தமிழின்பம்/சேரனும் கீரனும்

விக்கிமூலம் இலிருந்து

22. சேரனும் கீரனும்

தமிழ்நாடு தன்னரசு பெற்று வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழி தலைசிறந்து விளங்கிற்று. தமிழறிந்த மன்னர் ஆட்சியில் முத்தமிழும் முறையே வளர்ந்தோங்கித் திகழ்ந்தது. அறிவினைக் கொல்லும் வறுமை வாய்ப்பட்டு வருந்திய தமிழ்ப் புலவர்களைத் தமிழ் நயமறிந்த அரசர் ஆதரித்துப் போற்றுவாராயினர்.

சேர நாட்டை ஆண்டுவந்த பெருஞ்சேரல் என்ற அரசன் ஆண்மையிலும் வண்மையிலும் சிறந்து விளங்கினான். அம்மன்னன் சோழ நாட்டை ஆண்ட வளவனையும், பாண்டி நாட்டை ஆண்ட மாறனையும் வென்று ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்த அதிகமானின் வலியழித்துத் தமிழுலகம் போற்றத் தனிக் கோலோச்சி வந்தான். சேரமானது படைத்திறங்கண்டு அஞ்சி, அவனடி தொழுத முடிவேந்தர் பலராயினர்.

இத்தகைய கீர்த்தி வாய்ந்த சேரமானது கொடைத் திறத்தினைக் கேள்வியுற்ற மோசிகீரனார் என்ற தமிழ்ப் புலவர், அம் மன்னனிடம் பரிசு பெற்றுப் பசிப்பிணி அகற்றக் கருதி, நெடுவழி நடந்து அரண்மனை வாயிலை நண்ணினார். அப்பொழுது சேரமான் ஒர் அணிவிழாக் காணுமாறு வெளியே சென்றிருந்தான். ஆயினும் அரண்மனை வாயில் அடையாதிருந்தமையால் கீரனார் இடையூறின்றி உள்ளே சென்றார். மன்னனுக்குரிய மாளிகையின் அழகையும் அமைப்பையும் கண் குளிரக் கண்டு களித்தார். மாடத்தைச் சூழ்ந்திருந்த சோலையின் வழியே தவழ்ந்து வந்த மெல்விய தென்றல் நறுமணம் கமழ்ந்தது. நெடும் பசியால் நலிந்து, வெயிலால் உலர்ந்து, வழிநடையால் வருந்தித் தளர்வுற்ற தமிழ்ப்புலவர், அரண்மனையில் இருந்து இளைப்பாற எண்ணினார். அதற்கு ஏற்ற இடத்தை நாடுகையில், மாளிகையின் ஒருபால் அழகிய மஞ்சம் ஒன்று தோன்றிற்று. அம்மஞ்சத்தில் மெல்லிய பஞ்சு அமைந்த மெத்தையிட்டு, அதன்மீது பாலாவி போன்ற பூம்பட்டு விரித்திருந்தது. மஞ்சத்தைக் கண்ட புலவர் நெஞ்சம் பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல் அதன்மீது படர்ந்தது; வண்ணப் பூஞ்சேக்கையைக் கையினால் தொட்டு இன்புறக் கருதி, அதன் அருகே சென்றார். மருங்கு செல்லச் செல்ல அம்மஞ்சம் அவர் மனத்தை முற்றும் கவர்ந்து தன் வசமாக்கிக்கொண்டது. கையினால் அதன் மென்மையை அறிய விரும்பி அணுகிய புலவர் மெய்ம்மறந்து அதன்மீது சாய்ந்தார்; அந் நிலையில் என்றும் அறியாத பேரின்பமுற்றார்: அவ்வின்ப சுகத்தில் மற்றெல்லாம் மறந்து சற்றே கண் முகிழ்த்தார். இயற்கை நலமறிந்த புலவரை இளைப்பாற்றக் கருதிய தமிழ்த் தென்றல் இன்புறத் தவழ்ந்து போந்து அவர் கண்களை இறுக்கியது. அருந்தமிழ்ப்புலவர் இனிய உறக்கத்தில் ஆழ்ந்தார்.

கந்தை உடுத்த செந்தமிழ்ப் புலவர் இவ்வாறு கவலையற்று உறங்குகையில் சேரமான், தானைத் தலைவர் புடைசூழத் தன் மாளிகையை வந்தடைந்தான்; விழா வணி கண்டு மகிழ்ந்த அமைச்சர்க்கும்

தானைத் தலைவர்க்கும் விடை கொடுத்த பின்பு, சிறிது இளைப்பாற எண்ணினான். விழாவிற்காக அணித் திருந்த ஆடை அணிகளையும், உடைவாளையும் களைந்தான்; அரண்மனை ஒடுக்கத்திற் போந்து இளைப்பாறக் கருதி வீர முரசத்திற்குரிய மணி மஞ்ச மாடத்தின் வழியே சென்றான்; அங்கே பழுத்த மேனியும் நரைத்த முடியும் வாய்ந்த பெரியார் ஒருவர் தளர்ந்து கண்வளரக் கண்டான்; அவரது முகத்தின் விளக்கத்தால் அவர் வாக்கில் ஒளியுண்டெனத் துணிந்தான்; அவரனிந்திருந்த பழுதுற்ற உடையினைக் கண்டு பூமகளால் புறக்கணிக்கப்பட்டவர் எனத் தெளிந்தான்;

"இருவே றுலகத் தியற்கை திருவேறு
 தெள்ளிய ராதலும் வேறு”

என்னும் பொருளுரையை நினைந்து பொருமினான்; அருந்தமி ழறிந்த புலவரது மேனி தோய்ந்ததால் வீரமணி மஞ்சம் புனித முற்றதெனக் கருதி மன மகிழ்ந்தான்; அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாவலர்க்குப் பணி செய்யக் கருதி, மஞ்சத்தின் அருகே கிடந்த பெருங் கவரியைத் தன் வலக்கையால் எடுத்து வீசிநின்றான்; செங்கோலும் வெம்படையும் பற்றிப் பழகிய கையினால் சேரமான் பணியாளர்க்குரிய கவரியைப் பற்றிக் குழைத்துக் கவிஞர்க்குப் பணி செய்வானாயினான்.

உறக்கம் தெளிந்த கீரனார் தளர்வு தீர்ந்து கண் விழித்தார்; மெல்லிய மஞ்சத்திலே தாம் படுத்திருப்பதை யும், காவலன் அதனருகே நின்று கவரி வீசுவதையுங் கண்டு உளம் பதைத்தார்; தாம் கண்ட காட்சி கனவோ நனவோ என ஐயுற்று மனம் குழம்பினார். கீரனது மன நிலை அறிந்த சேரன். அவ் அறிஞரைப் பற்றி நின்ற ஐயத்தையும் அச்சத்தையும் ஒருங்கே அகற்றக் கருதி, அன்பளாவிய இன்பமொழி இயம்பினான். அம்மொழி கேட்ட கீரனார் திடுக்கிட்டெழுந்து மன்னனுக்குச் செய்த பிழையை நினைந்து மனம் பதைத்தார்: மெய் முழுதும் நடுங்க, கண்கள் அச்சத்தால் இடுங்க, மஞ்சத்தினரின்றும் இறங்க முயன்றார். இங்கனம் பாவலர் மனமும் மெய்யும் வருந்தக் கண்ட சேரமான். அன்புடன் அமர்ந்து நோக்கி, மென்மொழி பேசி, அவர் மனத்திலிருந்த அச்சத்தை மாற்றினான். புலவரும் ஒருவாறு மனந்தேறி, நடுக்கம் தீர்ந்து, மன்னவன் பெருமையை மனமாரப் புகழலுற்றார். செந்தமிழ் இன்பமே சிறந்த இன்பமெனக் கருதிய சேரமான் செவி குளிர, “அரசே! மெல்லிய பூம்பட்டு விரித்த வீர மஞ்சத்தில் எளியேன் அறியாது ஏறித் துயின்றேன். அப்பிழை செய்த என்னை நீ இலங்கு வாளால் பிளந்து எறிதல் தகும். எனினும் தமிழறிந்தவன் என்று கருதி என்னை வாளா விடுத்தாய்! இஃது ஒன்றே தமிழன்னையிடம் நீ வைத்துள்ள அன்பிற்குச் சாலும். அவ்வளவில் அமையாது, படைக்கலம் எடுத்து வீசும் நின் தடக் கையினால் கடையேற்குக் கவரி வீசவும் இசைந்தனையே! நின் பெருமையை ஏழையேன் என்னென்று உரைப்பேன்!” என்று புகழ்ந்து அவனடிகளில் விழுந்து வணங்கினார். தமிழ்ச் சொல்லின் சுவையறித்த சேரமான், அடிபணிந்த புலவரை ஆர்வமுற எடுத்தணைத்து, பல்லாண்டு அவர் பசி நோய் அகற்றப் போதிய பரிசளித்து விடை கொடுத்தனுப்பினான்.