பக்கம்:அண்ணாவின் ஆறு கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அண்ணாவின் ஆறு கதைகள்


என்றார் மற்றோர் மேதாவி, இது மிகப் பிடித்தமாக இருந்தது கிருஷ்ணனுக்கு. இவைகளை எல்லாம்விட, கிருஷ்ணனைச்செயலிலே இறங்க வைத்தது, வேறோர் விற்பன்னரின் ஏடு. அவர் தீர்மானமாகச் சொன்னார் தமது கைகண்ட முறையை. “ இது கைகண்ட முறை, காலம்கண்ட முறை கவி கண்டமுறை, கடவுள் கண்டமுறை” என்று ஆரம்பமாயிற்று அவருடைய நூல்.

“காதலில் வெற்றி! வெற்றியில் காதல்! கேளப்பா, கேள். பசு, பாம்பு, பாலர், புலி முதலியவற்றை அடக்கக் கூடிய வித்தையைக் கூறுகிறேன் கேள். பெண்ணின் பிரேமையைப் பெற வழியென்ன என்று கூறுவதை விட்டு, உம்மை யாரய்யா, புலியையும் பாம்பையும், அடக்கும் வழியைக் கூறச்சொன்னது என்று. கேட்கிறாயா? கேட்பாய்! எனக்குத் தெரியும் நீ கேட்பாய் என்று. அட பைத்தியக்காரா! புலியையே, பாம்பையே குத்த வரும் காளையையே, மயக்கி அடக்க நான் மார்க்கம் கூறினால், துடியிடையும், பெடைநடையும், குளிர்மனமும் கூத்தாடும் கண்களும் கொண்ட பெண்களையா அந்த முறையினால் மயக்க முடியாது! யோசித்துப் பார்! இரும்பைப் பிழிய வழி சொல்லுகிறேன், கரும்பைப் பிழிய முடியுமோ இதனால் என்று கேள்வி கேட்பாயோ? புரிந்ததா, இனிக் கேள் முறையை. பாம்பும் புலியும், பசுவும் பாலரும், கொலையாளியும் மத யானையும், இசையினால் கட்டுப்பட்டு விடும், அடங்கிவிடும், அடிபணியும், அன்பு காட்டும்; இலக்கியங்கள் சான்று பகரும், வரலாறுகளைப்படி, இன்றும் காணலாம், இசையில் இனிமையால் காதலிலே வெற்றி கண்டவர்களை, இசையைப் பயின்றாய் இன்பவல்லியை வென்றாய் என்று உலகு கூறும். இசைவாணனாகிவிடு. அம்முறையிலும் சிறந்தது குழல்! யாழ் அதைவிடச் சிறந்தது. சற்று சிரமம், குழலைக் கையிலே எடு, கருங்குழலியரைக் காணிக்கை பெறு என்று கூறுவேன். கண்ணன் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். என் அப்பன் சாமள வர்ணன் அந்தக் குழலின் உதவியினால், கோகுல மணிகளை, கோபிகா ரத்தினங்களை,