பக்கம்:இறுமாப்புள்ள இளவரசி-அயர்லாந்து கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

இறுமாப்புள்ள இளவரசி


 மாபெரும் மல்வீரன் மக்கெளலின் வீடு இதுதானே? என்று அவன் கேட்டான்.

'இதுதான், இதுதான், பெரியவரே! ஆண்டவன் உமக்கு அருள் புரியட்டும் ! இந்தப் பலகையிலே அமருங்கள்!"

“வந்தனம், அம்மா நீதான் மக்கெளலின் மனைவியோ?”

"ஆமாம், என் கணவரால் எனக்கும் பெருமைதான் !”

"அது என்ன பெருமை! அயர்லாந்திலேயே மகாவல்லவன், மகாவீரன் என்று அவன் பெயர் பெற்றிருக்கிறான். ஆயினும், அவனையும் ஆட்டி வைக்கக்கூடிய வேறொருவன் இருக்கிறான்- அவன்தான் இப்பொழுது உங்களுடைய வீடு தேடி வந்திருக்கிறான் ! உன் கணவன் வீட்டிலிருக்கிறானா?”

"அவர் இங்கில்லையே! யாரோ ஒருவன் வந்து, குகுல்லின் என்ற அசுர பயில்வான் அவரைத் தேடித் தாம்போதிக்கு வருவதாகச் சொன்னான். அவ்வளவுதான், ஒரே கோபத்துடன் வீட்டை விட்டு அந்தப் பயில்வானைத் தேடிப் போனவர் இன்னும் திரும்பி வரவில்லை. அவனை அவர் கண்டிருந்தால், இதற்குள் அவன் சட்டினியாகியிருப்பான் ! கடவுள் அருளால் அசுரனை அவர் சந்திக்காமலிருக்க வேண்டும்!”

"அப்படியா நான்தான் அந்தக் குகுல்லின் ! நான் பன்னிரண்டு மாதங்களாக அவனைத் தேடிக்கொண்டு அலைகிறேன்; அவன் என் கையிலே சிக்காமல் எப்படியோ நழுவிப் போய்விடுகிறான். இரவிலோ பகலிலோ, எங்காவது அவனைப் பிடிக்காமல் விடமாட்டேன்!”

இதைக் கேட்டவுடன் ஊனாக், எள்ளி நகையாடி, உரக்கச் சிரித்துவிட்டு, அவனை அலட்சியமாகத் திரும்பிப் பார்த்தாள்.

உடனே, அவள் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு, "நீங்கள் எப்பொழுதாவது மக்கெளலைப் பார்த்திருக்கிறீர்களா?" என்று வினவினாள்.

"நான் எப்படிப் பார்க்கமுடியும்? நான் வந்தவுடனேயே அவன் எங்காவது கம்பியை நீட்டிவிடுகிறானே!"