பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

இலக்கியத் தூதர்கள்

“மல்லிகையே வெண்சங்கா வண்டுத, வான்கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய்காப்ப,-முல்லையெனும்
மென் மாலை தோளசைய, மெல்ல நடந்ததே
புன் மாலை அந்திப் பொழுது.”

அந்திப்பொழுதாகிய அரசன் மெல்ல கடந்து வருகிறான். வண்டு, அவ்வேளையில் மல்லிகை யென்னும் சங்கை ஊதுகிறது. மன்மதன் மெய்காப்பாளனாகக் காத்து வருகின்றான். அவன் கையில் கரும்பு வில் விளங்குகின்றது. முல்லை மலர்மாலை, அவன் தோளிற் கிடந்து துவள்கின்றது. எத்துணை அழகிய கற்பனை!

அவையில் எழுந்த தடை

பாட்டையும் விளக்கத்தையும் கேட்ட புலவரெல்லாம் உள்ளங் கிளர்ந்து முகமலர்ந்த தலையசைத்தனர். ஒரு புலவர் மட்டும் எழுந்து, இவ்வருணனையில் தவறுள்ளதெனத் தடை கூறினார். சங்கினை ஊதுவான் அதன் அடிப்புறத்திலன்றோ வாய்வைத்து ஊதுதல் மரபு; அங்ஙணமிருக்க, மலரின் மேற்புறத்திலிருந்து ஊதும் வண்டு சங்கூதுவானை யொப்பது எங்ஙனம் ? ஆதலின் இக்கற்பனை தவறுடையதாகும் என்று புகழேந்தியார் கருத்தை மறுத்துரைத்தார்.

புகழேந்தியாரின் புலமை

அது கேட்ட புகழேந்தியார் மகிழ்வோடு அப் புலவரை நோக்கினார். “நீவிர் கூறிய கருத்துப் பொருத்தமுடையதே; ஆயினும் கள்ளுண்ட களி மயக்குடன் சங்கை ஊதுவான், அதன் பின்பக்கம் முன்பக்கங்களே யறியானன்றோ? ஆதலின் தேனுண்ட வண்டும் களிகொண்டு மேலமர்ந்து ஊதிற்று;