உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இலக்கியத் தூதர்கள்

அசுரரை வணங்கி ஏவல் புரியும் இழிநிலையைக் கண்டு இரங்கினான். மீனெடுத்து வரும் ஈனத்தொழிலை வானவர் புரிந்து வருதலைக் கண்டு பெரிதும் வருந்தினான். இந்திரன் மைந்தனாகிய சயந்தன் சிறையிருந்த இடத்திற்கும் சென்று, அவனைத் தேற்றினான். நகரை முற்றும் சுற்றிப் பார்த்த அவ் வீரவாகு, சூரன் பேரவையைச் சார்ந்தான். அச் சூரனிடம் வேலேந்திய முருகன் பெருமையை விளக்கி யுரைத்தான். முத் தொழில் புரிந்தருளும் இறைவனே முருகனாய்த் தோன்றியுள்ள சிறப்பினை விரித்துரைத்தான். ‘நின் கிளையொடு நெடிது வாழ நீ விரும்பினால் இப்பொழுதே விண்ணவரைச் சிறையினின்றும் விடுக; வேலேந்திய முருகன் திருவடியைப் பணிக’ என்று தூதரை யோதினான்.

வேந்தர் இருவரின் வீழ்ச்சி

இலங்கையை அழித்து மீண்ட அனுமனைப் போன்றே வீரவாகுவும் மகேந்திர நகரை யழித்துத் திரும்பினான். இறுதியில் இலங்கை வேந்தன் இராமனொடு போர்புரிந்து வீழ்ந்தான். சூரனும் வேலனுடன் கண்டோர் வியப்புறக் கடும்போர் புரிந்து மாண்டொழிந்தான். இராவணன் மனைவியாகிய மண்டோ தரியும், சூரன் மனைவியாகிய பதுமையும் கற்புநெறி வழுவாமல் தத்தம் கணவருடன் உயிர் நீத்தனர். இங்ஙனம் முதலிலிருந்து முடிவுகாறும் கதையமைப்பில் பெரிதும் ஒற்றுமையுடைய இராமாயணம், கந்த புராணம் ஆகிய இருபெருங் காவியங்களும் தமிழகத்தில் நிலவும் வைணவம், சைவம் ஆகிய இரு சமயங்களின் உண்மைகளை இனிதின் விளக்குவனவாகும்.