பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


அதனைத் திருத்திக்கொள்ள வழிவகை பிறக்க முடியும். பிடித்தமற்றவர்கள், காலமெல்லாம் கூடிவாழ்வதென்பது நடவாத காரியந்தானே. எனவே பிடித்தமற்றவர்கள் விவாகரத்து கோரி விடுதலைபெறும் உரிமையைப் பெறுவது நன்மைதானே!

விவாகரத்து உரிமை வழங்கும் சட்டம் அமுலாக்கப்பட்டு விட்டால், கண்டபடி திரியும் கணவனை மனைவி தட்டிக் கேட்டு, திருந்தாவிடின், விவாக விடுதலை பெற்றுக்கொள்ள முடியும். குடிகாரக் கணவனின் கொடுமைக்கு நாளெல்லாம் ஆளாகி அவதியுறும் மனைவி அவனிடமிருந்து விடுதலை பெற வழி பிறக்கும்.

மனைவியைக் கவனியாது பிறபெண்கள் மீது நாட்டம் செலுத்தும் கணவனிடமிருந்து விடுதலைபெற மனைவி கோர்ட்டில் வழக்குத் தொடர முடியும். என் கணவன் வீட்டுக்கு இரவில் வெகுநேரம் கழித்தே வருகிறார் வந்தாலும் என்னிடம் பேசுவதில்லை. சம்பாதிக்கும் பணத்தையும் செலவுக்குக் கூட தருவதில்லை. தூக்கத்தில் காந்தா, சந்தா என்றும் கனவுகண்டு வாய் பிதற்றுகிறார். இவருக்கு என் மீது பிரியமில்லை. வேறு பெண்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. (ஆகவே தான் இவரிடமிருந்து விவாகரத்துக் கோருகிறேன் என்று மனைவி கோர்ட்டில் கூற முடியும்.

கோர்ட்டாரும் இதைத் தீர விசாரித்து, கேள்விகட்கு மேல் கேள்விகள் போட்டு, ஒழுங்கான வாழ்க்கை நடத்த கணவன் இலாயக்குள்ளவன் தானா என்பதை ஆராய்ந்து பார்த்து, அவசியமாயின் அந்த மனைவிக்கு விவாகரத்து உரிமையைத் தருவர்.