உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அஞ்சலி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192 லா. ச. ராமாமிருதம்

“நான்தான், கதவைத் திற.”

“நான் இன்னும் குளித்து முடியல்லையே, என்ன அவசரம்?”

“பரவாயில்லை திறவேன்—”

கதவுத் தாழ்ப்பாள் விலகிற்று. கதவு மெதுவாய்த் திறந்தது.

“என்ன வால்மீகி?”

அவள் அவசரமாய்த் தன் மேல் ஆடையை சுற்றிக் கொண்டிருந்தாள். கூந்தல் சிங்கத்தின் பிடரிபோல் கனத்து, முரண்டு, விசிறிக்கொண்டு பின்னோக்கி எழுந்தது. தோள்களில் நீர்த்துளிகள் ஸ்படிகம் போல் நின்றன. சந்தன சோப்பின் மணம் கப்மென அவளிடமிருந்து எழுந்தது.

“காயத்ரீ!” அவளைத் தழுவிக்கொள்ள முயன்றேன்.

“என்னைவிடு—விட்டுடு—விடுன்னு” தன்னை விடு வித்துக்கொள்ள முயன்றாள். ஆயினும் அவள் இடையைச் சுற்றி என் கை இறுகிற்று. அவள் கண்கள் கடுங்கோபத்தில் சிவந்தன. தப்ப வழியின்றி மடக்கப்பட்ட மிருகம் போல் கோபாவேசமாகி விட்டாள். ஒரு நெட்டு நெட்டி என்னைத் தள்ளினாள். நான் பின்னுக்கு விழுந்து கொண்டே போய், என் மண்டையின் பின்புறம் ‘மடே’ரென மோதிற்று. கால்கள் முழங்காலுக்குக் கீழ் ஆடிப்போயின, நான் குப்புற விழுந்திருப்பேன்.

“வால்மீகி!”

அலறிக்கொண்டே அவள் என்னை நோக்கி வருவது தான் தெரிந்தது. அப்புறம் நினைவு இல்லை.

எனக்குப் பிரக்ஞை தெளிந்தபோது, கட்டிலில் கிடந்தேன். அவள் முகம் கவலையோடு என்மேல் கவிந்தது. என் கண் திறந்ததும் என்மேல் விழுந்து என்னைக் கட்டிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/202&oldid=1033496" இலிருந்து மீள்விக்கப்பட்டது