பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

இலக்கியத் தூதர்கள்

சிறந்த விருந்து நடைபெற்றது. எல்லோரும் தத்தம் உறையுள் எய்தினர்.

கண்ணனும் விதூரனும் கனிந்துரையாடல்

பின்னர்க் கண்ணனும் விதுரனும் தனியே அமர்ந்து உரையாடத் தொடங்கினர். விதுரன் கண்ணனை நோக்கி, “கருணையங் கடலே ! நீ இங்கு எழுந்தருளியதன் காரணத்தைக் கூறியருள்க” என்று அன்புடன் வேண்டினான். அது கேட்ட கண்ணன், “துரியோதனன் கருத்துப்படியே பாண்டவர்கள் காடு சென்று மீண்டுளாரன்றோ? அவர்கட்குரிய நாட்டைக் கேட்டற் பொருட்டே யான் இங்கு வந்தேன்!” என்று இயம்பியருளினான். அவ்வுரை கேட்ட விதுரன், “பெருமானே ! அத் துரியோதனன், தருமனுக்குரிய நாட்டை ஒழுங்காகத் தரமாட்டான்; அவன் அறநெறியினைச் சிறிதும் அறியாதவன் ; அவனைச் சூழ்ந்துள்ள கூட்டமும் அத்தகையதே. ஆதலின் அத் துரியோதனனைப் போரில் எதிர்த்துக் கலக்கினாலன்றி அறியான்” என்று உரைத்தான். “துரியோதனன் ஒழுங்காக நாட்டைக் கொடாவிடின் பாண்டவர் அரும்போர் புரிந்து அனைவரையும் அழித்தொழிப்பர்; இஃது உறுதியாகும்; மேலும் அத்துரியோதனன் அவர்கட்குரிய பாகத்தைக் கொடேன் என்று கூறுவது புதுமையன்று; இவ்வுலகத்தின் இயல்பே; போரில் எதிர்த்து அவர்கள் மீது பொன்றுமாறு அம்புகளைச் செலுத்தும் போதுதான் சொன்னவையெல்லாம் தருதற்கு முன் வருவர்” என்று கண்ணன் கட்டுரைத்து விதுரனுக்கு விடையளித்தான்.