பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர் பாராட்டுக் காதை

91

 

175முன்னர் அவரையான் மறுத்து மொழிந்ததால்
பின்னர் மழுப்பித் தொடும்வணம் பேசினேன்;
உண்மையில் அவரெனைத் தொடுதற் கொருப்படேன்.
நன்மையாய் முடிந்தது நடித்த நாடகம்.
பெற்றோர் அறியாப் பிழைபடு வழியில்

180மற்றவர் ஒருவரை மறைவாய்ப் புணர்தல்
எத்திறத் தானும் ஏற்கவொல் லாதென
எத்திறத் தாரும் எண்ணுதல் கூடும்.
முதலில் தவறாம் முறையில் ஒழுகியோர்
அதர்தான் என்றும் அவ்வாறேயாம்.

185விளையும் பயிர்நிலை முளையிலே தெரியுமே
என்றவர் எண்ணலாம் ! என்செயல் நன்றே !
என்றுதன் உளத்துள் எண்ணிய வாறு
நின்றவள் நம்பியின் நினைவக லாமே
சென்றனள் மாடம் சேர்ந்தடைந் தனளே.

190நன்றென நம்பியும் நடந்தனன் வெளியே.
இன்றும் தோல்வியே இனிப்புவில் லோற்கே.

 

177. ஒருப்படேன் - உடன்பட மாட்டேன். 181. எத்திறத்தானும் - எந்த வகையிலும் ; ஒல்லாது - முடியாது. 183-184. ஒழுகியோர் அதர் - நடந்து கொண்டவர் செல்லும் வழி; அதர் - வழி. 188. சம்பி - அம்பிகாபதி. 191. இனிப்பு வில்லோன் - இனிக்கும் கரும்பை வில்லாக உடைய மன்மதன்.