு மதிப்பு இல்ல. ஒண்ணும் வாணாம், ஏசண்டு ஆறுமுகத்தின் மக பரமேசுவரி, டூசன், மட்டுமே எடுக்குறா. சின்னவ. அவ புருசன் காலேஜ் புரொபசர். புதுக்குடிக்குப் போயிட்டுவரான். பைக் வச்சிருந்தான். எட்டு லச்சமாம். காரு வாங்கியாச்சி. அவ ‘மாத்ஸ்’ பி.எஸ்ஸிதா. மாடில கொட்டாய் போட்டு, டூசன் எடுக்கிறா. மாசம் ஏழாயிரம் எட்டாயிரம் வருதாம். பொறந்தவூட்டோடதா இருக்கா. இவளுக்கு, பி.ஏ. படிப்புக்கு, பி.எட் படிப்புக்கும், அஞ்சாவது ஆறாவது கணக்குக் கூடவா சொல்லிக் குடுக்க முடியாது? நா எட்டாவதுதா படிச்சே, அந்த காலத்துல. கண்ணன், பரிமளா, ஏ, இவளுக்குக்கூட நாந்தா சின்னக்கிளாசில வீட்டுப்பாடம் சொல்லிக் குடுப்பேன். இப்ப இப்பிடி இந்தப் படிப்பு உதவாக்கரையாயிடும்னு புரியல...”

“அது சரி, நீ என்னமோ தாசில்தார் சர்ட்டிபிகேட்னியே? அது எதுக்கு?”

“நா வேலைக்கு மட்டும் கேக்கல. அவுங்க ஒரு தர்ம ஆஸ்டல் வச்சிருக்காங்க. எஸ்.கே.ஆர். அய்யா காலத்துலியே இருந்தது தானாமே அது? இவ எங்கனாலும், கிளார்க், ரிசப்ஷனிஸ்ட்னு வேல செஞ்சிக்கிட்டு அதுல தங்கிக் கலாம்ங்கறதுக்காகக் கேட்டோம். அதுக்குத்தான் இவ புருசனில்லாதவ, ஆருமில்லன்னு சர்ட்டிபிகேட் வேணும்னாங்க. என்ன எழவு சர்ட்டிபிகேட்டோ? வெவரம் புரியாம போயி நின்னோம். ஆபீசா அது? முதல்ல போரப்பவே ப்யூன் புடிச்சிக்கிறான். ‘யாரு, எதுக்கு, தாழ்த்தப்பட்ட சாதிச் சான்றிதழா? நிலமா, சொத்தா, வாரிசு உரிமையா’ன்னு கேட்டு பணம் புடுங்கறாங்க. அந்த எடத்துல எத்தினி ஆபீசர்கள் இருக்காங்கன்னு புரியல. கோவாலுன்னு எங்கூர்க்காரப் பய்யன் அங்க பாத்தான். “எங்கக்கா இங்க..?"ன்னு மணிய விசாரிச்சான். அவனுக்கு அரசியல் கட்சித் தொடர்பு. “போயி நீங்க, டெஸர்டட் வைஃப்னு போட்டு சான்றிதழ் வாங்கிடுங்க போதும்..."னு அவனே ஃபாரம் வாங்கிட்டு வந்தான். நூறு ரூபா குடுத்தாப் போதும்னான். அங்கியே எழுதி எடுத்திட்டு அவன் முன்னே போயி, அந்த ஆபீசருக்கு முன்ன எங்களையும் கூட்டிட்டு நுழைஞ்சான். அவுரு மேசையச்சுத்திப் பெரிய கூட்டம். அங்கே ஒரு ஆளப்புடிச்சி இவ, நூறு ரூபாயையும் தாளையும் குடுத்தா...

“அவன் அவரு பக்கமா நின்னிட்டிருக்கையில, ஒரு வயசான அம்மா, நிக்கிறாங்க. பின்னால ரெண்டு பேர். துண்டு போட்டவ, போடாதவன்னு ஒரெழவும் புரியல. அந்தம்மாகிட்ட, “ஏம்மா, உங்க புருசருக்கு, இன்னொரு சம்சாரம் இல்லேங்கறது. நிச்சியமா?”ன்னு கேக்குறான் அந்தத் தாசில்தார்.

“இல்லீங்கையா... நிசமாலும் இல்ல..."ன்னு நடுங்கிக் கிட்டே அவுங்க சொல்றாங்க.

“ஏம்மா, உங்களுக்கோ புள்ள இல்ல. அப்ப அவருவேறு ஒரு கலியாணம் செய்து கொண்டிருக்க மாட்டாருன்னு எப்பிடி நம்புறது? நாளைக்கு அவுங்க வேற, ‘பென்சன் ‘க்ளைம்’ பண்ண வந்தா எங்களுக்குப் பிரச்னையாயிடுமே? ஆமா... உங்களுக்குத்தான் ஒண்ணுமில்ல. நீங்களே உங்க புருசருக்கு இன்னொரு கலியாணம் பண்ணி வச்சிருக்க வேண்டிதுதான?"ன்னு கேட்டாம் பாரு, அப்பவே எனக்கு அந்தச் சண்டாளன அடிச்சி நொறுக்கணும் போல இருந்திருச்சி, “ஏ, கோவாலு? இங்க வா!"ன்னு கத்தினே. எனக்கு இங்க ஒரு சர்ட்டிபிகேட்டும் எழவும் வாணாம்” ன்னிட்டு வெளிய வந்தேன்.

“ஏன் பெரிம்மா? அவங்கிட்ட நூறு ரூபாயும், ஃபார்மும் குடுத்தாச்சி. அஞ்சே நிமிசத்துல வந்திடும்...” ன்னா. அதுக்குள்ள அம்மாக்குப் பொறுக்கல... அந்தப் பொறுக்கி, எம் மகள இதுபோல எதானும் கேக்கமாட்டான்னு என்ன நிச்சயம்? படுபாவிக...

“சாதிச் சான்றிதழ் பெற ஒரு இருளப் பொம்புள வந்து நிக்கிது. அஞ்சுநூறு குடுத்திருக்காம். பாம்பு கொண்டாறேன், புடிச்சிக் காட்டுறியான்னு கேட்கிறானாம் தடியன்...” என்று தாசில்தார் அலுவலகக் காட்சிகளை விரிக்கிறாள்.

“சரிம்மா, உள்ள வாங்க. கஞ்சியும் சோறுமா ஏதோ ஆக்கி வச்சிருக்கிறேன்...” என்று அவர்களைச் சமையல் அறைக்குள் அழைத்துச் செல்கிறாள்.

6

காலையில் சாணிகரைத்து வாசலைத் தெளித்துப் பெருக்கிக் கொண்டிருக்கையில், விடாதே, பிடிபிடி... என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=உத்தரகாண்டம்/5&oldid=1022814" இலிருந்து மீள்விக்கப்பட்டது