பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண லீலா

17


கிறேன், உங்கள் இராஜ்யத்து எல்லையில், சாசனத்தின்படி சரியான புருஷனைத் தெரிந்தெடுக்கும்படி அவர்களை நீ வற்புறுத்தியபடி இரு. கடைசியில் யாரையாவது அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து உன் தலையிலே கட்டப் பார்ப்பார்கள். அவன் எப்படிப்பட்டவனானாலும், சம்மதித்து விடு. கலியாண ஏற்பாடுகளும் நடக்கட்டும், அந்தப் பந்தலிலேயே, மூவரையும் அவமானப்படுத்தி, நான் உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன் என்று அரசகுமாரன் கூறினான். அவர்களின் காதல் ஒப்பந்தத்தை முத்தங்களால் பொறித்துக் கொண்டனர்.

கோபமும் சலிப்பும் கொண்ட மூன்று சதிகாரரும், யாராவது தலையாட்டியைப் பிடித்து அதிசயத்துக்குக் கலியாணம் செய்துவிட்டு அவனை ஆயுதமாகக் கொண்டு அதிகாரத்தைத் தங்கள் கையிலே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டுக்குத் துணிந்து விட்டனர். அதற்காக ஒரு தலையாட்டியைத் தயார் செயது பழக்கியும் விட்டனர்.அவன் ஒரு சாதாரணப் போர்வீரன். முதலிலே பயந்தான், பிறகு ஆசை அவனைப் பிடித்துக் கொண்டது. சதிகாரரின் யோசனைக்கு இணங்கினான். அதிசயம் அவனை மணாளனாக ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தாள். கலியாண நாள் குறிக்கப்பட்டது. அதிசயம் தான் காதலித்த இளவரசனுக்கு ஓலை அனுப்பினாள். ஆபத்து நெருங்குகிறது, அடியாளைக் காப்பாற்றவாரும், எனக்கு இராஜ்யம் வேண்டாம், தங்களுடன் வாழும் ரசமான வாழ்க்கைதான் வேண்டும். எதையாவது எண்ணிக் கொண்டு, கடைசி நேரத்திலே, தாங்கள் கலியாணப் பந்தலுக்கு வராமலிருந்துவிட்டால் என் கதி என்னாகும்? யாரோ ஒரு வழிப்போக்கன், வஞ்சகன், அயோக்கியன் என்னைத் தொட நான் சம்மதியேன். மணப்பந்தல் பிணப் பந்தலாகும். மன்னா! மறவாதே! குரங்குக்குப் பூமாலையா? என்று எழுதியிருந்தாள். கலியாணத்திற்கு நாலு நாட்கள் இருக்கையிலே, மாப்பிள்ளையை மன்னன் மகன் இரகசியமாகச் சந்தித்து காதலின் மேலான தன்மையை விளக்கினான். அரசகுமாரியின் ஓலையைக் காட்டினான், தனது.

2