பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

251



இந்த வெளியீடுகளை வெளியிடுவது, விளம்பரப் படுத்துவது, விற்பனை செய்வது, வைத்திருப்பது, மற்றவர்களுக்கு வழங்குவது குற்றமாகும்.

இளம் மனதுகளைப் பாழ்படுத்தும் அத்தகைய வெளியீடுகளை அழித்திட நீதிமன்றம் உத்தரவிடலாம். மாநில அரசுகள் பறிமுதல் செய்யலாம். இந்த அதிகாரம் காவல் துறைக்கும் இந்தச் சட்டம் வழங்குகின்றது.

9. தபால், தந்தி சட்டப் பயன்பாடுகள்
(Indian Telegraph Act)

அரசாங்கமோ அல்லது அதிகாரம் பெற்ற தபால் தந்தி பணியாட்களோ, தந்திச் செய்திகளைத் தடுக்கவோ, தாமதப்படுத்தவோ, நிறுத்தவோ செய்திட 1856-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்தியத் தந்திச் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது. ஆனால், எப்போது அதைச் செய்யலாம்?

நாட்டில் பொது நெருக்கடி நிலையை ஆட்சி பிரகடனப்படுத்தி இருக்கும் நேரத்திலும், நாட்டின் பாதுகாப்பு, பொதுநலன் போன்றவற்றைக் கருத்தில்கொண்டும் அரசு மேற்கண்ட இந்தியத் தந்திச் சட்டத்தைப் பயன்படுத்தி அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இதே செயல்களை அரசு செய்திட 1898ம் ஆண்டின் இந்திய அஞ்சலகச் சட்டமும் அதிகாரம் அளித்துள்ளது.

இந்தச் சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்தவும், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பறிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒன்று, நாட்டின் பாதுகாப்பு, நாட்டின் அமைதி நாடி இவை போன்ற கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.

10. பத்திரிகைகளில்
பணிபுரிவோருக்குரிய சட்டம்

பத்திரிகைகளில் வேலை செய்பவர்களுக்காக (The working Journalist Act) என்ற இந்தச் சட்டம் 1956-ம் ஆண்டில் இயற்றப்பட்டுள்ளது.