பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. இராக்கெட்டின் இயக்கம்

'ராக்கெட்டு’ என்றால் என்ன? இது சிறு வாணத்தின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பெற்ற ஒரு கருவி. இது தானியங்கி (Automobile) அல்லது வானஊர்தியின் பொறிபோன்ற ஒருவகை உள்ளெரி பொறி (Internal combustion engine) ஆகும். ஆனால், இது ஒரு வகையில் இவற்றினின்றும் வேறுபடுகின்றது. இது தனக்குத் தேவையான ஆக்ஸிஜனைத் தானே சுமந்து செல்லுகின்றது; மற்றவை தமக்கு வேண்டிய ஆக்ஸிஜனைக் காற்றினின்றும் பெறுகின்றன.

இனி, இராக்கெட்டு எவ்வாறு இயங்குகின்றது என்பதைக் காண்போம். சிறுவாணம்போல் சரேலெனப் பாய்ந்து அது உயரச் செல்லுவதனால்தான் ‘இராக்கெட்டு' எனப் பெயர் பெற்றது. இராக்கெட்டில் உண்டாகும் உந்து விசை (Thrust) அதனை முன்னுக்குத் தள்ளுகின்றது. இந்த விசை, ’ஒவ்வோர் இயக்கத்திற்கும் அதற்குச் சமமான எதிரியக்கமும் உண்டு’ என்ற நியூட்டன் விதியினால் உண்டாகின்றது. இதனை மேலும் விளக்குவோம்.

படத்தில் காட்டியுள்ளவாறு மூடியுள்ள ஓர் உருளை மிகவும் அழுத்தி நெருக்கப்பெற்றுள்ள காற்றால் (Compressed air) நிரப்பப்பெற்றுள்ளது. காற்றின் மூலக் கூறுகள் (Molecules) எல்லாப் பக்கங்களையும், இரண்டு கோடிகளையும் தாக்குகின்றன. ஒவ்வொரு கோடியையும் ஒரேவித எண்ணிக்கையுள்ள காற்றின் மூலக்கூறுகள் தாக்குவதனால் உருளையிடம் அசைவதற்கான போக்கே இல்லை.