பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 9


காட்டி, அவள் ஆற்றாமையைப்போக்க முயல்கிறாள் அவளுடைய தோழி.)


முல்லை வைந்துனை தோன்ற, இல்லமொட
பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மாஇரு மருப்பின்,
பரலவல் அடைய, இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்ப, 5

கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே, கவின்பெறு கானம்;
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள்பு அரிய,
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த 10

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,
உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,
கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது,
நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தட் 15

போதவிழ் அலரின் நாறும் -
ஆய்தொடி அரிவை!-நின் மாணலம் படர்ந்தே.

தெரிந்தெடுத்த அழகிய தொடிகளை அணிந்த அரிவையே!

முல்லையிலே கூர்மையான நுனியை உடைய அரும்புகள் தோன்றின. தேற்றாமரத்தின் முகைகளும், பசிய அடி மரத்தினை உடைய கொன்றை மரத்தின் மொட்டுக்களும், மெல்லிய தம் பிணிப்பு அவிழ்ந்து மலர்ந்தன. இரும்பினை முறுக்கினாற் போலப் பெரிய கருமையான கொம்புகளையுடைய ஆண்மான்கள், பரற் கற்களையுடைய பள்ளங்களில் எல்லாம் துள்ளிக் குதிக்கின்றன. மலர்ச்சி பெற்ற நிலமெல்லாம், மழையற்ற தம் வறட்சியை விட்டொழித்துவிட்டன. வானம் இடி முழங்கி, மழைத் துளிகளை விரைந்து சிதறிக் கார்ப்பருவத்தையும் தோற்றுவிக்கின்றது. அதனால், கானமும் புதியதோர் அழகினைப் பெறுகின்றது.

குறுமலை நாட்டினனான நின் தலைவன், ஆரவாரிக்கும் ஒலி மிகுந்த விழவினையுடைய உறந்தை மாநகருக்குக் கீழ்ப் பாலுள்ளதாகிய நீண்ட பெரிய மலையினிடத்தே, நெருங்கிய காந்தளின் இதழ்கள் கட்டவிழ்ந்து மலர்ந்தால், நின்னுடைய மாட்சிமையுடைய அழகினை அவ்விடத்தே நினைந்து விடுபவன்!