பக்கம்:அஞ்சலி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186 லா. ச. ராமாமிருதம்

எனக்கு இந்த அடையாளங்கள் அருமை என்றதற்காகவே அவைகளை அழித்துக்கொணடிருக்கிறாள். இவளை நான் என்ன பண்ண முடிகிறது? இவள்மேல் எனக்கு இருக்கும் ஆசை ஆரோக்கியமானதில்லை. எனக்கே நன்றாய்த் தெரிகிறது; எல்லாவற்றையும் நாஸ்தியாக்கும் ஒரு விபரீத வெறி.

அவளுக்கு வாசிக்கவும் தெரியவில்லை. தனக்கு வாசிக்கத் தெரியவில்லை என்பது அவளுக்குத் தெரியவில்லை, அல்லது தெரிந்துதானிருந்ததோ? என்னவோ கண்ணால் கண்டேன். கண்டதைக் கையிலெடுத்தேன்—கையிலெடுத்துக் கலைத்தேன் என்கிறரீதி—

“அதோ பார்!” அவள் கவனம் மாறிவிட்டது. வீணையைப் பொத்தெனக் கீழே வைத்துவிட்டு ஜன்னலண்டை ஓடினாள்.

நான் வீணைமேல் உறையையிட்டு மூடினேன். குழந்தைகளைக் கோபித்துக்கொள்ள முடியுமோ? என்று என்னையே சமாதானம் பண்ணிக்கொண்டேன். அவளிடம் ஒரு விபரீதமான குழந்தைத்தனமிருந்தது. விளையாட்டாகவே வீட்டுக்கு நேருப்புவைக்கும் விபரீதக் குழந்தைத்தனம். அந்தக் குழந்தைத்தனத்தால், தனக்கோ பிறர்க்கோ நேரக்கூடிய தீங்கை அவள் அறியாள், அவளுக்கு அதைப் பற்றி அக்கறையுமில்லை.

“இங்கோ வான்னா!—”

வீணையை அதனிடத்தில் வைத்துவிட்டுப் பணிவாய்ப் போய் அவள் பின் நின்றேன்.

இரு காற்றாடிகள். ஒன்று சிவப்பு ஒன்று வெள்ளை. ஆகாயத்தில் ஒன்றையொன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தன.

“இவையிரண்டும் சண்டையிடப் போகிறது—” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/196&oldid=1033490" இலிருந்து மீள்விக்கப்பட்டது