பக்கம்:அஞ்சலி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232 லா. ச. ராமாமிருதம்

நான் மணத்தோடு போய்ச் சேர்ந்தால் போதாதா? என்னையே விட்டுவிடு, எனக்காக இல்லேடி, உனக்காகவே கேட்கிறேன்—உன் வயிறு ஏன் இப்படிக் கல்லாயிருக்கு?”

ஏகா விழிப்பாள். “என்ன அம்மா சொல்றேள்?”

பொங்க வழியற்று, தளைக்கும் கொதிப்பில் வேத மூர்த்தி சுண்டுவான். இந்த அம்மாவால் சும்மா இருக்கவே முடியாதா? தன் கள்ள எடையை மறைக்கத் தராசு முள்ளைச் சதா சுண்டிக்கொண்டிருக்கும் எடைக் கள்ளன் மாதிரி...!

ஏகாமேல் எரிச்சலாய் வரும். தலையில் அடித்துக் கொள்வான். காரணமில்லாமல் கரடியாய்க் கத்தறதே, இந்தச் சமயம் கோபமாய்க்கூடப் பதிலுக்கு ஒரு வார்த்தைக்கு வழியைக் காணோம்! முதலில் புரிந்தால்தானே! “மக்கு! மக்கு!”

“மக்காயிருந்தால் இருந்துட்டுப் போறேன் போங்கோ!”

“உன்னைச் சொல்லிக் குற்றமில்லே. மக்குகள் பங்கில் தானே கடவுள் இருக்கிறான்.”

“அதுவும் நியாயந்தானே! மக்காயிருந்து எனக்கென்ன குறைஞ்சு போச்சாம்! நீங்கள் எனக்குக் கிடைச்சிருக்கேளே அது ஒண்ணு போதாதா?”

நீட்டிய அவள் கைக்கு எட்டாது வேதா உடலை நெளித்துக்கொள்வான்.

“நமக்குக் கலியாணம் நேற்று நடக்கவில்லை ஏகா, வருஷம் எட்டு! ஞாபகமிருக்கட்டும்.”

அவள் பழியாய்த் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து அவனை அணைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/242&oldid=1033524" இலிருந்து மீள்விக்கப்பட்டது