கலைக்களஞ்சியம்/அஹிம்சை

விக்கிமூலம் இலிருந்து

அஹிம்சை என்பதன் பொருள் இன்னா செய்யாமை என்பதாகும். இன்னா செய்யாமைக்கு அடிப்படையாகவுள்ள அன்புடைமை என்னும் பண்பைத் தமிழ்மக்கள் உயிரினும் விழுப்பமுடையதாகப் போற்றி வந்துளர். திருவள்ளுவர் தமது திருக்குறளாகிய தமிழ் மறையில், “அன்பின் வழியது உயிர்நிலை” என்று அறிவுறுத்துகின்றார். திருமூலர், அன்பே சிவம் என்றும், அன்பு செய்வார்க்கே அருள் கிட்டும் என்றும், அருள் கிட்டியவரே முத்தியின்பம் துய்ப்பர் என்றும் கூறுகின்றார். பாரதியாரும், “துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் - அன்பிலழியுமடி - கிளியே - அன்பிற்கு அழிவில்லை காண்“ என்று பாடுகின்றார்.

அன்புடையவர்கள் இன்னா செய்யமாட்டார்கள். “அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதினோய்-தந்நோய் போற் போற்றாக் கடை“ என்று குறள் கூறுகிறது. எதற்காக இன்னா செய்தலாகாது என்று கேட்பின், “இறப்பநுமக்கு அடுத்த வெப்பநோய் யாவும் - பிறர்க்கும் அஃதாம் என்று கொண்மின்“ என்று பாரதமும், “பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா -பிற்பகல் தாமே வரும்“ என்று குறளும் விடை கூறுகின்றன.

பிறர் இன்னா செய்தால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியும் தமிழ்ப் புலவர்கள் தெளிவாகக் கூறியுளர். “பொறுத்தல் இறப்பினை என்றும், அதனை - மறத்தல் அதனினும் நன்று“ என்பது குறள். அவ்வாறு பிறர் இன்னா செய்யினும் தாம் மறுத்தின்னா செய்யாமையே மாசற்றார்கோள். இன்னா செய்யாதிருப் பதுமட்டும் போதாது; அதை உடனே மறந்துவிடவும் வேண்டும். “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது- அன்றே மறப்பது நன்று“ என்பதும் குறள். துன்பத்தை மறக்க முடியுமோ என்று வினவின், “இன்பமும் துன்பந்தானும் உள்ளத்தோடு இயைந்தவன்றே“ என்று கம்பர் கூறுகிறார். வள்ளுவர், “கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த -ஒன்றுநன் றுள்ளக் கெடும்“ என்று மறப்பதற்கு வேண்டிய உபாயத்தைக் கூறுகிறார்.

இன்னா செய்யாதிருக்க வேண்டும் என்று கூறுவது போலவே, கொலை செய்யாதிருக்க வேண்டும் என்றும் செந்தமிழ்ப் புலவர்கள் கூறுகிறார்கள். கொல்லாமையே தலையாய அறம் என்று வள்ளுவர் பன்முறை வற்புறுத்திக் கூறுகின்றார். பிற உயிர்களைக் கொல்லக்கூடாது என்று கூறுவதுடன் அமையாது, தன்னுயிர் நீங்கினும் தனக்கு நன்மை வருவதாயினும் கொலை செய்யற்க என்று வள்ளுவர் உரைக்கின்றார்.

இன்னா செய்தாரை ஒறுக்கவேண்டாவோ என்னின், “ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண்ணோடிப் - பொறுத்தாற்றும் பண்பே தலை“. “ஒறுத்தார்க் கொருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்-பொன்றுந் துணையும் புகழ்“ உண்டாகும். ஒறுக்க வேண்டியது அவசியமாகத் தோன்றினால், “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து“ விடுவதேயாகும். அவ்வாறு இன்னா செய்தார்க்கு இனியவை செய்வதே சால்பின் பண்பாம். சான்றோர்கள் தமக்கு இன்னா செய்தவர்க்கு இனியவை செய்ய“ முடியாவிட்டாலும், “தம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்” என்று வருந்துவார்கள் என்று நாலடியார் கூறுகின்றது.

இவ்வாறு இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யும் அன்புடைமையே சீவகாருண்யம் என்றும், சீவகாருண்யம் உடையவரே கடவுள் அருள் பெறுவர் என்றும், கடவுள் அருள் பெறுபவரே முத்தி அடைவர் என்றும் இராமலிங்க சுவாமிகள் கூறுகின்றார்.

மேலும் தமிழ்ச் சான்றோர்கள் தங்கள் கொள்கையின் உண்மையை நிலைநாட்டும் பொருட்டுத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தவறியதில்லை. திருநாவுக்கரசர் சைவத்தைப் போற்றியதற்காக அவர்க்குச் சமண அரசன் பலவகையான துன்பங்களைச் செய்தபோதும், அவர் அத்துன்பங்களையும் இன்பமாக ஏற்றுக்கொண்டார்; அரசனுக்கு அணுவளவு துன்பமும் எண்ணவில்லை. மெய்ப்பொருள் நாயனார், சிவவேடம் தரித்துவந்து தம்மைக்கொன்ற பகைவனையும் கொல்லாது பாதுகாத்துச் சிவவேடமே மெய்ப்பொருள் என்னும் தமது கொள்கையை நிலைநாட்டினார்.

இவ்வாறு தமது கொள்கைக்காகப் பிறர் துன்பம் செய்தால் அதை ஏற்றுக்கொள்வதும், துன்பம் செய்தார்க்கு மறுத்துத் துன்பம் செய்யாதிருத்தலுமே நலமாகும் என்று வள்ளுவர் கூறுகின்றார். இத்தகைய அறத்தையே மகாத்மா காந்தியடிகள் சத்தியாக்கிரகம் என்று அழைத்தார். இவ்வாறு தவம் செய்வார் தம்முடைய கொள்கையை ஆதரிப்பவர்க்கு நலம் தேடவும், வெறுப்பவரை வெல்லவும் கூடியவராவர் என்று வள்ளுவர் உறுதி கூறுகின்றார்.

இத்தகைய அஹிம்சையே தமிழர் பண்பாட்டில் தலையாயது என்று கூறின், தமிழ் மக்கள் போர் புரிந்தது எதனால்? ஆம், போர் புரிந்தார்கள். ஆனால் அவர்கள் போரையும் அறநெறியினின்றே ஆற்றினார்கள். “மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“ என்று மதுரை மருதனிளநாகனார் கூறுகின்றார்.அதனாலேயே அக்காலத்துத் தமிழ் மறவர்கள் போர் தொடங்குமுன் பசுக்களையும், பார்ப்பார், பெண்டிர், பிணியாளர், மூத்தோர், குழந்தைகள், பிள்ளை பெறாத ஆடவர் ஆகியவரையும் பாதுகாத்துப் பகைவீரர்களுடன் மட்டுமே போர் செய்தார்கள். அதனாலேயே அக்காலத்து மன்னர்கள், “அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்“ என்று அழைக்கப்பட்டனர். திருவள்ளுவ நாயனாரும், “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை“ என்று விளக்குகின்றார்.

ஆகவே தமிழர்களுடைய பண்பாடு அஹிம்சையை முதலாகவுடையது என்பதில் ஐயமில்லை. அதனாலன்றே அவர்கள் பெயக்கண்டும் நஞ்சுண்டு அமையும் நயத்தக்க நனி நாகரிகம் வேண்டுபவராயினர்.

இந்து தருமத்தில் அஹிம்சை : அஹிம்சை என்பது இந்திய நாட்டில் பண்டைக் காலம் முதற்கொண்டே ஓர் உன்னதமான ஆன்ம குணமாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. “ஒரு பிராணியையும் ஹிம்சிக்கக் கூடாது“ என்பது வேதவாக்கு. சில வேள்விகளிலே உயிர்வதை செய்தது உண்மைதான். ஆனால், இதை விலக்காக எடுத்துக் கொள்ளவேண்டுமே தவிர, விதியாகக் கொள்ளலாகாது. வைதிக காரியங்களிலேயும் பிராணி ஹிம்சை செய்வது தவறு என்பதை இந்தியர்கள் வெகு விரைவிலேயே உணர்ந்தார்கள். உதாரணமாக, மகாபாரதத்தின் ஒரு பகுதியில் 'யஜ்ஞ நிந்தை' யென்னும் தலைப்பின் கீழ் ஓர் உபாக்கியானம் கூறப்படுகிறது. காட்டில் வசிக்கும் ஒரு வைதிகப் பிராமணர், பிராணி ஹிம்சை செய்ய மனம் இல்லாதவராய்த் தாம் புரியும் வேள்விகளில் தானியங்களை யுபயோகிக்கின்றார். தருமமானது மான் உருக்கொண்டு வந்து அந்தப் பிராமணரைப் பார்த்து, “வெறுந் தானியங்களினால் தேவதைகளைத் திருப்தி செய்ய முடியாது. என்னை நீர் பலியிட்டு உம் வேள்வியைப் பூர்த்திசெய்வீர்“ என்று சொல்கின்றது. பிராமணர் முதலில் தயங்கினார்; பிறகு வேள்வியைச் செய்பவனும், பலியிடப்பட்ட விலங்கும் மேலான பதவியையடையும் என்று எண்ணித் தம் மனத்தைச் சாந்தப்படுத்திக்கொண்டு அம்மானைப் பலியிட்டார். அப்போது அவர் முன் செய்த நல்வினையெல்லாம் அழிவுற்றன. மானும் தன் உண்மை உருவத்தை யெடுத்துக்கொண்டு, அஹிம்சையின் மகிமையை அவருக்கு உபதேசித்தது, உயர்ந்த தருமம் அஹிம்சையே என்பது இக்கதையின் கருத்து. மகாபாரதம், அனுசாசன பருவத்தில் “அஹிம்சை மேன்மையான தருமம் ; அஹிம்சை மேன்யைான தவம் ; அஹிம்சை மேன்மையான சத்தியம் ; அதனின்றும் தருமம் பெருகுகின்றது“ என்று கூறுகின்றது.

பகவத் கீதையை ஹிம்சையை ஆதரிக்கும் நூல் என்று கருதுவோர் உளர். ஆனால், அவ்வாறு எண்ணுவது தவறு. கீதையின் நோக்கம் போர் புரிவிப்பது அன்று; பிறவிக்குக் காரணமாயுள்ள சோகத்தையும் மோகத்தையும் போக்குவதே. கீதையின் முதல் அத்தியாயத்திலும், இரண்டாவது அத்தியாயத்தின் தொடக்கத்திலும், அர்ஜுனன் சத்தியாக்கிரகியாகிப் “போர்புரிய மாட்டேன்” என்று சொல்லவில்லை; “எதிரே நிற்பவர்கள் என் உறவினர். ஆகையால் அவர்களைக் கொல்லமாட்டேன்“ என்கிறான். 'நான், எனது' என்பது துன்பத்திற்குக் காரணம். அதை அகற்றுவதுதான் கிருஷ்ணன் நோக்கம். விருப்பும் வெறுப்பும் இன்னா செய்தலுக்குக் காரணம். அவையகன்றால் எவ்வாறு இன்னா செய்ய முடியும்? ஞானத்தின் இலட்சணத்தைக் கூறும்போது, அஹிம்சையை ஒரு முக்கிய அமிசமாகக் குறிப்பிடுகின்றது கீதை.

எல்லாவிதத்திலும் எப்பொழுதும் எல்லாப் பிராணிகளிடத்தும் வெறுப்பின்மை அஹிம்சையென்று யோகசூத்திரத்தின் வியாச பாஷ்யம் உரைக்கின்றது. மனத்தாலும் சொல்லாலும் செய்கையாலும் உயிர்களுக்கு இன்னா செய்யாமை அஹிம்சை. “ஒருவன் அஹிம்சையில் நிலைத்து நின்றால் அவனுடைய மனத்தில் வைரம் சிறிதும் இராது.“ இது யோக் சூத்திரம். ரிஷிகளின் ஆச்சிரமங்களில் விலங்குகள்கூடத் தம் கொடுமையையும் வைரத்தையு மிழந்து சமாதான வாழ்க்கையில் ஈடுபட்டன என்று சொல்வதுண்டு. யோக வழியின் 'இயமம்', 'நியமம்' என்ற படிகள் அஹிம்சையை ஆதாரமாகக் கொண்டுள்ளன. பத்மபுராணத்தில் எட்டுவிதமான மலர்கள் ஈசுவரனுக்குப் பிரியமானவை யென்று சொல்லப்படுகின்றன. அவை : அஹிம்சை, புலனடக்கம், தயை, பொறுமை, சாந்தி, தவம், தியானம், சத்தியம்.

அஹிம்சை யென்பது இன்னா செய்யாமை மாத்திரம் அன்று; எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவதுமாம். அன்பே சிவம்; ஆனந்தமே ஆத்மா. நாம் வேறு, மற்றவர் வேறு என்ற தவறான அபிமானதான் வெறுப்புக்குக் காரணம். எல்லா உயிரிலும் ஆன்மா வொன்றே என்று உணர்ந்தால் நம் உள்ளத்தில் அன்புப் பெருக்குத் தானாகவே யுண்டாகும். மற்றவர்கள் நமக்கு எதைச் செய்தால் நாம் விரும்பமாட்டோமோ, அதை மற்றவர்களுக்கு நாம் செய்யாதிருந்தால் போதாது. மற்றவர்கள் நமக்கு எது செய்தலை விரும்புவோமோ, அதை நாம் மற்றவர்களுக்குச் செய்யவேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்பது இந்து மதத்தின் அடிப்படையான பிரார்த்தனை. எல்லாவிடத்திலும் உயிர்கள் சுகமாக இருக்க வேண்டும்; எல்லோரும் நோயற்று வாழவேண்டும்; யாவரும் நன்மையை யடையவேண்டும்; ஒருவரும் தீமையைப் பெறக்கூடாது; ஒருவிதத் துக்கமும் ஒருவரும் அடையக் கூடாது என்பதுதான் 'ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி :' என்ற மந்திரத்தின் கருத்து.

அவ்வாறானால் அஹிம்சை என்று எதிர்மறையாகச் சொல்வானேன் என்று கேட்கலாம். அதற்குக் காரணம் என்னவென்றால், ஹிம்சை என்பது அச்சத்தினால் ஏற்படுவது. மற்றப் பிராணிகள் வேறு, நாம் வேறு; அவற்றால் நமக்குத் தீங்கு உண்டாகலாம் என்ற எண்ணத்தினால் அச்சம் எழுகின்றது. வேற்றுமை எண்ணம் அஞ்ஞானத்தினால் உண்டாகிறது. ஆகையால் எப்பொழுது அஞ்ஞானம் ஒழிந்து ஆன்மஞானம் உதயமாகின்றதோ, அப்பொழுது ஹிம்சைக்கு ஏது இருக்காது. இந்த உண்மையைப் போதிப்பதுதான், 'அஹிம்சை, அபயம், அத்வயம்' என்ற எதிர்மறைச் சொற்களின் நோக்கம்.

இதனின்று இன்னொரு விஷயத்தை நாம் உணர வேண்டும். அதாவது: ஆன்மஞானிக்குத்தான் பூரணமான அஹிம்சை சாத்தியமாகும். “அஹிம்சா வாதத்தை எப்பொழுதும் அப்பியசிக்கும் யதிகளும் சில சமயம் ஹிம்சையைச் செய்கிறார்கள்; ஆனால் முயற்சியினால் இதைக் குறைத்துக் கொள்ளலாம்” என்று பாரதத்தின் வனபருவம் கூறியிருக்கின்றது. அஹிம்சையை நோக்கிச் செல்வதுதான் மனிதன் கடமை. இயன்ற வரையில் இந்தக் குணத்தை நாம் பெற முயல் வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும், அஹிம்சா தருமத்தைப் பின்பற்றினால் முத்தி பெறலாம்; உலகத்திற்கும் நலம் உண்டாகும். டி.எம்.பி.ம.

ஜைனர் கொள்கை : அஹிம்சை என்பது தடை அமிசம், செயல் அமிசம் என இரண்டு அமிசங்களை உடையது. எல்லா மதமும் தடை அமிசத்தை ஏற்றுக் கொள்வது போலவே ஜைன மதமும் ஏற்றுக் கொள் கிறது. “எவரையும் எதையும் கொல்லாதே, துன்புறுத்தாதே, அடிமையாக்காதே“ என்றும், “யாரிடமும் பகைமை கொள்ளாதே, யாரையும் அச்சுறுத்தாதே, ஆட்சி கொள்ளாதே“ என்றும் மகாவீரர் கூறுகிறார்.

ஜைனத்துறவிகள் யாரிடத்திலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஹிம்சையைக் கையாளக் கூடாதென்று தடுக்கப்படுகிறார்கள். அவர்கள் மனம் வாக்குக் காயம் மூன்றாலும் அஹிம்சையைக் கைக்கொள்ள வேண்டும். அவர்கள் கொல்லவோ அல்லது கொல்லும்படி செய்யவோ அல்லது கொல்லுவதற்கு இசையவோ கூடாது. ஹிம்சையானது இடம் பொருள் ஏவல் என்பவற்றுள் எதையும் பொறுத்ததன்று. அபாய காலத்தில் ஹிம்சை செய்யலாம் என்பதை ஜைன மதம் ஏற்றுக்கொள்வதில்லை.

சிலர் ஹிம்சை செய்யாமல் இருக்க முடியாத சந்தர்ப்பங்களில் ஹிம்சையைக் கையாள வேண்டியது அவசியமே என்று கூறுவர். ஆனால் அதை ஜைன மதம் ஏற்றுக்கொள்வதில்லை என்று ஜைன சுவேதாம்பர தேராபந்தியை நிறுவிய பிக்கான்ஜி ஆச்சாரியார் (Acharya Bhikhanji) வற்புறுத்துகிறார். இல்லறத்திலுள்ளவர்கள் சில சமயங்களில் ஹிம்சை செய்யாமலிருக்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால் அத்தகைய சமயங்களில் ஹம்சை செய்தே தீரவேண்டுமென்று கூறுவது அஹிம்சைத் தருமத்துக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கையாளப்பெறும் ஹிம்சையைச் சமூக மக்கள் பாதகமில்லை என்று கூறிவிடலாம். ஆனால் சமயவாதிகள் அவ்விதம் கூற முடியாது.

சகல மதங்களும் அஹிம்சையின் தடை அமிசத்தில் எந்தக் கருத்துடையனவாகத் தோன்றினும், செயல் அமிசத்தில் அவ்விதமில்லை. செயல் அஹிம்சையின் சில பண்புகள் அன்பு, இரக்கம், சேவை, பரோபகாரம் என்பனவாகும்.

அன்பு என்பது ஆசையோ,பற்றோ, பகைமையோ இல்லாத மன நிலைமையும் அதனால் உண்டாகும் செயல்களுமாம். இதுவே ஜைன மதக்கொள்கை.

ஜைனர்கள் அஹிம்சைத் தருமத்தை ஆன்ம விமோசன சாதனமாக மட்டுமே கருதுகிறார்கள். அதனால் கருணையோடு கூடிய சாதாரணச் சமூக சேவைகள் அதன்பாற்படா. ஆன்ம லாபம் தரும் சமூக சேவை ஒன்றே அஹிம்சைத் தருமத்தைச் சேர்ந்ததாகும். அஹிம்சையை மேற்கொள்ளுமாறு கூறுவதெல்லாம் ஆன்மா சமுசார பந்தத்தினின்று வீடு பெறுவதற்காகவே. ஆன்ம விடுதலை எண்ணம் இல்லாதவிடத்து அஹிம்சை பூரணமானதாக ஆகாது. ஆன்மாவைத் தூயதாகவும் செய்யாது. சாதாரண மக்கள் நாடோறும் கையாளும் அஹிம்சைச் செயல்களை ஸ்தித பிரக்ஞை நிலையின் அஹிம்சைத் தருமத்துக்குச் சமானமானதாகச் சொல்லுதலாகாது.

ஆனால் இத்தகைய அஹிம்சையை எல்லோரும் கையாள இயலாது. இது துறவிகளுக்குத்தான் சாத்தியமானது. ஆயினும் உலகத்தில் துன்பம் இல்லாமல் செய்யும் அளவுக்கு எல்லோரும் அஹிம்சைத் தருமத்தைக் கைக்கொள்ளுதல் அவசியமேயாகும். ஆதலால் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் ஹம்சை நிலையை மாற்றி அஹிம்சைச் சமூகத்தை நிறுவுவது ஒவ்வொருவருடைய கடமையுமாகும். து. க.

காந்தீய அஹிம்சை : அஹிம்சை தொன்றுதொட்டு ஒரு சிறந்த ஆன்ம குணமாக மதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. தனிப்பட்ட மனிதர்கள் அதைப் பேணி யிருக்கின்றனர். ஆனால் சமூகம், அரசியல் என்னும் துறைகளில் அஹிம்சையை உன்னத முறையில் முதன்முதல் கையாண்டவர் காந்தியடிகள்தாம். அவர் தென் ஆப்பிரிக்காவில் இந்தக் கருவியை முதன் முதல் கையாண்டார். அங்கே வெள்ளையர்கள் இந்தியர்களை நிறவேற்றுமையினால் துன்புறுத்தி வந்தார்கள் ; மனிதர்கள் என்றே அவர்களை மதிக்கவில்லை. வெள்ளையருக்கு ஒரு நீதியும், ஏனையோர்க்கு இன்னுரு நீதியும் வழங்கப்பட்டு வந்தன. இந்த வேற்றுமையைப் போக்கவேண்டி மகாத்மா காந்தி சத்தியாக்கிரகம் என்ற இயக்கத்தைத் துவக்கினார். சத்தியாக்கிரகம் என்றால் உண்மையைப் பற்றுவது என்பது பொருள். உண்மையிருக்கும் இடத்தில் ஹிம்சை இராது. ஹிம்சை உள்ளவரையில் உண்மைக்கு இடம் இல்லை. ஆகையால் நல்லது ஒன்றை நாம் சாதிக்க வேண்டுமானால், உண்மையையும் அஹிம்சையையும் பின்பற்றுவது அவசியம். வெள்ளையர் இந்தியர்களுக்குச் செய்துவந்தது அநீதி. ஆனால் அநீதியை அநீதியால் போக்க முடியாது; ஹிம்சை ஹிம்சையால் நீங்காது. இந்தத் தத்துவத்தையுணர்ந்து, மகாத்மா காந்தி சத்தியாக்கிரக இயக்கத்தை வகுத்தார். தவறான சட்டங்களையும் வழக்கங்களையும் எதிர்க்கவேண்டும். அவற்றையே துணையாகக் கொண்டவர்களோடு ஒத்துழைக்கக்கூடாது. இதனால் எவ்வளவு துன்பம் நமக்கு நேரிட்டாலும் அதைச் சகித்துக்கொள்ளவேண்டும். அடிபடுதல், சிறை புகுதல்,சாதல் ஆகியவற்றிற்கும் அஞ்சுதல் ஆகாது. அதேசமயத்தில் எதிரிக்குச் சிறிதேனும் துன்பம் இழைக்கக் கூடாது. அவனை அன்பினால் வெல்லவேண்டும், பகைமையால் அல்ல. நம்முடைய சகிப்புத் தன்மையாலும், சாந்த நெறியினாலும் அவனுடைய மனத்தை மாற்றவேண்டும். இவைகளே சத்தியாக்கிரகத்தின் தத்துவம். இதை அடிப்படையாகக் கொண்டு தென் ஆப்பிரிக்காவில் சாந்தப் போர் புரிந்து வெற்றி பெற்றார் காந்தியடிகள்.

தாய்நாடு திரும்பியதும், சத்தியாக்கிரக வழியில் சென்றால்தான் இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் என்று மகாத்மா காந்தி உணர்ந்தார். ஏற்கெனவே நிறுவப்பட்டிருந்த காங்கிரஸ் சபையைக் கருவியாகக்கொண்டு சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கத்தின் முக்கிய அமிசங்களாவன: 1. எதிரியோடு போர் தொடங்காதிருக்க வேண்டி எல்லா முயற்சிகளும் செய்யவேண்டும். 2. முயற்சிகள் பயன் அளிக்கவில்லையானால், எதிரி போருக்கு ஆயத்தம் ஆவதற்கு வேண்டிய அவகாசம் கொடுக்க வேண்டும். 3. சத்தியாக்கிரகிகள் தாங்கள் செய்யவேண்டியதை வெளிப்படையாகச் செய்ய வேண்டும். 4.அநீதியான சட்டங்களைச் சாந்த முறையில் எதிர்க்கவேண்டும். 5. எவ்வளவு துன்பம் ஏற்படினும், எதிரிக்குத் துன்பம் அளிக்காதிருக்க வேண்டும். 6. சட்டங்களை எதிர்ப்பதனால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். 7. இயக்கத்தின் நடுவே, சத்தியாக்கிரகிகள் தவறுகள் செய்தால், அவற்றைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். 8. சாந்த முறையில் இயக்கம் நடக்கவில்லையென்றால், தலைவர் இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும். 9. மறுபடியும் மக்களுக்குப் போதிய பயிற்சியளிக்கவேண்டும். இராட்டையில் நூல் நூற்றல், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை நாடுதல், கிராம முன்னேற்றம், ஹரிஜன சேவை முதலியவை அஹிம்சா மனப்பான்மையை வளரச் செய்யும். 10. சில சமயம் தலைவர் உண்ணாவிரதமும் இருக்க நேரிடும். இவ்வாறு மகாத்மா காந்தி அன்பு வழியில் சுதந்திரப் போரை நடத்தினார். தீமையோடு ஒத்துழைக்காமல் இருப்பது, தீமையை எதிர்த்துப் போராடுவது, தீயவர்களுக்குத் தீமை இழைக்காதிருப்பது, அவர்களின் மனத்தை மாற்றுவது முதலியவை சத்தியாக்கிரக வழி. 1947-ல் இந்தியா வெற்றி பெற்றது; அன்புப் படைக்கலங்களால் போர் புரிந்து விடுதலையடைந்தது. மத வேற்றுமை, சாதிச் சண்டைகள், உலக யுத்தங்கள் ஆகியவற்றையும் அஹிம்சா தருமத்தைக் கொண்டு நீக்கவேண்டும் என்று மகாத்மா காந்தி பாடுபட்டார். மற்ற நாடுகளின் தலைவர்கள்கூடக் காந்தியடிகள் காட்டிய வழியின் மேன்மையை இப்பொழுது உணர்ந்து வருகிறார்கள். டி. எம். பி. ம.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அஹிம்சை&oldid=1455982" இலிருந்து மீள்விக்கப்பட்டது