பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 95



ஒடும் புனல், கால்வாய்களிடத்திலே மணல்மேடுகளைக் கரைத்து நுண்மணலாக்கி அயிரிடுதல் போலே, எம் காதலரின் நெஞ்சமும் எம்பால் நெகிழ்வுற்றுத் தம் பொருட் பிணிப்பு அவிழுமாறு, கொடியவராகிய அவர் சென்றிருக்கும் நாட்டிடத்தே,கொஞ்சமேனும் அயர்வில்லாமல், இப்படிப்பட்ட தன்மையுடையையாகிச் செல்வாயாக! அப்படி நீ சென்றனையானால், செயலின் மீதிலேயே பெருவிருப்பம் உடையவராய் எம்மை மறந்திருக்கும் அவர், எம்மை நினைவு கூர்தலும் உளதாகும் என்று, பிரிவின்கண் வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதுரச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 1. விரவுமலர் - பலவண்ணமாக விரவிக்கிடக்கின்ற மலர்கள். 4. தாழ்பெயல் - குறைந்த பெயல். 6. விளியும் எவ்வம் - இறக்குந் துயரம் 8. கண்ணரு துவலை இடங்கள் எல்லாம் பரவுதலான பனித்துளிகள். 8. முளரி - தாமரை. பால்நாள் - பாதிநாள் 9. நெகிழ்ப்பு - நெகிழச் செய்தல்.10. போறி - போலும், 11. குப்பை மணல்மேடு. 14. விதுப்புறுநா - வேட்டையுடையவர். -

பாடபேதங்கள்: 5 வருநசை உள்ளம். 6. விளியா எவ்வம்: விளிய வெவ்வம்.

164. நல்ல காலம் இதுவே!

பாடியவர்: மதுரைத் தமிழ்க்கூத்தன் நாகன்தேவனார். திணை: முல்லை. துறை: பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

(தன் தலைவியைப் பிரிந்து, வேந்தனின் படையிலே வினையேற்றுச் சென்று, பாசறைக்கண் தங்கியிருந்தான் ஒரு தலைவன். கார்காலம் வந்ததும் அவனுக்குத் தன் காதலி தன் வரவை எதிர்பார்த்து ஏங்கியிருக்கும் காட்சி நினைவுக்கு வருகின்றது. வேந்தன் போரை முடித்துவிட்டானென்றால் நாமும் சென்று அவளை இன்புறுத்தலாமே என்று நினைக்கின்றான்.)

        கதிர்கை யாக வாங்கி ஞாயிறு
        பைதறத் தெறுதலின் பயங்கரந்து மாறி,
        விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம்
        காடுகவின் எதிரக் கனைபெயல் பொழிதலின்:
        பொறிவரி இனவண்டு ஆர்ப்பப் பலவுடன் 5

        நறுவி முல்லையொடு தோன்றி தோன்ற
        வெறியேன் றன்றே வீகமழ் கானம்-