பக்கம்:இன்னொரு உரிமை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4196  சு. சமுத்திரம்


ஆனால் அவளுக்கோ அது முதல் நாடகம், திரையுலகப் பிரவேசத்திற்கு 'முதலான' நாடகம். கடந்த பத்தாண்டு காலமாக எக்ஸ்டிரா நடிகையாய் கும்பல் நடனக்காரியாய் நடித்தும், துடித்தும் அலுத்துப்போனவளுக்கு இந்தச் சந்திரன் தான் நாடகத்தில் நாயகி வேடம் கொடுத்தான். வேடம் என்றால் எப்படிப்பட்ட வேடம்? சப்-இன்ஸ்பெக்டர் காதலன், ஏழை பாளைகளை அடிக்கும் போது அவனுக்கு எதிராக போர்க் கொடியான ஒரு பெண் கொடி வேடம். காதலை குப்பையில் போட்டுவிட்டு, குப்பையோடு குப்பையாய் வாழும் மக்களுக்காக புரட்சிக்காரியான வேடம்.

இந்த நாடகமே இவளால் தான் உயிர் பெற்றதாய் பத்திரிகைகள் சொல்லின. இதைச் சந்திரனே சொன்னான், இருக்கட்டுமே... சுவரில்லாமல் சித்திரமா? இந்தச் சந்திரன் இல்லாமல் தமிழ்ச்செல்வியா? தயாரிப்பாளர்களிடம் தமிழ்ச் செல்வியை சிபாரிசு செய்தவன் தனக்குக் கடவுளாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?

தமிழ்ச்செல்வியை அவள் அம்மா அப்போது தான் பெற்றுப் போட்டது போல், பெருமிதத்துடன் பார்த்தாள். பலர் முன்னிலையில், அது தன் பிள்ளை என்று ஒப்புக் கொள்ள நாணப்படும் தலைப்பிள்ளைக்காரிபோல. பாராதது போல் பார்த்தாள்.

"ஏம்மா... பித்து பிடிச்சதுமாதிரி நிற்கே பெரிய பெரிய ஆக்டருங்க வந்திருக்காங்க. நாடறிஞ்ச நடிகைகள் நிற்காங்க. அவங்களுக்கெல்லாம் வணக்கம் போடும்மா..."

தமிழ்ச்செல்வி அம்மாவின் பேச்கக்கு அடாவடித்தனமாகத் தான் குரலை உயர்த்தி, அம்மாவுக்கு முகம் காட்டாமலே பேசுபவள், இன்றைக்கோ அந்த அன்னையின் முகம் கோணிட, மகள் மாறிவிட்டாள் என்று தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது என்று பயந்தவளாய், அம்மாவின் மோவாயைத் தாங்கியபடியே பதிலளித்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/205&oldid=1369057" இலிருந்து மீள்விக்கப்பட்டது