பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

நேருக்கு நேர் சந்திக்கும் கலை!



எனவே, பேட்டி ஒரு கலை. இரண்டு மனிதர்கள் நேருக்கு நேராகச் சந்தித்து வெளியிடும் அனுபவமும், அறிவுமுடைய கலை என்கிறார் ‘சோமலே’ எனும் அறிஞர் தனது ‘தமிழ் இதழ்கள்’ என்ற புத்தகத்தில்.

இரண்டு பேர்கள் சந்தித்துப் பேசும் பேச்சுக்கள் எல்லாமே பேட்டி எனும் பெயர் பெறாது. அது கலந்துரையாடல் எனும் பெயர் பெறும்.

அந்த இரண்டு பேரும் ஒரு குறிப்பிட்டக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, செய்தியாளர் கேள்வி கேட்க மற்றவர் அதற்கான அனுபவ உரைகளைக் கூறுவதுதான் பேட்டி என்ற பெயரைப் பெறும்.

எடுத்துக்காட்டாக, அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்த பின்பு செய்தியாளர்கள் அவரை அணுகி, ‘பானை இருக்கிறது; மூன்று படி அரிசி போடவில்லையே’ என்று சுவரொட்டிகளை ஒட்டிப் பிரச்சாரம் செய்கிறார்களே, உங்களது பதில் என்ன?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அண்ணா அவர்கள் ‘மூன்றுபடி அரிசி அரசு நோக்கு, தற்சமயம் மக்களுக்கு போடும் ஒரு படி அரிசிதான் இலக்கு’ என்ற தகவலைத் தந்தார். இவ்வாறு தகவலைப் பெறுவதற்குத்தான் பேட்டி என்று பெயர்.

எனவே, பேட்டி காண்போர், இயல்பாக உள்ள பிரச்னைகள் வைத்துத்தான் பேட்டி காண வேண்டுமே தவிர, பேட்டி வழங்குபவருக்கு நெருக்கடியோ, அச்சுறுத்தும் சிக்கலையோ உண்டு பண்ணக் கூடாது. அது செய்தியாளருக்கும் அழகன்று.

அமெரிக்க நாவலரான இராபர்ட் கிரீன் இங்கர்சால் கூறியதை போல, மக்களுடைய அன்றாடச் சிந்தனைகளைப் பதிவு செய்வதுதான் பத்திரிகைப் பண்பு. ஒவ்வொரு மணி நேரமும் மனித சாதியின் முன்னேற்றத்தை அளந்து காட்டுவதுதான் செய்தியாளர் பணி என்கிறார். அதற்கேற்ற சூழ்நிலையைப் பேட்டியும் உருவாக்க வேண்டும் என்பது அவரது கருத்தின் நோக்கம்.