உமார் கயாம்/காரிருளில் போர் அழைப்பு

விக்கிமூலம் இலிருந்து

2. காரிருளில் போர் அழைப்பு

உமாருக்கு அன்று மாலைப் பொழுது, மறக்க முடியாததாகும். அவசர அவசரமாக, ஊற்றுக் கேணிக்குச் சென்று கைகால் கழுவிக் கொண்டு, மாலையுணவை முடித்துக் கொண்டு கூடுதலாக ஒரு விளக்கு வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான். அவனுடைய அறை, ஒரு வீட்டு உச்சியில், களிமண்ணால் கட்டப் பெற்றிருந்தது. அது, வெங்காயமும் புல்லும் காயவைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இடமாகும். அதற்கு வாடகை சில செப்புக் காசுகள்தான். அத்துடன் நட்சத்திரங்களை அங்கிருந்து நன்றாகப் பார்க்க முடியும். இந்த இரண்டையும் எண்ணித்தான் அந்த அறையை வாடகைக்குப் பிடித்திருந்தான் உமார். இரவிலே குளிர்ந்த காற்று வீசும் பொழுது வெங்காயத் தாள்களும், புல் கட்டுகளும் உயிர் வந்தது போல சலசலக்கத் தொடங்கும். படுக்கையில் படுத்தபடியே, கூரைகளுக்கு மேல் உள்ள வானத்தையும், சுல்தானுடைய மேன்மாடச் சிகரத்தையும் உமார் பார்க்க முடியும்.

இன்று காற்றில்லை. அது அவனுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது. இரண்டு விளக்குகளையும் ஏற்றிச் சுவரின் இரு பக்கத்துப் படிகளிலும் மாட்டி வைத்து விட்டுக் கோணகணிதப் புத்தகத்தை எடுத்துத் தன் மடியில் வழவழப்பான பலகையின் மேல் வைத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்டலானான். பள்ளிக்கூடத்தில் கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்ப படித்ததையே படிப்பதைக் காட்டிலும், இது எவ்வளவோ உயர்ந்த படிப்பாக இருந்தது.

கணிதத்தைப் படிக்கப் படிக்க உமாரின் ஆர்வம் அதிகமாயிற்று. பேனாவும், மையும், தாளும் அவன் கைகளில் ஏறின. அளவுகோலும், வட்டமாக்கியும் ஒரு கோணம் வரைந்தான். அதைப் பல பகுதிகளாகப் பிரித்தான். எண்களும் கோடுகளும் அவன் கைவிரல்களில் நடனமாடின. அவனுடைய மனம் கணக்கில் சுழன்றது. அவன் வேலை செய்த சுவையில், அங்கிருந்த அவனுடைய அறை விளக்குகள், புத்தகம் அத்தனையும் மறைந்து விட்டன. ஒரு நிமிடம் உமாரின் அமைதி கலைந்தது. ஒரு பழக்கமான குரல் எழுந்தது. இரவு நேரத் தொழுகைக்காக அழைக்கும் குரல் அது. அவன் தொழுகை நடத்த வேண்டும். இந்தப் புத்தகம் மதவிரோதியொருவன் எழுதுயது. இப்படியொரு எண்ணம் அவன் மனத்திலே ஊசலாடியது. எரியும் விளக்குகளைப் பார்த்தான். எதுவும் புரியாமல் ஒரு வினாடி இருந்தான். மறுபடியும் கணக்கு வேலையில் ஆழ்ந்து விட்டான்.

நள்ளிரவுக்குக் கொஞ்சம் நேரம் இருக்கையில் மறுபடியும் அவன் அமைதி கலைந்தது. வீதியில் தடதடவென்று நடமாடும் ஓசை கேட்டது. வெளிச்சங்கள் அங்குமிங்குமாகத் தோன்றின. வீட்டின் உச்சியிலே ஓரத்திலே நின்றபடி கீழே வீதியைக் கவனித்தான்.

கருத்த, தலைப்பாகையணிந்த ஒரு பெரிய உருவத்தைச் சுற்றி ஒரு கூட்டமே திரண்டிருந்தது.

ஒரு இஸ்லாமிய செய்தியறிவிப்போன், அங்கே நின்று கூட்டத்தினரிடம் கூறிக் கொண்டிருந்தான்.

மத நம்பிக்கை உள்ளவர்களே! அமைதியும், இன்பமும் அனுபவிக்க நீங்கள் விரைவிலே, எச்சரிக்கைக்காரர் ஒருவரால் அழைக்கப்படுவீர்கள். நம்பிக்கையில்லாத, மதவிரோதிகளுக்கெதிராக வாள்பிடிக்கும் நாள் வந்ததும் முரசுகள் அதிரும்! உடனே, உங்கள் அமைதியைக் கலைத்துக்கொண்டு மதவிரோதிகளை, வெட்டி வீழ்த்துவதற்கான வீர வாள் பிடிக்க நீங்கள் போர்க்களத்திலே, குதிக்க வேண்டும். காற்று மணலை, அடித்துக் கொண்டு போவது போல, உங்கள் வீரம் எதிர்ப்பை வீழ்த்த வேண்டும். அழைப்பு வரும்! காத்திருங்கள்.

செய்தியறிவிப்போனுடைய குரல் இருட்டைத் துளைத்துக் கொண்டு எழுந்தது. அங்கே கூடியிருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டு பிரிந்து சென்றார்கள். அவனுடைய பேச்சுத் திறமையை வியந்து கொண்டிருந்த உமாரின் எண்ணத்திலே, இன்னொரு கேள்வி உதயமாகியது. இந்த சுல்தான் எப்பொழுது பார்த்தாலும், “போர் போர்! என்று திரிகிறானே” என்பதுதான் அந்தக் கேள்வி.

செய்தியறிவிப்போனும், “மத நம்பிக்கையுள்ளவர்களே!” என்ற அழைப்பும் மறைந்த பிறகு, உமார் நட்சத்திரக் கூட்டங்களை நோக்கித் தன் பார்வையைச் செலுத்தினான். திடீரென்று அவனுக்குக் கொட்டாவி வந்தது. விளக்குகளை அணைத்து விட்டுக் காலையும் கையையும் நீட்டிப் படுத்தான். மறுகணம் அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.