பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனுமனும் இராமனும் ே 335 சுக்கிரீவன் உதவியை நாட நேர்ந்தது அனுமனைப் பெறுவதற்கே சுக்கிரீவனுக்கு அமைச்சனாக உள்ள அனுமன் தன் அறிவாற்றலால் தன் அரசனுக்கு நலஞ் சேர்க்குமுறையில் இச் சூழ்ச்சியைச் செய்தது தவறு என்று கூறுவதற்கில்லை. ஆனால், இராமன் இதனை எவ்வாறு ஒப்புக்கொண்டான் என்று சிந்திப்பது பயனுடையதாகும். கவந்தனும், சவரியும் சுக்கிரீவனைத் துணைகொள்ள வேண்டும் என்று கூறினர். அன்றியும், சவரியே இரலைக்குன்றம் செய்வதற்கான வழியையும் காண்பித்தாள். இவ்வளவு தூரம் சுக்கிரீவனைப் பற்றி அறிந்திருக்கும் கவந்தனும் சவரியும் வாலியைப் பற்றியும், சகோதரரிடையே உள்ள பூசல் பற்றியும் நிச்சயமாக அறிந்திருப்பர். வாலியின் ஆற்றலையும் நன்கு அறிந்திருப்பர். வாலியோடு ஒப்பிட்டால் சுக்கிரீவன் வன்மையில் பூஜ்யமாகிவிடுவான். குரக்குப்படை முழுவதும் வாலியிடம்தான் உள்ளது. இவ்வளவையும் அறிந்திருந்தும் கவந்தனும் சவரியும் வாலியைப்பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறாமல் சுக்கிரீவனைப்பற்றி மட்டும் கூறி, அவன் இருக்கும் இரலைக் குன்றத்திற்கு வழிகாட்டினர் என்றால், இது நம் அறிவுக்கு எட்டாத ஏதோ ஒன்று இதனைச் செய்கின்றது என்பதை எளிதில் அறியமுடியும். இந்நிகழ்ச்சிகளையெல்லாம் மனத்துட் கொண்ட கவிஞன், இதனை நாம் நன்கு புரிந்துகொள்வதற்காகத் தொடக்கத்திலேயே சில குறிப்புகளைத் தருகிறான். விதி முதலானவற்றை உண்டாக்கி அவற்றைப் பணிபுரியுமாறு ஏவுகின்ற பரம்பொருள்தான் இராமனாக வந்துள்ளான் என்பதைப் பல இடங்களிலும் சுட்டிக் காட்டும் கவிஞன், ஒரு குறிப்பிட்ட இடத்தில் இதனை மாற்றி அமைக்கின்றான். கைகேயியின் ஏவலால் முடியைத் துறந்து, கோசலை அரண்மனை நோக்கி வரும் வரவைக் கம்பன் கூறும் பாடலை நினைவுக்குக் கொண்டு வரவேண்டும்.