பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 37


மேற்செல்லாது நின்ற எருமைக்கடாக்களை அடித்து உரப்பி ஒட்டுகின்ற தெளிவான ஒலிகள், ஊர் ஒருமிக்கத் திரண்டு எழுந்தாற்போன்ற ஆரவாரத்துடன் கேட்கும். அவை நெடிய பெரிய மலையிலே எதிரொலி உண்டாக வந்து இசைக்கவும் செய்யும். பக்க மலைகள், கடுமையான கதிரவனின் கதிர்கள் தாக்கி முறுகிய மூங்கில்கள் அடர்ந்தனவாக விளங்கும். தம் உடலிலே சேற்றினைப் பொருந்திய பெரிய களிறுகள் உரசுதலால், காய்ந்த மண்ணைப் பொருந்தியவாக விளங்கும் அடிமரங்களுடன் யாமரங்கள் தோன்றும், கவர்த்த வழிகள் பலவற்றையுடைய, கடத்தற்கு அரிய சுரம் அது. அதன் பக்கங்களிலே, நீண்ட அடிமரங்களை உடைய இலவரமரத்தின் முதிர்ச்சிமிக்க பலவாகிய பூக்கள், விழாவினை மேற்கொண்ட பழைய ஆற்றலையுடைய முதிய ஊரிலே ஏற்றிவைத்த நெய்பெய்த விளக்குகளின் சுடர் தெரித்து விழுவதுபோலக் காற்றுப் பொருதலால் சிதறி வீழும். மரத்தில் பூக்களும் மிகச் சில வாகிப்போம். விடியற்காலத்துத் தோன்றும் விண்மீன்களைப் போல அவை பின்னர் அருகித் தோன்றும். மேகங்கள் பொருந்தும் பெருமலைகள் குறுக்கிட்டுக் கிடக்கும் அத்தகைய சுரநெறியிலேயும் அவள் நடந்து சென்றனளே!

ஏதிலாளனான அவள் காதலன்து நெஞ்சத்தைத் தனக்கே உரியதாகப் பெற்ற, என் சிறிய மூதறிவுடைய மகளது, சிலம்பு விளங்கும் சிற்றடிகள்தாம், அவ்வழிச் செல்லுவதற்கும் வல்லனவாமோ? ('ஆகாவே' என எண்ணி நைந்தது இது.)

சொற்பொருள்: 19. சிறுமுதுக் குறைவி - பருவத்து இளையளாயினும்அறிவினாலே மிகுந்திருப்பவள்.11. உரு உட்கு. 13. தெழித்தல் - உரப்புதல்.12. மடுத்த - போகாது சண்டித்தனம் செய்த 13. பகடு - எருமைக் கடா.14, இமிழ் - இசை 15 பிறங்கல் - மலைப்பக்கம்.18. ஊழ்கழி முறைமை மிகுந்த.

விளக்கம்: பந்தாடுதலும் கழங்காடுதலும் தமிழகச் சிறுமியர் ஆடும் விளையாட்டுக்களாம். அதற்கே உடல் வருந்திற்று என்பவள், எங்ங்ணம் போயினளோ எனப் புலம்புகிறாள். “பகடு மடுத்த நெறி, கடுங்கதிர் வேய் திருகிய நெறி, மண் அரை யாத்த நெறி, கவலையை அதர்படுநெறி, இலவத்துப் பன்மலர் கால்பொரச் சில்கிய நெறி' என வழியின் வேணற்கொடுமையைக் கூட்டி உணர்க.

18. பகல் வரினும் வருக!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தோழி 'இரவு வருவானைப் பகல் வர' என்றது.