பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 175


சென்று அதனைக் காத்த நாரணனை (திருமாலை) ஒத்திருக்கிறான் இராமன்- என்று சிலர் கூறினர்:

வாரணம் அழைக்க வந்து கரா உயிர் மாற்றும் நேமி
நாரணன் ஒக்கும் இந்த நம்பிதன் கருணை என்பார்

(94)

அகழ்ந்தோர்- கொணர்ந்தோர்

சகரர் என்பார் நிலத்தைத் தோண்டிக் கடலை உண்டாக்கினராம்; சகரரால் தோண்டப்பட்டதால் கடல் 'சாகரம்' எனப்பட்டதாம். பகீரதன் என்பவன் தவம் செய்து விண்ணிலிருந்து கங்கையைக் கொண்டு வந்தானாம். பகீரதனால் கொண்டு வரப்பட்டதால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயர் ஏற்பட்டதாம். ககுத்தன், முசுகுந்தன் முதலிய முன்னோர்கள் அசுரர்களை வென்று தேவர்களைக் காத்தனராம்:

ஆர்கலி அகழ்ந்தோர், கங்கை அவனியில் கொணர்ந்தோர் முந்தைப்
போர்கெழு புலவர்க்காகி அசுரரைப் பொருது வென்றோர்...

(96)

ஆர்கலி= கடல்; புலவர் = தேவர். இவர்களின் புகழ்ச் செயல்கள் இராமன் புகழுக்குப் பிற்பட்டவையேயாம்.

நகர் நீங்கு படலம்

முப்புரம் எரித்தல்

தாராட்சன், கமலாட்சன், வித்வன்மாலி என்னும் அரக்கர் மூவரும் தேவர்கட்குத் தொல்லை தந்ததால், தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் மேருமலையை வில்லாக வளைத்து வாசுகிப் பாம்பை நாணாகக் கட்டிதிருமாலாகிய அம்பை ஏந்திச் சென்று சிரித்தே அம்மூவரின் கோட்டைகளை எரித்தாராம்; முப்புரம் எரித்தல் என்பது இதுதான்.

இறைவன் புரம் மூன்று எரித்த போர்வில் இறுத்தாய் (57):

இறைவன் = சிவபெருமான்.