பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 159


அசைகின்ற மூங்கிலின் துளையுள்ள இடங்களிலே, அழகிய மேல்காற்றினால் எழும் ஒலியானது குழலின் இசையாகவும், இன்னொலியுடனே வீழுகின்ற் அருவியின் இனிய ஓசையே தொகுதியுடைய முழவின் இசையாகவும், கலைமான்களின் கூட்டம் தாழ ஒலிக்கும் கடுங்குரல் பெருவங்கியத்தின் ஒலியாகவும், மலையத்துப் பூஞ்சாரலிலே யுள்ள வண்டுகளின் ரீங்காரமே இனிய யாழிசையாகவும், இங்ஙனம் இனிய பலவாகிய இசைகள் கானத்திலே விளங்கும். அவற்றைக் கேட்டு மந்திகளாகிய நல்ல திரள் ஆரவார மிக்கவாயின; வியப்புடனும் அவற்றை நோக்கின.

மூங்கில்கள் வளர்ந்திருக்கும் மலையடுக்குகளிலே உலாவி ஆடுகின்ற மயிலினங்கள், களத்திலே புகுந்து ஆடும் விறலி) யாரைப் போலத் தோன்றும். அத்தகைய மலைநாட்டை யுடையவன் ஒரு தலைவன். புதுமலர்களாலாகிய தாரினை மார்பிலே அணிந்தவன் அவன். அச்சந்தரும் வில்லினைக் கையிலே பற்றியவனாகச் சிறந்த அம்புகளைத் தெரிந்து எடுத்துக் கொண்டு, தன்னால் அம்பு எய்யப் பெற்ற யானையானது சென்ற நெறியினைக் குறித்து வினவியவனாக, முதிர்ந்த கதிரினையுடைய தினைப்புனத்தின் வாயிலிலே, ஒருபுறமாகவுந்து நின்றனன். அப்படி நின்ற அவனைக் கண்டோர், குறமகளிர் தம்முள்ளே பலராவர்.

அவர்களுள், அரிய இருள் செறிந்த இரவிலே, அணையோடு முகஞ்சேரப் பொருந்திக் கிடந்து, நீர் சொரியும் கண்ணோடு, மெலிந்த தோள்களை உடையேனாக, யான் ஒருத்தி ன் மட்டுமே வருத்தமுறல் ஆகியதுதான் என்னையோ?

சொற்பொருள்: 1. குயின்ற செய்யப்பட்ட தாமே துளையுடையனவாகியவையுமாம். கோடை - மேல்காற்று. 3. பாடின் அருவி - ஒலியினிய அருவி. துதைவு - செறிவு. 5. இகுத்தல் - தாழ்த்தல், தூம்பு - பெருவங்கியம். குரல் கலையினோசை, 9 இயலி - உலாவி.

விளக்கம்: எங்கும் இன்பம் ஒலிக்கும் நாட்டினையுடைய யான், பலரையும் விடுத்து எனக்கு மட்டுமே துன்பஞ் செய்தனன் என்று சொல்லுதலின் மூலம், தான் அவன்பால் மனம் ஈடு பட்டதனைத் தோழிக்குக் கூறி அறத்தொடு நிற்கின்றாள் தலைவி.

83. கூம்புவிடு நிகர் மலர்

பாடியவர்: கல்லாடனார்.திணை: பாலை. துறை: தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: கள்வர் கோமான் புல்லி, வேங்கடத்துத் தலைவன்.