பக்கம்:இலக்கியக் கேணி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 இலக்கிய க்கேணி

குன்றின் கண் எழுதிய அழகையுடைய அம்பலம், காமவேள் அம்பின் தொழில் நிலைபெற்ற சிரமச்சாலை (படைக்கலக் கொட்டிலை) ஒக்கும். (28-29)

சோலைகளும் சுனைகளும், மலர்களின் செறிவால், காமவேளது அம்பறாத்துாணியை ஒக்கும். (30-33)

கார் காலத்தில் தோன்றும் காந்தட்குலைகள், போரில் தோற்றுக் கட்டுண்டார் கையை ஒக்கும். (34-35)

தும்பியினால் கட்டவிழ்ப்பனவாகிய காந்தளின் முகைகள், யாழ்நரம்பினது கட்டை நெகிழ்ப்பவர் கையை ஒக்கும். (86-87)

பரங்குன்றிலுள்ள மரங்கள், இந்திரவில்லாற் சொறியப்படும் கணைகளைப் போல மெல்லிய மலரைப் பரப்பின. (40-41)

தாளம் ஒலிக்கும் ஒலியும், சிறந்த இயங்களின் ஒலியும், மேகத் தொகுதியின் ஒலியும், போர் முழக்கத்தைப் போல எழுந்தன. (42-45)

அருவிகள் ஒலித்து இழிவதால் மலைச்சிகரங்கள் முத்து மாலையை அணிந்தாற் போன்றன. (46).

குருவிகள் ஆர்க்குமாறு தினைக் கதிர்கள் விளைந்தன. (47)

பலகிற மலர்கள் நிறைந்த சுனை, வானவில்லை வளைத்த வானை யொத்தது. (48-50) . . .