பக்கம்:அஞ்சலி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152 லா. ச. ராமாமிருதம்

ஆனால், அம்மாவுக்கு மனம் வரவில்லை. எனக்கும் உடல் பலஹீனமாாய்த்தான் இருந்தது. ஆனால், இருப்புக் கொள்ளவில்லை. துப்பட்டியைத் தள்ளிக்கொண்டு உட்கார்ந்தேன்.

என் நிலையே எனக்கு இன்னமும் சரியாய் விளங்கவில்லை. தூரத்து மேகம்போல் மறதிப்புழுதி படர்ந்து கொண்டே அழிந்துகொண்டிருக்கும் சில கோடுகளோடு ஞாபகங்கள் நினைவுத் திட்டில் எழும்ப முயன்றன.

பட்சி என் மடியில் வீழ்ந்து செத்து ஒரு மாதமாகி இருக்கும். அன்றிரவிலிருந்து எனக்குக் கடுஞ்சுரம். அப்பா தான் என்னை வயல் புறத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்ததாக அம்மா சொன்னாள். அன்றிலிருந்து கண்ணுந் திறவா கடுஞ்சுரம். இப்போத்தான் ஒரு வாரமாய்ச் சற்றுக் குணம்.

எனக்கு ஜூரம் வருவானேன்? புரியவில்லை. சற்று யோசனை செய்தாலும் யோசனையே அசதியாயிருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். இரு தோள்களிலும் பின்னல் வழிய, சற்றே தலையவிழ்ந்த மொக்குப் போன்று சற்றுத் திறந்த வாயுடன் ஒரு முகம் தோன்றிற்று. இப்பொழுதுதான் கவனித்தேன். அவள் மூக்கு எவ்வளவு கூர்மையாயிருந்தது!

“வால்மீகி, யாருடா அந்தப் பெண்? அதுதாண்டா வந்து சொல்லத்து, நீ வயல் மேட்டுலே மூர்ச்சையாய்க் கிடக்கேன்னு. இதுவரை மூணுதடவை உன் உடம்பை விசாரிக்க வந்தாள். மூணுதடவையும் நினைப்பில்லாமல் கிடந்தே, இல்லை தூங்கிண்டிருந்தே. அவள் எப்படிடா அப்படித் தினம் ஒரு தினுசா உடுத்திண்டு வராள்? அவாத்திலே அவ்வளவு துணிமணியிருக்குமா என்ன? ஆனால் எப்படி உடுத்துண்டாலும் அவளுக்குப் பாந்தமா இருக்கு, சிலபேர் உடல் வாகு அப்படி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/162&oldid=1033469" இலிருந்து மீள்விக்கப்பட்டது