குமண வள்ளல்/குமணன் அரசு துறத்தல்

விக்கிமூலம் இலிருந்து

7. குமணன் அரசு துறத்தல்

குமணன் பெருஞ்சித்திரனரிடம் அன்பு பூண்டதுபோலவே வேறு பல புலவர்களையும் ஆதரித்தான். வர வர அவனைத் தேடி வரும் புலவர்கள் கூட்டம் அதிகமாயிற்று. அவர்களுக்கு வேண்டியவற்றை வாரி வாரி வழங்குவதில் அவ் வள்ளல் சிறிதும் சளைக்க வில்லை. புலவர்களுடன் பேசி இன்புறுவதும் விருந்து அருந்துவதும் பரிசில் வழங்கி விடை கொடுப்பதுமே, அவனுடைய பொழுது போக்காக இருந்தன.

அரசனுக்கு நாடுகாவல் முதலிய கடமைகளும் உண்டு. அவற்றையும் கவனித்துச் செய்யாவிடின் பகைவர்கள் அவனை வீழ்த்துவதற்கு வேண்டிய சூழ்ச்சியைச் செய்வார்கள். குமணனுடைய நிலையும் அப்படி ஆயிற்று. ஆனால் அவனுக்குப் புறப் பகைவர் யாரும் இல்லை. அயல் வேந்தர்களும் அயல் நாடுகளில் உள்ளவர்களும் அவனிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். புலவர்கள் பரப்பிய புகழ் அவர்கள் காதில் விழுந்து அத்தகைய மதிப்பை உண்டுபண்ணியது.

ஆனால் அவனுடைய சொந்தத் தம்பிக்கு அவன் செய்வது பிடிக்கவில்லை. புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்துக் குமணன் ஓட்டாண்டி யாகிவிடுவான் என்று அவன் அஞ்சினன். ‘இன்னும் சில காலத்தில் இவன் தன் நாட்டை விற்றுக் கொடுக்க வேண்டியது தான். வரும் புலவர்களுக்கு யானையையும் குதிரையையும் நெல்லையும் பொன்னையும் கொடுத்துக் கொண்டிருந்தால் எவ்வளவு வருவாயுள்ள நாடாக இருந்தாலும் ஒரு நாள் வரவு வற்றிப் போய்விடும். அப்படி வந்தால் இவன் எப்படியாவது வாழ்வான்; அல்லது மானம் கருதித் தற்கொலை செய்துகொண்டாலும் செய்துகொள்வான். இவனோடு சேர்ந்து நாமும் துன்புற வேண்டியிருக்கும். அதற்குமுன் நாம் அறுத்துக்கொண்டு போவதே நலம்’ என்ற எண்ணம் அவனிடம் வன்மையாக உண்டாயிற்று.

அண்ணனிடம் பணிவாக நடந்துகொண்டிருந்தவன் எதிர்த்துப் பேசத் தொடங்கினன். அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் தடுத்தான். அரண்மனைக்கு வரும் புலவர்களிடம் கடுகடுவென்று நடந்து கொண்டான்.

குமணனுக்கு அவன் ஒருவன்தான் தம்பி. யாவரும் அவனை இளங் குமணன் என்று வழங்கி வந்தனர். நாளுக்கு நாள் அவனுடைய முரண்பாடு மிகுதியாகி வந்தது. அதைக் குமணன் கவனித்தான். அவனுக்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று.

“இப்படியே வாரி இறைத்துக்கொண்டிருந்தால் எல்லாவற்றையும் இழந்துவிட்டு நீயும் ஒரு நாள் புலவனைப்போல நாலு தமிழ்ப் பாட்டைப் பாடிக்கொண்டு யாரிடமாவது போய் இரந்து வாழ வேண்டியதுதான். உன்னைச் சார்ந்தவர்களெல்லாம் ஆலாய்ப் பறப்பார்கள்” என்று அவன் நேரிலே தன் தமையனைக் கண்டிக்கத் தொடங்கினன்.

“தமிழ்ச்சாதி கொடையிலும் வீரத்திலும் இணையற்ற சாதி, அப்பா. இந்த நாட்டில் மன்னர் குலத்தில் பிறந்து செல்வமும் பெற்று வாழ்வது அச் செல்வத்தை நாமே துய்ப்பதற்காக மாத்திரம் அன்று. இல்வாழ்பவன் யாராக இருந்தாலும் செல்விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருக்கும் இயல்புடையவனாக இருக்கவேண்டும். செல்வனாக இருந்தால் செழுங்கிளை தாங்கி விருந்தினர்களைப் பேணி அறம் செய்ய வேண்டும். மன்னராகப் பிறந்துவிட்டாலோ ஆலமரம் பல பறவைகளுக்கு இடமும் உணவும் கொடுப்பதுபோலச் சுற்றத்தாரையும், விருந்தினர்களையும், புலவர்களையும், பாணர் கூத்தர் ஆகியவர்களையும் பாதுகாக்க வேண்டும். அவர்களை ஆதரிப்பதனால் நாம் கெட்டுப் போகமாட்டோம். ஒருகால் நம் செல்வம் குறைய, வறுமை வந்தாலும் அந்த வறுமையை நாம் வரவேற்க வேண்டும். ஒருவருக்கும் கொடுக்காமல் சேமித்துவைத்து வாழும் செல்வத்தைவிடப் பிறருக்குக் கொடுத்து உண்டாகும் வறுமை சிறந்தது.”

“இந்த அறிவுரைகள் எல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கின்றன. இவற்றையே புலவர்கள் பாட்டாகப் பாடி உன்னைப் போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். உண்மையில் அவர்கள் பாட்டாக உனக்கு ஓதியதைத்தான் இப்போது பேச்சாக என்னிடம் சொல்கிறாய். அரசன் கொடுக்கவேண்டும் என்று சொல்கிறாய். ஆனல் அதற்கு ஓர் அளவு இல்லையா? அரசன் தன் நாட்டைப் பாதுகாக்க வேண்டாமா? சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரம் எழுதவேண்டும்? பொழுது விடிந்து பொழுது சாய்கிற மட்டும் புலவர்களோடு இருந்து பேசிப் பேசிக் கழித்துவிட்டால் நாடு வளம் சுரக்குமா? பகைவர்கள் சும்மா இருப்பார்களா? இவன் கையாலாகாதவன் என்று கருதிச் சமயம் பார்த்து நம் நாட்டைக் கைப்பற்றுவதற்குரிய சூழ்ச்சியைச் செய்ய மாட்டார்களா? அவர்கள் ஒருநாள் திடீரென்று படையெடுத்து முற்றுகையிட்டால் இந்தப் புலவர்கள் ஏட்டையும் எழுத்தாணியையும் ஏந்திக் கொண்டு நமக்குப் போரில் வெற்றி வாங்கித் தரப் போர்க்களம் புகுவார்களா?"

இளங்குமணன் தன் வாதத்தை வளர்த்துக் கொண்டே போனான் குமணன் எதிர் பேசவில்லை. அவன் சொல்வனவற்றில் நியாயம் இருக்கிறதா, இல்லையா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவில்லை. 'கொடையையும் புலவரையும் இவன் விரும்பவில்லை. நம்மையும் விரும்பவில்லை' என்பது ஒன்றையே அவன் சிந்தித்தான். 'இனி இவன் நம்முடன் மனம் பொருந்தி வாழமாட்டான்' என்பதையும் தெரிந்துகொண்டான்.

"உனக்கு உள்ள கவலைகளை நான் ஒருவாறு உணர்ந்தேன். என்னுடைய செயல்கள் உன் மனத்துக்குப் பொருந்தவில்லை என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. நான் வறியவனாகிவிட்டால் நீயும் வறுமையால் வாட நேரும் என்ற அச்சம் உனக்கு உண்டாவது இயல்புதான். நான் எப்படிப் போனாலும் என்னைப்பற்றிய கவலை உனக்கு வேண்டியதில்லை. நீ சுகமாக வாழ வழி வகுக்கிறேன் ” என்று குமணன் சொன்னான். அவன் தன் மனத்தில் ஏதோ ஒன்று செய்ய முடிவு கட்டினான்.

"என்ன வழி வகுக்கப் போகிறாய்? என்னையும் பாட்டுப் பாடும் புலவனாக்கிவிடலாம் என்ற எண்ணமோ?" என்று சொல்லித் தன் இகழ்ச்சி தோன்றச் சிரித்தான் இளங்குமணன்.

"புலவர்கள் என்றால் உனக்கு ஏன் அப்பா அவ்வளவு இழிவாக இருக்கிறது? மன்னர்களுடைய புகழை நிலைநிறுத்தும் பெருமையுடையவர்கள் அவர்கள். இது உனக்குத் தெரியவில்லையே! அது கிடக்கட்டும். நீ என்னுடன் பிறந்தவன். நான் கெட்டுப் போவேன், அதோடு உனக்கும் கேடு வரும் என்ற அச்சம் உனக்குத் தோன்றியிருக்கிறது. நீ வறுமையை அடையாமல் உன்னைப் பாதுகாத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறேன். அதற்கு ஏற்ற வழி ஒன்று செய்ய எண்ணுகிறேன்."

"என்ன வழி?" என்று பரபரப்புடன் கேட்டான் இளங்குமணன்.

"உன்னைத் தனியாக வாழும்படி வகை செய்கிறேன்."

"புலவர்களுக்கு அவ்வப்போது பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்புவது போல எனக்கும் கொடுத்துத் தனியே இருக்கும்படி செய்யலாம் என்ற எண்ணமோ?"

"அதற்குள் அவசரப்படுகிறாயே! நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நாளைக்குத் தெளிவாகச் சொல்கிறேன்" என்று அன்றைப் பேச்சைக் குமணன் அதனோடு நிறுத்தினான்.

அன்று இரவு முழுவதும் குமணனுக்குத் துாக்கமே வரவில்லை. சில காலமாகத் தன் தம்பி தன்னிடத்தில் மனம் மேவாமல் இருக்கிறான் என்பதை அவன் தெரிந்துகொண்டிருந்தான்.இப்போதுநேருக்கு நேரே அவன் தன் வெறுப்பைக் காட்டிக்கொண்டுவிட்டான். 'அவனை என்ன செய்வது? ஒறுப்பதா? தமையன் தன் தம்பிக்குத் தீங்கு இழைத்தான் என்று உலகம் பழிக்காதா? தான் சுகமாக வாழ வேண்டுமென்று அவன் விரும்புகிறான், அப்படி விரும்பும் உரிமை அவனுக்கு உண்டு. அவன் அப்படியே வாழட்டும். நம்முடைய நாடு விரிந்தது. இதில் ஒரு பகுதியை அவனுக்கு வழங்கி, அவன் விருப்பப்படியே வாழும்படி செய்துவிடலாம். தந்தையின் நிலபுலன்களை மக்கள் பிரித்துக் கொண்டு வாழ்வதில்லையா? அதுபோல இதுவும் இருக்கட்டுமே!' என்று தீர்மானம் செய்தான்.

மறு நாள் இளங்குமணனிடம் முதிரத்துத் தலைவன் தன் கருத்தை வெளியிட்டான். அதை அவன் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் அவனும் யோசித்தான். "இப்படிச் செய்ய அமைச்சர்களும் சான்றோர்களும் ஒப்புக்கொள்வார்களா?" என்று கேட்டான்.

"அவர்களை உடன்படும்படி நான் செய்கிறேன். இந்த நாட்டை நான் ஒருவனே ஆள்வதைவிட இரண்டு பேர் பிரித்துக்கொண்டு ஆள்வது நல்லது தானே?" என்று குமணன் கூறினான்.

அன்றுமுதல் நாட்டைப் பிரித்துத் தன் தம்பிக்கு ஒரு பகுதி வழங்கும் வேலையில் ஈடுபட்டான் குமணன். இளங்குமணன் தன் கட்சி வென்றதை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். இன்னபடி யெல்லாம் வாழ வேண்டும் என்று மனத்தில் கோட்டை கட்டினான்.

நாடு இரண்டாயிற்று. குமணன் ஒரு பகுதியையும், அவன் தம்பி இளங்குமணன் மற்றொரு பகுதியையும் ஆளத் தொடங்கினர். குமணனது அரண்மனையில் புலவர்கள் வழக்கம்போல் வந்து பரிசில் பெற்றுச் சென்றார்கள். இளங்குமணனே தானும் தன் மனைவி மக்களும் எவ்வளவு மிகுதியான இன்பத்தை நுகரலாமோ அவ்வளவும் நுகர முயன்றான். புலவர்களுக்கு அவனிடம் வேலை இல்லை. தமிழ் நாட்டில் எங்கும் இல்லாதபடி குமணன் தன் நாட்டைத் தம்பிக்குப் பிரித்துக் கொடுத்தான் என்ற செய்தி பரவி அவ்வள்ளலுடைய பெருமையை மிகுதியாக்கியது.

தனியாகப் பிரிந்து அரசனாக வாழ்ந்த இளங் குமணனுக்கு மண்ணாசை மிகுதியாயிற்று. தான் பெற்ற நாடு போதாதென்று எண்ணினான். தன் தமையனுடைய நாட்டையும் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற பொல்லாத எண்ணம் அவன் மனத்தில் முளைத்தது. குமணனும் அவனும் ஒன்றாக வாழ்ந்தபோது அவனுக்கு இருந்த அச்சம் இப்போது மாறியிருக்கும் என்றுதான் குமணன் நினைத்தான். அதற்கு மாறாக இளங்குமணன் இருந்தான். "குமணன் மக்கள் இன்றி இறந்தால் இந்த நாடு முழுவதையும் ஆளும் உரிமை எனக்குத்தானே கிடைக்கும்? இப்போது எனக்குக் கிடைத்திருப்பது ஒரு பகுதிதானே?" என்று நினைக்கும் அளவுக்குத் தம்பி மாறிவிட்டான் என்பதை அண்ணன் உணர்ந்து கொள்ளவில்லை.

இளங்குமணன் தன் அண்ணனுடைய நாட்டையும் எப்படிப் பறிக்கலாம் என்று யோசித்துப் பார்த்தான்; 'கேட்டு வாங்க முடியாது. தன்னிடம் நாடு இருந்தால்தான் புலவர்களுக்கு விருப்பப்படி அவன் பொருளை வீச முடியும். அவன் நாடு வைத்திருப்பது இதற்காகத்தான். அவன் ஈகையை நிறுத்தவும் மாட்டான். அதற்கு ஏற்ற செல்வ வருவாயையுடைய நாட்டைத் தரவும் மாட்டான். வஞ்சகத்தினலோ, போரினாலா அந்த நாட்டை வெளவிக்கொள்வதுதான் வழி' என்று தெளிந்தான். 'என்ன செய்வது? எப்படிச் செய்வது?’ என்று ஆலோசனை செய்தான். அவனுக்கு ஏற்ற அமைச்சர்கள் இருக்கமாட்டார்களா? அவர்களோடும் சேர்ந்து சூழ்ச்சி செய்தான்.

“உங்கள் தமையனர் இப்போதும் தம்முடைய கொடையை நிறுத்தவில்லை. இப்படியே இருந்தால் ஏதேனும் ஒரு நாள் நாட்டையே விற்றுவிட வேண்டியதுதான்” என்றான் ஓர் அமைச்சன்.

“நான் அதை முன்பே எதிர்பார்த்தேன். என் கருத்தை வெளிப்படையாகவும் அவனிடம் சொன்னேன்” என்றான் இளங்குமணன்.

“வேற்று நாட்டு மன்னன் அவருக்குப் படைப் பலம் ஒன்றும் இல்லாமல் இருப்பதை அறிந்தால் அவரை எதிர்த்துப் போர் செய்ய முயன்றாலும் முயலலாம்” என்று வேறு ஓர் அமைச்சன் சொன்னான்.

“அதையும் நான் முன்பே அவனுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று இளங்குமணன் கூறினான்; “அப்படி வேறு ஒருவன் படை எடுத்து வந்து கைக்கொள்ளும் அந்த நாட்டை நாமே கைப்பற்றினால் என்ன என்றுதான் எண்ணமிடுகிறேன். எப்படியும் அவன் தன் நாட்டைத் தொலைத்துவிடப் போகிறான். அது வேறு யாருக்காவது போவதைவிட உரிமையுள்ள எனக்கு வருவது முறை அல்லவா? வேறு அரசன் படையெடுத்து வந்து போரிட்டு நாட்டைத் தன்னுடையதாக்கிக் கொண்டால் அவன் எதிர்க்கப் போவதில்லை. அதற்குரிய வலிமை அவனிடம் இல்லை. அயலான் நாளைக்குச் செய்கிற காரியத்தை நாம் இன்றே செய்தால் என்ன என்று யோசிக்கிறேன்” என்று அவன் மீண்டும் கூறினான்.

“அப்படிச் செய்வது நல்லதுதான். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் நாம் நம்முடைய படைப்பலத்தைப் பெருக்கிக் கொள்ளவேண்டும்” என்று அமைச்சன் ஒருவன் சொன்னான்.

“ஆம்; அதுவே தக்க வழி” என்று முடிவு செய்தார்கள்.

அன்று முதல் இளங்குமணன் படை கூட்டினான். இவன் எந்த நாட்டின்மேல் படையெடுக்கப் போகிறான்? என்று மக்கள் எண்ணமிட்டார்கள். அவர்களுக்கு அவனுடைய தீய நினைவு தெரியவில்லை. போதிய படைகள் சேர்ந்துவிட்டன என்று தெரிந்து கொண்டபோது, ‘இனி நம் சூழ்ச்சியை நிறைவேற்றப் புகவேண்டும்’ என்ற ஆசை இளங்குமணன் உள்ளத்தில் இடம் கொண்டது. படையைப் பெருக்கிய அரசனும் ஆயுதம் பிடித்த வீரனும் இரும்பு பிடித்த கையும் சும்மா அமைதியாக இருக்குமா?

குமணனுக்கு தன் தம்பி செய்து வரும் சூழ்ச்சி எள்ளளவும் தெரியாது. தம்பி படை சேர்க்கிறான் என்ற செய்தியை யாரோ அவன் காதில் போட்டார்கள். “புதிய நாடு ஆதலால், யாரேனும் வந்து தாக்குவார்கள் என்ற அச்சம் இருக்கலாம். அதனால் பாதுகாப்பின் பொருட்டுச் சேர்க்கிறான் போலும்” என்று அந்த நல்லோன் கூறினான்.

ஒரு நாள் திடீரென்று இளங் குமணனிடமிருந்து ஓலை ஒன்று வந்தது. “உங்கள் நாட்டின்மேல் நாம் படையெடுப்பதாக முடிவு கட்டியிருக்கிறோம். நாட்டை நம்மிடம் விட்டுவிட்டால் போர் செய்ய வேண்டிய அவசியம் இராது. இல்லையானல் போரிட்டுக் கைப் பற்றத் துணிந்தோம்” என்ற அறைகூவலைத் தாங்கி வந்தது அது. அதைப் பார்த்தான் குமணன். ‘தம்பியா இதனை அனுப்பியிருக்கிறான்?’ என்று அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்? இதை அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சற்றே யோசித்துப் பார்த்தான். இளங்குமணன் கொண்ட மண்ணாசை அவன் மன இயல்புக்கு ஏற்றபடியே வளர்ந்து விட்டதை ஒருவாறு உணர முடிந்தது. ஓலையை மறுபடியும் வாசித்தான். அவன் அறிவு சுழன்றது. தலையில் கைவைத்து யோசித்தான்.

‘போர்! என் தம்பி என்னைப் போருக்கு அழைக்கிறான்! இந்தா. உனக்கு என் நாட்டைப் பிரித்துக் கொடுக்கிறேன் என்று சொல்லித் தனியே வாழ வைத்த என்னோடு போர் தொடுக்கத் துணிந்திருக்கிறான். அட மண்ணாசையே! அப்பொழுதே நாடு முழுவதும் வேண்டுமென்று கேட்டிருக்கலாமே ஒரேயடியாகக் கொடுத்திருப்பேனே!. இப்போது, அண்ணனும் தம்பியும் போர்க்களத்தில் நின்று உலகம் கைகொட்டிச்சிரிக்கப் போரிடவேண்டும் என்று அவன் விரும்புகிறான். இந்தக் குலத்தின் பெருமை எங்கே! இந்த நினைவு எங்கே அண்ணனும் தம்பியும் போர்க் களத்தில் சந்தித்து உலகையே அழிவுப் பாதையில் செலுத்திய கதைதான் இன்று பாரதமாக வளர்ந்திருக்கிறதே! அது போதாதென்று மற்றொரு குட்டிப் பாரதப் போரை நிகழ்த்த வேண்டுமென்று இவன் எண்ணுகிறான்? அந்தப் பழைய பாரதத்தைப் பாட ஒரு வியாசர் இருந்தார். இந்தப் போரை யாரும் புகழமாட்டார்கள். அண்ணன் தம்பிகளுக்குள் சண்டையா என்று காறித் துப்புவார்கள். இதுகாறும் புகழில் வளர்ந்து வந்த இந்தக் குலத்துக்கே மாசு உண்டாகிவிடும். அவன் இளமை மிடுக்கில் இப்படிச் செய்யத் துணிந்தான் என்றால், நாமும் அது சரியென்று போர் செய்யப் புகுவதா? அவன் உள்ளத்தில் பெரும் புயல் அடித்தது. உலகமே அவன் அகக் கண் முன்னே சுழன்றது. வேறு அரசன் இப்படி ஓலை அனுப்பியிருந்தால், நம் அமைச்சர்களையும் சான்றோர்களையும் படைத் தலைவர்களையும் கூட்டி என்ன செய்வது என்று யோசனை செய்யலாம். இந்த வெட்கக் கேட்டை யாரிடம் சொல்வது? என் தம்பி போருக்கு வரப் போகிறான், வாருங்கள் எல்லோரும்; அவனை எதிர்த்து அழிக்கலாம் என்று திட்டமிடுவதா? என்னுடன் பிறந்தவனை நானே அழிப்பதா!’ அவன் உடம்பு சற்றே குலுங்கியது. அப்படி நினைக்கவே அவன் அஞ்சினான்.

‘அவனை வென்று நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு ஓட்டிவிடலாம் என்று சிலர் சொல்லக் கூடும். நானே கொடுத்த நாட்டை நானே மீண்டும் பெற்றுக்கொள்வதா? கொடுத்ததை வாங்கும் இழிவான செயலை இதுவரையில் நான் செய்ததில்லை. இரந்தவர்களுக்கு எதிரே இல்லை என்று சொல்வதை விட அது மிகவும் இழிந்த செயல்.’ அவன் தன் தம்பிக்காக இரங்கினான்; பின்பு சினங் கொண்டான். ‘போர் செய்வதா, இல்லையா?’ என்ற கேள்வி அவன் உள்ளத்தைக் கொக்கி போட்டு இழுத்தது.

‘போர் செய்தால் ஒன்று வெல்ல வேண்டும்; அல்லது தோல்வியுறவேண்டும். வென்றால் கொடுத்ததை மீட்டும் பெற்ற பாவம் வரும்; தோற்றால் பழி உண்டாகும். வென்றாலும் பாவம், தோற்றாலும் பழி என்பது உறுதியானால் ஏன் போர் செய்யவேண்டும்?’ இப்படி அவனுடைய சிந்தனை திரும்பியது. நீர்ச் சுழியிலே சிக்கிச் சுழலும் துரும்பு போல உள்ளம் சுழன்று தடுமாறியது.

அவன் நன்றாக வாழவேண்டுமென்று விரும்பினான்; அந்த விருப்பத்தை அறிந்து நாமே அவனுக்கு நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தோம். இப்போது, இந்த நாடு முழுவதையும் அவன் ஆள வேண்டும் என்று விரும்புகிறான். அந்த விருப்பத்தையும் நிறைவேற்றிவிட்டால் ஒரு தொல்லையும் இல்லையே! அவன் போர் செய்து வெல்வதானால் அவனுக்கும் பழிதான் உண்டாகும். அவனுக்கு நாடு முழுவதையும் நல்கிவிட்டால் போரால் விளையும் தீங்கினின்றும் இரு நாட்டினரும் உய்வதோடு, நமக்கும் புகழ் உண்டாகும்.

இந்த எண்ணம் அவனுடைய மயக்கத்திலே ஓரளவு தெளிவை உண்டாக்கியது. அந்தக் கருத்தையே உறுதி செய்துகொண்டான். தன் தம்பிக்கு அவன் மறுமொழி எழுதியனுப்பினான். “போர் செய்வது எதற்கு? உனக்கு நாடு முழுவதும் வேண்டும் என்றால் நீயே எடுத்துக்கொள். நமக்குள் போர் உண்டானல் யார் வென்றாலும் யார் தோற்றாலும் உலகம் பழிக்கும். இந்த நாட்டை நீ ஆண்டால் என்ன? நான் ஆண்டால் என்ன? இரண்டும் எனக்கு ஒன்றுதான்” என்று ஓலை எழுதி ஒரு தூதுவனிடம் கொடுத்தனுப்பினன்.

ஓலை இளங் குமணனை அடைந்தது. அவன் அதைப் பார்த்தான். அவனுக்கு ஒரு வகையில் ஏமாற்றம் உண்டாயிற்று. ‘இவ்வளவு முயன்று நாம் ஒரு படையைச் சேர்த்தோமே! அதற்கு வேலை இல்லாமல் போய்விடும்போல் இருக்கிறதே!’ என்ற ஏமாற்றந்தான் அது. தன்னுடைய அமைச்சர்களை அழைத்து வைத்துக்கொண்டு மேலே செய்யவேண்டியதைப்பற்றி ஆராய்ந்தான்.

"இதில் சூழ்ச்சி ஒன்றும் இராதே?" என்று கேட்டான் ஓர் அமைச்சன்.

"அவனுக்குச் சூழ்ச்சியே தெரியாது” என்று இளங்குமணன் சொன்னான்.

"அப்படியானல் அவர் எங்கே இருப்பார்?"

"நம் அரண்மனையில் அவனும் இருக்கிறான். அவனக்குச் சோறு போடுவதனால் நமக்குக் குறைந்து விடுமா?" என்று இளங்குமணன் சொன்னான்.

"அவர் நல்லவராக இருந்தாலும் அவரைச் சேர்ந்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவரை உடன் வைத்துக்கொள்வது எப்போதும் தீங்கு பயக்கும்" என்று ஒருவன் கூறினான்.

"பின்னே என்ன செய்யலாம்?" - யாவரும் சேர்ந்து ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன் விளைவாக மற்றோர் ஓலை குமணனுக்குச் சென்றது.

"நாட்டை நம்மிடம் ஒப்பித்துவிடுவதாக எழுதியதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் குமணனுக்கு நாட்டில் எந்த விதமான உரிமையும் இராது. நமக்கு அடிமையாய் வாழ வேண்டும். இல்லையானல் நாட்டைவிட்டு ஓடிவிடவேண்டும்" என்பது ஓலையின் வாசகம். என்ன கொடுமையான உள்ளம்!

குமணன் அந்த ஓலையைக் கண்டு திடுக்கிடவில்லை. இளங்குமணனுடைய போக்கை அவன் தெளிவாக உணர்ந்துகொண்டான். 'நாட்டை அவனிடம் கொடுத்துவிட்டு அவன் போடும் சோற்றை உண்டு வாழ்வதைவிடக் காட்டிற்குப் போய்க் கனி கிழங்குகளை உண்டு உயிர் வாழலாம். இறைவனைத் தியானித்துத் தவம் புரியலாம்' என்ற நெறியில் அந்தக் குண மலையின் உள்ளம் எண்ணமிட்டது. 'இனி நமக்குத் துறவியைப் போன்ற வாழ்க்கையே தக்கதென்று இறைவனே நியமித்திருக்கிறான். அரசனாகப் பிறந்தமையால் பொருளும் இன்பமும் நமக்கு உரிமையாக இருந்தன. பொருளைக் கொண்டு அறம் செய்தோம். இனி வீட்டு நெறிக்கு வேண்டியதைச் செய்யவேண்டும் என்பது இறைவனது திருவுள்ளம்போலும்!' என்று நினைந்து அமைதி பெற்றான். அரசைத் துறப்பதற்கு ஆயத்தமானான்.

இந்தச் செய்தியைக் கேட்ட மக்கள் உள்ளம் குலைந்தனர். இராமரைக் காட்டுக்கு ஓட்டிய கைகேயியிடம் அயோத்திவாசிகளுக்கு உண்டானது போன்ற கோபம் இளங்குமணனிடம் மூண்டது. "என் தம்பி நாட்டை ஆளும் திறத்தில் சிறந்தவன். அவன் உங்களையெல்லாம் நன்றாகப் பாதுகாப்பான். நான் அவனுக்கு நாட்டைக் கொடுத்துச் செல்வதனால் உண்டாகும் பயன் நீடிக்க வேண்டுமானால் என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை அவனிடமும் காட்ட வேண்டும். ஒரு குளத்தில் பூத்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் வேறுபாடு இல்லை. ஆகையால், எனக்கு விடை கொடுங்கள்" என்று குமணன் வேண்டிக்கொண்டான். அதைக் கேட்டுக் கல் மனமும் உருகியது. மகளிர் இரங்கினர். குழந்தைகளும் அழுதன.

குமணன் நாடு துறந்து காட்டுக்குப் போய்விட்டான். இளங்குமணன் போரின்றியே நாடு முழுவதையும் தனதாக்கிக் கொண்டு ஆட்சி புரியலானான்.