குறட்செல்வம்/பகுத்துண்ணாமையும் கொலையே

விக்கிமூலம் இலிருந்து


39. பகுத்துண்ணாமையும்

கொலையே



திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்பினைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ஙனமின்றி இந்த அதிகார முறை வைப்புகள் திருவள்ளுவரால் செய்யப் பெறவில்லை என்றும், பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனர் என்றும் கூறுவாரும் உண்டு.

யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடி வைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்க மிருக்கிறது. பயன் இருக்கிறது.

ஒரு செய்தியை ஒருதடவைக்குப் பத்து தடவை திரும்பத் திரும்ப நினைத்தாலேயே நெஞ்சகம் அந்த நெறியில் ஈடுபடுகிறது. அதனால் ஒரு நன்னெறியினைப் பல வகைகளில் பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உணர்தலே வாழ்க்கைக்கு ஏற்றமுறை என்பதால் அதிகார அமைப்பு சாலச் சிறந்ததேயாம்.

இங்ஙனம் தனித்தனி நெறிகளுக்கு ஏற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று. உயிர்கள் உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தி தம்மை வளர்த்து உயர்த்திக் கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ்வியலுக்கு ஏற்றவாறு இசைந்துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை — உறவை, பாதுகாப்பது ஒரு பேரறம்.

ஆதனாலன்றோ, "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்" என்றார் திருமூலர். உடம்பிற்கும் உயிருக்கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே கொலை என்று கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பே யாயினும் உயிர்க் கொலை என்றே கூறுகிறோம். காரணம் உடம்பு இல்வழி உயிரின் இயக்கமும் — துய்த்தலும் நுகர்தலும் வளர்ச்சியும் — இல்லாது போதலினாலேயாம்.

அதுபோலவே உயிர்தாங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலை, பேரறம் என்றும் கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கம் இல்லை. உடலியங்காவழி உயிர்க்கும் இலாபமில்லை.

அதனாலேயே உடல், உயிர், உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாகும். அதுபோலவே உடல், உயிர், உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர்மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.

திருக்குறளில் கொல்லாமை என்று ஓர் அதிகாரம் உண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்து, கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாக கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி அடுத்த குறளில்,

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார். இந்த குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு?

இதனை விருந்தோம்பலில் கூறக் கூடாதா? அல்லது ஈதலில்தான் கூறக் கூடாதா? இங்ஙனம் அங்கெல்லாம் கூறாமல் கொல்லாமை அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடப் பெரிய கொலைக் குற்றம் உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாக விடுவதும் ஆகும் என்பதனை உணர்த்த இங்கு கூறினார்.

கூடி வாழும் மனித சமுதாயத்தில் சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக விளங்கும் மனிதனுக்கு சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு. உரிமைகளும் உண்டு. சமுதாயத்தில் ஒரு உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றி சாகவிடும் சமுதாயம் கடமை உணர்வு இல்லாத சமுதாயமாகும். அதையே ஒரு கொலைகார சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும்.

கத்தி எடுத்துக் கொன்றால் மட்டுமே கொலை என்பதன்று. பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து பலரையும் பேணி வளர்க்காமல், சோறிட்டு மருந்து முதலியன வழங்கி பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே, இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது.

இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கிக் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்ற வினா எழுந்தால் மறுப்பார் யார்?

o o o