உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

இலக்கியத் தூதர்கள்

நன்மணம் புரிந்து வாழவேண்டும்” என்று அவ்வன்னம் தூதுரை பகர்ந்தது. தமயந்தியின் உள்ளக் காதலை உணர்ந்தது. ‘வேந்தனுக்கு எனது உள்ள நிலையினை விளக்கியுரைப்பாய்’ என்று வேண்டிய அவள் விருப்பினை அறிந்து மகிழ்ந்தது. அவளுக்கு ஆறுதல் கூறி, வானில் பறந்து மாவிந்த நகரையடைந்தது.

அன்னம் மன்னனிடம் திரும்புதல்

தூது சென்ற அன்னத்தின் வரவை எதிர்நோக்கி நின்ற நளன் வானில் விரைந்து பறந்து வரும் அப் பறவையைக் கண்டான். அதனை அன்போடு வரவேற்றுத் தன்மீது தமயந்திக்கு உண்டான பெருங் காதலைக் கூறக்கேட்டு இன்புற்றான். ‘அன்னக் குலத்தின் அரசே! அழிகின்ற எனது உயிரை மீளவும் எனக்குத் தந்தாய்!’ என்று அதனைப் பாராட்டினான்.

நளன் இந்திரன் விடுத்த தூதனாதல்

தமயந்தியின் சுயம்வரத் திருநாளைத் தெரிவித்தற்கு விதர்ப்ப நாட்டினின்றும் வீமன் விடுத்த தூதர் மாவிந்த நகரை யடைந்தனர். நிடத நாட்டு வேந்தனாகிய நளனை நண்ணித் தாம் கொணர்ந்த நற்செய்தியினைத் தெரிவித்தனர். தமயந்தியின் சுயம்வரச்செய்தியைக் கேட்ட நளன் தேரேறி விதர்ப்ப நாட்டின் தலை நகருக்கு விரைந்தான். தமயந்தியிடம் சென்ற தனது மனத்தைக் காணாமல் தேடி வருபவனைப் போலத் தேரேறி வரும் நளனை இந்திரன் முதலான இமையவர் நால்வர் இடைவழியில் கண்டனர். இந்திரன், நளனை நெருங்கி, “வேந்தே! யாங்கள் ஏவும் தொழிலைச் செய்தற்கு நீ இசைய வேண்டும்” என்று வேண்டினான்.