உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியக் கேணி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. ஆணை நமதே


தோற்றுவாய்

இறைவனுடைய திருவருள் பெற்ற பெரியோர்கள், "இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்: யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம் வரம் பாகிய தலைமையர் : காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்; இடும்பை யாவதும் அறியா இயல்பினர்" என்று திருமுருகாற்றுப் படையில் கூறியவண்ணம் திகழ்பவர் ஆவர். அன்னோர்தம் செயல்கள் எல்லாம் இறைவனுடைய செயல்களாகவே கருதப்படும். அவர்களும் ஆணையிடும் நிலைகள் ஏற்படக்கூடும் மன்பதைகளிடத்து அவர்களுக்குள்ள எல்லையற்ற கருணை காரணமாகவே அவர்கள் ஆணையிட வேண்டிவருகின்றது. அப்பொழுது அவர்கள் யார் பேரில் ஆணையிடுவது ? இறைவன் பேரில் ஆணையிடலாம் ! ஆனால் அவர்கள் வேறு இறைவன் வேறு அல்லவே! அவர்கள் சொல்லும் செயலும் எல்லாம் இறைவனது செயலாகுமே! ஆகவே இறைவன் பேரில் அவர்கள் ஆணையிடார். அவர்கள் இடும் ஆணையும் உறுதி கூறும்பொருட்டே நிகழ்வு தாகலின் அவர்கள் " ஆணை நமதே " என்று கூறுவராவர். இங்ஙனம் "ஆணை நமதே" என்று திருஞானசம்பந்தர் நான்கிடங்களில் கூறியுள்ளார்.

திருநனிபள்ளியில்

திருஞானசம்பந்தர் சைவ சமய குரவர் நால்வருள் ஒருவர்: சீகாழிப் பதியில் திருவவதாரம் செய்தார்