பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளி மண்டலம்

81


பாதுகாக்கின்றது. இங்கு வெப்பநிலை கிட்டத்தட்ட 50°F வரை உயருகின்றது. இந்த வேதியியல் மண்டலத்திற்கு வெப்ப நிலை-104*F வரை இறங்குவதாகக் கண்டறியப் பெற்றுள்ளது. இந்த வளி மண்டலத்தில் தான் நமது உடலுக்குப் பல விபத்துக்கள் நேரிடக்கூடும் என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர்.

இதற்கு மேலுள்ள பகுதி அயனி மண்டலம் (Ionosphere) என்று வழங்கப்பெறுகின்றது. இஃது வேதியியல் வளி மண்டலத்திற்குமேல் 150 மைல் வரை பரவியுள்ளது. இங்குக் காற்று மிக மெல்லிதாக இருப்பதுடன் மின்சாரத் தன்மையையும் பெற்றுள்ளது. வானொலிப் பொறிஞர்கள் இப்பகுதியில் சிறப்பாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இங்குத்தான் காற்றிலுள்ள அணுக்களும் மூலக் கூறுகளும் கதிரவனிடமிருந்து வரும் மின்-காந்த அலைகளினால் (Electromagnetic waves) மோதுண்டு மின்சாரத் தன்மை எய்தி அயனிகளாகின்றன. இப்பகுதியில் வானொலி அலைகளில் திருப்பம் (Reflection) ஏற்படுகின்றது, வானமண்டலத்தில் இந்த மின்சார ஆடி (Electrical mirror) மட்டிலும் இல்லாவிட்டால் வானொலிச் செய்திகளை நீண்ட தூரங்கட்கு அனுப்ப இயலாது. அயனி மண்டலம் வானொலி அலைகளைப் பூமிக்கே திருப்பிவிடுகின்றது; அவை திரும்பவும் துள்ளிக் குதித்து அயனி மண்டலத்தை அடைந்து அதற்கு மேலும் செல்லுகின்றன; இங்ஙனம் அவை நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் செய்தல் கூடும். சந்திரமண்டலத்திற்கோ அல்லது அண்மையிலுள்ள கோள்கட்கோ செல்லக்கூடிய இராக்கெட்டு விமானங்களை (Rocket ships) அமைக்கக்கூடுமானால் இந்த மண்டலத்திலுள்ள உயர்ந்த வெப்ப நிலைகளையும் கதிர்வீசலால் நேரிடும் இடையூறுகளையும் தவிர்க்க வழி காணல் வேண்டும்.