பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4



பட்டனர்; இரக்கமற்ற நெஞ்சினர் என்று ஏசப்பட்டனர்; அரக்கர் என்று தூற்றப்பட்டனர்.

பார்ப்பனிய வாழ்க்கை முறையை உள்ளம் விரும்பி ஏற்றுக்கொண்டு, கட்டிக்காக்கக் கோலெடுத்த கோணல் மதியினரை, நாட்டு மக்களின் நல்வாழ்வு கெட ஏடெழுதிய ஏமாளிகளை, முறையே சனாதனப் பாதுகாவலர், மன்னர், மண்டலாதிபதி என்றும், நாயன்மார், ஆழ்வார், சன்மார்க்க சத்புருஷர் என்றும், புகழ்ந்தனர் எத்தர்கள். இவர்கள் எந்தக்காலத்திலும் பார்ப்பனிய இயந்திரத்தின் விசை முடிக்கிகள்.

நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பை நிர்மூலமாக்க மனிதாபிமானம் கொண்டோரும், பாதிக்கப்பட்டோரும், போரிட படை திரட்டினால், அதனை அடக்கவேண்டும், என்ற நினைப்பும், நெஞ்சத்துடிப்பும் எவருக்கு உண்டாகும் ? உழைக்காமல் உல்லாச புரியிலே ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் நிலப்பிரபுக்களுக்குத்தானே நெஞ்செரிச்சல் தோன்றும்.

இது போலவே முதலாளித்துவ முறையை மாற்ற முற்போக்காளர்கள் மேற்கொள்ளும் முயற்சியைக் கெடுக்க ஆலை அரசுகள் தானே சல்லடம் கட்டி சண்டைக்குக் கிளம்புவர்?

இந்த நியாயப்படிதான் பார்ப்பனீய முறையை மாற்ற இறந்த காலத்திலும் சரி, எடுத்துக் கொண்ட, எடுத்துக்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கெல்லாம் எதிர்ப்பு குறிப்பிட்ட ஒரு வகுப்பினரிடமிருந்தே கிளம்பின--கிளம்புகின்றன.

பார்ப்பனீய ஏற்பாடு குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கும்--பொதுவாகச் சில பல உயர் ஜாதிக்காரர்களுக்கும் பளபளப்பான வாழ்க்கையை, பாடுபடாமலும், பாடுபட்டாலும் சோர்வு தட்டாதபாடினாலும், கொடுத்துக் கொண்டே இருக்கிறது. எனவே, இந்தப் பார்ப்பனிய நச்சரவை நசுக்க, நல்லறிவாளர்கள் நாவசைத்தாலும், நான்கு எழுத்து எழுதினாலும், தங்கள் செவிகளில் நாராசம் காய்ச்சி ஊற்றுவது போல் தெரிகிறது பார்ப்பனத் தோழர்களுக்கு ! காலஞ்சென்ற சூரியநாராயண சாஸ்திரி