ஒப்பியன் மொழிநூல்/பண்டைத் தமிழகம்

விக்கிமூலம் இலிருந்து

II. பண்டைத் தமிழகம் - குமரிநாடு[1]

1. குமரிநாடு

i. அகச்சான்றுகள்:—

தெற்கே, இந்துமா கடலில், ஒரு பெருநிலப்பரப்பிருந்ததென்றும், அதுவே பண்டைப் பாண்டிநாட்டின் பெரும்பகுதி யென்றும், அது பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்டதென்றும் பல தமிழ்த் தொன்னூல்களிற் கூறப்படுகின்றது, அந் நாட்டைத் தமிழர் குமரியாற்றின் அல்லது குமரிமலையின் பெயரால் குமரி நாடென்றும், மேனாட்டுக் கலைஞர் லெமுர் (Lemur) என்ற ஒரு குரங்கினம் அங்கு வதிந்ததால் லெமுரியா (Lemuria) என்றும் அழைக்கின்றனர்.

குமரிநாட்டின் தென்பாகத்தில் பஃறுளியென்றோர் ஆறோடிற்றென்றும், அதன் கரையில் மதுரையென்றோர் நகரிருந்ததென்றும், அதுவே, பாண்டிநாட்டின் பழந்தலைநகர் என்றும், அங்கேயே தலைக்கழகம் இருந்ததென்றும், அக் கழகத்தின் பின் நெடியோன் என்னும் பாண்டியன் காலத்தில் அகத்தியர் அங்கு வந்து சேர்ந்தார் என்றும், அப்போது மதுரையைக் கடல்கொள்ள, நெடியோன் வடக்கே வந்து கபாடபுரத்தை யமைத்துத் தலைநகராகக் கொண்டானென்றும், அங்கே இடைக்கழகம் நிறுவப்பட்டதென்றும், பின்பு கபாடபுரமும் கடல் வாய்ப்பட, பாண்டியன் உள்நாட்டுள் வந்து மணவூரில் இருந்தானென்றும், பின்பு இப்போது வைகைக்கரையிலுள்ள மதுரை கட்டப்பட்டதென்றும், குமரிமுனைக்குத் தெற்கில் குமரி யென்றோர் மலைத்தொடரும் ஓர் ஆறும் இருந்தனவென்றும், அவ்வாற்றுக்கும் அதற்குத் தெற்கிலிருந்த பஃறுளியாற்றுக்கும் இடைநிலச்சேய்மை 700 காதமென்றும், குமரியாறு கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கடல் வாய்ப்பட்டதென்றும் பண்டைத் தமிழ்நூல்களால் அறியக் கிடக்கின்றது.

(1) பஃறுளியாறு :

“செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” [2]

(2) (தென்) மதுரை :

“தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் ....................... தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப.” [3]

(3) குமரிமலை

மேற்குத்தொடர்ச்சிமலை, முன்காலத்தில், தெற்கே நெடுஞ்சேய்மை சென்றிருந்ததாகவும், அங்குக் குமரியென்று அழைக்கப்பட்டதாகவும், தமிழ்நூல்களால் தெரிகின்றது.

குமரிமலையையே மகேந்திரமென்று வடநூல்களும், பிற்காலத் தமிழ்நூல்களும் கூறும்.

அநுமன் மகேந்திரமலையினின்று கடலைத் தாண்டி, இலங்கைக்குச் சென்றதாக இராமாயணம் கூறுகின்றது.

“மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன வாகமந் தோற்றுவித் தருளியும்”[4]

என்றார் மாணிக்கவாசகர்.

“..... தாமிரபரணி நதியைத் தாண்டுங்கள்.... அதை விட்டு அப்பாற் சென்றால்..... பாண்டிநாட்டின் கதவைக் [5] காண்பீர்கள்.அதன்பின் தென் சமுத்திரத்தையடைந்து... நிச்சயம் பண்ணுங்கள். அந்தச் சமுத்திரத்தின் கண்ணே, மலைகளுட் சிறந்ததும், சித்திரமான பலவிதக் குன்றுகளை யுடையதும், பொன்மயமானதும், நானாவித மரங்களுங் கொடிகளுஞ் செறிந்ததும், தேவர்களும் ரிஷிகளும் யக்ஷர்களும் அப்சரப் பெண்களும் தங்குவதும், சித்தர்களும் சாரணர்களும் கூட்டங் கூட்டமாக இருப்பதுமாகிய அழகிய மகேந்திர மலை,”[6]. என்று, சுக்கிரீவன் அங்கதனுக்குச் சொன்னதாக, வால்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்திற் கூறியிருப்பதினின்றும்,

“உன்னதத் தென் மயேந்திரமே”

என்று சிவதருமோத்திரமும், “பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடு” என்று இளங்கோவடிகளும் கூறுவதினின்றும், குமரிமலையின் பெருமையை உணரலாம்.

(4) குமரியாறு

மேற்கூறிய குமரிமலையினின்றும் பிறந்தோடிய ஆறு, அம் மலையின் பெயரால் குமரியென்றே அழைக்கப்பட்டது. இங்ஙனமன்றி, ஆற்றின் பெயரே மலைக்கு வழங்கினதாகவும் கொள்ளலாம்.

“குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறை”

“தென்றிசைக் குமரி யாடிய வருவோள்”

"தெற்கட் குமரி யாடிய வருவேன்” [7]

என்று மணிமேகலையிலும்,

“தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்”

“குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” [8]

என்று புறநானூற்றிலும்,

“கன்னிதனைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி”

“மாமறை முதல்வன் மாடல னென்போன்......
குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து”[9]

என்று சிலப்பதிகாரத்திலும் வந்திருத்தல் காண்க.

புறநானூற்றில், “குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அயிர் - நுண் மணல். அயிரை நீர்க்குள் அடிமட்டத்திலுள்ள மணலின், அல்லது சேற்றின் மேலேயே ஊர்ந்து திரியும் ஒருவகை மீன். அது ஆற்றில் அல்லது குளத்தில்தானிருக்கும். கடல் மீன்களில் அயிரைக் கொத்தது நெய்த்தோலி (நெத்திலி) என்று கூறப்படும். ஆகையால், மேற்கூறிய அடியில் குமரி யென்றது ஆறென்பது தெளிவு. இதைச் சிலப்பதிகாரத்தில் கன்னியை (குமரியை)க் காவிரியோடுறழக் கூறியதாலும், மேற்கூறிய அடிகளில் உள்ள குமரி என்பதை ஆற்றின் பெயராகவே உரையாசிரியர் கூறியிருப்பதாலும் அறியலாம்.

பழம்பாண்டி நாட்டில், முதலாவது,

பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல்கொண்டமை,

“அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” [10]

என்னும் சிலப்பதிகார வடிகளால் அறியலாம்.

இவ் வடிகட்கு,

"முன்னொரு காலத்துத் தனது பெருமையினதளவை, அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி, வேலானெறிந்த அந்தப் பழம்பகையினைக் கடல்பொறாது, பின்னொரு காலத்து அவனது தென்றிசைக் கண்ணதாகிய பஃறுளியாற்றுடனே, பலவாகிய பக்கமலைகளையுடைய குமரிக்கோட்டையும் கொண்டதனால், வடதிசைக் கண்ணதாகிய கங்கையாற்றினையும் இமயமலையினையும் கைக்கொண்டு, ஆண்டு மீண்டும் தென்திசையை யாண்ட தென்னவன் வாழ்வானாக வென்க” என்று உரை கூறியுள்ளார் அடியார்க்கு நல்லார்.

இச் செய்தியையே,

“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்” [11]

என்று கலித்தொகை கூறுகின்றது.

இதனால், கடல்கோளால் நாடிழந்தவன் பாண்டியனே என்பதும், அதற்கீடாக அவன் சேரசோழ நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றினான் என்பதும் அறியப்படும்.

இதையே, “அங்ஙனமாகிய நிலக்குறைக்குச் சோழநாட் டெல்லையிலே முத்தூர்க் கூற்றமும், சேரமானாட்டுக் குண்டூர்க் கூற்றமு மென்னுமிவற்றை, இழந்த நாட்டிற்காக வாண்ட தென்னவன்”[12] என்று, அடியார்க்குநல்லார் கூறியுள்ளார்.

தென்னாட்டைக் கடல்கொண்டமைக்குக் காரணம், முன்னொரு காலத்தில் பாண்டியன் அதன்மீது வேலெறிந்த செயலாகச் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்படுகின்றது.

இந்திரன் ஒருமுறை மதுரைமீது கடலை விட்டதாகவும், அப்போது ஆண்டுகொண்டிருந்த உக்கிரகுமார பாண்டியன் ஒரு வேலை யெறிந்து அக்கடலை வற்றச் செய்ததாகவும், திரு விளையாடற் புராணத்தில் 'கடல்சுவற வேல்விட்ட படலம்' கூறுகின்றது. இதிலிருந்து நாம் அறியக்கூடியது யாதெனின், ஒருமுறை நிலநடுக்கத்தால் கீழ் கடலிலிருந்து ஒரு பேரலை மதுரை வந்து மீண்டதென்பதே. இத்தகைய நிகழ்ச்சிகளைப் பல நிலநடுக்க வரலாறுகளினின்று அறிகின் றோம். உவாலேஸ் (Wallace) என்பவர் தாம் உவைகியௌ (Waigiou) தீவிலிருந்து தெர்னேற்றுத் (Ternate)த் தீவிற்குப் போகும் வழியில், நிலநடுக்கத்தால் கடன் மட்டம் உயர்ந்த தாகக் குறிப்பிடுகின்றார்.[13]

தென்னாட்டில் நிகழ்ந்த பல கடல்கோள்களில், ஒன்று பஃறுளியாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரியாற்றுக்குத் தெற்கில் ஓர் எல்லை வரையுள்ள நிலத்தைக் கொண்டதென்றும், இன்னொன்று குமரியாற்றையும் அதற்குத் தெற்கிலும் வடக்கி லுமிருந்த நிலத்தையும் கொண்டதென்றும் தெரியவருகின்றது.

பஃறுளிநாட்டையிழந்த பாண்டியன், தொல்காப்பியப் பாயிரத்தில் “நிலந்தரு திருவிற் பாண்டியன்” என்றும் மதுரைக்காஞ்சியில், 'நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடியோன்' என்றும், புறநானூற்றில் 'நெடியோன்' என்றும் கூறப்படுபவன் ஆவன். முந்தின இருபெயர்களின் பொரு ளும், “மலிதிரை யூர்ந்து” என்னுங் கலித்தொகைச் செய்யுட் செய்திக்கு ஒத்திருத்தல் காண்க.

குமரியாற்றைக் கடல்கொண்டபின், அவ்விடத்துள்ள கடல் குமரிக்கடல் எனப்பட்டது. இப்போது அப்பக்கத்துள்ள நிலக் கோடி குமரிமுனை யென்னப்படுகிறது.

கோவலன் காலத்தில் குமரியாறு இருந்தமை, மாடலன் என்னும் மறையோன் அதில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, மதுரையில் கோவலனைக் கண்டதாகக் கூறும் சிலப்பதிகாரச் செய்தியால் அறியலாகும். கோவலன் இறந்து சில ஆண்டுகட்குப்பின், குமரியாற்றைக் கடல்கொண்டது. அதன்பின் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டதினால், 'தொடியோள் பௌவமும்'[14] என்று தெற்கிற் கடலெல்லை கூறப்பட்டது.

'தொடியோள் பௌவம்' என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்புரையாவது :

“தொடியோள் - பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே, தென்பாற்கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமுமென்றது என்னையெனில், முதலூழி யிறுதிக்கண், தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து, அகத்தியனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட, நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர், எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையுள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு இரீ இயினார். காய்சினவழுதிமுதற் கடுங்கோனீனாயுள்ளார் எண் பத்தொன்பதின்மர்; அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன், சயமா கீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப் படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னும் ஆற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே, எழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ்முன்பாலைநாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரைநாடும், ஏழ் குறும் பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லமுதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின்காறும், கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றாரென் றுணர்க. இஃது என்னைபெறுமாறெனின், 'வடிவேலெறிந்த.... கொடுங்கடல் கொள்ள' என்பதனாலும், கணக்காயனார் மகனார் நக்கீரனா ருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும்”, என்பது.[15]

இதில், பஃறுளியாற்றிற்கும் குமரிக்கும் இடையிலுள்ள சேய்மை 700 காவதம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஒரு காவதம் பத்துமைல் என்றும் சொல்லப்படுகிறது. முற் காலத்தில் அது எத்துணைச் சேய்மையைக் குறித்ததோ தெரியவில்லை. இக்கால அளவுப்படிகொண்டாலும், தென் துருவத்திற்கும் குமரிமுனைக்கும் இடையிலுள்ள சேய்மை ஏறத்தாழ 7000 மைல் என்பதைத் திணைப்படத்தினின்றும் அறியலாம். தென்துருவ அண்மையில் விக்ற்றோரியா நாடு (Victoria Land) என்றொரு நிலப்பகுதியுமுள்ளது. அப்பகுதியும் குமரிமுனையும் ஒருகால் இணைக்கப்பட்டு ஒரு நெடு நிலப்பரப்பாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், தென்துருவ வரையில், தமிழ்நாடு இருந்திருக்க முடியாது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருகாலத்தில் இணைக்கப்பட்டிருந்தனவென்று மேனாட்டுக் கலைஞர் கூறியிருப்பதினின்றும், இம் முக்கண்டங்களுக்கும் நிலைத் திணை, பறவை, விலங்கு, மாந்தன்குலம், மொழி முதலியவற்றிலுள்ள பல ஒப்புமைகளினின்றும், தெற்கே 3000 கல் தொலைவுவரை தமிழர் வதிந்திருக்கலாமென்று தோன்றுகிறது.

குமரியாறு கடலில் அமிழ்ந்தது கடைக்கழகக் காலமாதலின், இடைக்கழக நூலாகிய தொல்காப்பியப் பாயிரத்திற் குமரியென்று குறிக்கப்பட்டது குமரியாறேயாகும். இது,

“தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம், அது தானும் பனம்பாரனார்,

“வடவேங்கடந் தென்குமரி” (பாயிரம்)

எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய் தமையிற்..... கடலகத்துப்பட்டுக் குமரியாறும் பனைநாட் டோடு கெடுவதற்கு முன்னையதென்பதூஉம்,”[16] என்று பேராசிரியர் கூறியதினின் றறியப்படும்.

ஆகவே, தெற்கில் கடலையெல்லையாகக் கூறும் நூல்களெல்லாம், குமரியமிழ்ந்ததற்குப் பிற்பட்டனவேயாகும்.

“வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்
வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த
நாட்டியல் வழக்கம்.....”

எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறு காக்கைபாடினியார் செய்தநூல்”[17] என்று பேராசிரியர் கூறியதுங் காண்க.

(5) வீரமகேந்திரம் :

குமரிநாட்டைக் கடலானது, பகுதிபகுதியாகவும், பல முறையாகவும் கொண்டமையின், இலங்கைக்குத் தெற்கே வீர மகேந்திரபுரத்தைத் தலைநகராகக்கொண்ட ஒரு நிலப் பகுதி, பல கடல்கோளுக்குத் தப்பிக் கடைசியில் சூரபன்மன் காலத்திற்குப் பின், முழுகிப்போனதாகக் கந்தபுராணத்தி னின்றும் தெரிய வருகின்றது.

(6) இலங்கை :

இலங்கை ஒருகாலத்தில் இப்போதிருந்ததைவிடப் பெரிதாயும், வடபுறத்தில் தமிழ்நாட்டொடு சேர்ந்தும் இருந்தது. முதலில், தென்புறத்திலும் பிரிவில்லாதிருந்தமை சில சான்றுகளாலறியப்படும்.

“தாப்பிரப்பனே (Tabropane) தலைநிலத்தினின்றும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளது. அதன் வதிநர் 'பழையொ கொனாய்' (Palaiogonoi) என்று அழைக்கப்படுகின்றனர். அவர்கள்நாடு இந்தியாவினும் மிகுதியாகப் பொன்னும் பெருமுத்தும் விளைவது. தாப்பிரப்பனே இந்தியாவினின்றும், தமக்கிடையோடும் ஓர் ஆற்றினால் பிரிக்கப்படுகின்றது. அதன் ஒரு பாகம் இந்திய இனங்களினும் மிகப் பெரிய காட்டு விலங்கு களும் யானைகளும் நிறைந்தது; அடுத்த பாகம் மக்கள் வதிவது[18] என்று மெகஸ்தனிஸ் (Megasthenes) கூறுகிறார்.

இக் கூற்று, அவர்தம் முன்னோர் கூறியதைக் கொண்டு கூறியதேயாகும். ஏனெனில், அவர் தென்னாட்டிற்கு வர வில்லை, அவர் கூற்றிலுள்ள சில குறிப்புகளால், இலங்கையின் வடபாகம் ஒருகாலத்தில் இந்தியாவொடு சேர்ந்திருந்த தென்றும், தாமிரபணி இலங்கையூடும் ஓடிற்றென்றும், அதனால் இலங்கை தாம்பிரபரணி (Taprobane)யெனப்பட்ட தென்றும் அனுமானிக்க இடமுண்டு. ஆனால், தாமிர பரணியின் தெற்கிலுள்ள தமிழ்நாட்டையே தாப்பிரப்பனே யென்றும், அதற்கு வடக்கிலுள்ள தமிழ்நாட்டை இந்தியா வென்று, பண்டை யவன சரித்திராசிரியர் கூறினர் என்று கொள்ளவும் இடமுண்டு. ஏனெனில், இத்தகைய மயக்குகள் யவனாசிரியர் குறிப்புகளில் பலவுள்ளன. அதோடு, தாப்பிரப்ப னேயிலுள்ளவாகக் கூறப்பட்ட பொருளெல்லாம் பாண்டி நாட்டிலுமிருந்தன.

“வடநாட்டில், வடமொழியிற் பழமைகளை யெழுதிய நூலாசிரியர்கள், இலங்கை இப்போதிருப்பதைவிட மிகப் பெரிதாயிருந்ததாயும், விதப்பாக, மேற்கிலும் தெற்கிலும் மிக அகன்றிருந்ததாயும் கூறியிருக்கின்றனர். இக் கூற்று, புராண காலத்து உண்மையைக் கூறாவிடினும், இந்திய நாடுகளுக்குள் வழங்கிய ஒரு வழிமுறைச் செய்தியைக் குறிப்பிடுகின்ற தாயிருக்கின்றது.

"வடமொழி வானூலார் தங்கள் தலைமை உச்சகத்தை (Chief Meridian) இலங்கையில் வைத்தார்கள். ஆனால், அது இப்போதை இலங்கைக்கு மேற்கிலுள்ள கோடாயிருந்தது. இக் குறிப்புக்கள் தொன்முது காலத்தில் தென்னிந்தியாவும் மடகாஸ்கரும் இணைக்கப்பட்டிருந்தன வென்னும் கொள்கைக்குத் துணை செய்கின்றன.......... இலங்கை சிறிது சிறிதாய்க் கடலுண் மூழ்கிக் குறுகியது என்று பௌத்தர் எழுதிவைத்த இடவழக்குச் செய்தியோடும் இது ஒத்திருக்கின்றது.”[19]

இராமர் காலத்தில், இலங்கை இப்போதிருப்பதை விடப்பெரிதாயும், தமிழ் நாட்டிற்கு மிக நெருங்கியதாயுமிருந்தது. இவ்விரு நிலங்கட்கும் இடைப்பட்ட கடல், ஒருவர் நீந்திக்கடக்குமளவு இடுகிய கால்வாயாக வேயிருந்தது.அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல்தாண்டியதும், இராமர் வானரப்படைத் துணையால் அணைகட்டியதுமான இடம், இப்போது இந்துமா கடலில் உள்ளது. இப்போது இராமர் அணைக்கட்டு என்று வழங்குமிடம், பிற்காலத்தில் பரிந்தை (Current) யாலும் எரிமலைக் கொதிப்பாலும், புயலாலும் இயற்கையாய் அமைந்த கல்லணையாகும். தமிழ் நாட்டின் தென்பகுதி கடலுண் முழுகி, இலங்கை மிக விலகிப் போனபின், சரித்திர மறியாத மக்களால், அது இராமாயணக் கதையொட்டி இராமர் அணைக்கட்டெனப்பட்டது. 'ஆதாம் வாரைவதி' (Adam's Bridge) என்னும் பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவே 'இராமர் அணைக்கட்டு' என்னும் பெயரும் பொருந்துவதாகும். இதை,

அநுமன் குமரி (மகேந்திர) மலையினின்று கடல் தாண்டினானென்றும், வானர வயவர் குட (மேற்குத் தொடர்ச்சி) மலை வழியாகத் தெற்கே சென்றனரென்றும், கற்களைக் குவித்தே கடலில் அணைகட்டினரென்றும், இராமர் பொதிய மலையிலிருந்த அகத்தியரிடம் வில் பெற்றன ரென்றும், இராமாயணங் கூறுவதாலும்;

“துங்கமலி பொதித்தென்பாற் றொடர்ந்தவடி வாரத்தி
லங்கனக விலங்கையுமேழ் வரைச்சார லடித்தேசம்”

என்று சிவதருமோத்திரங் கூறுவதாலும்;

இலங்கையின் பழங்குடிகள் அதன் தென்பாகத்தி லேயே இன்று வதிவதாலும் அறியப்படும்

குமரிநாட்டுக் கடல்கோள்கள்

“உலகத்திலே, இன்றுவரை நேர்ந்துள்ள கடற் பெரு வெள்ளங்களுள், முதன்மையானது பதினூறாயிரம் ஆண்டுகட்குமுன்னர் நேர்ந்திருத்தல் கூடுமென்றும், இரண்டாவது வெள் ளம் எண்ணூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், மூன்றாவது வெள்ளம் இருநூறாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், நான் காவது வெள்ளம் எண்பதினாயிரம் ஆண்டுகட்கு முன்னரும், ஐந்தாவது வெள்ளம் ஏறக்குறைய ஒன்பதாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரும் நிகழ்ந்திருத்தல் கூடுமென்றும் 'காட்டெலியட்டு' என்னும் நிலநூல் வல்லார் கூறுகின்றார்”[20] என்று கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் எழுதுகின்றார்கள்.

குமரிநாட்டில் நிகழ்ந்த கடல்கோள்களுள், தமிழ்நூல்களிற் குறிக்கப்படுபவை மூன்றாகும். அவையாவன :

(1) “பஃறுளியாற்றுடன்.... குமரிக் கோடும்” கொண்டது.

இதுவே தலைக்கழகத் தாவாகிய மதுரையின் அழிவு.

(2) இடைக் கழகத்தாவாகிய கபாடபுரத்தைக் கொண்டது. இதை, “இடைச்சங்கமிருந்தார்.... தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது”[21] என்பதனாலறியலாம்.

(3) காவிரிப்பூம்பட்டினத்தையும் வங்காளக்குடாவில் இருந்து தென்கடல்கள் (South Seas) வரையும் உள்ள பல தீவுகளையுங் கொண்டது. இதை,

“தீங்கனிநாவ லோங்குமித் தீவிடை
யின்றேழ் நாளிலிருநில மாக்கள்
நின்றுநடுக் கெய்த நீணிலவேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத்திந்நகர்
நாக நன்னாட்டு நானூ றியோசனை
வியன்பாதலத்து வீழ்ந்துகே டெய்தும்”[22]


“மடவர னல்லாய் நின்றன மாநகர்
கடல்வயிறு புக்கது”[23]

என்னும் மணிமேகலைப் பகுதிகளால் அறியலாம். காவிரிப் பூம்பட்டினம் அழிந்தபோதே குமரியாறும் முழுகினதாகத் தெரிகின்றது.

தமிழ்நூல்களால் தெரியவருங் கடல்கோள்கள் மூன்று. அவற்றுள் முதலது மிக முக்கியமானது. ஏனெனில், அது ஒரு பெருநிலப் பரப்பின் அழிவாயும் அதன் கதை உலக முழுதும் வழங்குவதாயும், மக்கள் ஒருதாய் வயிற்றினரென் றும் மாந்தன் பிறந்தகம் குமரிநாடென்றும் துணிவதற்குச் சான்றாயுமுள்ளன.

இம் முதற் கடல்கோளே நோவாவின் காலத்தில் நிகழ்ந்த வெள்ளமாகக் கிறித்தவ மறையிற் கூறப்படுவது. இது 'வெள்ளப் பழமை' (The Flood Legend) என்று ஆங்கிலத் தில் வழங்கும்.

“மேனாட்டார் இக் கதையை யூதரிடத்தினின்று, பழைய ஏற்பாட்டு வாயிலாய்த்தான் அறிந்தார்கள். ஆனாலும்,இது யூதரிடத்து முதன்முதல் தோன்ற வில்லை.யூதர் இக்கதையைப் பாபிலோனியரிட மிருந்தறிந்தார்கள்.ஆனால், கில்கமேஷ் (Gilgamesh) என்னும் பாபிலோனியக் காதை நூலில் இது இணைக்கப்பட்டிருக்கிற முறையை நோக்கும் போது,இது பிற்காலச் செருக லென்றும், பாபிலோனியருக்கு மிக முற்பட்ட தென்றும் கருத இடமுண்டு.”

வெள்ளக்கதை பாபிலோனில், அல்லது சேமிய வரணத் தாருக்குள் மட்டும் காணப்படுவதன்று, அதற்கு மாறாக, அது உலக விரிவானது. யூதர் நோவாவொருவ னையே எஞ்சினோனாகக் கொண்டனர்; பாபிலோனியர் உத்தானபிஷ்திம் (Utanapishtim) என்பவனைக் கொண்டனர். கிரேக்கருக்குள், தியூக்கேலியனையும் (Deucalion) அவன் மனைவி பைரா (Pyrrha)வையுங் காண்கின்றோம். மெக்ஸி கோவில், இருவேறு வரலாறுகள் உள. அவற்றுள் முந்தின நகுவாத்தல் (Nahuatl) கதை காக்ஸ் காக்ஸை (Cox cox)யும் அவன் மனைவி சொச்சிக்கு வெத்ஸலை (Xochliquetzal)யும் கூறுகின்றது; இன்னொன்று இவ்விருவரையும், முறையே, நத்தா (Nata) நானா (Nana) என்று கூறுகின்றது.

“இதோடு பெயர்வரிசை முடியவில்லை. உண்மையில் எல்லா மக்களுக்கும் இவ் வெள்ளத்தைப்பற்றி ஒவ்வொரு கதையிருப்பதாகத் தெரிகிறது.”[24]

சீனப் பழமையில் ப்வோகி (Fohi)யும், கல்தேயப் பழமை யில் சிசுத்துருசும் (Xisuthrus) நோவாவாகக் கூறப்படுகின்றனர்.

ஆங்கில மதாசிரியர்கள் நோவாவின் வெள்ளத்திற்குக் குறித்த காலம் கி.மு. 2348. இலங்கைப் பௌத்த மதாசிரியர் இலங்கையில் கடைசியாக நேர்ந்த கடல்கோளுக்குக் குறித்த காலம் கி.மு. 2387. தமிழ்நாட்டுக் கடல்கோளும் இதே காலத்ததாயிருத்தல் மிகவும் வியக்கத்தக்கது. ஆரியர் இந்தி யாவிற்கு வந்தது, கி.மு. 3000 போல். அகத்தியர் தென்னாட் டிற்கு வந்தது, கி.மு. 2500 போல்.

தமிழ்நாட்டுக் கடல்கோள், சதாபத பிராமணம், மச்ச புராணம், அக்கினி புராணம், பாகவத புராணம், மகாபாரதம் ஆகிய வடநூல்களிலும் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் மிகப் பழைய வரலாறு சதாபத பிராமணத்தது. மகாபாரதத்தது மிகப் பிந்தியதாதலின் மிகப் பெருக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தைப்பற்றி மகாபாரதமும், கல்தேயப் பட்டயமும் கிறித்தவ மறையும் கூறும் வரலாறுகள்,வெள்ளத்தின் நோக்கம், வெள்ளத்துக்குத் தப்பியவரின் பன்மை, வெள்ளத் தின்பின் மக்கட் பெருக்கம் என்ற குறிப்புகளில் ஒத்திருப் பதை, ராகொஸின் தமது 'வேதகால இந்தியா'வில் 340ஆம் பக்கத்திற் காட்டியிருக்கின்றார்.

வடநூல் வெள்ளக்கதைகளில், மனுவென்றும் அரச முனி (ராஜரிஷி)யென்றும் திராவிட நாட்டர சனாகிய சத்திய விரதனென்றும் குறிக்கப் படுகின்றவன், நிலந்தரு திருவிற் பாண்டியனாய்த் தான் இருக்கவேண்டும். திராவிடத் தேசத் தரசன் என்னும் பட்டமும், அரச என்னும் அடையும் அகத் திய முனிவருக் கேலாமையின், அவராயிருக்க முடியாது.

தமிழர் கி.மு. 2000 ஆம் ஆண்டுகட்கு முன்னமே, வாரித்துறை (Maritime) முயற்சிகளுள் சிறந்திருந்தமை. அவர்கள் அயல் நாடுகளோடு செய்துவந்த நீர்வாணிகத் தாலும், பல்வகை நீர்க்கலங்களையுங் குறிக்கத் தமிழிலுள்ள பெயர்களாலும்,

“முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை”

என்னும் தொல்காப்பிய நூற்பாவாலும் அறியப்படும். ஆகையால், நோவாவும் அவன் பேழையும், நிலந்தருதிருவிற் பாண்டியனும் அவன் நாவாயுமாய்த்தானிருந்திருத் தல்வேண்டும். இது பின்னர்த் தெளிவாக விளக்கப்படும்.

“குட(மேற்கு)மலைத்தொடர், கடலில் அமிழ்ந்து போன தென்னாட்டை நோக்க வடக்கிலுள்ளமை யால், இவ்வெள்ளத் துன்பத்திற்குமுன், வடமலைத் தொடர் எனப்பட்டது. மனுவின் பேழை வடமலைத்தொடரில் தங்கிற்றென்று சதாபத பிராமணமும், திராவிட நாட்டரசன் மலையமலையில் தவஞ் செய்து கொண்டிருந்தானென்று புராணங்களும் கூறுகின்றன....”

“மனுவின் சரிதையை முதன்முதற் கூறும் சதாபத பிராமணம், வடமலைத்தொடரின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆயினும், வடமலைத்தொடர் என்றது மேற்குத் தொடர்ச்சி மலையையே என்றும், பேழை தங்கிய இடம் மலையமலையே என்றும் கொள்வதற்குப் போதிய புராணச் சான்றுகள் உள்ளன” என்று பண்டிதர் டி. சவரிராயன் (M.R.A.S.) கூறுகின்றார்.[25]

தமிழ்நாட்டில் நெட்டிடையிட்ட மூன்று அழிவுகள் தோன்றினமையின், ஈரழிவிற் கிடைப்பட்ட காலப்பகுதியை ஓர் ஊழியென்றும், மூவழிவுகளால் ஏற்பட்ட காலப்பகுதிகளை நாலூழி (சதுர்யுகம்) யென்றும் கொண்டதாகத் தெரிகின்றது. ஊழிகட்குக் குறிக்கப்பட்ட அளவுகளும், நாலூழியைச் சுற்ற ளவாகக் கொண்டதும் பிற்காலத்தன என்று தோன்றுகிறது.

ஊழி என்னுஞ் சொல் ஊழ் என்னும் பகுதியடியாய்ப் பிறந்து, முதிர்வு அல்லது அழிவு என்று பொருள்படுவது. ஊழியால் ஏற்படும் கால அளவை ஊழியென்றது ஆகு பெயர். தமிழ்நாட்டில், நாள்முதல் ஊழிவரையுள்ள கால அளவுகளெல்லாம், ஒவ்வொரு வகையில் ஈரழிவிற்கிடைப்பட்ட காலத்தையே உணர்த்துவனவென்பதை, யான் 'செந்தமிழ்ச் செல்வி'யில் வரைந்துள்ள 'பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை' என்னும் கட்டுரையிற் கண்டுகொள்க.

தெற்கேயே பல அழிவுகள் தோன்றியுள்ளமையாலும், பண்டைத் தமிழரெல்லாம் இந்துமாக் கடலில் அமிழ்ந்து போன தென்னாட்டிலேயே புதையுண்டு அல்லது எரியுண்டு கிடப்பதாலும், கூற்றுவன் தென்றிசையிலிருக்கிறானென்றும், தம் முன்னோரைத் தென்புலத்தாரென்றும் கூறினர் தமிழர். புலம்-நிலம்.

தெற்கே பெருநிலமும் பெருமலையும் கடலில் அமிழ்ந்து போனதினாலும், இதற்கு மாறாக வடக்கே கடலாயிருந்த பாகத்தில்,பனிமலை(இமயம்) யாகிய பெருமலை தோன்றியுள்ளதினாலும், வடதென்றிசைகளை முறையே, மங்கலமும் அமங்கலமுமுள்ளனவாகக் கொண்டனர் தமிழர். இதை ஆரியர் பயன் படுத்திக் கொண்டு, வட இந்தியாவை நல்வினை நிலம் (புண்ணிய பூமி) என்றும், தென்னிந்தியாவைத் தீவினை நிலம் (பாவ பூமி) என்றும் கூறியதாகத் தெரிகின்றது. தமிழர் திசை களை நல்லதும் தீயதுமாகக் கொண்டாரேயன்றி இடங்களை யல்ல. திபேத்தை நோக்க, வட இந்தியா தீயதும், தென்துரு வத்தை நோக்க தென் இந்தியா நல்லதுமாதல் காண்க.

திசைபற்றிய ஆரியக் கொள்கையைக் கண்டிக்கவே,

“எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா
தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை வடதிசையுங்
கொன்னாளர் சாலப் பலர்”.

என்னும் நாலடிச் செய்யுள் எழுந்ததாகத் தெரிகின்றது.

சிவன் அல்லது முருகன் குறிஞ்சித் தெய்வமாதலின், தெற்கே குமரிமலையமிழ்ந்து போனபின், பனிமலையைச் சிவபெருமானின் சிறந்த இருக்கையாகக் கொண்டனர் தமிழர். (இதையும் ஆரியர் சிவபெருமானை ஆரியத் தெய்வமாகக் கூறுவதற்குப் பயன் படுத்திக்கொண்டனர்.)

“பஃறுளி.... வாழி” என்னும் சிலப்பதிகாரப் பகுதியை நோக்குக.

புதுச்சேரிக்கு மேற்கே ஒரு காததூரத்திலுள்ள பாகூர்ப் பாறையில், பாகூருக்குக் கிழக்கே கடல் நான்கு காதம்..... எனக் கல்வெட்டிருக்கின்றதெனவும், இப்பொழுது அப் பாகூருக்குக் கிழக்கே கடல் ஒரு காத தூரத்திலிருக் கின்றதெனவும் கூறுவர். இதனால் மூன்று காதம் கடல்கோள் நிகழ்ந்துள்ளதென்பது புலனாம்”[26] என்று கார்த்திகேய முதலியாரும்,

“இப்போது கன்னியாகுமரி முனையில் மூன்று கோயில்கள் உள்ளன. ஒன்று முற்றிலும் அழிந்துகிடக்கின்றது. அது நாள்தோறும் கடலில் முழுகிக்கொண்டே வருகின்றது” என்று S.V. தாமசும் (Thomas) கூறியிருப்பதினின்று, குமரியாறு மூழ்கின பின்னும் தமிழ்நாடு குறுகி வந்திருப்பதையறியலாம்.

சீகாழி ஒருமுறை வெள்ளத்தாற் சூழப்பட்டமை; தோணிபுரம் என்னும் அதன் பெயரால் விளங்கும்.

குமரிநாடு - புறச்சான்றுகள்

(1) வியன்புலவர் எக்கேல் :

“உயிர்களின் 'பெயர்வும் பிரிந்தீடும்'பற்றிய அதிகாரத்தில், ஞாலத்தின் மேற்பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் நீர்நிலப் பாதீட்டைக் குறிக்கும்போது, எக்கேல் “இந்துமாக் கடல் ஒரு காலத்தில் சந்தாத் தீவுகளினின்று தொடங்கி, ஆசியாவின் தென்கரை வழியாய், ஆப்பிரிக்காவின் கீழ்கரை மட்டும் படர்ந்திருந்த ஒரு நிலப்பரப்பாயிருந்தது. ஸ்கிளேற்றர் இப்பழம் பெருங்கண்டத்தை, அதில் வதிந்த குரங்கொத்த உயிரி (பிராணி) பற்றி லெமுரியா என்ற ழைக்கிறார். இக் கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்கக் கூடுமாதலின், மிக முக்கியமானது. காலக்கணித உண்மைகளைக் கொண்டு, இப்போதை மலேயத் தீவுக் கூட்டம், முற்றிலும் வேறுபட்ட இருபகுதிகளைக் கொண்ட தென்று, உவாலேஸ் கூறியுள்ள முக்கியச் சான்று, விதப்பாய் உவகையூட்டத்தக்கது. போர்ணியோ, ஜாவா, சுமத்திரா என்னும் பெருந்தீவுகளைக்கொண்ட மேலைப் பிரிவாகிய இந்தோ-மலேயத் தீவுக்கூட்டம், முன்காலத்தில் மலாக்காவினால், ஆசியாக் கண்டத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை, சற்று முந்திக்கூறிய லெமுரியக் கண்டத்தோடும் அது இணைக்கப் பட்டிருந்திருக்கலாம். இதற்கு மாறாக, செலிபிஸ், மொலுக்காஸ், புதுக்கினியா, சாலோமோன் தீவுகள் முதலியவற்றைக்கொண்ட கீழைப்பிரிவாகிய ஆஸ்திரே-மலேயத் தீவுக்கூட்டம், முன் காலத்தில் ஆஸ்திரேலியாவோடு நேரே யிணைக்கப்பட்டிருந்தது”[27] என்று கூறுகின்றார்.

(2) திருவாளர் ஓல்டுகாம்

“செடிகொடிகளிலும், உயிரி(பிராணி)களிலும், ஆப்பிரிக் காவிற்கும் இந்தியாவிற்கும் மிகப் பழங்காலத்திலிருந்த மிகநெருங்கிய ஒப்புமைகளைக் கொண்டு திருவாளர் ஓல்டுகாம், ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு தொடர்ந்த நிலப்பரப்பிருந்ததென்று முடிவு செய்கிறார்.”[28]

“இந்துக்கட்குப் பேரே தெரியாத சில பழைய காலத்துப் பெருமகமையான பப்பரப்புளி, அல்லது யானைப்புளி, அல்லது சீமைப்புளி (Baobab or Adansonia Digitata) என்னும் ஆப்பிரிக்க மரங்கள், இந்திய தீவக்குறை (Peninsula)யின் தென்கோடியில் அயல் நாட்டு வணிகம் நிகழ்ந்துவந்த சில துறையகங்களில், அதாவது குமரிமுனையருகிலுள்ள கோட் டாற்றிலும் திருநெல்வேலிக் கோட்டகை (ஜில்லா)யில் தூத்துக்குடியருகில் பழைய கொற்கை யிருந்திருக்கக்கூடிய இடத்திலும், இன்னும் காணப்படுகின்றன என்று கால்டுவெல் கண்காணியார் கூறுகின்றார்.

தேக்கு பர்மாவிலும், தென்னிந்தியாவிலும், ஆப்பிரிக்காவிலும்; புளி சாவகத்திலும் இந்தியாவிலும்; தென்னை இந்தியாவிலும் இலங்கையிலும் மேலனீசியத்(Melanesia)த் தீவுகளிலும்; நெல் பர்மாவிலும் இந்தியாவிலும் சீனத்திலும் ஜப்பானிலும் சாவகத்திலும்; கரும்பு சீனத்திலும் ஜாவாவிலும் இந்தியாவிலும் தொன்றுதொட்டு வளர்கின்றன.

கோளரி (சிங்கம்) இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும்; காண்டாமா மலேயாவிலும் ஆப்பிரிக்காவிலும்; யானை பர்மா விலும் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வாழ்கின்றன.

“பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூர” [29]

“அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉ மூரன்” [30]

என்னுங் குறிப்புகளால் பண்டைத் தமிழ்நாட்டில் நீர்நாய் என்றோர் உயிரியிருந்தமை யறியப்படும். அரிப்பான் (Rodent) இனத்தைச் சேர்ந்த நீர்நாய் (Beaver), நீர்வாழி (Aquatic), இருவாழி(Amphibious) என இருவகை. இவற்றுள், முன்னதை எலியென்றும், தென்கண்டத்திலும் (Australia) தாஸ்மேனியா (Tasmania)விலும் வாழ்வதென்றும், வெப்ஸ்ற்றர் தமது புதுப் பன்னாட்டுப் பொதுவகராதி (New International Dictionary) யில்[31] குறிப்பிடுகின்றார். தமிழில் நீர்நாயைப் பற்றிய குறிப்பு களிலெல்லாம் அது மருதநிலத்து நீர்வாழியாகக் கூறப்பட்டி ருப்பதினால் தமிழ்நாட்டு நீர்நாய் தென்கண்டத்திலுள்ள நீரெலிக்கு (beaver rat) இனமானதாகத் தெரிகின்றது.

அன்னத்தில், வெள்ளையன்னம் காரன்னம் என இரு வகையுண்டு. இவ்விருவகையும் தமிழ்நாட்டிலிருந்தமை,

'ஓதிம விளக்கின்' என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடருக்கு, “ஈண்டுக் காரன்ன மென்றுணர்க” என்றும், “வெள்ளையன்னங் காண்மின்” என்னும் சீவக சிந்தாமணித் தொடருக்குக் “காரன்னமுமுண்மையின், வெள்ளையன்னம் இனஞ்சுட்டின பண்பு”[32] என்றும் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள குறிப்புரையாலறியப்படும். காரன்னம் தென் கண்டத்திற்கும் தாஸ்மேனியாவிற்குமே யுரியதென்று[33] தெரிதலால் தமிழ்நாட்டிற்கும் தென்கண்டத்திற்குமிருந்த பண்டைத் தொடர்பை யறியலாம்.

உயிரினங்களின் ஒவ்வாமை இருநாட்டின் இயை பின்மைக்குச் சான்றாகாது. ஆனால், அவற்றின் ஒப்புமை இருநாட்டின் தொடர்பிற்குச் சான்றாகலாம்.

சாமை, காடைக்கண்ணி, குதிரைவாலி, செந்தினை, கருந்தினை முதலிய பாண்டிநாட்டுப் பயிர்கள், சோழ நாட்டிலும் அதற்கு வடக்கிலும் பயிராக்கப்படுவதில்லை. அங்ஙனமே சோழ நாட்டிலும் பிறநாடுகளிலும் பயிராக்கப்படும் மக்காச்சோளம் பாண்டிநாட்டிற் பயிராக்கப்படுவதில்லை. இதனால், சோழ பாண்டி நாடுகள் வேறென்றாகா,

(3) காட்எலியட்

காட் எலியட் என்பவர் எழுதியுள்ள 'மூழ்கிய லெமுரியா' (Lost Lemuria) என்னும் நூலிலுள்ள திணைப் படத்தினால், “ஒருபெருமலையானது மேலைக்கடலில் தொடங்கித் தென்வட லாகக் குமரிக்குத் தென்பாலுள்ள நிலப்பகுதியிலே நெடுஞ் சேய்மை சென்று, பின் தென்மேற்காகத் திரும்பி, 'மடகாஸ்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது” என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை கூறுகின்றார்.

(4) சாண் மர்ரே ஆராய்ச்சிப்படை :

(இந்தியப் பட விளக்க வாரகை - ஜூலை 29, 1934)

“இந்து மாக்கடலைத் துருவுவதற்கு 20,000 பவுன் வைத்து விட்டுப்போன, காலஞ்சென்ற வயவர் சாண் மர்ரே (Sir John Murray)யால் தோற்றுவிக்கப்பட்ட கடல்நூல் (Oceanography) என்னும் தற்காலக் கலை, ஒருகாலத்தில், தென் அமெரிக்காவினின்று ஆப்பிரிக்காவையொட்டியும் இந்தியாவையொட்டியும் தென்கண்டம் (Australia) வரை படர்ந்திருந்ததும் காண்டுவானா (Gondwana)க் கண்டம் அல்லது காண்டுவானா நாடு என்று அறியப்பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, அண்மையில் வியக்கத்தக்க வுண்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறது. இதன் சான்று, பனி மலையும் (Himalayas), காக்கஸஸ் (Caucasus), ஆல்ப்ஸ் (Alps), பிரனீஸ் (Pyrenees) என்னும் மலைகளும் கடலுக்குள்ளிருந்த காலத்தில், நாலு கண்டங்களிலும் ஒரே வகையான நிலவுயிரிகளும் செடிகொடிகளும் கன்னிலையிற் காணப் படுகின்றன என்னும் உண்மையைச் சார்ந்ததாகும். மபாஹிஸ் (Mabahiss) என்னும் சிறிய எகிப்திய மரக்கலத்தில், பிழம்புத் தலைவர் செய்மூர் செவல் (Colonel Seymour Sewell, F.R.S.) என்பவரின்கீழ், கடந்த ஏழு மாத காலமாக நடைபெற்றுவந்த புதுக் கண்டுபிடிப்புகளை, வியன்புலவர் ஜே. ஸ்ற்றான்லி நாடினர் (Professor J. 'Stanley Gardiner') வர்ணிக்கிறார். வியன்புலவர் காடினெரைக் கண்டு பேசியபின், எவ்ப். ஜீ. பிரின்ஸ் ஒயிற்று (F.G. Prince White) 'நாளஞ்சல்' (“Daily Mail”) தாளிகையில், பின்வருமாறு வரைகிறார்:—

“காண்டுவானா நாடு நச்சுயிரிக்காலத்திற்குரியதாயும் (Reptilian Period)தாயும், ஐயமற, சினாம்புள்ள நச்சுயிரிப் பூதங்களின் இருப்பிடமாயுமிருந்தது. தென்மேற்காகச் சொக்கோத்ராவை (Socotra) நோக்கிச் செல்லும் 10,000 அடி உயரமுள்ள மலைத்தொடர், தெளிவாக, (இந்தியாவில் ஆஜ்மீரிலுள்ள) அரவல்லி மலைத்தொடரும் பிற மலைகளுமானவற்றின் தொடர்ச்சியாகவே இருந்தது. இதன் தென்கிழக்கில் ஓர் ஆழ்ந்த பள்ளத் தாக்கு இருக்கிறது. அது தொல்லூழிகளில், இந்தஸ் (Indus) ஆற்றுப் படையின் தொடர்ச்சியாயிருந்த தென்பது தேற்றம். இதிலிருந்து ஒருவர், அப்பெரிய நிலப்பரப்பின் முழுமையும் இந்தஸ் ஆற்றின் பகுதியும், ஒரு பெருவாரியான எரிமலை யெழுச்சியில், சொல்லப் போனால், தலைகீழாக அமிழ்ந்தன என்றுதான் அனுமானிக்க முடியும் என்று அவ் வியன்புலவர் சொல்லுகிறார்,” (இவ்வுருப்படிக்குரிய திணைப்படத்தை இப் புத்தக முகப்பிற் காண்க.)

(5) திருவாளர் சாண் இங்கிலாந்து

“.......... கோடி யாண்டுகளுக்கு முன் — ஒருவேளை அதற்கு மிக முந்தி — ஒரு பெருங்கண்டம் ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்திருந்தது. மாந்தன் அப்போது ஞாலத்தில் தோன்றியே யில்லை. அக்கண்டத்தில் நச்சுயிரிகளும் யானையும் காண்டாமாவும் லெமுர் என்னுங் குரங்கினமும் பூத ஆமையும் குடியிருந்தன.”

“உலகம் ஓர் இன்பமான கானகமாயிருந்தது. எனினும், பறவைகள் பாடவில்லை; ஏனென்றால் அவை அப்போது இல்லை. இங்ஙனம் சில வகைகளில், இப்பெருங் கண்டம், ஒவ்வொன்றும் பெரும்போடாயிருந்த உயிரிகளுடன் அமைதியாகவும் இயற்கைக்கு மாறுபட்டு மிருந்தது.

“அது தோன்றி, அல்லது நிலையாகவே 20,000,000 ஆண்டுகள் போலிருந்தது. பின்பு மூழ்கத் தொடங்கிற்று....”[34] என்று சாண் இங்கிலாந்து கூறுகிறார்.

இங்ஙனம் மறுக்கமுடியாத பல சான்றுகளிருக்கவும், வட மொழிக்கு மாறாகத் தமிழுக்குப் பெருமை வந்துவிடுமே என்றெண்ணியோ, அல்லது வேறு காரணத்தாலோ, இந்திய சரித்திராசிரியர் குமரிநாட்டைப்பற்றி இன்னும் ஆராயாமலும், பிறர் ஆராய்ந்து கூறியதை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கின் றனர். எத்தனை நாளைக்கு உண்மையை மறைக்க முடியும்?


  1. பண்டைத்தமிழகம் (The original Home of the Dravidan Race)குமரிநாடே என்று.யான் எழுதிய நூலை 1938 ஆம் ஆண்டு நவம்பர் -மீ எனக்குக் 'கீழ்கலைத்திறவோன்' பட்டத்(MOL Degree)திற்கு,இடுநூலாக (Thesis),சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விடுத்தேன். மூன்றாமாதம் அது தள்ளப்பட்டதாகப் பல்கலைக்கழக அறிவிப்பு வந்தது என் இடுநூலை ஆய்ந்தவர் யாரென்றும், தள்ளினதற்குக் காரணங்கள் எவையென்றும் பல்கலைக்கழகத்திற்கு எழுதிக் கேட்டதற்கு, அவை மறைபொருள் என்று பதில் வந்துவிட்டது.
  2. 1.புறம். 9
  3. 2.இறை,பக்.6
  4. 1.கீர்த்தித்திருவகல்
  5. 2.கபாடபுரம்
  6. 3.நடேச சாத்திரியார் மொழிபெயர்ப்பு.ஒ.மொ.—8
  7. 1.மணி.பக்.52,142,148.
  8. 2.புறம்.6,67.
  9. 3.சிலப்.பக்.206,391.
  10. 4.சிலப். 11 : 17—22
  11. 1.கலி.
  12. 2.சிலப்.பக்.803
  13. 1.The Malay Archipelago,p412.
  14. 2.சிலப்.பக்.230
  15. 1.சிலப்.9:1
  16. 1.தோல்.பொ.649,உரை.
  17. 2.தோல்.போ.650, உரை.
  18. ”Foreign Notices of South India,p.41.
  19. Manual of the Administration of the madras presidency vol.I.p.4
  20. இலக்கிய வரலாறு பக்.11.
  21. இறையனார் பக்.7
  22. (மணிமே. 9:17-22)
  23. (மணிமே. 25:176-7)
  24. The illustrated weekly of india Aug 6 1939 p.73
  25. 1.கருணாமிர்தசாகரம்,1ஆம் பாகம்,பக்.26
  26. 1.மொழிநூல்,பக்.14.
  27. 1.Castes and Tribes of Southern India Vol I,pp.29,21.
  28. 2.Castes and Tribes of Southern India Vol I,p.24.
  29. 1.ஐங். 63
  30. 2.ஐங். 364
  31. 3.Vol.I.p.200
  32. 1. சீவ.4:80.
  33. 2. All About Birds, p.141.
  34. 1.The Hindu, July 3,1938.