பக்கம்:அன்பு வாழ்க்கை, அண்ணாதுரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


போனதும் கடுதாசி போடுகிறேன்!

வீணா, ஏன் மனதை அலட்டிக்கிறே!

மாசாமாசம் தவறாமப் படிக்குப் பணம் அனுப்பிவைக்கிறேன்.

மாடு, கண்ணு, ஜாக்கிரதை!

மாரியம்மன் பண்டிகைக்கு, கிடா பலிகொடுக்க மறந்து விடாதிங்க!

இவ்விதமெல்லாம் 'தைரியம்' கூறிவிட்டுதான் செல்கிறார்கள் அரும்பு மீசைக்காரர்கள்--"உன் மகனும் கிளம்பி விட்டானா...." என்று கேட்கும்போதே, கிழவிக்குத் தன் மகன் அக்கரைக்குப் புறப்பட்ட நாளின் நிகழ்ச்சிகள் கவனத்துக்கு வரும், இவனுக்காவது காளியாத்தா நல்ல புத்தி கொடுக்க வேணும் என்று வாழ்த்துவாள்--மனதுக்குள். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, தன் மகனை எப்படியாவது கண்டுபிடித்து கடுதாசியைக் கொடுத்து, ஒரு காலணாக் கடுதாசி போடச் சொல்லும்படி வேண்டிக் கொள்வாள். ஆகட்டும் பார்க்கலாம்--இந்தச் சீமையிலே அவன் எந்த மூலையிலே இருக்கிறோனோ. நான் எந்தக் கோடியிலே வேலை செய்யப் போறனோ, யார் கண்டாங்க, இருந்தாலும் கண்டா கட்டயமாகக் கடுதாசியைக் கொடுத்து, புத்திமதி சொல்றேன். என்று வாக்களிப்பான், கப்பலுக்குக் கிளம்புபவன், கண்ணுடா நீ தங்கமடா நீ--என்று கிழவி வாழ்த்துவாள். பணம், சில குடிசைகளுக்கு வந்தது! கடிதம் பலபேருக்கு வந்தது. சிலர், "நோய் நொடியுடன்' திருப்பிவிட்டனர்?