உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 165



(தலைவன் குறித்தகாலத்து வராதவனாக, அவனைப் பிரிந்த ஏக்கத்தின் மிகுதியினாலே, தன் எழில் நலம் எல்லாம் குன்றிய வளாகத் தலைவி வாடி நலிந்தாள். அவளுடைய நலிவு கண்டு உள்ளம் வருந்தினாள் அவளுடைய தோழி. அவளைத் தேற்று பவளாக இவ்வாறு கூறுகின்றாள்.)

        மாமலர் வண்ணம் இழந்த கண்ணும்,
        பூநெகிழ் அணையின் சாஅய தோளும்
        நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த
        தொன்னலம் இழந்த துயரமொடு, என்னது உம்
        இனையல்-வாழி; தோழி-முனை எழ 5

        முன்னுவர் ஒட்டிய முரண்மிகு திருவின்,
        மறமிகு தானைக், கண்ணன் எழினி
        தேமுது குன்றம் இறந்தனர் ஆயினும்,
        நீடலர் யாழநின் நிரைவளை நெகிழத்
        தோள்தாழ்வு இருளிய குவைஇருங் கூந்தல் 10

        மடவோள் தழீஇய விறலோன் மார்பில்
        புன்தலைப் புதல்வன் ஊர்புஇழிந் தாங்கு,
        கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு
        இனம்சால் வேழம், கன்றுஊர்பு இழிதரப்,
        பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீத்தி, 15

        ஒள்ளினர்க் கொன்றை ஓங்குமலை அத்தம்
        வினைவலி யுறுஉம் நெஞ்சமொடு
        இனையர்ஆகி, நப் பிரிந்திசி னோரே.

தோழியே நீ வாழ்வாயாக! தம் கரிய குவளை மலரினைப் போன்ற அழகினை, நின் கண்கள் இழந்தன. அழகு நெகிழ்ந்த தலையணையைப்போல, நின் தோள்களும் தம் பூரிப்பற்றுவாடின. இப்படி, நன்மை உடையவரான ஆயமகளிர்கள் தாமும் பெற விரும்பினவராக, முன்னெல்லாம் ஆராயும் நின் பழைய நலத்தினை இழந்தனை யாயினை. இத்தகைய துயரத்துடன், எள்ளளவும் இனியும் வருந்தாதிருப்பாயாக!

தோள்களிலே தாழ்ந்து தொங்கிய இருண்டு திரண்ட அடர்த்தியான கூந்தலை உடையவளான, மடப்பத்தையுடைய தன் இளைய மனைவியைத் தழுவிக் கொண்டிருக்கும் ஆற்றல் மிகுந்தவனின் மார்பிலே, புல்லிய தலையினையுடைய அவர்களின் புதல்வன் ஏறி இறங்குவதுபோல -