பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 ★ இல்லம்தோறும் இதயங்கள்


போல் இருந்தது. மணிமேகலை அவன் தோளில் மீண்டும் கைபோட்டுக்கொண்டே "கவலப்படாதடா. அக்காளுக்கு சுத்தமா சுகமாயிட்டு ! நல்ல வேள, ஆரம்பத்துலயே கவனிச்சதால முளையிலயே கிள்ள முடிஞ்சுது. இப்போ நானும் ஒன்னை மாதிரிதான்! உடம்புக்கு ஒண்ணும் கிடையாது! கவலைப்படாதடா" என்றாள்.

சந்திரன் கவலையை விடுவதாத் தெரியவில்லை. அக்காளின் கையிரண்டையும் பிடித்துக்கொண்டு அக்கா என்று சொல்லிக்கொண்டே விம்மினான். மணிமேகலை தாயானாள். ஏதேது. இந்த சந்திரன் சுகமாயிட்டுதுன்னு சொன்னபிறகும் விம்முறானே ? எனக்குமுல்லா அழுகை வருது? நான் அழப்படாது. இவனுக்கு மூத்தவள். ஆறுதல் சொல்ல வேண்டியவள்; அதைத் தேடுபவள் அல்ல. மணிமேகலை தம்பியின் தலையைக் கோதி விட்டுக் கொண்டே அவனைக் குழந்தையாகப் பாவித்துக் கொண்டே "அழாதடா ராஜா ! இப்போ ஒண்னும் கெட்டுப்போயிடல. அழாதடா!” என்றாள்.

சந்திரன் இப்போது அழுதுகொண்டே "அக்கா. அக்கா. பாமா எப்படிக்கா இருக்காள்? என்னை விசாரிச்சாளா? எனக்கு ஏன் லட்டர் போடுறத நிறுத்திட்டாக்கா? என் தவிப்பு ஏக்கா அவளுக்குத் தெரியல? அக்கா, அவள் என்ன மறக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லுக்கா" என்று சொல்லி அழுதவன் விம்மினான்.

திடுக்கிட்டுப் போன மணிமேகலை அவனையே விளங்காதவள்போல் வெறித்துப் பார்த்தாள். பிறகு, அதைவிட வேறு எதையாவது பார்க்கலாம் என்பதுபோல், மாமரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த பழைய பசு மாட்டைப் பார்த்தாள். அது அவளைப் பார்த்து "ம்மா. ம்மா...' என்று பேரானந்தமாகக் கத்தியது.