உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 107



திருந்திய அணிகளையுடையவளான அவள், மறையும் கதிரும் மங்கிவிட்ட தனிமைகொண்ட இம்மாலை வேளையிலே, மிகவும் பசலைபடர்ந்த உடலினளாயிருப்பாள்! நெடிதும் நம்மையே நினைந்துநினைந்து, தன் மெல்லிய விரலினை நெற்றியிலே சேர்த்தியவளாகவும் இருப்பாள்! கயல்மீன் உமிழ்கின்ற நீரினைப்போல அவள் கண்களிலே நீர்நிறைந்து ஒழுகிக்கொண்டிருக்கும். அத்துடன், தன் பெரிய தோள்களும் மெலிந்து போன துயரத்தோடும் அவள் வருந்திக் கொண்டிருப்பாள். நெஞ்சமே அவள்தான் இரங்கத்தக்கவள்’

என்று, தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

விளக்கம்: புலி விட்டுச் சென்ற களிற்றினை, மறவரும், உமணரும் உண்டு களித்தல்போல, அவனாற் கைவிடப்பெற்று அழகு அழிந்த அவள் நலனைப், பசலையும் புலம்பும் கைக்கொண்டு களிக்கும் என்பதாம்.

சொற்பொருள்: 1. தலை - உச்சி, ‘மரம் முதலாகக் கரிந்து நிலம் எல்லாம் பயன் இழந்து வாடிவிட என்றும் சொல்க. 2. அலங்கு கதிர் - அசைந்து வருகின்ற கதிராகிய ஞாயிறு. வேய்ந்த - சூழ்ந்து மூடிய, 4. கலிகெழு ஆரவாரம் கெழுமிய, காழ் கொம்பு. 5. ஞெலிகோல் - தீக்கடை கோல். 6. அமிழ்து - உப்பு. கணம் சால் - கூட்டம் மிகுந்த 10. செல்கதிர் - மாலைச் சூரியன். மழுகிய - மழுங்கிய, 1. மெல்விரல் சேர்த்திய நுதலின் இது கவலைகொண்டவர் செய்யும் இயல்பான செயல்.12. கயல் உமிழ் நீர் - மீன் உமிழுகின்ற நீர்; ஒப்புமையாயிற்று 3. செல்லல் - துன்பம், 14 திருந்திழை - திருத்தமுற அமைந்த அணிகலன்கள்.

பாடபேதங்கள்: 2 வயங்குகதிர் விளங்கு கதிர். 10. செல்சுடர் மழுங்கிய 13 நெகிழ்த்த செல்லல்.

170. நண்டு விடு தூது

பாடியவர்: மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார். திணை: நெய்தல். துறை: தலைமகள், காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது.

(கடற்கரைப் பாங்கிலேயுள்ள ஊரவளான தலைவி ஒருத்தி, பல நாட்களாகவும் தன் காதலனைக் காணாதவளாக, நினைந்து நினைந்து வருந்தினாள். தாங்கள் கூடிமகிழ்ந்த இடங்கள் பலவும் , சென்று, அவையெல்லாம் தங்களுடைய பழைய நினைவுகளை எழுப்ப, இப்படி உரைக்கின்றாள்.)