பக்கம்:இன்னொரு உரிமை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமதேனு105

முத்துலிங்கம் அழுதுவிட்டான். இன்னும் அங்கே நின்றால், தலையிலடித்து அழுவோம் என்று பயந்து ஓடிவிட்டான்; வெளியேறிவிட்டான் மெட்ராசைப் பார்த்து...

ஒரு மாதம் ஓடியது.

திருமலையம்மா மலைப்பில் இருந்து விடுபட்டு, பாசப்பிடியில் இருந்து விடுபடமுடியாமல் இருந்த வேளை; வெளியூருக்கு ஏதோ ஒரு ‘துஷ்டி’ கேட்கப் போய்விட்டு, வருகிற வழியில் கன்றுக்குட்டிக்கு புல் வெட்டிக்கொண்டு வீட்டிற்கு சுமையோடு திரும்பிக்கொண்டிருந்தாள். தோட்டத்தில் அவளால் நிற்க முடியவில்லை. சரல் குவியலில் மகனின் தோற்றம்; ‘கமலைக் கிடங்கிலும்’ அவனே. தென்னை மரத்தைப் பார்த்தால், அங்கேயும் அவன் தொத்திக் கிடக்கிறான். திருமலையம்மா புல்லிதழ்களால் கண்ணிரைத் துடைத்தபடி வீட்டுக்குள் வந்து, முன்பு மகன் போட்டது மாதிரியே புல் கட்டை வேகமாகப் போட்டாள்.

ஏதேச்சையாக ‘திருவோலையைப்’ பார்த்தவள் திடுக்கிட்டாள். கமலசுந்தரி அண்ணன் மாதிரியே உட்கார்ந்தபடி இருந்தாள். ஒரு கையில் நோட்டுக் கத்தைகள். இன்னொரு கையில் ஒரு கடிதம். திருமலையம்மா இப்போது மகளை அதிகமாகத் திட்டுவதில்லை. அவளையே மகனாகவும் பாவித்துக் கொண்டிருந்தாள். மகளிடம் அழாக்குறையாகப் புலம்பினாள்.

“எப்பாடி... வரவர என்னாலே அஞ்சு மைல் ஒழுங்கா நடக்கமுடியல. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. அண்ணன்மார் என்ன எழுதியிருக்காங்க. மெட்ராஸ்ல எப்படியிருக்காங்களாம்... எவ்வளவு ரூபா அனுப்பியிருக்காங்க?”

கமலசுந்தரி அம்மாவைப் பார்க்காமலே பதிலளித்தாள்.

“சின்ன அண்ணன் கடை போட்டுட்டானாம். தனியா ஒரு வீடு எடுத்து சமைச்சு சாப்பிடறாங்களாம். என் படிப்பு வீணாயிடக்கூடாதாம். மெட்ராசுக்கு நானும் போகணு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/114&oldid=1368600" இலிருந்து மீள்விக்கப்பட்டது