பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அறிவியல் தமிழ்

டன் உறையும் விண்ணவர்கள்—வண்டுகளுடன், மாமயில்களும் ஆனபடி!' என்பது வியாக்கியானம்.

அடுத்து, அடியார்களைப் பரிந்து காத்தருள வல்ல பெரிய பிராட்டியாரும், அனைத்தையும் காக்கும் பண்புக்கு அறிகுறியாக உள்ள திருமாலையும் திகழப்பெற்ற அப்பனின் திருமார்பின் அழகு ஆழ்வாரை ஆட் கொள்ளுகின்றது.

“பாரமாய பழவினை
      பற்(று) அறுத்(து) என்னைத்தன்
வாரம்ஆக்கி வைத்தான் வைத்த(து)அன்றி
      என்உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன்கொல்
      அறியேன் அரங்கத் தம்மான், திரு
ஆர மார்புஅது அன்றோ
      அடியேனை-ஆட்கொண்டதே!”[1]

[பாரமாய பழவினை—பொறுக்க முடியாத சுமையாக உள்ள நெடுங்கால வினைகள்; பற்று—சம்பந்தம்; வாரம்—அன்பு]

இதில் இறைவன் தம்முன் புகுந்து நிற்கும் நிலையில் ஒன்றுபட்டுப் பேசுகின்றார் ஆழ்வார். இறையருள் தமக்கு (1) பாரமான பழவினைகளைப் பற்றறுத்தது; (2) இவரைத் தன்பால் அன்பனாக்கிக் கொண்டது; (3) இந்த நன்மைகளுக்கு மேலாக இவருள்ளம் புகுந்தது என்ற மூன்று வகைகளில் துணை செய்துள்ளது என்பவற்றைக் குறிப்பிடுகின்றார். “பின்னையும் தன் ஆற்றாமையாலே விடாய்த்தவன்—பெரிதும் களைப்புற்றவன்—தடாகத்தை நீக்கி உள்ளே முழுகுமாப் போலே, என் உள்ளம் புகுந்தான்” என்பது வியாக்கியானம். ‘புலன்களை

  1. அமலனாதி-5